கங்கா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சமூகக் கதை,புராணக்கதை,சரித்திரக் கதை என்பனவற்றை


அடிப்படையாகக் கொண்டு தமிழ் படங்கள் வெளிவந்த காலத்தில் 60ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவற்றில் இருந்து வேறுபட்டு செக்ஸ் & கிரைம் என்ற கதைக்கருவை மூலமாகக் கொண்டு படங்கள் வெளிவரத் தொடங்கின.அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்த்தாற் போல் இருந்த ஜெய்சங்கர் இந்தப் படங்களில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார்.அப்படி உருவாகி 1972ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் கங்கா.


பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த எம் கர்ணன் தயாரிப்பாளராக

மாறி இது போன்ற கௌ பாய் படங்களை இயக்கத் தொடங்கினார்.அவர் தயாரித்து இயக்கிய காலம் வெல்லும் படம் வெற்றி பெற்றதை அடுத்து கங்கா உருவானது.ஹீரோவாக ஜெய்சங்கர் நடித்தார்.அவருக்கு ஜோடியாக நடிகை மீனாவின் அம்மா ராஜ்கோகிலா நடித்தார்.இவர்களுடன் நாகேஷ்,அசோகன்,ராமதாஸ்,கே கண்ணன்,சி ஐ டி சகுந்தலா,ஓ ஏ கே தேவர்,எஸ் என் லட்சுமி,ஜெயக்குமாரி ஆகியோரும் நடித்தனர்.

படத்தில் வரும் வில்லன்கள் அனைவரும் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கபட்டர்கள்.அதற்கேற்றாற் போல் அசோகன்,ராமதாஸ்,கண்ணன், ஓ ஏ கே தேவர் ,ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் ஆகியோர் காட்சியளித்தார்கள்.நாகேஷின் காமெடி இந்த ரகளைக்குள் பெரியளவில் எடுபடவில்லை.ராஜகோகிலா கவர்ச்சி விருந்து படைத்தார்.நடிப்பை காட்ட ஏது வாய்ப்பு!

கொள்ளைக்காரனாக இருந்து திருந்தி வாழும் கதிரவேலு தன் மகன் கங்காவை வீரனாக வளர்க்கிறான்.மனைவி,மகனுடன் அமைதியாக வாழும் அவன் வாழ்வில் அவனது பழைய நண்பர்கள் குறிக்கிடுகிறார்கள்.மீண்டும் தங்களுடன் இணையும் படி வற்புறுத்துகிறார்கள்.கதிரவேலு மறுக்கவே அதனால் ஏற்படும் மோதலில் அவன் இறக்கிறான்.மகன் கங்கா தந்தையை கொன்றவர்களை பழி வாங்கி விட்டு தான் தாயின் முகத்தில் விழிப்பேன் என சபதம் எடுக்கிறான்.


இப்படி அமைந்த படத்தின் கதையை எழுதியவர் வேறு யாருமல்ல,முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள்,நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களை இயக்கிய மகேந்திரன் தான் இப்படத்தின் கதையை எழுதியிருந்தார்.செக்ஸையும் கிரைம்மையும் படம் முழுதும் தன் கதையோட்டத்தில் பிரதானப்படுத்தியிருந்தார்.வசனங்களை மா ரா எழுதினார்.பாடல்கள் கண்ணதாசன்.சங்கர் கணேஷ் இருவரும் ஆங்கிலப் படப் பாணியில் இசையமைத்திருந்தார்கள்.படத்தில் இரண்டு பாடல்கள்தான்.இரண்டையும் எல் ஆர் ஈஸ்வரி பாடினார்.அவற்றிற்றகு சகுந்தலா,ஜெயக்குமாரி இருவரும் ஆடினார்கள்.

ஆகட்டும் பார்க்கலாம் யாருக்கு வேட்டை ஜெயமாகும் பாடலுக்கு சகுந்தலாவின் நடனம் கவர்ச்சி என்றால்,ஆணா பெண்ணா சரித்திரம் பாடலுக்கு ஜெயக்குமாரி ஆடும் நடனம் படு கவர்ச்சி! நடனத்தை அமைத்தவர் பிரபுதேவாவின் தந்தை சுந்தரம்.ஆனாலும் பாடல் வரிகளில் கண்ணதாசன் டச் இருக்கவே செய்தது.

மங்கையர் கண்களை கண்டு பல மன்னவர் சாய்ந்தது உண்டு இது

மன்னவர் சங்கதியென்றால் மனிதன் நீ என்ன,போருக்கு போகின்ற காளை ஒரு பூவையின் பக்கத்தில் கோழை போன்ற வரிகளில் கண்ணதாசன் பல சங்கதிகளை சொல்லியிருந்தார்.ஈஸ்வரியும் உணர்ந்து பாடியிருந்தார்.

படம் முழுவதும் ஜெய்சங்கர் கொடி பறந்தது.காட்சிக்கு காட்சி அவர் காட்டும் ஸ்டைல்,துப்பாக்கியால் சுடும் லாவகம்,சண்டைக் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார்.அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் மாதவனின் பயிற்சியும் கர்ணனின் கேமராவும் துணை நின்றன.படத்தின் காட்சிகள் வெளிப்புறங்களில்,குதிரைப்பண்ணை,மாட்டுப் பண்ணை என்று பல இடங்களில் படமாக்கப் பட்டன.

ஒளிப்பதிவு,டைரக்சன் என்று இரண்டு துறைகளிலும் தன் திறமையை காட்டியிருந்தார் கர்ணன்.அதற்கு அமைய படம் வசூலில் வெற்றி கண்டது!


இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூட்டோடு சூடாய் ஜக்கம்மா படத்தையும் அதே 72ம் ஆண்டு எடுத்து வெற்றி கண்டார் கர்ணன்.ஒரே ஆண்டில் இரட்டை வெற்றி!

கங்கா திரைப் படம் இலங்கைக்கு வரவில்லை.திரைப்பட கூட்டுத்தாபனம் மிக குறைந்த விலைக்கு கேட்டதால் படத்தை கொடுக்கவில்லை என்று கர்ணன் என்னிடம் ஒரு முறை சொன்னார்.ஆனால் ஜக்கம்மா படத்தை கூட்டுத்தாபனம் வாங்கி பல தடவைகள் திரையிட்டு பெரும் வசூலை வாரிக் கொண்டது!

No comments: