இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கான நோர்வே அதிகாரியுடன் கலந்துரையாடல்

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதுமே துணை நிற்கும்

ஜப்பானிடமிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு 500 மில்லியன் யென் நிதி

இலங்கைச் செய்திகள்       சிறை செல்ல முன் தான் நடித்திருந்த திரைப்படத்தை பார்வையிட்ட ரஞ்சன் ராமநாயக்க

வரலாற்றில் முதற் தடவையாக யாழுக்கு அதிக ரயில் சேவைகள்


இலங்கைக்கான நோர்வே அதிகாரியுடன் கலந்துரையாடல்

6 தமிழ்க் கட்சித்தலைவர்கள் கூட்டாக பேச்சு

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட்டுடன் 6 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், கோவிந்தன் கருணாகரம் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல், சமூக விடயதானங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. ஐ.நா-வில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவதானிக்க முடிவதாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்ற கைது ஆகிய விடயங்களை அவர்கள் நோர்வே பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த கருத்துகளை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அவற்றை ஐ.நா-வில் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுவதாகவும் ஆன் கிளாட் உறுதியளித்ததாக தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்தார்.    நன்றி தினகரன் 

 




பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவாகே, இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ஜெனரல் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது  ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கிவைத்தனர்.    நன்றி தினகரன் 





இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதுமே துணை நிற்கும்

இந்த வருடம் மட்டும் 3.8 பில். டொலர் உதவி

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா எந்தெவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும், இந்தாண்டு மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ-பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றிய பின்னர் தொடர்ச்சியான கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 






ஜப்பானிடமிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு 500 மில்லியன் யென் நிதி

இலங்கையில் தொற்றா நோய்களுக்கு எதிராக சிகிச்சைகளை வழங்கக்கூடிய வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நவீன ஜப்பானிய மருத்துவ சாதனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு 500 மில்லியன் ஜப்பானிய யென்களை மானியமாக வழங்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி இதற்கான குறிப்பில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வில் திறைசேரி செயலாளரான மஹிந்த சிறிவர்தன பங்குபற்றியிருந்தார்.

இதனூடாக இலங்கையில் சமூக மற்றும் மனித நேய விருத்திக்கு பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்த நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டின் போது, ஜப்பானை மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைக்கும் வகையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றியிருந்த உரைக்கு தமது நன்றியை தெரிவிக்கும் வகையில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை 1983 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறவை மேலும் கட்டியெழுப்பும் வகையில், இந்த நிதி உதவியினூடாக, நவீன மருத்துவ சாதனங்களான CT angiography, catheter சத்திரசிகிச்சை சாதனம், அங்க மாற்று அறுவைச்சிகிச்சை சாதனங்கள், ophthalmology சாதனம் போன்றவற்றை வழங்குவதுடன், புதிய பற்சிகிச்சை நிலையமொன்றையும் நிறுவவுள்ளது. மேலும் தொற்றா நோய்களான புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கான சிகிச்சைகளை வழங்கும் வசதிகளை நிறுவவுள்ளதுடன், இலங்கையில் கட்புலனற்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளது.

இலங்கையில் சம்பவிக்கும் 80சதவீதத்துக்கும் அதிகமான மரணங்களுக்கு தொற்றா நோய்கள் காரணமாக அமைகின்றன. கொவிட்-19 தொற்று ஏற்பட்டதும் இந்த குறைபாடுகளைக் கொண்டவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, பல மக்களின் சுகாதார மற்றும் போஷாக்கு நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த வசதிகளினூடாக தொற்றா நோய்களை இனங்காணல் மற்றும் சிகிச்சையளித்தலை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதுடன், குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்த தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான பரஸ்பர உறவுகளின் அடையாளமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம். இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்க ஜப்பான் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் நீண்ட கால அபிவிருத்திப் பங்காளர் எனும் வகையில் தொடர்ந்தும் தமது உதவிகளை வழங்கும்.    நன்றி தினகரன் 





இலங்கைச் செய்திகள்       சிறை செல்ல முன் தான் நடித்திருந்த திரைப்படத்தை பார்வையிட்ட ரஞ்சன் ராமநாயக்க

- விசேட அனுமதியின் அடிப்படையில் திரையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்

திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்ல முன்னர் கடைசியாக நடித்த The Game எனும் திரைப்படத்தை பார்வையிட சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (19) பிற்பகல் கொழும்பு சிட்டி சென்டர் திரையரங்கில் திரையிடப்பட்ட விசேட காட்சியை பார்வையிட அவர், சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டதோடு, குறித்த காட்சி நிறைவடைந்ததும் மீண்டும் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்காக, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சின் விசேட அனுமதி கோரப்பட்டிருந்ததோடு, சிறைச்சாலையின் அனுமதியுடன் அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இலங்கையில் திரைப்பட நடிகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் திரைப்படத்தை பார்வையிட அழைத்து வரப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், சிறைக்கைதி ஒருவர் விசேட சந்தர்ப்பங்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் சிறையிலிருந்து வெளியில் அழைத்துச்  செல்லப்படுவது இது முதல் தடவையல்ல என, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 வழக்குகளில் ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 2ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







வரலாற்றில் முதற் தடவையாக யாழுக்கு அதிக ரயில் சேவைகள்

- விரைவில் அத்தியாவசிய பொருட்களுக்கு சரக்கு ரயில்

அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு " யாழ். ராணி " புகையிரதத்தில் பயணித்தார்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மக்களை கருத்தில் கொண்டு அதிகளவான சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளோம்.

புதிதாக காங்கேசன்துறை - கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான "யாழ் ராணி" சேவை , தடைப்பட்டிருந்த இரவு தபால் சேவை மீள ஆரம்பம், உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்களை அதிகரித்துள்ளமை உள்ளிட்டவற்றை செயற்படுத்தியுள்ளோம்.

இவற்றுடன், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குரிய திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

மேலும், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் அநுராதபுர மாவட்ட பணியாளர்கள், பல்கலை மாணவர்களை கருத்தில் கொண்டு, ஓமந்தை - அறிவியல் நகர் புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அத்துடன் தடைப்பட்டுள்ள "ஸ்ரீதேவி" சேவையை மீள ஆரம்பிப்பதற்கு, பயணிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும், அதிகளவு பயணிகள் பயணிப்பார்கள் என்றால் அச்சேவை மீளவும் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை, பஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட தனியார் போக்குவரத்து சேவைகளின் கட்டண நிர்ணயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொள்ளும். முச்சக்கர வண்டிகளின் கட்டண அறவீடு தொடர்பாக சட்டத்திருத்தமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும்.

அத்துடன் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவோர் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொது மக்களை முறைப்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 








No comments: