எழுத்தும் வாழ்க்கையும் - ( இரண்டாம் பாகம் ) அங்கம் 36 சிங்கள மொழியில் வெளிவரவிருக்கும் பாட்டி சொன்ன கதைகள் முருகபூபதி

எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் கடந்த 35 ஆவது  அங்கத்தில், 


குழந்தைகளிடமிருந்து நாம்  கற்பதும் பெறுவதும் என்ற தலைப்பின் கீழ் எனது மகன் முகுந்தனது சிறுவயது பேச்சையும் சிந்தனைகளையும் பற்றிச் சொல்லிவிட்டு, இறுதியாக,   அடுத்துவரவிருக்கும் 36 ஆம் அங்கத்தில் வெளிநாடொன்றிலிருந்து தனது புதல்வனுடன் சென்ற ஒரு அன்பர் எனக்குச்சொன்ன கதையுடன் வாசகர்களை சந்திப்பேன். அதுவரையில் காத்திருங்கள். என்று முடித்திருந்தேன்.

அந்த அன்பரும் குடும்பத்தினரும் வசிக்கும்  வெளிநாட்டிலும்  மிருகங்களை வதைப்பது கொடுங் குற்றம்.  அவர் தனது மகனுடன் இலங்கை வந்திருக்கிறார்.

மகனுக்கு ஐந்துவயதிற்கும் குறைவு.  கொழும்பு காலிவீதியில் அவன்


ஒரு மாட்டு வண்டியை பார்த்திருக்கின்றான். வண்டில்காரன் அந்த மாட்டை தடியால் அடிப்பதை கண்டதும்,  “ அப்பா… அங்கே பாருங்கள். அந்த ஆள் மாட்டுக்கு அடிக்கிறான். பொலிஸை கூப்பிடுங்கள்  “ என்று கத்தியிருக்கின்றான்.

 “ எமது இந்த தாய்நாடு மூன்றாம் உலக நாடுகளின் வரிசையில்தான் வருகிறது.  இங்கு மாட்டு வண்டில்களும்  மக்களின் தேவைகளை கவனிக்கின்றன. அந்த வண்டிலுக்கு அந்த மாடுதான் எஞ்சின். இதனையெல்லாம் கண்டுகொள்ளாதே .  “  என்றார் தகப்பன்.

மற்றும் ஒருநாள் அந்தச்சிறுவன், தந்தையுடன் ஒரு வாகனத்தில் கொழும்பு காலி வீதியில் பயணித்தான்.  திடீரென வாகனங்கள் நின்றுவிட்டன. அவன், ஏன் வாகனத் தொடர் அணி தரித்து  நிற்கிறது? என எட்டிப்பார்த்துள்ளான்.

ஒரு மாட்டுவண்டில் வாகனங்களுக்கு முன்னால் நிற்கிறது. அந்த மாடு சிறுநீர் கழிக்கிறது.  அதனால், வண்டில்காரன் நிறுத்தியிருக்கிறான்.

இச்சிறுவன் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு,                                                  “ அப்பா…அப்பா… அந்த வாகனத்தின் எஞ்சினிலிருந்து பெற்றோல் வடிகிறது.  உடனடியாக தீயணைப்பு படைக்கு அறிவிக்கவும்  “ என்று கத்தியிருக்கிறான்.

குழந்தைகளின் உலகம் இப்படித்தான் இருக்கும்.  அவர்கள் ஜீவராசிகளிடத்தில் பிரியமாகவும் இருப்பார்கள். வெளிநாடுகளில்  வீட்டுக்கு வீடு நாய், பூனை வளர்க்கிறார்கள்.  அவுஸ்திரேலியா  சிட்னியில் எனது நண்பர் ஒருவரின் மகன் கீரிப்பிள்ளையை மிகவும் பிரியமாக வளர்க்கின்றான்.

எனது மகன் முகுந்தன் மிகவும் பாசத்தோடு வளர்த்த பிராண்டி என்ற நாய் இறந்தபோது முழு வீடும் துக்கம் அனுட்டித்தது.  இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன்.

இந்த 36 ஆவது அங்கத்தை ஒரு சிங்கள சிநேகிதி வீட்டிலிருந்து எழுதுகின்றேன். அவர் அவுஸ்திரேலியா அரச  S B S வானொலி ஊடகத்தில் பணியாற்றுபவர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர்.  மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.  இரண்டு  நூல்களிலும்  இவரது மொழிபெயர்ப்புகள்  இடம்பெற்றுள்ளன.


தற்போது எனது பாட்டி சொன்ன கதைகள் நூலை அவர் சிங்களத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு மல்லிகை ஜீவா நினைவரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பாட்டி சொன்ன கதைகளின் இரண்டாம் பதிப்பினை பெற்றுக்கொண்ட குழந்தைகளின் படங்களை கடந்த அங்கத்தில் பார்த்திருப்பீர்கள்.

அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளரான திருமதி டினேஷா டில்ருக்‌ஷி வீரசூரிய,   தானும் ஒரு பிரதியை மேடையில் பெற்றுக்கொண்டு, அதனைத்  தான் சிங்களத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாக உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட எனது மற்றும் ஒரு நூல் நடந்தாய் வாழி களனி கங்கை. அதனைப் பெற்றுக்கொண்ட இலக்கிய நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான நூர் மஃரூப் முகம்மட், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவிருப்பதாகச் சொன்னதுடன், மொழிபெயர்த்தும்விட்டார்.

தற்போது குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் Mystique of Kelani River கிண்டிலில் வெளியாகியிருக்கிறது.

அதன் இணைப்பு: https://www.amazon.com.au/dp/B0B8D9ZSC4/ref=sr_1_1?crid=2PKFBHGPXJC0H&keywords=the+mystique+of+kelani+river&qid=1659500401&sprefix=%2Caps%2C212&sr=8-1

அண்மையில் இதன் வெளியீட்டு அரங்கு தோழர் லயனல்


போப்பகேயின் தலைமையில் நடந்தது.  இதுபற்றிய செய்திகளை ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.

திருமதி டினேஷா டில்ருக்‌ஷி வீரசூரியவின் சிங்கள மொழிபெயர்ப்பின் மூலப்பிரதியை பார்க்கவந்தவிடத்தில், அவரிடமிருந்து ஜீவகாருண்ய உணர்வையும் அவதானிக்க முடிந்தது.

அவர் மோல்டீஸ் இன செல்ல நாயொன்றை பிரியமாக வளர்க்கிறார். அவரது அழகான இல்லத்தின் பின்புறம் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் வந்தமரும் பறவைகளுக்கு தினமும் உணவும் தண்ணீரும் தருகிறார்.

நான் அந்தக்காட்சிகளை பரவசத்துடன் பார்த்தேன்.  அன்று மாலை எல்லாப்பறவைகளும் பறந்து சென்ற பின்னர் ஒரு பறவை மாத்திரம் செல்லாமல், தரையில் அசைந்து அசைந்து வீட்டின் பின்புற வாசலில் வந்து நின்றது.

சற்றுவேளையில் அந்தப்பறவையிலிருந்த அசைவு நின்றுவிட்டது.  அதனால் கலக்கமுற்றவர், என்னை அழைத்து காண்பித்தார்.

அது இவ்வுலகைவிட்டு பறந்துவிட்டது.  கடந்த 21 ஆம் திகதி அதிகாலை, உறக்கத்திலேயே விடைபெற்றுவிட்ட  எனது இலக்கிய நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில் என் கண் முன்னே ஒரு பறவை படிப்படியாக தனது உயிரை இழந்துகொண்டிருந்த காட்சி மனதை வருத்தியது.

ஆனால், தினம் தினம் பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கிவந்த சிநேகிதி டினேஷாவுக்கு எப்படி இருக்கும். அவர் கண்களில் நீர்மல்க, தங்கள் பௌத்த மத தோத்திரம் சொல்லி பிரார்த்தித்து அந்தப்பறவைக்கு இறுதி மரியாதை செய்தார்.


எனது பாட்டி எனக்குச்சொல்லித்தந்த கதைகளிலும் பறவைகள், மிருகங்கள், ஜீவராசிகள்தான் வருகின்றன.  அவற்றால் பேசமுடியாது. அவை தமது இயல்புகளுடன் பேசினால் எவ்வாறிருக்கும் என்ற  கற்பனை புனைவுகளே அக்கதைகள்.

அவற்றையே தற்போது சிங்கள மொழியில் டினேஷா மொழிபெயர்க்கின்றார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட அந்த வெளிநாட்டு அன்பரின் புதல்வனிடத்திலிருந்த ஜீவகாருண்ய இயல்புதான், அன்று ஒரு மாட்டுவண்டில்காரன் மீது கோபத்தையும் அந்த மாட்டின் மீது பாசத்தையும் பொழியவைத்தது.

இந்த 36 ஆவது அங்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது,  எனது பறவைகள் நாவலின் முன்னுரையில் நான் எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

 “ பறவைகள் என்னதான வானத்தில் வட்டமிட்டுப்பறந்தாலும், ஆகாரத்திற்காக தரைக்குத்தான் வரவேண்டும்.  “ எனது அம்மா சொன்னதாக அதில் எழுதியிருந்தேன்.

 சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

என்ற பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வைரமுத்து, குறிப்பிட்ட சக்கரவாகப்பறவையை பார்த்திருப்பாரா..?

மழையை அருந்தி வாழும் அப்பறவையும் தரைக்குத்தான் வரும்.

இவ்வாறு வானத்தில் பறக்கும் எந்தவொரு உயிரும் தனது உயிரை விடுவதற்கும் தரைக்குத்தான் வருகிறது.

பறவையைக்கண்டுதான் விமானம் படைத்தான் என்பார் கவியரசர் கண்ணதாசன்.

பறவைகள் பல இடம்பெற்றுள்ள எனது பாட்டி சொன்ன கதைகள் சிங்கள வாசகர்களிடம் விரைவில் செல்லவிருக்கிறது.

( தொடரும் ) 


No comments: