45 நாட்களே பதவி வகித்த பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகினார்
இம்ரான் கானுக்கு 5 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது
ஒரு வாரத்திற்குள் பிரிட்டனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்யப் போட்டி
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்
சூடான் இன மோதல்களில் 2 நாட்களில் 150 பேர் பலி
சாட் நாட்டில் இராணுவம் சரமாரி சூடு: ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி
கால்நடை ஏப்ப வரி: நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்
45 நாட்களே பதவி வகித்த பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகினார்
- பிரித்தானிய வரலாற்றில் குறைந்த காலம் ஆட்சி செய்த பிரதமர் எனும் பெயரை பெற்றார்
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தான் கன்சர்வேடிவ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை தன்னால் வழங்க முடியவில்லை என்றும், இதன் காரணமாக, தான் இராஜினாமா செய்வதாக மன்னர் 3ஆம் சார்ள்ஸிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் கன்சர்வேடிவ் கட்சி தலைமை தொடர்பான தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக இருக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் பதவியேற்று 45 நாட்களே பதவியில் இருந்த அவர் இவ்வாறு பதவி விலகியதன் மூலம் இங்கிலாந்து வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் அவரால் கொண்டு வரப்பட்ட மினி பட்ஜெட்டை தொடர்ந்து, ட்ரஸ்ஸின் பிரதமர் பதவி தொடர்பில் கொந்தளிப்பான நிலையே இருந்து வந்தது.
நேற்றையதினம் (19) புதன்கிழமையன்று அவரது உள்துறை செயலாளரின் இராஜினாமா மற்றும் காமன்ஸில் இடம்பெற்ற குழப்பமான வாக்கெடுப்பு ஆகியன அவரது தலைவிதியை மாற்றியமைத்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் (6 வாரங்களில்) பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இம்ரான் கானுக்கு 5 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது
Friday, October 21, 2022 - 4:20pm
- அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு அதிரடி முடிவு
- பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும்
- எதிர்த்து மேல் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதிகாரத்தில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களை மறைத்து பொய்யான அறிக்கைகளை வழங்கியதன் மூலம் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக தெரிவித்து, ஐந்து வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடவோ, அரசியல் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஒருமனதாக இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடுமென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (21) தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட இத்தீர்ப்பை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி உடனடியாக நிராகரித்துள்ளதோடு, ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு முன் விரிவான தீர்ப்புக்காக காத்திருப்பதாக PTI இன் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல் ஃபரீத் சவுத்ரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த முடிவு தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அதிகார வரம்பு, அவர்களின் ஆணையையும் சவாலுக்குட்படுத்தவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கான் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (PMLN) கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த குறித்த வழக்கில் , முன்னாள் பிரதமர் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை அரச பரிசு வைப்பிலிருந்து (தொஷகனா எனவும் அழைக்கப்படுகிறது) வாங்கியதாகவும் ஆனால் அவற்றை தமது சொத்து மதிப்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்பில் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய PTI கட்சித்த தலைவர் பவாத் சௌத்ரி, ஆணைக்குழு வெளியிட்ட இம்முடிவு அவமானம் மிக்கது என்றும் பாகிஸ்தான் மக்களின் முகத்தில் அறைந்தது போல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பு இம்ரான் கான் மீதான தாக்குதல் மட்டுமல்லாது, இது பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு பக்கச்சார்பானது என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பதுடன், ஆணைக்குழுவின் தலைவர் சிக்கந்தர் சுல்தான் ராஜா தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக பாரபட்சம் காட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஏப்ரல் முதல் இடம்பெற்று வரும் இந்த அரசியல் சண்டையின் மற்றொரு திருப்பமே தற்போது ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பாகும். முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கானும், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் முகம் கொடுத்துள்ள பல்வேறு சட்டப் போராட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
குறித்த முடிவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தாங்கள் சவால் செய்யவுள்ளதாக, இம்ரான் கானின் சட்டத்தரணிகளில் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கு 'தொஷகனா' என்று அழைக்கப்படும் அரசாங்கத் துறையை மையமாகக் கொண்டது, இது முகலாய காலத்தில் அரச குடும்பத்தினர் தங்களது பரிசுகளை சேமித்து வைப்பதற்காக வைத்திருந்த 'புதையல் இல்லங்கள்' என குறிப்பிடுகிறது.
அரசு அதிகாரிகள் தங்களிடமுள்ள அனைத்து பரிசுகளையும் அறிவிக்க வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட மதிப்புக்குக் குறைவாக தங்களது உடமையில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதிக பெறுமதியுள்ள பொருட்கள் தொஷகனாவுக்கு அனுப்பப்படும். ஆனால் சில சமயங்களில் அப்பரிசை பெற்றவர் அவற்றின் பெறுமதியில் சுமார் 50 சதவீதத்தை செலுத்தி கொள்வனவு செய்ய முடியும். இத்தள்ளுபடியானது, இம்ரான் கான் பதவியில் இருந்த போது 20 சதவீதத்திலிருந்து உயர்த்தப்பட்டிருந்தது.
பல மாதங்களாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி வெளிநாட்டு பயணங்களின் போது பல மில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.
இவற்றில் ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், அழகிய கைப்பைகள், வாசனைத் திரவியங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இவ்வாறு கிடைத்த சில பரிசுகளை அல்லது அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த இலாபத்தை இம்ரான் கான் அறிவிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இம்ரான் கான் பதவியில் இருந்தபோது, தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தால் தேர்தல் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடு முதன் முதலில் கொண்டுவரப்பட்டது,
அந்நேரத்தில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சில பரிசுகளை பகிரங்கப்படுத்தவில்லை என்று இம்ரான் கான் தெரிவித்தார். ஆனால் எழுத்துபூர்வ சமர்ப்பிப்பில் சுமார் 22 மில்லியன் பாகிஸ்தான் ரூபா (100,000 டொலர்) பெறுமதியான பொருட்களை வாங்கியதை ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அவற்றை இரண்டு மடங்குக்கும் அதிகமாக விற்றதாக தெரிவித்துள்ளார்.
இம்மதிப்பீடு முறையான வழிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் இம்ரான் கான் பங்கெடுத்த எட்டு தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் ஆறில் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பை அவர் தன் மீதான நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் தேர்தல்களில், தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் நின்று அதில் ஒன்றுக்கு மேல் வெற்றி பெற்றால் எதை இழக்கலாம் என்பதைத் தெரிவு செய்ய முடியும். ஆயினும் இம்ரான் கான் போட்டியிட்ட அளவுக்கு அதிகளவில் எந்தவொரு வேட்பாளரும் போட்டியிடுவது அரிதான விடயமென தெரிவிக்கப்படுகின்றது.
70 வயதான இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பாகிஸ்தானின் அரசியல் செயன்முறையை திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இதன் போது அவர் தமது கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் இராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டதோடு, தேசிய சட்டமன்றத்தில் PTI உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிக்காதிருக்கும் நிலையை ஏற்படுத்தினார்.
எதிர்வரும் 2023 ஒக்டோபரில் இடம்பெறவுள்ள தேர்தலை முன்கூட்டியே அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தலைநகரில் தனது ஆதரவாளர்களின் நீண்ட பேரணிக்கான திகதியை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் சபதம் செய்துள்ளார்.
இம்ரான் கானின் கட்சி தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேரணிகளை நடத்தி வருகிறது. அவரது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் அரச நிறுவனங்கள், இராணுவம் உள்ளிட்டவற்றை விமர்சித்து வருகின்றார்.
சமூக சீர்திருத்தங்கள், மத பழமைவாதம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உறுதியளித்து, கடந்த 2018 இல் அவர் அதிகாரத்திற்கு வந்தார். இராணுவ கையகப்படுத்தல்கள் மற்றும் இரு வேளு அரசியல் கட்சிகளின் பல தசாப்த கால ஆட்சியை இம்ரான் கான் முடிக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பலம் வாய்ந்த மக்கள் ஆதரவுக்கு மத்தியில், அயல்நாடுகளின் சூழ்ச்சி மற்றும் உள்நாட்டிலுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அவரது ஆட்சி திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். நன்றி தினகரன்
ஒரு வாரத்திற்குள் பிரிட்டனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்யப் போட்டி
Saturday, October 22, 2022 - 6:00am
முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் போட்டியிட வாய்ப்பு
பிரிட்டனில் குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தவராக 45 நாட்களுக்குள் லிஸ் டிரஸ் பதவி விலகிய நிலையில் ஒரு வாரத்திற்குள் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் பூர்த்தி செய்யப்பட்டு புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பெரும் பிளவு வெடித்திருக்கும் சூழலில் புதிய தலைமைக்கான தெளிவான வேட்பாளர்கள் இல்லாமல் உள்ளது.
நாடு பெரும் பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்லும் நிலையில் தேர்வாகும் புதிய தலைவர் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சுவெல்லா பிரவர்மன் பதவி விலகி ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்ததை அடுத்தே டிரஸ் கடந்த வியாழக்கிழமை (20) திடீரென இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் பிரிட்டனில் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி குழப்ப சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேட்டி கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமராக வர முடியும் என்ற நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள் ஏற்பது வரும் திங்கட்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வரவுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது 357 உறுப்பினர்களை பெற்றிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராக வருபவர் குறைந்தது 100 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட் தலைமைக்கு போட்டியிடுவதில்லை என்று கூறியிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகம் உள்ளது. கடந்த முறை தலைமை போட்டியில் அவர் இறுதி வாக்கெடுப்பு வரை முன்னேற்றம் கண்டே டிரஸிடம் தோல்வி அடைந்தார். இதேநேரம் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.
எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னரே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.
கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் ஆட்சியமைக்க பிரிட்டிஷ் அரசர் அழைப்பு விடுப்பார்.
எனினும் டிரஸின் இராஜினாமா உரையை அடுத்து உடன் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்று லேபர் கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டாமர் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 12 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்குப் பின்னர், இந்த சுழல் கதவு போன்ற குழப்ப நிலைக்குப் பதிலாக நல்ல ஆட்சியைப் பெறும் தகுதி பிரிட்டன் மக்களுக்கு உண்டு என்று ஸ்டாமர் கூறினார்.
ஜனவரி 2025இல் தான் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருவேளை புதிய பிரதமர் விரும்பினால், பொதுத்தேர்தல் நடைபெறலாம்.
லிஸ் டிரஸ்ஸின் நிதியமைச்சரான க்வாசி க்வார்ட்டெங் கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி ஒரு மினி பட்ஜெட்டை அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இதனால், பங்குச் சந்தை தடுமாறியது. இந்த மினி பட்ஜெட் பிரிட்டனில் நம்பிக்கையை குலைத்த காரணத்தால், டொலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து, வருமான வரியை குறைப்பதற்கு மேற்கொண்ட தமது முடிவை கைவிடுவது என பிரதமர் லிஸ் டிரஸ்ஸும், நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டெங்கும் முடிவு செய்தனர். இந்தக் குழப்பமே டிரஸ் மீது தமது சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கக் காரணமானது. டிரஸின் பதவி விலகலுடன் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்
Wednesday, October 19, 2022 - 10:26am
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் ஏனைய பிரதான நகரங்கள் மற்றும் வலுசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா நேற்று (18) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
தலைநகரில் மூன்று வெடிப்புகள் இடம்பெற்றதாக உக்ரைன் ஜனாதிபதியின் உதவியாளர் கிரிலோ டைமொஷெங்கோ தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை ஒன்பது மணி அளவில் நகரின் இடது கரை பக்கம் புகைமூட்டம் மேலெழுவதைக் கண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய நகரான டினிப்ரோவின் இரு பகுதிகள் மோசமாக சேதமடைந்திருப்பதோடு சிடோமிர் நகரில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணி நேரத்திலேயே புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று சந்தேகிக்கப்படும் இந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் தலைநகர் மற்றும் வடக்கு நகரான சுமியில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். பல நூறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின்சார துண்டிப்பும் பதிவானது.
ரஷ்யா பொதுமக்களை பயமுறுத்துவது மற்றும் கொலை செய்வதை தொடர்ந்து செய்து வருகிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆளில்ல விமானங்களை வழங்கி இருப்பது அணு உடன்படிக்கையுடன் தொடர்புபட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை மீறுவதாக உள்ளது என்பதில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இணக்கம் எட்டப்பட்டதாக அமெரிக்கா முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
போர் குற்றங்கள் தொடர்பில் ரஷ்யா பொறுப்புக் கூற வேண்டும் என்றும் ஈரான் ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
சூடான் இன மோதல்களில் 2 நாட்களில் 150 பேர் பலி
Saturday, October 22, 2022 - 12:36pm
சூடானின் தெற்கு புளு நைல் மாநிலத்தில் நிலப் பிரச்சினை காரணமாக வெடித்துள்ள புதிய இன மோதல்களில் இரண்டு நாட்களில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மைய மாதங்களில் வன்முறை அதிகரித்திருக்கும் நிலையில் புளு நைல் மாநிலத் தலைநகர் டமாசினில் கடந்த வியாழக்கிழமை கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டது மற்றும் வன்முறைகளை கண்டிக்கும் கோசங்களை எழுப்பினர்.
“கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு இடையே பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று வாட் அல் மாஹி மருத்துவமனை தலைவர் அப்பாஸ் மூசா தெரிவித்துள்ளார். வன்முறைகளில் சுமார் 86 பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹவுசா மற்றும் போட்டிக் குழுக்களுக்கு இடையே நிலப் பிரச்சினை குறித்து சச்சரவு ஏற்பட்டதை அடுத்தே கடந்த வாரம் மோதல் வெடித்தது. இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள் மாநில ஆளுநரை பதவி நீக்குமாறு அழைப்பு விடுத்தனர். நன்றி தினகரன்
சாட் நாட்டில் இராணுவம் சரமாரி சூடு: ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி
Saturday, October 22, 2022 - 8:36am
சாட் நாட்டின் இரு மிகப்பெரிய நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சூடு நடத்தியதில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜமேனாவில் 30 பேர் கொல்லப்பட்டதாக சாட் அரச பேச்சாளர் அசீஸ் மஹமட் சலேஹ் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த வியாழக்கிழமை இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் 40 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
சாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மவுன்டோவில் மேலும் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்பு 60க்கு மேல் இருப்பதாக பெயர் குறிப்பிடாத அந்த நகரின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் மீறி முன்னேறியதை அடுத்தே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதிகாரத்தை கையளிப்பதாக இராணுவம் உறுதி அளித்த திகதியை ஒட்டியே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் இறங்கி இருந்தனர். எனினும் அந்தத் திகதி மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முன்னரங்கு பகுதிக்கு விஜயம் செய்த நாட்டின் நீண்டகால ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கடந்த 2021 ஏப்ரலில் போர்முனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்தே நாட்டில் அரசியல் பிரச்சினை உச்சம் பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட ஜனாதிபதியின் 38 வயது மகனை இராணுவம் இடைக்கால ஜனாதிபதியாக நியமித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கால்நடை ஏப்ப வரி: நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்
Friday, October 21, 2022 - 2:20pm
பண்ணை விலங்குகளின் பசுமை இல்ல வாயு உமிழ்வுக்காக வரி விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக நியூசிலாந்து பண்ணையாளர்கள் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிங்கடன், ஒக்லாந்து மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் பண்ணை நில வாகனங்களால் வீதிகளை இடைமறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கால்நடைகள் ஏப்பம் விடுவது, சிறுநீர் கழிப்பதற்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடும்படி அவர்கள் அரசை வலியுறுத்தினர்.
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் முயற்சியாக நாட்டின் ஆறு மில்லியன் மாடுகள் மற்றும் 26 மில்லியன் ஆடுகள் மூலம் உருவாக்கப்படும் மீத்தேன் மற்றும் நைதரசொட்சைட்டு உமிழ்வு மீது உலகில் முதல் வரி விதிப்பு பற்றி நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில் வீதிகளில் கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசின் கொள்கை ‘துர்நாற்றம்’ கொண்டது என்றும் இந்த வரி உணவு விலையை அதிகரித்து தமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் குறிப்பிடுகின்ற பதாகைகளை ஏந்தி நின்றனர். உலகளாவிய வெப்ப அதிகரிப்புக்கு மீத்தேன் 30 வீதம் காரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment