இலங்கைச் செய்திகள்

க​னேடிய தமிழ் காங்கிரஸ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் 

சிறையிலிருந்த வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி

மலையக தமிழர்கள் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பை கௌரவித்து விசேட நிகழ்ச்சிகள்

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது


க​னேடிய தமிழ் காங்கிரஸ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் 

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

க​னேடிய தமிழ் காங்கிரஸ் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இலங்கையின் மோசமான நிதிச்சரிவால் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்பிரச்சினை நிலவுகின்றது.

இச்சூழலை கருத்திற் கொண்டு மனிதநேய அடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி கனேடிய தமிழ் காங்கிரஸின் 14ஆவது வருடாந்த தமிழ் கனேடிய நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம்  வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலுள்ள 6 மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்குவது எனத்திட்டமிடப்பட்டது.

அதற்கமைய முதற்கட்டமாக கனேடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதற்தொகுதி மருந்துப்பொருட்கள் நேற்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.  நன்றி தினகரன் 






சிறையிலிருந்த வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே நேற்று (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே, ஒகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






மலையக தமிழர்கள் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பை கௌரவித்து விசேட நிகழ்ச்சிகள்

- 2023 பெப்ரவரியில் தொடர் நிகழ்ச்சிகள்
- ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

இருநூறு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மலையகத் தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பெருந்தோட்டத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய மலையக  தமிழ் சமூகத்தின் முதலாவது குழு இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவுகூறும் வகையில் 2023 பெப்ரவரியில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஜனாதிபதி முன்வைத்திருந்த கோரிக்கைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்களின் சேவைகளை கௌரவித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பெருந்தோட்ட அமைச்சும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து இதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

150,000 இற்கும் மேற்பட்ட மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் முக்கியமாக மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.   நன்றி தினகரன் 






ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது

இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை

2ம் சுற்று பேச்சு குறித்து சுமந்திரன் MP தெரிவிப்பு

வடக்கில் காணிகள் விடுவிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரோக்கியமாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாடொன்றை எட்டும்நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாடொன்றை நடத்தினார்.

அந்த சர்வகட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் முறைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலேயே ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் மேலுமொரு பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினமிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையையடுத்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் சட்ட மாஅதிபரும் கலந்துகொண்டுள்ளனர். எமது தரப்பில் நானும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்துகொண்டோம். அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தார்.

இங்கு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பேரை விரைவில் விடுதலைசெய்ய முடியும். ஏனையவர்களை விடுதலை செய்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டதுடன் அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இராணுவத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் ஜனவரி 03 ஆம் திகதி தேசிய பாதுகாப்புச் சபையில் அதுதொடர்பில் பரிந்துரை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. ஏனைய காணிகள் தொடர்பிலும் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் எமது தீர்மானத்தில் தெரிவித்தோம். அதற்கிணங்க எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி மீண்டும் நாம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை சாத்தியமானதாக அமைந்ததா என அவரிடம் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'பேச்சுவார்த்தை சாத்தியம்தான் ஆனால் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அவை நடைமுறைப்படுத்தப்படும்போது தான் சாத்தியமானதா என்பது தொடர்பில் குறிப்பிடமுடியும். எவ்வாறெனினும் பேச்சுவார்த்தையில் எந்த சிக்கலும் இருக்கவில்லை' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் -  நன்றி தினகரன் 






No comments: