காதலிக்க வாங்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர்


தமிழ்வாணன்.இவர் எழுதிய மர்ம நாவல்களும்,தன முனைப்பு கட்டுரைகளும் இவரை பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தன.இவரின் கேள்வி பதில்கள் ஏராளமான வாசகர்களை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.எழுத்தாளராக திகழ்ந்து கொண்டே பாதிப்பகத் துறையிலும் ஈடுபட்ட இவர் மெதுவாக திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார்.ஆரம்பத்தில் தெலுங்கில் வெளியான ஆக்சன் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டார்.அவ்வாறு வெளியிட்ட பிள்ளைப்பாசம்,துடிக்கும் துப்பாக்கி போன்ற படங்கள் இலாபம் தரவே அடுத்து தமிழில் படம் ஒன்றை தயாரிக்க முனைந்தார்.


அதன் விளைவாக 1972ம் ஆண்டு அவர் தயாரித்த படம் தான்

காதலிக்க வாங்க.மர்மக் கதை எழுத்தாளர் என்பதால் இந்தப் படத்தின் கதையும் மர்மக் கதையை கருவாக கொண்டிருந்தது.50 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற சஸ்பென்ஸ் படம் என்றால் ஜெய்சங்கர்தான் கதாநாயகனாக நடிப்பார்.அதே போல் முழு ஒத்துழைப்பும் வழங்கக் கூடியவர் என்ற பெயரும் அவருக்கு இருந்தது.அந்த அடிப்படையில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார்.இவருடன் மேஜர் சுந்தரராஜன்,ஸ்ரீகாந்த்,தேங்காய் ஸ்ரீனிவாசன்,மனோரமா,விஜயகிரிஜா,ஆகியோரும் நடித்தனர்.ஆடுதுறை அரசு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

கதாநாயகியாக புதுமுகம் கவிதா நடித்தார்.இவருடன் ஹிந்தி நடன நடிகை ஷப்னமும் நடித்திருந்தார். இந்த கவர்ச்சி நடிகை ஷப்னத்துக்கு இவ்வாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி 80வது பிறந்த தினம் என்பது ஒரு கொசுறு தகவல் ஆகும்! இவர்கள் இருவரும் நடித்தார்கள் என்பதை விட கவர்ச்சியை தாராளமாக வழங்கினார்கள் என்று சொல்லலாம்.இவர்களின் கவர்ச்சியுடன் போட்டி போடுவது போல் ஒரு புலியும் படத்தில் நடித்தது.


செல்வந்தர் வடமலைக்கு மூன்று பெண்கள்.மூவருமே அசட்டுப் பெண்கள்.ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துவிட்டு அதன் பாணியில் தங்கள் தந்தையிடமே கொள்ளையடிக்க முனைகிறார்கள்.ஆனால் அவர்கள் விளையாட்டாய் செய்தது வினையாகிறது.வைரங்கள் உண்மையிலேயே கொள்ளை போய் விடுகிறது.கொள்ளையடித்தவர்களை தேடும் அவர்களின் முயற்ச்சி மூன்று பேர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.அறிமுகம் காதலாகிறது.அதே சமயம் வைரங்கள் ஒரு புலியின் பாதுகாப்பில் இருப்பதும்,அந்த புலிக்கு சொந்தக்காரி ஒரு நடனக்காரி என்றும் தெரிய வருகிறது.அந்த நடனக்காரி மீது செல்வந்தர் வடமலைக்கு காதல் பிறக்கிறது.

இப்படி ஒரு கதையை எழுதி அதற்கு வசனமும் எழுதியிருந்தார்

தமிழ்வாணன்.தான் எழுதிய நாவல்களில் ஒன்றை படமாக்கி இருக்கக் கூடிய தமிழ்வாணன் இப்படி ஒரு கதையை ஏன் எழுதினாரோ தெரியவில்லை! இதனால் பிரபல நடிகர்கள் நடித்தும் படத்தை நிறுத்த முடியவில்லை. படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே அசட்டுதனமாக நடந்து கொள்கிறார்கள்.பாடல்களை வீரபாண்டியன் இயற்றியிருந்தார்.ராகவா நாயுடு இசையமைத்து இருந்தார்.டி எம் எஸ் குரலில் உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ பாடல் பிரபலமானது.


சிட்டிபாபு படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார்.அன்றைய காலகட்டத்தில் ஜெய்சங்கரின் படங்களை டைரக்ட் செய்து கொண்டிருந்த ஐ என் மூர்த்தி படத்தை இயக்கியிருந்தார்.சஸ்பென்ஸ்,காமெடி இரண்டையும் கலந்து உருவான படம் இரண்டும் கெட்டானாக வெளியானது.ஆனாலும் படம் தமிழ்வாணனுக்கு இலாபத்தையே கொடுத்தது.என்றாலும் இப் படத்துக்கு பிறகு தமிழ்வாணன் வேறு படம் எதனையும் தயாரிக்கவில்லை.இந்தப் படத்தில் வந்த இலாபத்தில் அண்ணாநகரில் ஒரு வீட்டை கட்டிக்க கொண்டார்.புத்திசாலி!

No comments: