முதல் சந்திப்பு ( அங்கம் -09 ) இலக்கிய உலகில் அன்பு - அறிவு - உண்மை – தேடல் சார்ந்து இயங்கிய ஆளுமை “ பூரணி “ மகாலிங்கம் முருகபூபதி


எமது தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு தங்களது பூர்வீக ஊர்களின் பெயர்களையும், தமது பெயருக்கு முன்னால் பதிவுசெய்துகொள்வார்கள்.

அதனால்,  அவர்களை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லவேண்டிய அவசியம் இராது. 

சிலரை உதாரணத்திற்கு சொல்கின்றேன்.

சில்லையூர்,  காவலூர், திக்குவல்லை, தெளிவத்தை, மாவை, வதிரி, உடுவை.  இவ்வாறு ஊரின் பெயரைச் சொன்னாலே எழுத்தாளர் – கலைஞரின் பெயரை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

இதே சமயம் ஈழத்திலும் புகலிட நாடுகளிலும்   இலக்கிய


சிற்றிதழ்களை  வெளியிட்ட சிலரையும் அவற்றின் பெயரை முதல் பெயராக வைத்து அழைப்பது வழக்கம்.

அவ்வாறு சொன்னால்தான் தெரியவரும்.

உதாரணத்திற்கு :  மல்லிகை ஜீவா, சிரித்திரன் சிவஞானசுந்தரம், செங்கதிர் கோபாலகிருஷ்ணன்,  ஞானம் ஞானசேகரன்,  ஜீவநதி பரணீதரன்,  ஓசை மனோகரன், காலம் செல்வம்.

இவர்களின் வரிசையில் மற்றும் ஒருவர்தான் பூரணி மகாலிங்கம்.

எம்மத்தியில் பல மகாலிங்கம்கள் இருப்பார்கள். ஆனால், பூரணி மகாலிங்கம் எனச்சொன்னால்தான் இலக்கிய உலகில், இவர்பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.

எனது இலக்கியப்பிரவேச  காலத்தில், என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்டு,  தனது பூரணி இதழில் எழுதுவதற்கு களம் தந்தவர்தான் என். கே. மகாலிங்கம்.

இவருடனான முதல் சந்திப்பு எனக்கு இலக்கிய வட்டாரத்தில் பலரையும் நண்பர்களாக்கியிருக்கிறது.

அதனால், என்னால் மறக்கமுடியாத இலக்கியவாதி.

1972 ஆம் ஆண்டு ஜூலை மாத மல்லிகை இதழில் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியானதையடுத்து,  சில ஈழத்து எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தேன்.

அச்சிறுகதை மேற்கிலங்கையில் நீர்கொழும்பு பிரதேச மண்வாசனையுடன்,  அங்கு வாழ்ந்த கடல் மாந்தர்களின் மொழிவழக்குடன் வெளியாகியிருந்தது.  அக்காலப்பகுதியில்  கொழும்பு பொரளை கொட்டா வீதியில் ( தற்போது கலாநிதி என். எம். பெரேரா வீதி ) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கியது.

 அங்கிருந்துதான் தேசாபிமானி, புதுயுகம், சக்தி முதலான இதழ்களும் வெளிவந்தன.

இலக்கிய நண்பர் மு. கனகராசன் அங்கே ஆசிரிய பீடத்திலிருந்தார்.    1972 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் .

 “ கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா வித்தியாலய


மண்டபத்தில் பூரணி காலாண்டிதல் வெளியீட்டு அரங்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடக்கிறது. அங்கே சென்றால் உமக்கு பல எழுத்தாளர்களையும்  சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் வெளியூர் செல்கின்றேன்.  “ எனச்சொல்லி, குறிப்பிட்ட  நிகழ்ச்சியின் அழைப்பிதழையும் கனகராசன் எனக்குத் தந்தார்.

நான் எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து சென்றேன்.

பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் பூரணி வெளியீட்டு அரங்கு சிறப்பாக நடந்தது. அதனையடுத்து பூரணி இதழின் பிரதிகளுடன் சபையினரிடம் வந்தவர்தான் அதன் இணையாசிரியர்களில் ஒருவரான என். கே. மகாலிங்கம் எனத் தெரிந்துகொண்டேன்.

அன்றுதான் ஒருவரை ஒருவர் முதல் முதலில் சந்தித்து


பேசிக்கொண்டோம். அவருக்கு வசீகரமான முகம். புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.

சற்று நேரத்தில் தலைமை தாங்கிய பேரா. சிவத்தம்பி,                           “ அடுத்து ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பேச்சாளர்கள் வந்து பேசலாம்   என்றார்.

எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம், மு. நித்தியானந்தன், கே. எஸ். சிவகுமாரன், சில்லையூர் செல்வராசன்…. என்று ஒவ்வொருவராக வந்து இரத்தினச்சுருக்கமாக பேசினார்கள். காரசாரமான விவாதங்களும் எழுந்தன.

அந்த அமளிகளுக்கு மத்தியில் புன்னகைத்தவாறு, பூரணி பிரதிகளை விநியோகித்தவாறு மகாலிங்கம் மிகவும் நிதானமாக நடந்துகொண்டார்.


அந்த இலக்கியக் கூட்டத்தையடுத்து, அந்த வித்தியாலயத்தின் ஒரு வகுப்பறையில் மல்லிகை ஜீவா, நெற்றி நரம்பு புடைக்க, மு. தளையசிங்கத்துடன்  காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுதும் மகாலிங்கம் அமைதியாக அனைத்தையும் அவதானித்துக்கொண்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் எங்கள் ஊரில் நாம் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களிடம் நூல்கள், இதழ்களை பரிமாரிக்கொண்டிருந்தோம்.

பூரணி ஐந்து பிரதிகளை நானும் நண்பர்களுக்காக வாங்கிக்கொண்டேன்.  என்னை மகாலிங்கம்தான் தளையசிங்கம், பொன்னம்பலம் சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

எனது இரண்டாவது சிறுகதையையும் ( அந்தப்பிறவிகள் ) பூரணியின்


இரண்டாவது இதழிலேயே வெளியிட்டு, அதன் முகப்பு அட்டையில் எனது பெயரையும், அதில் எழுதியிருந்த பிரபல எழுத்தாளர்களின் பெயர்களுடன் அச்சிட்டிருந்தார் மகாலிங்கம்.

இலக்கிய உலகில் வளரும்  பருவத்திலிருந்த என்னை இனம் கண்டு ஊக்குவித்தவர்தான் என்.கே. மகாலிங்கம். அக்காலப்பகுதியில் அவர் களனி பிரதேசத்தில் உணுப்பிட்டி தமிழ் வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றினார்.

ஆசிரியர் தொழிற்சங்கத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. விவேகானந்த சபை மண்டபத்தில்  ஆசிரியர் – பெற்றோர் – மாணவர் என்ற தொனிப்பொருளில் நடந்த முழுநாள் கருத்தரங்கிலும் அவருக்கு தொடர்பிருந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்


கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தில் அதன் தலைவர் கு. விநோதன் தலைமையில் பூரணி விமர்சன அரங்கு நடந்தபோது என்னையும் மகாலிங்கம் அழைத்திருந்தார்.

விநோதன்,   மற்றும்  கவிஞராகவும் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகராகவும் அரசியல்வாதியாகவும் அமைச்சராகவும் பின்னாளில் மாறிய அஷ்ரப், நாடாளுமன்ற உறுப்பினராகி, இன்றளவும்  அரசியல் பணியில் ஈடுபட்டுவரும் ஶ்ரீகாந்தா,  மற்றும் சகுந்தலா சிவசுப்பிரமணியம் ஆகியோர் அச்சமயம் சட்டக்கல்லூரி மாணவர்களாகவிருந்தனர்.

பின்னாளில் விநோதன்  கொல்லப்பட்டார். அஷ்ரப் கெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்.  சகுந்தலா ஒரு விமானப் பயணத்தையடுத்து  எதிர்பாராதவகையில் இறந்தார். இவர்களையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறிமுகப்படுத்திய  நண்பர் பூரணி மகாலிங்கம், தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தொடர்ந்தும் எழுதுகிறார்.  ஆபிரிக்க இலக்கியங்களை தமிழுக்கு வரவாக்குகின்றார்.

சிறிது காலம் நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகவும்


பணியாற்றினார். அதனால் இவர் மூலம் எமக்கு சில ஆபிரிக்க  இலக்கியங்கள் தமிழில் கிடைத்தன.

பூரணி இதழின் தாரக மந்திரமாக பதிவேற்றப்பட்ட வரிகள் இவை:

 “ அன்பு – அறிவு – உண்மை – அவையே எம்முள் இறைவன். பிரபஞ்சமே எமது கோயில் – பொது வாழ்க்கையே எமது தொழுகை 

மகாலிங்கம் எழுதிய   கோபம் என்ற சின்னஞ்சிறிய சிறுகதையுடன் முதலாவது பூரணி இதழ் வெளியானது. தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதினார்.

தியானம் ( சிறுகதை)    உள்ளொளி  ( கவிதை )  இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

 முதலானவற்றை  வரவாக்கியவர்.


நோபல் விருது பெற்ற நைஜீரிய எழுத்தாளர் சினுவா ஆச்சுபேயின் பிரபல  நாவல் Things Fall Apart. இதனை   சிதைவுகள் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். வீழ்ச்சி என்பது மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு.

முள்ளிவாய்க்காலில் இறுதி வரையில்   பாதிக்கப்பட்டோரின் அவலத்தை தீவிர தேடுதலுடனும் சமூக அக்கறையுடனும்  துல்லியமாகப் பதிவு செய்த   பிரபல ஊடகவியலாளர்  ஃபிரான்ஸிஸ் ஹரிசன் எழுதிய ஆங்கில நூலையும் மகாலிங்கம்  ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்    என்ற தலைப்பில் தமிழுக்கு வரவாக்கியவர்.  

 இந்த நூல் இதுவரையில் இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது.

மகாலிங்கம், தமது பூரணியின் தாரக மந்திரமாக எதனை உச்சரித்தாரோ, அவ்வாறே வாழ்ந்துகொண்டிருப்பவர்.

---0---

( நன்றி: யாழ். தீம்புனல் )

 

No comments: