சமகாலத்தில் இலங்கைத் தலைநகரத்தின் கேந்திரமாக கருதப்படும்
காலிமுகம் ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பல கோடி வருடங்களுக்கு முன்பிருந்தே
காலிமுகத்தை இந்து சமுத்திரத்தாய் தனது
அலைக் கரங்களினால் தொட்டு தழுவிச்சென்றுகொண்டேயிருக்கிறாள்.
அவளுக்கு பேசும் சக்தி
இருக்குமானால், அங்கே அவள் நீண்ட நெடுங்காலமாக பார்த்து வரும் காட்சிகளை
சொல்லியிருப்பாள்.
இலங்கை சுதந்திரம்பெற்று
72 ஆண்டுகள் நிறைவெய்திவிட்டது. எனக்கும்
70 ஆண்டுகள் நிறைவெய்திவிட்டது.
நான் குழந்தைப் பருவத்திலிருக்கும்போது, வயிற்றில் புழுக்கள்
உருவாகிவிடலாகாது என்பதனால் எனது அம்மாவும், பாட்டியும் ( அம்மாவின் அம்மா ) வல்லாரைச்சாறு பருகக்கொடுத்திருக்கிறார்கள். இதனை அக்காலத்தில் எமது சமூகத்தில் “ பூச்சிக்கு மருந்து கொடுத்தல் “ என்பார்கள்.
அதனால், வயிற்றிலிருந்த
புழுக்கள் குறைந்ததோ இல்லையோ, வேறு ஒரு நல்ல பலன் கிடைத்துவிட்டது. அதுதான் நினைவாற்றல். வல்லாரைக்கு நினைவாற்றலைத்தரக்கூடிய மருத்துவ குணமும்
இருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஆர்த்ரைட்டீஸ்
நோயாளருக்கும் வல்லாரை சிறந்த நிவாரணி. கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள சித்தாலேப்ப ஆயுர்வேத மருத்துவ நிலையம் பிரசித்தமானது. வெளிநாடுகளிலிருந்தும்
அங்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வந்தவர்கள்
பற்றியும் அறிந்துள்ளேன்.
அங்கே தினமும் நோயாளர்களுக்கு
மதிய உணவு வழங்கும்போது, வல்லாரைச்சம்பல்,
வல்லாரைச்சுண்டல், வல்லாரை துவையல்… இவற்றில் ஏதோ ஒன்றையும் உணவுடன் சேர்த்து தருகிறார்கள்.
அண்மைக்காலமாக அச்சில் வெளியாகும் பத்திரிகை ஊடகங்களிலும் எண்ணிம
ஊடகங்களிலும் ( Digital Media ) காண்பிக்கப்பட்டுவரும் காலிமுகம் பற்றிய எனது இந்த
நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதத் தொடங்கியபோது அன்று எனது குழந்தைப் பருவத்தில் வீட்டில்
பருகத்தந்த வல்லாரைச்சாற்றின் மகத்துவம்தான் நினைவுக்கு வந்தது.
அந்த காலிமுகத்திற்கும்
எனக்கும் உணர்வுபூர்வமான உறவு நீடித்திருக்கிறது.
முன்பு சிறிதுகாலம் எனக்கு தொழில் வாய்ப்பைத் தந்து சோறுபோட்டது அந்த காலிமுகம். அந்த வீதியை 1970 இல் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, என். எம். பெரேரா, பீட்டர் கெனமன் கட்சிகளின் ( ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – லங்கா சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தில் நீர்ப்பாசன , நெடுஞ்சாலைகள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கா காலிமுக வீதியை மேலும் அகலமாக்குவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையில் பெற்றிருந்தார்.
எனினும் அந்த வீதி நிர்மாணப்பணியை Territorial Civil Engineering Organization ( T. C. E. O ) என்ற நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்கு காலதாமதமானது. நான் படித்துவிட்டு வேலை
தேடிக்கொண்டிருந்தபோது, அங்கே வீதியை நிர்மாணிக்கும் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் ஓவர்ஸீயர் வேலை கிடைத்தது. ஆனால், அந்த நிறுவனம் நான் உட்பட அனைத்து தொழிலாளர்களையும் தற்காலிக பணி ஒப்பந்தத்தின் கீழேயே தெரிவுசெய்தது.
எனினும் மேலதிகாரிகளான பொறியிலாளர்கள் அரசின் நிரந்தர ஊழியர்கள்.
காலை 7-00 மணிக்கு தொடங்கும்
வேலைகள் மாலை 5-00 மணி வரையில் நீடிக்கும். கொளுத்தும் வெய்யிலில் கால் கடுக்க நின்று மேற்பார்வை
செய்யும் வேலை அது.
கடல் காற்று வீசினாலும் அதிலும் அனல்தான் இருந்தது.
வர்ணக்குடைகளின் கீழே அமர்ந்து இளம் காதலர்கள் அமர்ந்து சல்லாபிக்கும் காட்சியை
பார்த்தபோது, வெய்யிலில் எனது சிவந்த மேனி கறுத்துப்போவதனால், என்னை யார் காதலிக்கப்போகிறார்கள்
என்ற கவலையும் வந்திருக்கிறது.
அக்காலப்பகுதியில்
“ கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு
“ பாடல் இடம்பெற்ற வெற்றிக்கொடி கட்டு
திரைப்படம் வெளியாகியிருக்கவில்லை.
காலிமுகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான் கண்ட காட்சிகள்
பலவற்றை இற்றைவரையில் என்னால் மறக்கமுடியாதிருக்கிறது.
அந்த வீதி, கோல்பேஸ்
ஹோட்டலிலிருந்து இன்றைய ஜனாதிபதி செயலகமான
அன்றைய நாடாளுமன்றம் வரையில் அகலமாக்கப்பட்டது.
அந்த கோல்பேஸ் ஹோட்டலுக்குப்
பின்னாலும் பல சுவரசியமான கதைகள் இருக்கின்றன. மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும், சரோஜாதேவியும்
1965
ஆம்
ஆண்டு இலங்கை வந்த சமயத்தில் தங்கியிருந்ததும் இங்குதான்.
1970 களில் தபால் தந்தி அமைச்சராகவிருந்த செல்லையா
குமாரசூரியர் தனது அலுவலகத்திற்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா வீதி இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டுவருவார். அவரது கார்ச்சாரதி அவரை அந்தஹோட்டலுக்கு அருகில் நிறுத்தி, அவரை இறக்கிவிட்டு, அந்தக்காரை செலுத்திவந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு, அமைச்சருக்காக காத்திருப்பார்.
அமைச்சர் குமாரசூரியர், இரண்டு கைகளையும் விசுக்கிக்கொண்டு நடந்துவருவார்.
எம்மைக்கண்டதும் Good morning சொல்வார். அவருக்கு அப்போதே இரத்தத்தில் கொழுப்பும் இனிப்பும்
இருந்திருக்கவேண்டும்.
மாலைநேரத்தில், மற்றும் ஒரு தலைவர் வருவார். அவர்தான் தந்தை
எஸ். ஜே.வி. செல்வநாயகம். இவர் கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டன் வீதி இல்லத்திலிருந்து புறப்படுவார்.
தமிழ்மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவந்த தந்தையின்
அந்த இல்லத்தில் மலையகத்தைச்சேர்ந்த ஒரு சிங்கள
ஊழியர்தான் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்…?
ஒருநாள் மாலைவேளையில் தந்தையார் அங்கே நடைப்பயிற்சிக்கு வந்தபோது
மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அவர் மெதுவாக ஓடி ஓடித்தான் வருவர். அப்போது அவருக்கு உடல்
நடுக்கம் (Parkinson’s disease)
இருந்தது.
மழையில் நனைந்துவிட்ட அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு,
வீதியின் எதிர்ப்புறமாக அமைந்திருந்த எமது யார்ட்டுக்கு அழைத்துவந்து, தலையை துவட்டி
துடைப்பதற்கு கைவசம் இருந்த வீரகேசரி பத்திரிகை
தாள்களைக் கொடுத்தேன். வீதியின் மறுபக்கம் காருடன் நின்ற அவரது சாரதியை அழைத்துவந்து,
மழை விட்டதும் அனுப்பிவைத்தேன்.
அவரது அரசியல் வாழ்வில் பெரும்பகுதி அந்த உடல் நடுக்க உபாதையுடன்தான் கழிந்தது. ஒருசமயம்
அவர் நாடாளுமன்றத்தில் தடுக்கிவிழவிருந்தபோது, பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா எழுந்தோடி
தாங்கிப்பிடித்த செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்.
இன்று சம்பந்தன் அய்யாவை சஜித் பிரமேதாசவும் இவரது தாயார்
கேமா பிரேமதாசவும் கைத்தாங்கலாக தூக்குவதையும்
அழைத்து வருவதையும் ஊடகங்களில் பார்க்கின்றோம். அவர்கள் வயதுக்குத் தரும் மரியாதை அது.
இந்தப்பதிவில்
எனது பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஒரு சிங்கள அரசியல் தலைவர் பற்றியும்
சொல்லிவிடல்வேண்டும் . அவர்தான் கலாநிதி
விஜயானந்த தகநாயக்கா.
காலித் தொகுதியின் எம்.பி. இலங்கையின்
மூன்றாவது நாடாளுமன்றத்தில் பிரதமராக பதவியில் அமர்ந்த பண்டாரநாயக்கா 1959 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், 1960 ஆம்
ஆண்டு தேர்தலில் தோற்றுப்போகும் வரையில் பிரதமராக இருந்த எளிமையான மனிதர். அதே
சமயம் சர்ச்சைக்குமுரிய தர்மாவேசம் கொண்ட ஒரு கலகக்காரன். அவர் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் ஏழை
மாணவர்களுக்காக பாடசாலைகளில் இலவசமாக பணிஸ் ( பண் ) வழங்கியவர். நானும் அந்த பணிஸ் உண்டிருக்கின்றேன். அதனால் மாணவர்களால்
பணிஸ் மாமா என்றும் புகழப்பட்டவர்.
துணிவகைகளின்
விலைவாசியேற்றத்தை கண்டித்து கோவணத்துடன் வந்து நாடளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள
முயன்றவர். அவர் கோவணத்துடன் வந்த காட்சி படமாக பத்திரிகைகளில்
பிரசுரமாகியிருக்கிறது. சபாநாயகரின் உத்தரவுப்படி பொலிஸார் அன்று அவரை உள்ளே
அனுமதிக்கவில்லை.
அந்த எளிமையான மனிதருடனும் காலிமுக வீதியோரத்தில் நின்று உரையாட
சந்தர்ப்பம் கிட்டும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கமாட்டேன்.
அன்று நண்பகல்பொழுது. சூரியன் உச்சி
வானிலிருந்து சுட்டெரித்துக்கொண்டிருக்கிறான்.
பஸ் தரிப்பிடத்தில் குடை சகிதம் தகநாயக்கா பஸ்ஸுக்காக
காத்து நிற்கிறார். அச்சமயமும் அவர் காலித்தொகுதி உறுப்பினர்.
அவருக்காக அரசாங்க எம்.பி.க்களுக்கான மாளிகை ( சிரவஸ்தி ) இருக்கிறது. அரசாங்கம் காரும்
கொடுத்திருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம்
பயன்படுத்தாமல் சாதாரண குடிமகனைப்போன்று வாழ்ந்தவர் அந்த முன்னாள் பிரதமர்.
காலி முக வீதியை அகலப்படுத்தும் நிர்மாணப்பணியிலிருக்கும் எனக்கோ எனது
மேற்பார்வையின் கீழிருக்கும் தொழிலாளர்களுக்கோ அந்த வேலை நிரந்தரமில்லை என்பதை
முதலிலேயே சொல்லியிருக்கின்றேன்.
விரைவில் அந்த நிரந்தரமற்ற நிர்மாணப்பணி
முடிந்துவிட்டால், நாம் நிரந்தரமாக
வீட்டுக்கு செல்லவேண்டியதுதான்.
எமது நிலைமையைச் சொன்னேன்.
அவர் சிரித்தார்.
“ என்னுடைய எம்.பி. பதவியும்
நிரந்தரமில்லைத்தான். மைத்தரிபாலாதானே உங்கள் அமைச்சார். ஏதோ மக்கள் அரசாங்கம்
நடப்பதாகத்தானே சொல்கிறார்கள். ( அச்சமயம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமர்.
தகநாயக்கா சுயேச்சை எம்.பி.யாக எதிரணி வரிசையில் ) மக்களை கவனிக்க வேண்டியதுதானே.
எதற்கும் சொல்கிறேன்.”- என்றார்.
அப்பொழுது பஸ் வந்துகொண்டிருந்தது.
“ புத்தே அற பஸ்ஸெக்க நவத்தன்ட ( மகனே அந்த
பஸ்ஸை நிறுத்தும் )”
அவர் குடையை மடித்துக்கொண்டார். பஸ் நின்றது.
நடத்துனருக்கும் யார் நிற்பது என்பது தெரிந்துவிட்டது. மரியாதைக்காக பஸ்ஸை
விட்டிறங்கி, அவர் ஏறுவதற்கு வழி விட்டார்.
“ புத்தே மங் கிஹில்லா என்னங் ( மகனே நான்
சென்று வருகிறேன்)”
நான் அந்த பஸ் சென்ற திசையையே பார்த்தவாறு சில
கணங்கள் நிற்கின்றேன்.
சில கார்கள் தேசியக்கொடியுடன் அமைச்சரையோ
எம்.பி.யையோ சுமந்துகொண்டு அந்த காலிமுக வீதியில் விரைந்துகொண்டிருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த
ராஜபக்ஷ கெலிகொப்டரில் நாடாளுமன்றம்
வந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் அவரின் துணைவியார் ஷிராந்தி ராஜபக்ஷ காலிமுகத்திடலில் நடைப்பயிற்சிக்கு வந்தபோது, ஒரு பிரஜை குறுக்கே வந்தது
அசௌகரியமாகிவிட்டதாம். அதற்காக அந்தப்பிரஜையை பொலிஸார் கைதுசெய்து விசாரித்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பல சம்பவங்கள்
நிகழ்ந்த பிரதேசம் அந்த காலிமுகத்திடல்.
இந்து சமுத்திரத்தை பார்த்தவாறு அமைந்துள்ள முன்னைய நாடாளுமன்றம் இன்றைய
ஜனாதிபதி செயலகம். 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அந்தக்
கட்டிடத்துக்கான வரைபடம் தயாராகி ஒன்பது ஆண்டு காலத்தில் (1930 இல் ) அன்றைய கவர்னர் சேர். ஹேர்ட் ஸ்டான்லி
என்பவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான
கட்டிடத்துக்குள்தான் முதலில் சட்ட சபையும் பின்னர் நாடாளுமன்றமும் தேசிய அரசுப்பேரவையும் 1982 வரையில் இயங்கியது.
பல பிரதமர்களையும் பல எதிர்க்கட்சித் தலைவர்களையும்
பல அரசாங்கங்களையும் கண்ட இந்த கட்டிடம் 1982 இன்
பின்னர் ஜனாதிபதி செயலகமாகிவிட்டது.
இந்த காலிமுகத்தில்தான் தமிழ்த்தலைவர்கள் 1956
ஆம் ஆண்டு ஜூன்மாதம் தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகப்போராட்டம்
நடத்தி பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர். இந்தப்போராட்டத்தில்
கலந்துகொண்ட எழுத்தாளர் புதுமை லோலன் (
எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணன் ) தாக்குதலுக்கு இலக்கானார். அவரது ஒரு கரம் முறிந்தது. அவர்
அங்கிருந்த பேறை என அழைக்கப்படும்
சிற்றோடையில் தூக்கிவீசப்பட்டார்.
இச்சம்பவங்களை பதிவுசெய்யும் செங்கை ஆழியானின்
நாவல்தான் “ தீம் தரிகிட தித்தோம். “
முன்னைய இராஜதானியான கோட்டேயில் ஸ்ரீ
ஜயவர்தனபுரவில் இப்பொழுது நாடாளுமன்றம் இயங்குகிறது. மக்கள் இடம்பெயர்ந்தது போன்று
காலிமுகத்திலிருந்து அது கோட்டேக்கு இடம்பெயர்ந்துவிட்டது.
சமகாலத்தில்
காலிமுகத்தை முற்றுகையிட்டு மக்கள் தன்னெழுச்சியாக போரடுகிறார்கள்.
அன்றைய ஶ்ரீமா பண்டாரநாயக்காவின் தலைமையில்
இயங்கிய கூட்டரசாங்கம் 1974 ஆம் ஆண்டு அறிவித்த விலைவாசியேற்றத்தை கண்டித்து ஜே.ஆர்.
ஜெயவர்தனா – பிரேமதாச தலைமையில் மாபெரும் பேரணியொன்று காலிமுகத்தை நோக்கி
வரவிருக்கிறது என்ற செய்தி முதல் நாள் வெளியானதும், எமது வீதி நிர்மாணப்பணிகள்
நிறுத்தப்பட்டன.
சில லொறிகளில் உயரமான மரக்கட்டைகளும்
முட்கம்பிச்சுருள்களும் வந்து இறங்கின. அன்று இரவு எட்டுமணிவரையில் காலிமுகத்தை
சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
மறுநாள் காலை வேலைக்கு வந்த நாம் அந்த வேலிகளுக்குள்ளிருந்தே பணிகளைத்
தொடர்ந்தோம்.
காலையில் பிரமேதாச தனது காரை தானே செலுத்திக்கொண்டு
அவ்விடத்திற்கு வந்தார். அவரது முகம்
விறைத்திருந்தது.
“ சரி
பார்ப்போம் “ என்று சிங்களத்தில்
சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்று மதியம் அவரது தலைமையில் மாபெரும் பேரணி
கொழும்பு மத்தியிலிருந்தும், ஜே. ஆர். தலைமையில் கொழும்பு தெற்கிலிருந்து மற்றும்
ஒரு பேரணியும் புறப்பட்டது. ஆனால், அந்த பேரணிகள் காலிமுகத்தை முற்றுகையிடவில்லை.
மறுநாள் அந்தமுட்கம்பி வேலிகளை அகற்றும்
பணிகளையும் செய்தோம். இந்து சமுத்திரத்தாய் அனைத்துக் காட்சிகளையும் இன்று போல்
அன்றும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தற்போது இலங்கை மக்கள், இன, மத , மொழி பேதமற்று அந்த
காலிமுகத்தில் “ கோத்தா போ “ என்று கோஷமிடுகின்றனர். தற்காலிக கூடாரம்
அமைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் அவுஸ்திரேலியாவிலிருந்து, இந்து
சமுத்திரத்தாயைப் போன்று வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
---0---
No comments:
Post a Comment