காலம் கடந்து பிறந்திருக்கும் ஞானம் ! அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள உருவாகும் நிகழ்ச்சி நிரல் ! அவதானி


தேசியப்பட்டியல் ஊடாக ஒரே ஒரு நியமன ஆசனத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு, மீண்டும் பாராளுமன்றத்திற்குள் முதலில் எம்.பி. ஆகவும் பின்னர் பிரதமராகவும் அதன்பிறகு ஜனாதிபதியாகவும் -  சாதாரண ஆசனத்திலிருந்து சிம்மாசனம் வரையில் உயர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, அண்மையில் தனது அரசைக் காப்பாற்றிய முப்படைகளின் தளபதிகளுக்கும்  நன்றி தெரிவித்தார்.

உண்மையிலேயே அவர் நன்றி தெரிவித்திருக்கவேண்டிய மேலும்


சிலரது பெயர்களை   வெளிப்படையாகச் சொல்ல முடியாதிருக்கலாம்.

ரணில்,   ஜனாதிபதி பதவியை ஏற்ற  சில மணிநேரங்களில் ஒரு வெளிநாட்டு ஊடகர் அவரிடம்  “ நீங்கள் ராஜபக்க்ஷக்களின் நண்பர்தானே..?  “ எனக்கேட்டதும்,     இல்லை… இல்லை… நான் மக்களின் நண்பன்  “ என்றுதான் புத்திசாலித்தனமாகச் சொன்னார்.

இந்த சாதுரியத்தை அவருக்கு அரசியல் அரிச்சுவடியாகச் சொல்லிக்கொடுத்த அவரது மாமனார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்குத்தான் முதலில் நன்றி தெரிவித்திருக்கவேண்டும்.

ஜே. ஆர், பொதுத்தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்தியதனால்தான் இன்று பல உதிரிக்கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.  கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தையும் வெல்ல முடியாமல் படுதோல்வியடைந்திருந்த  ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் வந்தவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.

நிறைவேற்று அதிகாரம் தற்போது ரணில் வசம் இருப்பதனால்,  தன்னையும், தனது ஐக்கிய தேசியக் கட்சியையும் மாத்திரமல்ல,  தனக்கு தற்போதைய சிறந்த வாய்ப்பினைத் தந்துவிட்டு, நாடுவிட்டு நாடு ஓடிக்கொண்டிருக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷவையும் அவரது  சகோதரர்களையும் அவர்களின் குடும்பத்தையும்  பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதி ரணில்,  தனது நண்பர்கள் இலங்கை வாழ் மக்கள்தான் எனவும் சொல்லியிருப்பதனால்,  அந்த நம்பிக்கையை காப்பாற்றவும் கடினமாக உழைக்கவேண்டியிருக்கும்.

ரணில்,  மக்கள் வாக்களித்து இந்தப்பதவிக்கு வரவில்லை.  பாராளுமன்றத்திலிருக்கும் 134 அங்கத்தவர்களின் வாக்குகளினால்தான் சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்புரையும் ஆற்றினார். அதனால், தனது பதவிக்காலத்தில்  அந்த 134 பேரின் நம்பிக்கையையும் காப்பாற்றவேண்டியவராகின்றார்.


இலங்கையில் சமகாலத்தில் தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு எரிபொருள் பற்றாக்குறை மாத்திரமல்ல,  நீடித்திருந்த உள்நாட்டுப்போரை சமாளிக்க அரசுகள் பாதுகாப்புத்துறைக்கு செலவிட்ட பெருந்தொகையும்தான் என்பது பொருளாதார நிபுணர்களின் கண்டுபிடிப்பு.

நாட்டுக்கு கடன் உதவி வழங்க முன்வரும் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் அரசு எது எதற்கு அதிகம் செலவிட்டுக்கொண்டிருக்கிறது..? என்ற கணக்காய்வு அறிக்கையையும் முற்கூட்டியே கேட்கும்.

இலங்கை சந்தித்திருக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெளிநாட்டு நாணயங்களின் புழக்கம் குறைந்திருக்கிறது.

வெளிநாட்டு டொலர், பவுண்ஸ், யூரோ,  நாட்டுக்குள் வரவேண்டும்.  அதற்கு வெளிநாட்டிலிருப்பவர்கள் வரவேண்டும்.  சுற்றுலாத்துறை மேம்படல் வேண்டும்.

அதற்குத் தேவையான அனைத்தையும் ரணிலின் தலைமைத்துவம் செய்யவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

பாராளுமன்றத்தினுள் சிங்கள கடும்போக்காளர்களும்,


மிதவாதிகளும்,  தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களும்,  அதிகாரப்பரவலில் தங்களுக்கும் தனி அலகு வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும் ரணிலின் ஒவ்வொரு நகர்வையும் கூர்ந்து அவதானித்து வருகின்றனர்.

அதேசமயம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தத்தமக்கென தனியான நிகழ்ச்சி நிரலை உருவாக்கிவைத்துக்கொண்டு, அதற்கேற்ப காய் நகர்த்தும் அரசியலை ஊடக அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்திவருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்‌ஷ அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும், அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் பெறாமகன்  நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் இன்னமும் பாராளுமன்ற ஆசனத்தில் அதிகாரம் அற்றவர்களாக்கப்பட்டிருந்தாலும்,  இவர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளனர்.

இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்  ரணிலை நம்பலாமா..? நம்பக்கூடாதா..? என்று தமிழர் தரப்பும் ராஜபக்‌ஷ குடும்பத்தினரும்  பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறனர்.

எனினும்,  ரணில் பதவியேற்ற பின்னர் தமிழ்த்தரப்பின் மனதை குளிர்விக்கும் இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன.

உலகத்தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க்காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத்திராவிடர் ஒருங்கிணைப்புக்குழு, திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புகளினதும் 316  நபர்களினதும் தடையை நீக்கியுள்ளது.

மீண்டும் அரச பொது நிகழ்வுகளில் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் பாடலாம் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த இரண்டு செய்திகளும்  ரணிலின் பிரவேசத்தினால் வெளிவந்திருந்தாலும்,  இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்ற குரல்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன.

இது இவ்விதமிருக்க, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ,  கடும்போக்காளர் எனக்கருதப்படும் சர்ச்சைக்குரிய வண. கலகொட அத்த  ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கிய ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியையும் முற்றாக ரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையை புதிய ஜனாதிபதி ரணிலிடம் முஸ்லிம் கட்சிகள் எழுத்து மூலம் வழங்கியிருக்கின்றன.

ரணில் இதனையும் செய்வார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த முயற்சியும் எனக்கருத இடமுண்டு.

இந்தப்பின்னணிகளுடன் ரணிலும் தனது எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அந்தரங்கமான ஒரு நிகழ்ச்சி நிரலுடன்தான் பயணிப்பார் என்பதும் தெரிந்ததுதான்.

நாட்டின் அனைத்து மக்களினதும் தேவைகளை கவனித்து  சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தன்னிடம்   நிறைவேற்று அதிகாரம்  இருக்கவேண்டும் என ரணில் கருதினாலும் எந்தத் தவறும் இல்லை.

அந்த அதிகாரம் அவர் வசம் இருந்தால்தான், அரசியல் கைதிகளையும்  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யமுடியும் எனக்கருதுபவர்களும் தமிழர்தரப்பில் இருக்கின்றனர்.

அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வரவேண்டுமாயின், ரணில்  தனது நிறைவேற்று அதிகாரத்தை துறக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

இவ்வாறு பல  “ வேண்டும்  “ கள் இருக்கின்றன.

மின்வெட்டு இல்லாத, விலைவாசி ஏற்றமில்லாத, எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத, நாட்டை உருவாக்கிக் காண்பிக்கவேண்டிய சவால் நிரம்பிய பாதையில் ரணில் பயணிக்கவேண்டியிருக்கிறது.

அதற்கு ஏதேனும் வழியில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உதவியையும் அவர் நாடவேண்டிய காலம் வந்துள்ளது.

அதற்காகவாவது புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் மீதான தடையை நீக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு வந்துள்ளது.

விடிந்தால் ஏதாவது நல்லசெய்தி வருமா..? என்ற எதிர்பார்ப்புடன் நாட்டு மக்கள் கண்களை விழிக்கும்போது,  ரணிலின் ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ, தானும் மீண்டும் நாட்டுக்குள் திரும்புவதற்கு ஏற்ற வழிமுறைகளை ரணில் காண்பாரா..? என்ற கேள்வியுடனேயே தினமும் காலையில் கண் விழிப்பார்.

---0---

 

 

 

 

 

No comments: