ஓஸ்லோவில் ஒரு வாரம் (கன்பரா யோகன்)


பேர்கனிலிருந்து  ஒரு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒஸ்லோவுக்கு செல்லும் ரயில் ஏறினோம். அந்தப்  பயணத்திற்கு கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கு சற்று அதிகமாக  எடுத்தது. நோர்வேயின் மேற்கிலிருந்து கிழக்காக  செல்லுகிற இந்த ரயிலில்  தெரியும் யன்னல் காட்சிகளுக்காக இது பிரசித்தமானதென்று பலரும் சொல்லியிருந்தால் நாங்களும் இந்த ரயில் பயணத்தை விரும்பியிருந்தோம்.   

நாங்கள் ஏறும்போது பேர்கனில் காலியாகவிருந்த


ஆசனங்களெல்லாம் பிறகு ஒவ்வொரு தரிப்பிலும் ஏறிய பயணிகளால் நிரம்பத் தொடங்கியது. நாங்கள் முன்பு காரில் சென்று பார்த்த பனி மலைகள் ரயில் பாதைக்கு மிக அருகாகத் தென்பட்டன.  மலைகளுக்கு வெள்ளைப் பஞ்சு ஒட்டி விட்டது போல  பனியின் படிவுகள் இன்னும் உருகாமலிருந்தன.

ரயில் அவ்வப்போது தரித்து நின்ற வேளையில் உள்ளே உணவுச்சாலை இருந்த பெட்டியை நோக்கிப் போனேன். மேசைகளில் உணவுடன் பியர் அல்லது சூடாக, குளிராக குடிப்பதற்கு ஏதாவதொன்றை வாங்கி வைத்துக் கொண்டு கூட்டமாகப் பலர் அமர்ந்திருந்தனர். அந்தப் பெட்டி அவர்களின் பேச்சொலிகளால் நிறைந்திருந்தது. பலருக்கு அது ஒரு உற்சாகம் நிரம்பிய பயணம்.  அவர்களில் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தபோது ஆங்கிலத்தில் பதிலளித்தார். அநேகமானோருக்கு ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமமேதுமில்லை என்று இங்கு வந்ததிலிருந்து அவதானித்திருக்கிறேன்.    

எமது ஆசனத்துக்கு முன்பாக இருந்த வெற்றிடத்தை இப்போது ஒரு இளஞ்சோடிகள் வந்து நிரப்பினர். ஆச்சரியமாக அவர்களும் அவுஸ்திரேலிய பயணிகள், டென்மார்க்கில் பயணத்தை முடித்துக்கொண்டு நோர்வேக்கு வந்திருக்கிறார்கள்.

யன்னலுக்கு வெளியே மலைகளும் , குகைகளும் கடந்து போக மலைப் பிரதேசம் மெல்லமெல்ல மறைந்து  சமதரைப் பிரதேசம் தெரிய ஆரம்பித்தது. ஓஸ்லோ பெரும்பாலும் சமதரைப் பிரதேசம். பேர்கனைப் போல மலைகள், குடாக்  கடல்கள் என்றில்லை.

நாங்கள் ஒஸ்லோவில் நின்றபோது நண்பர் சர்வேந்திரா எங்களையும், லண்டனிலிருந்து வந்திருந்த நண்பர் அ.ரவியையும் தனது காரில் அழைத்துக் கொண்டு சுவீடனின் எல்லையோரத்திலுள்ள நகரமாகிய Stromstad  இற்கு போய்ப் பார்த்து வருவதற்காக காலையில் புறப்படலாம் என்றார்.  இவர்கள் இருவருமே மண் சுமந்த மேனியர் நாடகத்தில் நடித்த நண்பர்கள். ஒஸ்லோவிலிருந்து சுவீடனின் எல்லை சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்.

சர்வேந்திராவின் கார் மின்சாரத்திலியங்குவது. அவர் இரவே அதன்  பட்டரியை தனது கார் பார்க்கிங் இல் சார்ஜ் பண்ண போட்டிருந்தபோதும்  எதோ மின்சாரத் தடங்கலினால் முழுவதுமாக பேட்டரி சார்ஜ் பண்ணப்படவில்லை. அதனால் அவர் முகத்தில் சற்று சஞ்சலம் தெரிந்தது. காலை உணவுக்காக மக் டொனால்ட்ஸ் ஒன்றில் நாங்கள் சாப்பிட உள்  நுழைய அவர் மறக்காமல் கார்  பார்க்கிங் இலிருந்த சார்ஜரில் பொருத்தி விட்டிருந்தார்.  

நாங்களும் இங்கு அவுஸ்திரேலியாவில் இந்த பட்டரிகளைப் பற்றி இன்னும் சிறிது காலத்தில் பட்டறியும் காலம் வரப் போகிறது என்றேன். ஆனால் சக்தி மிக்க பட்டரி  கொண்ட கார்கள் எதிர்காலத்தில் இறக்குமதியானால் இந்தப் பிரச்சினைகளை தீர்த்து விடும் என்கிறார்கள்.

நோர்வேயில் பரவலாக மின்சாரக் கார்கள் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகமாகிவிட்டன. ஆனாலும் லண்டனில் கூட இவ்வளவுக்கு இல்லையென்றார் ரவி. சர்வேந்திரா  தான்   2015 லிருந்தே அதாவது 7 வருடங்களுக்கு  முன்னரே  தனது முதலாவது மின்சாரக் காரை வாங்கியிருந்ததாகச் சொன்னார்.

இத்தனைக்கும் நோர்வே பெற்றோலியத்தை கடலுக்கடிலிருந்து பெருமளவில் அகழ்ந்தெடுத்து வருகிறது.  அதன் பொருளாதாரத்தில் மீன் ஏற்றுமதிக்கு இணையாக பெற்றோலிய வளமும் இருக்கிறது. ஆனாலும் சூழியல் மாசுபற்றிய பிரக்ஞையினாலும், குறுந்தூரப் பயணங்களே நோர்வேயில் பெருமளவில் நிகழ்வதாலும் மின்சாரக் கார்களின் பயன்பாடு பெருமளவு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு வேளை நீண்ட தூரப்  பயணப் பாதைகளை கொண்ட ஒஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவற்றின் பாவனை சற்று தாமதமாகவே வந்து சேரும் போல.

சுவீடனில் எல்லையை  வந்தடைத்ததும் காரை நிறுத்தி இறங்கினோம். கடலுடன் தொடுத்த ஒரு பெரிய நீரோடை இயற்கை போட்ட எல்லையைப் போல  இரு நாடுகளையும் அந்த இடத்தில் பிரிக்கிறது. நீரோடைக்கு  மேலே செல்லும் பாலத்தில் தெருவின்  தார் நிலத்தில்  ஒரு வெள்ளைக்கோடு போடப்பட்டு அதில் ஒரு புறத்தில் NORGE (நோர்வீஜிய மொழியில் நோர்வே)  என்றும் மறு  புறத்தில் SVERIGE (சுவீடிஷ் மொழியில் சுவீடன்) என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

சுவீடனிலுள்ள அந்த நகரத்தில் ஒரு ஷொப்பிங் மாலுக்குள் நுழைந்தோம். சாதாரணமாக பொருட்களின் விலைகள் நோர்வேயுடன் ஒப்பிடுகையில் சுவீடனில் மலிவாக இருப்பதும் அதனால் பல நோர்வேர்த் தமிழர் அதுவும் ஒஸ்லோத் தமிழருக்கு சுவீடன் ஷொப்பிங் உவப்பானதாயிருக்கிறது. அங்குள்ள தாய் உணவகமொன்றில் மதிய உணவருந்தி விட்டு மீண்டும் ஒஸ்லா திரும்பி அன்றிரவு அரியாலை மக்கள் மன்றத்தினரின் இசை நிகழ்சி ஒன்றைப் பார்ப்பதற்காக சென்றோம். அது அவர்களின் 15 வது வருட நிறைவைக் குறிக்கும் மெல்லிசை விழா.  

அங்குள்ள நிகழ்ச்சிகளுக்கு ஒரு வசதி என்னவென்றால் ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளிலிருந்தும் கலைஞர்களை வரவழைக்க முடிவதுதான். அந்நிகழ்ச்சியில் பெல்ஜியத்திலிருந்து கீபோர்ட் வாசிக்க இசைப்பிரியனும் (முன்னாள் ஈழத்து இசையமைப்பாளர்), லண்டனிலிருந்து ஈழத்து இளம்தலைமுறை பாடகியொருவரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதை விட பிரதான பாடகராக சூப்பர் சிங்கர் பாடகர் மூக்குத்தி முருகனும் தமிழ் நாட்டிலிருந்து கலந்து கொண்டிருந்தார். உள்ளூர் பாடகர்களும் பங்கு பற்றினர். ஈழத்து இளம்தலைமுறை இசையில் ஈடுபாட்டுடன் இருப்பதை பேர்கனிலும் அறிந்திருந்தோம். மீரா என்ற இளங்கலைஞர் புல்லாங்குழலிசை மீட்டுவதிலும் , இசையமைப்பாளராயும் தேசிய அளவில் நோர்வே எங்கும் அறியப்பட்டிருந்தார்.

அரியாலை கலைகள் பொலிந்து நிறைந்த கிராமம். அங்கு பிறந்த கலைஞர்கள் இன்று புலம் பெயர்ந்தும் புலத்திலும்  இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒஸ்லோவில் அரியாலை மக்கள் மன்றம் அமைத்து 15 ஆண்டுகளாக நடாத்தி வருவது என்பது சுலபமான விடயமல்ல.   

சர்வேந்திரா Forum Theatre என்று ஒரு அரங்க செயற்பாடுக் குழுவாக ஒஸ்லோவில் இயங்கி வருகிறார். அரங்க ஆற்றுகையும் கலந்துரையாடலும் என்ற வடிவத்தில் பல படைப்புகளை தயாரித்திருப்பதாக சொன்னார். இந்த குழுவிலுள்ள கவிஞர் ரூபன் சிவராஜா அவர்களையும் சந்தித்தோம்.

ஒஸ்லோவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் தவற விடாது செல்லும் ஒரு பயணம் என்றால் அது ஒஸ்லோவிலிருந்து செல்லும் கப்பற் பயணம்தான்.  இந்த கப்பல் சுவீடனுக்கும்,, டென்மார்க்கிற்கும் இடையேயுள்ள வட கடலின் வழியே 20 மணி நேரம் ஓடி ஜெர்மனியின் துறைமுக நகரமாகிய Kiel க்குப் போகிறது.  மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாட் காலை 10 மணிக்கு சென்றடைகிறது.

மாலையையும், இரவையும் செலவிடத்தக்கதாக கப்பல்  அசைவதே தெரியாத பயணம். உள்ளே இருந்த பலவிதமான கடைகளும், உணவுச்சாலைகளும், Duty free விற்பனைகளும் ஒருபுறம், கேளிக்கை இசை நடன நிகழ்வுகள் மறுபுறம் என்று பொழுதை போக்கினோம்.   காலையில் எழுந்து  வெளியே பார்க்க சூரியனின் மஞ்சள் ஒளியில் கப்பல் ஜெர்மனியின் கரையோரம் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.     

Kiel  நகரத்தில் இறங்கி அங்குள்ள கடைத்தெருக்களில் நான்கு மணி நேரத்தை செலவிட்டு உணவருந்தி விட்டு மீண்டும் கப்பலுக்குத் திரும்பினோம். Kiel நகரம் ஜெர்மனியின் பழைய துறைமுக நகராயும், அதே வேளை பல்வேறு கப்பல்களில்  நோர்வே , சுவீடன், டென்மார்க் என்று செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நுழை வாயில் புள்ளியாகவும் பிரசித்தியடைந்திருக்கிறது. நாங்கள் சென்றது Color Line என்ற கப்பலொன்றில். இதில் குறிப்பிட வேண்டியதென்னவென்றால் கப்பல் பயணத்துக்காக அறவிடும் கட்டணம் குறைவு, ஆனால் உள்ளே உணவு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தனியாக கட்டணங்கள் உண்டு. இதுவும் ஒரு வகையில் பலரை கவர்ந்திழுக்கும் உத்திதான்.  இந்தப் பயணத்தில் எம்முடன் ரவி, சர்வேந்திராவும்,  நண்பர்கள் கார்த்திக், ராஜன் ஆகியோரும் வந்திருந்தனர்.    

ஒஸ்லோவில் Vigeland Park என்ற இடத்திலுள்ள ஒரு சதுக்கத்தில் தனியொரு சிற்பியினால் வடித்தெடுத்த 200 இற்கு மேற்பட்ட சிலைகளின் தொகுதியொன்றைப் பார்ப்பதற்காக சென்றிருந்தோம். பித்தளையினாலும், இரும்பினாலும் வார்த்தெடுக்கப்பட்ட இவற்றுள் சில ஜெர்மனியில் ஹிட்லர் கால மனிதப் பேரழிவையும் காட்டுவது என்கிறார்கள்.

ஒஸ்லோவில் நாங்கள் தங்கியிருந்தது அருள் குடும்பத்தினருடன். அருள் நோர்வேயின் வரலாற்றை ஆர்வத்துடன் எனக்கு சொல்லி வந்தார். குறிப்பாக  ஆதிக் குடிகளாகிய வைக்கிங்ஸ் பற்றியும் நோர்வேயின் தோற்றமும் அதன் பொருளாதார பின்புலமும் பற்றிய பல தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு வாரம் மட்டும் ஒஸ்லோவில் தங்கியிருந்ததனால் இந்த நோர்வேப் பயணத்தின் முடிவில் நாங்கள் ஒஸ்லோவிலிருந்தே அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பினோம்.   நீண்ட நேர விமானப் பயணம்  ஆனாலும்  நோர்வே அனுபவங்களை மீட்டிக் கொள்ள அதுவும் உதவியது.

No comments: