குந்திதேவி தங்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொன்னபோது, "எந்தவொரு நல்லொழுக்கமுள்ள மனிதனும் எல்லா நேரங்களிலும் நல்லொழுக்கத்துடன் வாழும் அளவுக்கு வலிமையானவனும் அல்ல, எந்த ஒரு பாவியும் எப்போதும் பாவத்தில் உழலும் அளவுக்கு மோசமானவனும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான வலை மற்றும் நன்மை, தீமை இரண்டுமே செய்யாதவர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும். துக்கத்திற்கு வழிவிடவேண்டாம்". வியாசர் இவ்வாறு அவளை ஆறுதல்படுத்தினார். (சி.ராஜகோபாலாச்சாரியின் மகாபாரத மொழிபெயர்ப்பு)
நடந்தாய் வாழி களனி கங்கை நூலில் அது கடந்த பயணத்தை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே சிந்தனைத் தூண்டுதலும் வசீகரமும் மொழிபெயர்க்கும் போதும் ஏற்பட்டது. "நடந்தாய் வாழி களனி கங்கை” என்பது இலங்கை வரலாற்றின் அறியப்படாத வசீகரிக்கும் விபரங்களை அடக்கியுள்ளது . நீங்கள் கேள்விப்படாத நிகழ்வுகள், ஆச்சிரியமூட்டும் அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில பகுதிகள் கூட இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து அந்தக்கால நினைவுகளையும் நாம் இலங்கையர்கள் என்ற நமது அடையாளத்தையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கேட்டும் படித்தும் இருக்கிறேன். கொழும்பில் பிறந்து வளர்ந்த எனக்கு முருகபூபதியின் ஊரும் சில மைல்கல் தூரத்தில்தான் என்றாலும் இந்த நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி என் வீட்டிற்கு மிக அருகில் அரங்கேறியவையே. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது விவரிக்கப்பட்ட இடங்கள், ஆளுமைகள் மற்றும் நிகழ்வுகள் ஏக்கத்தோடு பூட்டி வைக்கப்பட்டிருந்த நினைவுகளின் வெள்ளத்தை மீட்டு கொணர்ந்தன. இவை எனக்கு பியானோ வாசிப்பவர் பில்லி ஜோயலின் "என் நினைவுகளை மீட்டெடுக்கும் அந்த இசையை எனக்காக இசைக்கமுடியுமா?, அது எத்தகையது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.ஆனால் அது சோகமானதும் இனிமையானதுமாகும். என் இளமைக்கால உடைகளை அணியும் பொழுதெல்லாம் நான் அதை முழுமையாக உணரமுடிகிறது" எனும் பொருத்தமான வரிகளை நினைவூட்டுகின்றன.
மறக்கப்பட்ட சில முக்கியமான நிகழ்வுகளின் நினைவுகளை மீண்டும் தூண்டுவது மட்டுமின்றி இந்த புத்தகம் சமீபத்திய வரலாற்றில், தலையாய பிரச்சினைகளான இன வாத பிளவுகளை பற்றியும் முக்கியப்படுத்தி எடுத்துரைக்கிறது. முருகபூபதி குறிப்பிடுவது போல, நம் நாட்டைப் பாதித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர் இடையே இருக்கும் அசிங்கமான பிளவு என்பது சமீபத்திய நிகழ்வு மட்டும் அல்ல, காலம்காலமாக வரலாற்றில் தொடர்ந்து வருவதே. அழகான வளங்களும் வாய்ப்புகளும் திறமையானவர்களையும் கொண்ட இந்த நாட்டின் அழிவுப்பாதைக்கு, திறமையற்ற ஆட்சிகளாலும், அவர்களின் நேர்மையற்ற தலைவர்களாலும், பாரபட்சமான
முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளாலும், சிறுபான்மையினர் மீதான பொறாமை மற்றும் வெறுப்பாலும் பல தசாப்தங்களாக இந்த தொடர் நிகழ்வுகள் வழி வகுத்தது. இந்த மனித அவலமான இனப்பிளவு மற்றும் திணிக்கப்பட்ட வெறுப்புணர்ச்சி உண்மையில் நமது வெட்கக்கேடான வரலாற்றுப் பகுதியையே எடுத்துக்காட்டுகிறது. ஆக மொத்தம் இந்த அவல வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு ரத்தமும் சதையுமாக அடித்து செல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்றும் பெரும்பாலானோர் வாழ்க்கை எனும் நீரோட்ட சுழலில் ஆபத்தான முறையில் சிக்கிக்கொண்டாலும் விரக்தியுடன் அடுத்து என்ன நடக்குமோ என்று, நம்பிக்கை எனும் மரக்கிளையில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
முருகபூபதி ஒரு சிறந்த
எழுத்தாளர், புகழ்பெற்ற பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை மரபுகளின் சிறந்த கோட்டை. அவரது எழுத்துக்களில் அவரது தாய்நாட்டுப்பற்றைப்
பார்க்கலாம். தமிழை வாசிக்க முடியாத அனைவருக்கும், இந்த புத்தகம் ஒரு
பார்வையை வழங்குவதோடு, அவரது மற்ற
சிந்திக்கத் தூண்டும் படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கான பசியைத் தூண்டும் என்று
நம்புகிறேன்.
---0---
No comments:
Post a Comment