இலங்கைச் செய்திகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்

தமிழ் அரசியல் கைதிகள் 08 பேர் நேற்று விடுதலை

2,000 ஏக்கர் அரச காணிகளை விற்பனை செய்த அதிகாரிகள்

முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் மீலாத் சிறப்பு நிகழ்ச்சிகள்

விரைவில் யாழ். நகருக்கு புனர்வாழ்வு நிலையம்


22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

- 179 பேர் ஆதரவாக வாக்களிப்பு
- சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பு

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற 2ஆவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 179 எம்.பிக்கள் வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3ஆவது வாசிப்பின் போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

3ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாகவும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை எனவும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது சரத் வீரசேகர எம்.பி. வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் (20) இன்றும் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இன்றையதினம் வாக்கெடுப்பு இடம்பெற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

UPDATE

மஹிந்த ராஜபக்ச உட்பட 44 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

ஆளும் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான பசில் ராஜபக்ச ஆதரவு அணியினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இவ்வாறு 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த பாராளுமன்ற அமர்வின் பொது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருந்த போதும் அரச தரப்பான பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர் காரியவசத்தின் எதிர்ப்பினால் விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றும் நேற்று முன் தினமும் இரண்டு நாட்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று மாலை 6.15 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

சட்ட மூலத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜீ.எல் பீரிஸ் , விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களித்த அதேவேளை ஆளும் தரப்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எம் பி மட்டுமே எதிராக வாக்களித்தார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிரைவேற்ற அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 151 வாக்குகள் தேவையான நிலையில் 179 வாக்குகள் அளிக்கப்பட்டன.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் , சித்தார்த்தன்,ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன், கலையரசன் ஆகியோர் வாக்களித்த நிலையில் சுமந்திரன் எம்.பி.வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், விநோ நோகராதலிங்கம் ஆகியோர் சுகவீமனமுற்ற நிலையிலும் சாணக்கியன் எம்.பி. வெளிநாடு சென்றுள்ளதாலும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் நேற்று சபையில் சமூகமளித்திருந்த நிலையிலும் வாக்களிப்பின் போது சபையிலிருந்து வெளியேறி இருந்தனர்.   நன்றி தினகரன் 





பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்

பாராளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால தெரிவிப்பு

 பலாலி விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென்பதை  தெரிவித்த அமைச்சர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அது முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற,வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எதிர்க்கட்சி எம் .பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

புத்திக பத்திரண எம்.பி தமது கேள்வியின் போது,

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான விமான நிலையமாகும். அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடருமா? அதற்கான நிதியை தேடுவதற்கான திட்டங்கள் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியுள்ளோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையினூடாக பெற்றுக்கொண்டோம்.

பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தோம். ஏற்கனவே அந்த விமான சேவை நிறுவனத்தினர் அதற்கு இணங்கியிருந்தனர். எனினும் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு விமானம் வருகை தரவில்லை.

அது அவர்கள் பக்க தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளாக இருக்கலாம். அது தொடர்பான நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன. எவ்வாறாயினும் இந்த மாத இறுதியில் விமானங்கள் சில வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முடிந்தளவு அந்த விமான சேவை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இந்த விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி ஓடுபாதையை நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய விமானங்கள் வரக் கூடிய வகையில் ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

 



தமிழ் அரசியல் கைதிகள் 08 பேர் நேற்று விடுதலை

ஜனாதிபதி, நீதியமைச்சருக்கு சார்ள்ஸ் MP நன்றி

தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதி அமைச்சின் சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அதற்காக நான் ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அதன் போது குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்ற வேளையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அந்த விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது உரை நிறைவு பெற்றதும் எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி இவ்வாறு சபையில் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்  -  நன்றி தினகரன் 






2,000 ஏக்கர் அரச காணிகளை விற்பனை செய்த அதிகாரிகள்

நடவடிக்கை எடுக்க சந்திரகாந்தன் MP கோரல்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் அரச காணிகள் அதிகாரிகளினால் மோசடியான வகையில் விற்கப்பட்டுள்ளதாக சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது தொடர்பான தகவல்கள் தெற்கில் சிங்கள மொழி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பான விடயங்கள் தமிழ் ஊடகங்களில்  வெளிவராமைக்கு காரணம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் 10 பேர்ச்சர்ஸ் காணிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையே என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 05 திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலமாக சுமார் 9000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அந்த நடவடிக்கைகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 16 ஆம் திகதி தென்பகுதி சிங்கள பத்திரிகையொன்று மட்டக்களப்பில் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்ளையடித்து விற்றுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை ஏன் தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று ஆராய்ந்து பார்த்தபோது, அங்குள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக பணிபுரிபவர், மாவட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 10 பேர்ச்சர்ஸ் காணியை வழங்கி அவர்களின் வாயை அடைத்துள்ளாரென்பது தெரிய வந்தது.

கொழும்பிலுள்ள தமிழ் தெரியாத சிங்கள ஊடகவியலாளர்களே மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகள் பற்றி எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஏராவூர் பற்று, செங்கலடி பிரதேசத்தில்தான் அதிகளவில் காணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.காணி பதிவில் சிக்கல் வந்தால் அந்தக் காணி தனியாருக்கு சொந்தமானதா? அரச காணியா என்று ஆராயும் போது அதனை தனியார் காணி என்று எழுதுவதற்காக பல கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். அந்த வகையில் 2,000 ஏக்கர் வரையிலான காணிகள் மோசடியான வகையில் துண்டு துண்டுகளாக விற்கப்பட்டுள்ளன.

இதில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனைக் கண்டு அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக நான் கவலையடைகின்றேன். தொழில் முயற்சியாளர்கள், ஏழைகளுக்கு சிறிய அரச காணியை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் இவற்றையெல்லாம் ஊடகங்கள் கூறினாலும் பாராளுமன்றத்தில் பேசினாலும் தீர்க்கப்படாதுள்ளது.

 லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் மீலாத் சிறப்பு நிகழ்ச்சிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் (18) மீலாத் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில்,கலந்துகொண்டோருடன் முன்னாள் ஜனாதிபதி உரையாடுவதைக் காணலாம்.   நன்றி தினகரன் 




விரைவில் யாழ். நகருக்கு புனர்வாழ்வு நிலையம்

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ்.நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ்.மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, "போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முத்துதம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, யாழ்.மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரதேசமானது போதைப்பொருளினால், அச்சுறுத்தலையும், ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது வெளிவரும் ஊடக செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற,கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளாகவுள்ளன.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டு விடுவார்களோ? எனும் அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களாகத்தான் போதைப்பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக இருக்கின்றனர். பாடசாலை மாணவ, மாணவிகளை இலக்கு வைத்து, போதைப் பொருள் விநியோகம் அண்மைகா.லங்களில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள், சமூகமட்ட பிரதிநிதிகள், அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்.மாநகர முதல்வர் என்ற ரீதியில், போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டமொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ். நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்குரிய முயற்சியை எடுத்து வருகின்றேன். அனைவரின் ஒத்துழைப்புடன் இவ்விடயம் விரைவில் கைகூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  -  நன்றி தினகரன் 






No comments: