உலகச் செய்திகள்

ட்விட்டர் பதிவுகளுக்காக சவூதி பெண்ணுக்கு 34 ஆண்டு சிறை

உக்ரைனுக்கு அமெ. மேலும் 800 மில்லியன் டொலர் உதவி

உக்ரைனிய அணுமின் நிலையத்தில் ஐ.நாவின் செயற்பாட்டுக்கு இணக்கம்

ஐரோப்பாவை தாக்கிய புயலால் 12 பேர் பலி

இரண்டு ஏவுகணைகளை பாய்ச்சியது வட கொரியா

பிரிட்டனில் பணவீக்கம் புதிய உச்சம்


ட்விட்டர் பதிவுகளுக்காக சவூதி பெண்ணுக்கு 34 ஆண்டு சிறை

சவூதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

34 வயது சல்மா அல் ஷெஹாப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு உதவியதாக இம்மாதம் 9ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

இரு பிள்ளைகளுக்குத் தாயான ஷெஹாப் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் படித்துக்கொண்டிருந்தார். சவூதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் குறித்து அவர் அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்துள்ளார். ட்விட்டரில் சுமார் 2,600 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பல்கலைக்கழக விடுமுறைக்காக சவுதி அரேபியாவுக்குத் திரும்பியபோது ஷெஹாப் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரின் தண்டனை கடுமையாக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக 30 நாட்களுக்குள் ஷெஹாப் மேன்முறையீடு செய்யலாம்.    நன்றி தினகரன் 





உக்ரைனுக்கு அமெ. மேலும் 800 மில்லியன் டொலர் உதவி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் உக்ரைனுக்குக் கூடுதல் இராணுவ உதவியை வழங்குவதற்கு தயாராகி வருவதாக சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.

அதுகுறித்துக் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழங்கப்படவுள்ள இராணுவ உதவியின் மதிப்பு, தற்போது சுமார் 800 மில்லியன் டொலர்களாக உள்ளது.

இராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டால், அதன் மதிப்பு மாறக்கூடும்.

அமெரிக்காவிடம் மிகுதியாக இருக்கும் ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி ஜனாதிபதி பைடன் உக்ரைனுக்கு அவற்றை அனுப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அடையாளம் வெளியிடப்படாத நபர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வழங்கிய தகவல்கள் குறித்து வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவிக்க மறுத்தது.

ரஷ்யா இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது படையெடுத்தது. அப்போதிலிருந்து இதுவரை அமெரிக்கா உக்ரைன் அரசாங்கத்துக்குப் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளது.   நன்றி தினகரன் 




உக்ரைனிய அணுமின் நிலையத்தில் ஐ.நாவின் செயற்பாட்டுக்கு இணக்கம்

சபோரிசியா அணுமின் நிலையத்தில் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சாத்தியமான நடவடிக்கை ஒன்றுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி இணங்கியுள்ளார்.

இந்த அணுமின் நிலையம் உள்ள வளாகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் ஷெல் தாக்குதல்களால் அணுசக்தி பேரழிவு ஒன்று பற்றிய அச்சம் அதிகரித்த நிலையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதிக்கு இடையே லிவிவ் நகரில் கடந்த வியாழக்கிழமை முத்தரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய செலன்ஸ்கி, “ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஏனைய நிறுவனங்களினால் நிலைமையை கட்டுப்படுத்துவது மற்றும் முழுமையான வெளிபடைத்தன்மை ஒன்றினால் மாத்திரமே அணு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

எனினும் இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா இணங்கியுள்ளது பற்றி உறுதி செய்யப்படவில்லை.

தெற்கு உக்ரைனில் இருக்கும் அணு மின் நிலையத்தில் இருந்து ரஷ்யா தமது படைகளை உடன் வாபஸ் பெற வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் முன்னெடுக்கும் அனைத்து இராணுவ செயற்பாடுகளையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இந்த அணு மின் நிலையத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ள சபோரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய துருப்புகள் உக்ரைன் போரின் ஆரம்பத்திலேயே கைப்பற்றி இருந்தன.

அணுமின் நிலையத்தை சூழ தொடரும் இராணுவ செயற்பாடுகள் பற்றி துருக்கி ஜனாதிபதி கவலை வெளியிட்டார். “மற்றொரு செர்னோபில் எமக்குத் தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

அணுமின் நிலையத்தை சூழவுள்ள பகுதியை இராணுவமயமற்ற பகுதியாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். “சபோரிசியாவில் ஏற்படு எந்த ஒரு சேதமும் தற்கொலையாகும்” என்று எச்சரித்தார்.   நன்றி தினகரன் 





ஐரோப்பாவை தாக்கிய புயலால் 12 பேர் பலி

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் தீவான கொர்சிகாவில் மரங்கள் விழுந்தே பலரும் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பா எங்கும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வரட்சி தாக்கிய நிலையிலேயே இந்த புயலும் தாக்கியுள்ளது.

கோர்சிகாவில் மணிக்கு 224 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதில் வீதிகளில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு நடமாடும் வீடுகள் சேதமடைந்துள்ளன. முகாம் இருக்கும் தளம் ஒன்றில் மரம் விழுந்து 13 வயது சிறுமி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனையொத்த சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்திருப்பதோடு கடற்கரை கூடாரத்தின் கூரை தாக்கி காரில் வந்த 72 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மற்றும் பெண் படகோட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தாவிர, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.   நன்றி தினகரன் 





இரண்டு ஏவுகணைகளை பாய்ச்சியது வட கொரியா

வட கொரியா தனது மேற்குக் கடற்கரைக்கு அப்பால் 2 ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது. ஒன்சொன் நகரிலிருந்து அவை ஏவப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தென் கொரிய இராணுவத்தின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி யொன்ஹப் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்தது. பியோங்யாங் கடந்த இரண்டு மாதங்களில் ஏவுகணைச் சோதனை எதனையும் நடத்தவில்லை.

கடந்த சில மாதங்களாகக் கொவிட்–19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் அது கவனம் செலுத்தியது.

நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் போர் ஒத்திகைக்கான தயார்படுத்தலாக நான்கு நாள் பூர்வாங்க கூட்டு போர் ஒத்திகை ஒன்றை தென் கொரியா மற்றும் அமெரிக்க ஆரம்பித்து அடுத்த தினத்திலேயே இந்த ஏவுகணை சோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






பிரிட்டனில் பணவீக்கம் புதிய உச்சம்

பிரிட்டனில் கடந்த மாதம் பணவீக்கம் 40 ஆண்டுகள் இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டு உணவு விலைகள் அதிகரித்திருப்பதாக நேற்று வெளியான (17) உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.

ஜூலை மாதத்தில் வருடாந்த நுகர்வோர் விலை பணவீக்கம் 10.1 வீதத்தை தொட்டிருப்பதாக தேசிய புள்ளிவிபரத்துக்கான அலுவலகம் வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 9.4 வீதமாக இருந்தது.

2021 ஜூலை தொடக்கம் உணவு விலைகளின் அதிகரிப்பு 12.7 வீதம் வரை உயர்ந்துள்ளது.

இதில் ரொட்டி மற்றும் தானியங்களின் விலை உச்சத்தைத் தொட்டிருப்பதோடு அதற்கு அடுத்த இடத்தில் பால், சீஸ் மற்றும் முட்டை விலை உள்ளது.    நன்றி தினகரன் 






No comments: