எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 27 ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால் வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு ! முருகபூபதி


கடந்த 26 ஆவது அங்கத்தில் எதிர்வினைகளுக்குள்ளான  எனது இரண்டு படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

லண்டன் ஈழகேசரியில் வெளியான ஆலயம் சிறுகதையும்,  கனடா நான்காவது பரிமாணம் இதழில் வெளியான இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் என்ற கட்டுரையும்தான் அவ்வாறு எதிர்வினைகளுக்குள்ளானவை.

கடந்த அங்கத்தை படித்திருந்த சில வாசகர்கள்,  தாம் குறிப்பிட்ட ஆக்கங்களை ஏற்கனவே படிக்கவில்லை எனவும், அவற்றின் இணைப்புகள் இருப்பின் அனுப்பிவைக்குமாறும் கேட்டிருந்தனர்.

முதலில் ஆலயம் சிறுகதையை இந்த அங்கத்தில் மீள்


பதிவிடுகின்றேன்.

தேசங்களை பொருளாதார நோக்கத்துடன் மக்களும் அரசுகளும் கவனித்தால், அந்தத் தேசங்கள் முன்னேறிவிடும். வளர்ச்சியிலும் தன்னிறைவு கண்டுவிடும்.

மதம், மொழி, இனம் சார்ந்து அல்லது அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள், என்னதான் மதச்சார்பின்மையை கொள்கையளவில் வெளிப்படுத்தினாலும் உருப்படப்போவதில்லை.

கல்வியை உரியமுறையில் பெறமுடியாத கோடிக்கணக்கான குழந்தைகள் இந்தப் பூமிப்பந்தில் வாழ்கிறார்கள்.  பாடசாலைகளின் கூரைகளின் ஊடாக சூரிய பகவானையும் வர்ண பகவானையும் பார்த்துக்கொண்டிருக்கும் இலட்சோப இலட்சம் மாணவர்கள் குறித்து, இரண்டு பகவான்களுக்காகவும் பூசைகள் செய்துகொண்டு யாகம் வளர்ப்பவர்கள் சிந்திப்பதில்லை.

சமீபத்தில் இலங்கையில் ஒரு பாடசாலையில் அரச பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாடசாலையின் கூரையிலிருந்து கொட்டும்  மழைநீருடன் போராடியவாறு எழுதினார்கள். அவர்களின் பாதங்களை மழைவெள்ளம் நனைத்தது.  சில மாணவர்கள் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் வினாக்களுக்கு விடை எழுதினார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்பிள்ளை ருதுவானதும்  குதிரை – யானை  ,   ஆடல்,  பாடல் ஊர்வலத்துடன் கோலாகலமாக  நடந்த சடங்கு வைபவத்தை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.  இத்தனையையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏழைக் குழந்தைகள் குறித்து எத்தனைபேர் கவலைப்படுகிறார்கள்.

மகாகவி பாரதியை கொண்டாடும் எமது தமிழ் மக்கள் அவர் எழுதிய இந்த வரிகளை மறந்துவிடுகிறார்கள்.

 “ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

 சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதும்தான்


எழுத்தாளர்களின் முக்கிய பணி.  நானும் என்னால் முடிந்ததை செய்துவருகின்றேன்.

 இத்துடன் குறிப்பிட்ட சிறுகதையை இங்கே பதிவிடுகின்றேன். ஏன் இச்சிறுகதையை அக்காலப்பகுதியில் எழுதினேன் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

இன்றும் நிலைமை மாறவில்லை. அதனால், சமகாலத்திற்கும் இச்சிறுகதை பொருத்தமானது.

 தாயகத்திலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் ஆலயங்களில்


பூசைகள் மட்டுமல்ல, பூசல்களும் தொடருகின்றன.

 சில ஆலய நிருவாகங்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கும் செல்கின்றன.  ஆலய உண்டியல் திருட்டில் நிருவாகிகளும் பூசகர்களும் ஈடுபட்ட செய்திகள் வெளியாகின்றன.

இனி ஆலயம் சிறுகதையை படிக்கலாம்.

 ஆலயம் ( சிறுகதை )                                

ஈஸ்வரன் உமையாள்  சகிதம் நாரதரின் வரவுக்காக காத்திருக்கிறார். கலியுகத்தின் விளைவுகளை விஸ்தாரமாக விளக்கவல்ல நாரதர் உலகை வலம்வந்துகொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்துவிட்டது.

 “இறைவா… அண்டசராசரங்களை கட்டிக்காக்கும்  காவலா, இன்று உங்கள் திருமுகத்தில் வாட்டத்தை  காண்கின்றேன். அதன் காரணத்தை உங்களின் பாகமாக இணைந்துள்ள என்னாலும் அறிய முடியவில்லை. ஏனிந்த சோகம்.  “ உமையம்மை ஏதும் அறியாதவள் அல்ல. தனது ஊகம் சரிதானா என்பதைக் கேட்டு ஊர்ஜிதப்படுத்தும் ஆவல் அவளுக்கு எப்போதும் உண்டு.

 “ தேவி…. என்னையும் உன்னையும் எமது அருமைச்செல்வங்களையும்


எமது உறவினன் கிருஷ்ணாவையும் பல்வேறு அவதார வடிவங்களில் காணும் பக்தர்கள் எமது பெயர் சொல்லி தம்மைத்தாமே அழித்துக்கொண்டிருக்கும் காட்சிகளை அவதானிக்கிறேன். ஏனிந்த பூவுலகை படைத்தேன் என்று எண்ணுமளவுக்கு விரக்தியும்  வந்துள்ளது. 

 “ யாவுமாகி நிற்கும் பரம்பொருளே ! படைத்தல், காத்தல், அருளல், அழித்தல் என நால்வகைத் தொழில்களையும் ஏககாலத்தில் மேற்கொள்ளும் நாயகரே,  கலியுகத்தில் இதனைத்தவிர வேறு என்ன காட்சியைத்தான்  நாம் தரிசிக்க முடியும். அஞ்ஞானிகளை எல்லாம் விஞ்ஞானிகளாக்கினீர்கள். விஞ்ஞானிகள் மூலம் ஆக்கங்களை உருவாக்கினீர்கள். ஆக்கங்களிலும் அழிவுகள் இழையோடியிருப்பதை தாங்கள் உணரவில்லையா சுவாமி 

 “ ஆமாம்…. உணர்கின்றேன். அதனால்தானே பகுத்தறிவையும் வழங்கி இந்த மாந்தரை சிந்திக்கத் தூண்டினேன். 

 “ வேடிக்கைதான் ! பகுத்தறிவுவாதம்தான் நாத்திகவாதமாக உருமாறியது என்பதை தாங்கள் அறியவில்லையா..?  “ உமையாள் ஏளனமாகவே கேட்டாள்.

ஈஸ்வரன் கண்களை இறுக மூடிக்கொண்டு,   யாவும் அறிவோம்… அறிவோம்… நாத்திகவாதமே சரியானதுதானோ என்று


எண்ணுமளவுக்கு எங்கள் பக்தகோடிகளான ஆஸ்திகர்கள்  நிலைமைகளை மிகவும் மோசமாக்கியிருப்பதை  நீ இன்னமும் உணரவில்லையா தேவி…? 

 “ நாராயணா… நாராயணா…  “ இவர்களின் வாதத்துக்கு இடையூறாக நாரதரின் குரல் கேட்கிறது.

 “ கீதை மூலம் அறிவுவாதத்தை ஊட்டிய பரந்தாமனின் நாமம் கூறிக்கொண்டே வலம்வரும் எங்கள் நாரதன் வருகிறான். அவனிடம் எங்கள் சந்தேகத்துக்கு விளக்கம் கேட்போம்  “ என்றார் ஈஸ்வரன்.

 “ ஐயோ வேண்டாம். அவனிடமா விளக்கம்…. !? கலகத்தில்தான் முடியும். நீங்கள் வேண்டுமானால் கேட்டுத் தெளியுங்கள். நான் வருகிறேன்.  “ தேவி எழுந்து செல்ல முற்பட்டாள்.

 “ எல்லாம் வல்ல இறைவா…, என் குரல் கேட்டமாத்திரமே எழுந்து  “வருகிறேன்  “ எனச்சொல்லி, வருவதை விடுத்து அகன்றோடப்பார்க்கும் உமையம்மையே, என் மீது ஏனிந்த வெறுப்பு…? நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அமருங்கள்… உலகை வலம்வந்துள்ளேன். சொல்வதற்கு நிறையவுண்டு.    நாரதர் இருவரையும் வணங்கி தேவியை அமருமாறு வற்புறுத்துகிறார்.

 “ தூணிலும் துரும்பிலும்  வாழும் எம்பெருமானுக்கு பூவுலகில் என்ன


நடக்கிறது என்பது தெரியாதா..? அவர் ஏதும் அறியாதவரா…?  உனது வாயை கிண்டி கிளறிப் பார்த்துத்தானா அவர் அறியவேண்டும்.  “ தேவி சினத்துடன் முகம் திருப்பினாள்.

 “தேவி சினம் தணிவாய். யாவும் அறிந்திருப்பினும், மாற்றுக்கருத்தையும் கேட்கும் மனப்பக்குவம் வேண்டும். நாரதன் சொல்வதையும் கேட்பாய். எம்மை உருவமாக்கி வழிபடும் பக்தர்கள் எமது பாதக்கமலங்களுக்கு எத்தனைவகையான வண்ணமலர்களைச் சமர்ப்பித்துப் பூசிக்கின்றனர். அவற்றுள்தான் எத்தனை நிறங்கள்… எத்தனை வகையான வாசனைகள்… ஆயினும் அவை யாவற்றையும் நாம் ஏற்பதில்லையா…?  “ ஈஸ்வரன் தேவிக்கு விளக்கினார்.

 “ சரியாகச்சொன்னீர்கள் தேவா… பூவுலகில் ஒரு மேதை  ‘ ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஆயிரம் சிந்தனைகள் உருவாகட்டும்  ‘ என்று சொல்லியிருக்கிறான்.  “ நாரதர் உற்சாகமாக எழுந்து அமர்ந்தார்.

 “ நாரதா… ம்… உன் பயணக்கதை கூறுவாய்  “ ஈஸ்வரன் வாதம் திசைதிரும்பாதிருக்க சித்தமானார்.

 “இறைவா… கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் , ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற ஔவையின் வாக்கு எங்கள் பக்தகோடிகள் செல்லுமிடங்கள், வாழுமிடங்கள் தோறும் நிஜமாகியுள்ளது. ஔவையை மறந்தாலும் அவர்கள் கோவில்கள் கட்டுவதை மறக்கவில்லை.  

 “கோவில்களில் பூசைகளும் உண்டு,  பூசல்களும் உண்டு அல்லவா…?  “ இறைவனின் குறுக்கீடு உமையாளுக்கு எரிச்சலூட்டியது.

             “ அதுதானே… முன்பே உரைத்தேனே… யாவும் அறிந்த நீங்கள் இந்த நாரதனிடமா கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ! 

தேவியின் திருவாய் மலர்ந்தருளும் வார்தைகளிலிருந்து இன்று தனக்கு சகுனப்பிழையோ என்றும் நாரதர் யோசித்தார்.

ஈஸ்வரனின் கட்டளைப் பிரகாரம் லோக சஞ்சாரம் முடித்து ஏராளமான செய்திகளுடன் திரும்பியுள்ள சமயம், திரட்டியவற்ற இங்கு கொட்டாவிட்டால், தலையே வெடித்துவிடும்போலிருந்தது நாரதருக்கு.

நாரதரின் மௌனம் கண்டு ஈஸ்வரன் உற்று நோக்கினார்.  “ ம்… மேலே சொல்லு…. “ என்னும் பார்வை.

 “ இறைவா… இந்த சஞ்சாரத்தின்போது, நான் மாபெரும் உண்மையொன்றை கண்டுகொண்டேன். தங்களை முழுமுதற் கடவுளாக வணங்கும் இந்தப்பெருங்குடி மக்கள் தாம் தோன்றிய தேசத்தை, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தியது எனக்கருதுகிறார்கள். இந்து மதம் எப்போது தோன்றியது, முதல் தமிழ் குடிமகன் யார்…? முதலான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், 1993 ஆண்டு கால வரலாறு கூறும் மக்கள் வாழும் தேசங்கள் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்து விஞ்ஞானத்தில் அபரிமிதமாக முன்னேறிவிட்டன. அவ்விதம் ஓங்கி வளர்ந்த தேசங்களிடம் உயிர் வாழ்வதற்கான உணவுக்கும் உயிர் அழிப்பதற்கான ஆயுதங்களுக்கும் கையேந்தும் நிலையில் தமது வரலாற்றை அறியமுடியாத தேசங்கள் பின்தங்கிவிட்டன. இந்த பின்னிற்கும் மதமும் மொழியும் பேசும் தேசங்களிடம் பல்லாயிரம் ஆண்டுகால  ‘ மூலம்  ‘அறிய முடியாத வரலாறுதான் உண்டே தவிர வளர்ச்சியைக்காண முடியவில்லை. 

நாரதர்  கூற்றுக்கேட்டு ஈஸ்வரி வெகுண்டெழுகிறாள்.                             “ நாரதா… நீ சொல்வது தவறு. எமது பக்தர்களின் நாகரீகங்களிடமிருந்துதான் ஏனைய நாகரீகங்கள் தோன்றின என்ற உண்மையை மறைத்துப்பேசுகின்றாய் 

 “ ஈஸ்வரி பொறுத்தருள்க. தங்கள் வாதத்தில் உண்மை இருக்கலாம்….  ‘ இருக்கும்  ‘ என்று கூறவில்லை. உங்கள் கூற்றுப்படிதான் எடுத்துக்கொண்டாலும், பாருங்கள் தேவி, முழு உலகத்திற்கும் நாகரீகம் பரப்பியவர்கள் என்ற பெருமை பேசும் தொன்மையான மதத்தைச் சார்ந்த மக்கள் இன்று முழு உலகுமே வெட்கித் தலைகுனியும் செயலையல்லவா செய்கின்றனர். “

 “வாயை மூடு… நாவை அடக்கிப்பேசு நாரதா….. “ தேவியின் கண்கள் கோபத்தால் சிவந்தன.

ஈஸ்வரன் கண்ணசைத்து தேவியை அமைதிப்படுத்தினார்.

 “தேவி… இன்று உனக்கு என்ன நேர்ந்தது…? உனது பொறுமைக்கு சோதனையா…? நாரதன் பேச்சை முழுமையாகக் கேள்.  அவசரப்படுகிறாயே…. நாரதா… நீ சொல்…. “

 “ தேவா… எங்கள் கிருஷ்ணபரமாத்மா அவதாரங்கள் எடுத்ததும் எடுத்தார். அவரின் பக்தர்கள் இன்று பல்வேறு அவதாரங்களில் அழிவுகளுக்கு வழிவகுக்கின்றனர். 

 “ ஓ… நீ… அந்த அயோத்தி விவகாரத்தைச் சொல்கிறாயா…?   “ ஈஸ்வரனின் புருவங்கள் மேலுயுர்ந்தன.

 “ இறைவா… ராமன் இருக்கும் இடம்தான் தனக்கு அயோத்தி என்றாள் சீதாப்பிராட்டி. நாடே வேண்டாம் என்று காட்டில் தஞ்சம் புகுந்த ராமன்,  அருமை மனைவியையும் பறிகொடுத்து துயரப்பட்டு, அவளை சிறை மீட்பதற்காக யுத்தமும் புரிந்தான். ராமன் வாழ்வில் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால், இன்று அவனது பக்தர்கள் அவன் பிறந்த இடம் எனச்சொல்லிக்கொண்டு, காட்டுமிராண்டிகளாக மாறி, பல நூறு வருடங்கள் பழமை  வாய்ந்த முஸ்லீம்களின் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி இரத்தக்களரிக்கு வித்திட்டுள்ளனர். 

 “ நாரதா… ராமனைப்பற்றி சொல்ல வருகிறாய்… அவன் மனைவி சீதையை  சிறைப்பிடித்த இலங்காபுரியில் என்னவாம் நடக்கிறது…? நான் குடியிருக்கும் கோயில்களில் குண்டுமாரி பொழியப்பட்டு, எனது பக்தர்கள் அழிக்கப்படவில்லையா..?  “ தேவி தனக்குத் தெரிந்தவற்றை சொல்லிவிட்ட பெருமிதத்தோடு நாரதரைப்பார்த்தாள்.

 “ ஆமாம் தேவி. உண்மைதான். அதே இலங்காபுரியில் முஸ்லீம் மக்கள் தொழுகை புரிந்த பள்ளிவாசல் ஒன்றினுள் ஈவிரக்கமற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுமிருக்கிறார்கள். பழிக்குப்பழி… இரத்தத்திற்கு இரத்தம் என்று நியாயவாதம் பேசும் புதிய கலாசாரம் அங்கு தோன்றியுள்ளது.  ‘ கடவுளே உனக்கு கண் இல்லையா…?  ‘ என்று பாதிக்கப்பட்டவர்கள் அவலக்குரல் எழுப்புகின்றனர்.

இறைவன் கண்களை இறுக மூடிக்கொண்டார். சில  கணங்கள் அங்கு மௌனத்தில் கரைந்தது. உமையம்மை அமைதியை கலைத்தாள்.

 “ நாரதா… பிறப்பும் இறப்பும் இயற்கை. ஒரு உயிர் பிறக்கும்பொழுதே இறப்பும் நிச்சயமாகிவிடுகின்றது.  எம்மால் படைக்கப்பட்டு பூவலகில் வாழும் ஒரு உயிர் அங்கு மறையும்பொழுது மீண்டும் அது எம்மிடமே வந்துவிடுகின்றது. பிறப்பவர்கள் அனைவரும் இறக்கத்தவறினால் நாம் படைக்கும் தொழிலையே நிறுத்தவேண்டியதுதான். ஏனென்றால் பூமாதேவி பாரம் தாங்க மாட்டாள். 

 “ ஐயோ… வேண்டாம் தேவி… உங்களுடன் வாதம் செய்ய என்னால் முடியாது…. என்னை பொறுத்தருள்க…. “ என்றார் நாரதர்.

 “ ராமன் பிறந்த இடம் எங்கே என்பது  ஈஸ்வரனுக்குத் தெரியுமா கேள்…  “ கண்களை மூடியுள்ள இறைவனை விழிக்கச்செய்வதற்காக தேவி விடுத்த சீண்டும் பாணம் இது.

 “ இது கிருஷ்ணனிடம் கேட்கவேண்டிய கேள்வி. அவன் பல்வேறு அவதாரங்கள் எடுத்ததனால் வந்த வினை இது  “ ஈஸ்வரன் தீர்க்கமாகக் கூறினார்.

 “ வினை என்றுசொல்லாதீர்கள் தேவா… விளைவு என்று சொல்லுங்கள். தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும்பொழுது காட்சி தருவேன் என்றவர் கிருஷ்ண பரமாத்மா. அவர் குறிப்பிடும் கலிகாலம்தான் இப்போது அங்கு நடக்கிறது. அடுத்து கிருதயுகம் தோன்றும். அதுவரையில் பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா…? என்பதுதான் எனக்கு இப்போதுள்ள கவலை இறைவா. “

 “உண்மைதான். இதுபற்றி நான் மட்டும் தீர்மானிக்க முடியாது. கிருஷ்ணனும் வரவேண்டும்  “ என்றார் ஈஸ்வரன்.

 “ உங்கள் ஜனநாயகத்தை மதிக்கின்றேன் 

 “ ஜனநாயகம் என்றவுடன் ஒரு விடயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நாரதன் பாரதத்தையும்  இலங்காபுரியையும் மாத்திரம்தான் எமக்குச்சொன்னான். அந்தத்  தேசங்களிலிருந்து  ‘வரலாறு கூறும்  ‘ மக்கள் வாழும் அந்நிய நாடுகளில் குடியேறியுள்ள எமது பக்தர்கள் ஜனநாயக முறைப்படி சங்கங்கள் அமைத்து,  தாங்கள் வழிபடுவதற்கு கோவில்களும் கட்டி எழுப்பி, ஒளவை மூதாட்டியின் மூதுரையை அழியாமல் பாதுகாக்கின்றனர். அங்கெல்லாம்  நாரதன் சஞ்சாரம் செய்யவில்லையோ…?  “ ஈஸ்வரி எகத்தாளமாகக் கேட்டாள்.

 “ அப்படிச் சொல்லதீர்கள் தேவி. நான் லோகசஞ்சாரம் முடித்து திரும்பியுள்ளேன். நீங்கள் குறிப்பிடும் தேசங்களுக்கும்  சென்று பார்த்தேன். உங்கள் புதல்வர்கள் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் மாத்திரமன்றி, உங்களுக்கு ஈஸ்வரனுக்கு விஷ்ணுவுக்கெல்லாம் அங்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல புதிய புதிய கோவில்கள் எழுப்பப்படுகின்றன. “  எனச்சொன்ன நாரதர் தேவியின் கூற்றை ஆமோதித்தார்.

 “முன்பே நான் குறிப்பிட்டவாறு அந்தக்கோவில்களில் பூசைகளும் உண்டு, பூசல்களும் உண்டுதானே நாரதா…? “  இறைவன் தான் அறிந்ததை சொன்னார்.

நாரதர் இதனையும் ஆமோதித்து தலையாட்டிச் சிரித்தார்.

 “ தாயகத்தில்தான் அவர்களுக்கு வாழ வழியில்லை. யுத்தம், பிரச்சினை. செல்லுமிடங்களிலாவது எமது மத நம்பிக்கைகளை பேணிப்பாதுகாக்க கோவில்களை கட்டி எழுப்பி வழிபாட்டுக்கும் ஆன்மீக அமைதிக்கும் வழிதேடுகிறார்களே என்று ஆறுதல் அடையுங்கள். அதனைவிடுத்து, நீங்களும் ராமன் பிறந்த இடம் எங்கே என்ற ஆராய்ச்சியில் அலட்டிக்கொள்ளாதீர்கள்.  “ தேவி விவாதத்துக்கு முற்றுப்புள்ளியிட விரும்பி அங்கிருந்து அகன்றாள்.

கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நாரதர், ஈஸ்வரன் அருகில் நெருங்கி வருகிறார்.

 “ ஈஸ்வரா… இங்கு நாம் குறிப்பிட்டோமே இலங்காபுரி. அந்த நாட்டிலே  ‘ சப்த தீவுகள்  ‘என்ற  கடல் சூழ்ந்த பிரதேசம் ஒன்று வர்ணிக்கப்படுகிறது. தற்போது ஆயுதம் ஏந்திய படைகள் அந்தப்பகுதியை தம் வசம் வைத்துள்ளன. அந்தப்பிரதேசத்தில் புங்குடுதீவு என்ற அழகான சிற்றூர். கோவில்களும் இருக்கின்றன. அங்கே ஒரு சிந்தனையாளனையும் நீங்கள் படைத்தீர்கள். அவனும் ஒரு படைப்பாளிதான். ஆனால், அவன் உங்களைப்போன்று உயிர்களைப் படைக்கவில்லை.  நல்ல சீரிய சிந்தனைகளை  படைத்தான். அச்சிந்தனைகளுக்கு உயிரூட்டுவதற்காக தன்னுயிரும் இழந்தான் 

 “ என்ன சொல்கிறாய்…? விளக்கம் போதவில்லை.  “ ஈஸ்வரன் ஆர்வத்துடன் நாரதரை உற்றுப்பார்த்தார்.

“ அங்கே ஒரு ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது. அம்மக்கள் அங்கு வழிபடவும் அங்கு குடிநீர் பெறுவதற்கும் அவன் அகிம்சை வழியில் போராடினான். அவனது போராட்டத்தை சகியாத பல பெரிய சாதிமான்களின் துணையோடு பொலிஸார் அந்த சிந்தனையாளனை தாக்கி துன்புறுத்தினார்கள். அடியின் தாக்கம் தாளாது ஆறு மாதங்களிலேயே இரத்தவாந்தி எடுத்து அவன் உயிர் நீத்தான். அந்த மனிதன் நல்ல கவிஞன். அவன் எழுதிய பாடல் ஒன்றுதான் இந்த லோக சஞ்சாரத்தின் முடிவில் என் நினைவுப்பொறியில் தட்டியது. அதனை இங்கு சொன்னால்  நீங்கள் என்னுடன் கோபிக்கமாட்டீர்கள் என்ற உத்தரவாதம் எனக்கு வேண்டும் இறைவா…. “ நாரதர் தயக்கமுடன் கேட்டார்.

  தயக்கம் வேண்டாம் நாரதா… உமாதேவியும் இப்போது இங்கில்லை. சொல்… 

 “கட்டினார் கட்டினார் கோவில்கள் கட்டினார்…

கட்டிய கோவில்களில் என்னதான் கண்டார்…? 

நாரதரின் வாயுரைத்த கவிதை கேட்டு ஈஸ்வரன் வியப்புடன் எழுந்தார்.

 “ நாரதா… இன்று நீ என்னையும் சிந்திக்கவைத்துவிட்டாய். யார் அந்தக்கவிஞன்…? பெயர் என்ன…?  “ ஈஸ்வரன் ஆவலுடன் கேட்டார்.

 “ தளையசிங்கம் 

 “ இப்போது அவன் எங்கே..? 

 “ தேவருலகில் வாழ்கிறான். கிருதயுகம் பற்றி பாரதி என்ற மற்றும் ஒரு மகா கவிஞனுடன் ஆராய்ச்சி செய்கிறான். 

 “ அப்படியா… நான் உடனடியாக அவனைப்பார்க்கவேண்டும். அழைத்துவருவதற்கு ஏற்பாடு செய்…. “

   அவ்வாறெனின்…கிருஷ்ணபரமாத்மா…?! 

 “ முதலில் அந்தக்கவிஞன் “ ஈஸ்வரன் கட்டளையிட்டுவிட்டு நிஷ்டையில் ஆழ்ந்தார்.

( 1993 ஆம் ஆண்டு எழுதப்பட்டு லண்டன் ஈழகேசரியில் வெளியானது )

( தொடரும் )

---0---

 

 

 

 

 

No comments: