அரிகர புத்திரன் தரிசனம் காணுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

                              பல்லவி

அரிகர புத்திரன் தரிசனம் காணுவோம்

அவனியில் அரிகர சுதனையே நாடுவோம் 

                      அனுபல்லவி 

 வருவினை போக்கிட மனத்தினால் வேண்டுவோம்

அரிகர சுதனுமே அருளுவான் நாளுமே 

                             சரணம்

 இருமுடி கொண்டுவுன் தரிசனம் காணவே 

அரிகரசுதனே உன்  அடியவர் வருகிறார் 
உருநிலை ஏறியே உருக்கமாய் பாடியே 
திருவடி பணிந்திட அடியவர் வருகிறார் 

உடையினை மாற்றுவார் உணர்வுடன் பாடுவார்
சாமியே சாமியே எனப்பெயர் சூட்டுவார் 
படிகளை அமைத்துமே விளக்குகள் ஏற்றுவார்
பக்தியாய் பூஜைகள் பண்ணியே மகிழுவார் 

ஒருவரை ஒருவர் சாமியே என்றுமே

பெருமையாய் பெயரினைச் சூட்டியே மகிழுவார்
படிகளை அமைத்துமே பூசைகள் ஆற்றுவார்
பக்தியாய் யாவரும் விளக்குகள் ஏற்றுவார்

உணவினை மாற்றுவார் ஒழுக்கத்தைப் பேணுவார்

பழவினை போக்கிட பக்குவம் பேணுவார்
தளர்விலா விரதத்தை பற்றியே பிடித்தவர்
உனதடி சரணெனப் பாடியே பரவுவார்

 No comments: