ஞான ஒளி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சுந்தரராக,அப்பராக,விப்ரநாராயணனாக,ரஹீமாக படங்களில் நடித்து தன் திறமையை பறைசாற்றிய சிவாஜிக்கு ஆன்டனியாக இயேசு பக்தனாக நடிக்கும் சந்தர்ப்பம் 1972ம் ஆண்டு கிடைத்தது.அதிலும் அதுவரை காலமும் அவர் ஏற்று நடிக்காத வேடமாக அது அமைந்தது. அப்படி அமைத்த படம்தான் ஞான ஒளி. விக்டர் ஹியூகோ 18ம் நூற்றாண்டில் எழுதிய லெஸ் மிஸரபல்ஸ் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இப் படத்தின் கதை எழுதப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி, யூ டியூப் என்பன இல்லாத கால கட்டத்தில் மேடை நாடகங்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இதனால் பல நாடக சபாக்கள் மூலம் ஏராளமான நாடகங்கள் மேடையேறி அவற்றில் ரசிகர்களின் ஆதரவை பெரும் நாடகங்கள் திரைப் படங்கள் ஆகி வந்தன. இந்த வரிசையில் மேஜர் சுந்தரராஜன் நடிப்பில் ஞான ஒளி நாடகம் மேடைகளில் நடிக்கப்பட்டு வந்து அதுவே படமானது.

தமிழில் கிறிஸ்துவ பின்னணியில் அமைந்த கதைகள் படமாக்குவது

குறைவாக இருந்த போதும் வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக இந்தக் கதையை பின்னி எடுத்திருந்தார். அதற்காக அவரை பாராட்டலாம். அதே போல் அவரின் வசனங்களும் அர்த்தபுஷ்டியுடன் அமைந்தன.

பூண்டி மாதா கோவிலில் தினசரி மணியடித்து, ஆலயத்துக்கான நித்ய கருமங்களை செய்து , கோயில் பாதிரியாரின் செல்ல பிள்ளையாக வாழ்பவன் அன்டனி . நல்லவன் , பிறருக்கு உதவுபவன் , ஆனால் கல்வி அறிவில்லாதவன், முரடன்! அவனுடனே வளர்ந்து கல்வி கற்று போலீஸ் இன்ஸ்பெக்டராகி வரும் லோரன்ஸ் அன்டனியின் முரட்டுத்தனத்தை நட்பினாலும், அதிகாரத்தினால் கட்டுப்படுத்த முனைகிறார். அன்டனிக்கும் ராணிக்கு காதல் திருமணம் நடக்கிறது. ஆனால் பிரசவத்தின் போது பெண் குழந்தையை பெற்று கொடுத்து விட்டு ராணி இறந்து விடுகிறாள். சோகத்தில் ஆழ்ந்து விடும் அன்டனி தன் மகளுக்காகவே வாழ்கிறான்.மகள் பட்டணம் சென்று படித்து திரும்புகிறாள். அவளைத் தொடர்ந்து அவள் காதலனும் வருகிறான்.மகளின் காதலை அறிந்து குமுறும் அன்டனியை ஆற்றுப்படுத்தும் லோரன்ஸ் இருவருக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் மகளை விதவையாக்கி, அன்டனியை நாட்டை விட்டே வெளியேறச் செய்கிறது. இருபது ஆண்டுகள் கழித்து அன்டனி, அருண் என்ற பேரில் கோடீஸ்வரனாக நாடு திரும்புகிறான்.

அருமையாக வடிவமைக்கப் பட்ட திரைக் கதையை உள்வாங்கி அன்டனி பாத்திரமாகவே மாறியிருந்தார் சிவாஜி. கெஞ்சல், கொஞ்சல், முரட்டுத்தனம், தவிப்பு, சாதுரியம் என்று பலதரப் பட்ட உணர்ச்சிக் கலவையாக படம் முழுதும் அவர் பரிணமித்தார். இத்தனைக்கும் படத்தில் பதினைந்து நிமிடங்களுக்குத்தான் சிவாஜிக்கு ஜோடி. அதன் பின் தனி ஆவர்த்தனம்தான். படத்தின் முன் பகுதியில் அன்டனியாக அக்கினிப் பிழம்பாக காட்சியளிப்பவர் பிற் பகுதியில் அருணாக அமைதியே உருவாக காட்சிதருகிறார்.

சிவாஜியின் அன்டனி வேடத்துக்கு சமமான வேடம் லோரன்ஸ் வேடம். சுந்தர்ராஜனுக்கு அத்துப்படியான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்.சிரமமின்றி செய்திருந்தார் அவர். ஆனால் இவர்கள் இருவருக்கும் சவால் விடுவது போல் நடித்து பிரகாசித்தவர் பாதிரியாராக வரும் கோகுல்நாத். அமைதியான நிதானமான நடிப்பு, நல்ல குரல் வளம். கோகுல்நாத்தின் நடிப்பை பார்த்து சிவாஜியே சுந்தர்ராஜனிடம் எங்களையே விழுங்கிட்டான் என்று சொல்லி பாராட்டியிருந்தார்.


படத்தில் சிவாஜிக்கு ஜோடி விஜயநிர்மலா. 44படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புரிந்த அவர் இந்தப் படத்துக்கு பின் முற்றாகவே தெலுங்கு படஉலகம் பக்கம் ஒதுங்கி விட்டார். அதே போல் மகள் மேரியாக நடித்தவர் ஊர்வசி விருதை வென்ற சாரதா. தமிழில் இருந்து மலையாளம் சென்ற அவர் நீண்ட காலத்துக்கு பின் இதில் நடித்தார். இயல்பான நடிப்பு,எளிமையான தோற்றம் பாத்திரத்துக்கு மெருகூட்டியது.

சீரியஸான கதைக்கு ஒத்தடம் தருவது போல் வி கே ஆர், மனோரமா, எம் ஆர் ஆர் வாசு, ஐ எஸ் ஆர் ஆகியோரின் நகைச்சுவை அமைந்தது. இவர்களுடன் ஜெயகௌஸல்யா, ஸ்ரீகாந்த், செந்தாமரை, சீதாலஷ்மி ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு மேலும் மெருகுட்டியது தேவனே என்னை பாருங்கள் என்

பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள் என்ற கண்ணதாசனின் பாடலுக்கு டி எம் சௌந்தரராஜன் குரலும் , அதற்கு சிவாஜியின் நடிப்பும் எம் எஸ் வியின் இசையும் தேவகானமாக ஒலித்தது. இதுதவிர மணமேடை மலர்களுடன் தீபம் பாடல் சுசிலாவின் மென்மையான குரலில் மனதை வருடியது,காட்சியோ மனதை நெருடியது.
பி என் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய ஆர் தேவராஜன் படத்தொகுப்பை கையாண்டார்.
கே பாலசந்தர், பாலமுருகன், ஆரூர்தாஸ், என்று பல கதாசிரியர்களுடன் இணைந்து வெற்றி படங்களை இயக்கிய பி மாதவன் இந்தப் படத்தை வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனத்தில் இயக்கி வெற்றி படமாக்கியிருந்தார். அதுமட்டுமன்றி 72ம் ஆண்டு சிவாஜியின் படங்களான பட்டிக்காடா பட்டணமா, ஞான ஒளி இரண்டையும் இயக்கி இரண்டு படங்களுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாதவனுக்கு புகழை பெற்று தந்தது.


இந்த ஆண்டுக்கான பொன்விழா ஆண்டில் இந்தப் படங்கள் தொடர் இத்துடன் முடிகிறது. மீண்டும் புத்தாண்டில் 
ந்திப்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments: