வரலாற்றில் அழியாத சில நாட்கள் ( கன்பரா யோகன்)

 எருசலேம் நகருக்கு செல்லும் அந்த மண் பாதையெங்கும் துணிகள்


விரிக்கப்பட்டிருந்தன. மரக்கிளைகளையும், இலைளையும், பேரீச்ச மரத்தின்  ஓலைகளையும்  வழியெங்கும் வெட்டிப்  பரப்பி  தெருவின் இரு கரையிலும் சனக்கூட்டம் உற்சாகமாக ஒருவரை வரவேற்க காத்திருக்கிறது.

அந்த உருவம், நாற்பது நாட்களாக வனாந்தரத்தில் பசியுடன் மெலிந்து நலிந்த உடலுடன் ஒரு கழுதையின் மேலேறி வருகிறது.  

‘கழுதையில் பவனி வருகிறார் இராசா’ என்ற பாடலும், கூச்சல்களும் சூழ மக்கள் வரவேற்புடன் கழுதை மெல்ல நடக்கிறது.  

எருசலேமில் தனது சிலுவை மரணத்தை நோக்கிய பயணம்தான்  அது என்று கழுதை மேலிருந்த இயேசு அறிந்திருந்தார்.

உண்மையில் இராசா என்ற சொல்லே பிறகு இயேசுவின் உயிருக்கு உலை வைத்தது.

கழுதையில் பவனி வந்தபோது இந்தளவுக்கு வரவேற்பைபெற்ற ஒருவர் ஒரு  வாரத்துக்குளாகவே விசாரணைகள் நடந்த போது மக்களால் நிராகரிக்கப்பட்டு  தண்டனைக்குட்பட்டது ஒரு முரண்பாடாக தெரிவதுண்டு. ஆனால் இதன் உண்மை என்னவென்றால் யூதர்களில் பலவேறு கருத்துக் கொண்டோர் மத்தியில் அவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கபட்டதே.     

பாரம்பரிய தேவாலய சட்டங்களை அவர் நிராகரித்திருந்தார். அதனால் யூத மத உயர் பதவியிலிருந்த குருமாரின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். ஆட்சியிலிருந்தவர்களுக்கு இவர் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமென்ற அச்சத்தினாலேற்பட்ட வெறுப்பு இருந்தது,

அந்தஸ்தும், செல்வாக்கும் உள்ளோர் அவர்மீது கசப்பு கொண்டிருந்தனர். "ஊசி யின் காதில் ஓட்டகம் நுழையலாம் ஆனால் செல்வந்தன் ஒருவன் பரலோக ராஜ்யத்துள் நுழைய இயலாது" என்ற  கருத்தை வேறு அவர் தன் போதனைகளில் சொல்லியிருந்தார்.

யூத  மத குருமார் முன்னிலையில் கெத்சமனே என்ற தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது,

'நீ யூதருக்கு இராசாவா?' என்று பிலாத்து அவரை விசாரணை மண்டபத்தில் கேட்கையிலும் மௌனமாக தலை குனிந்திருந்த  பிறகு மெல்லிய குரலில் அதை ஆமோதிக்கிறார்.

ரோம ராஜ்யத்திற்குபட்ட யூதேயா மாகாணத்தின் தேசாதிபதியே பொந்தியு பிலாத்து (பொன்ரியஸ் பிலாடிஸ்). அந்நாட்களில் ரோமப் பேரரசனாக இருந்தவன் அகஸ்டஸ் சீசருக்குப் பின் வந்த திபேரியஸ் சீசர்.

விசாரணை மண்டபத்தில்  ரோமப் பேரரசனான  சீசருக்கு வரி செலுத்துவதை  இவன் தடுத்தான் என்றும், தன்னைத்தானே மேசியா அல்லது மீட்பர் என்றும், இராசா என்றும் சொல்லிக் கொண்டான் என்றும்  இயேசுவின் மீது  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மனித பாவத் தளைகளிலிருந்து மீட்பவர் என்ற அர்த்தத்தில் இயேசு சொன்னதை தவறாகப் அர்த்தப்படுத்தினர்.  யூத மத பீடத்தின் தலைமை குருமாரும் தமது காழ்ப்புணர்வைக் காட்டிக் கொள்ள தருணம் பார்த்திருந்தார்.

அந்த நாட்களில் நடந்த விசாரணை முறை சற்று வித்தியாசமானது. மேல் மாடியிலமைந்த தேசாதிபதியின் விசாரணை மண்டபத்தில் அதிகாரிகளும் கீழே முற்றத்தில் மக்களும் சூழ்ந்திருப்பார்கள். விசாரணையின் இறுதியில்  மக்களது விருப்பமும் அங்கே செவி மடுக்கப்படும்.  விசாரணையில் தண்டனைக்குரிய குற்றமெதையும் காணாதபோதிலும் அங்கே கூச்சலிட்டு இயேசுவை சிலுவையில் அறையும் படி கூக்குரலிட்ட மக்களுக்குப் பணிந்தே பிலாத்து இயேசுவின் மரண தண்டனையை நிறைவேற்றுகிறான். இந்த மனிதனின் இரத்தப் பழிக்கு தான் காரணமல்ல தன் கைகளைக் கழுவிக் கொள்கிறான். உண்மையில் சிலுவையில் அறையும்படி கூச்சலிட்டவர்கள் யூத மத ஆசாரம் கொண்டவர்களும் தலைமைக் குருக்களும் அவர்களின் ஆதரவுக் குழுக்களுமே.

யூத மத பீடத்தின், மேல்தட்டு மக்களின் அல்லது அதிகார வர்க்கத்தின் விரோதத்தை இயேசு சம்பாதித்திருந்தாலும் சாதாரண அடிநிலை மக்கள் எல்லோரும் இயேசுவை  நிராகரித்தனர் என்றில்லை. அவர்களில் பலர் இயேசுவின் மூலம்  நன்மைகள் பல பெற்றிருந்தனர். பலரது தீரா வியாதிகளை அவர் குணமாக்கியிருந்தார், சிலரை உயிர்ப்பித்திருந்தார். ஆனாலும் விசாரணைகளில் அவர்கள் தலையை  காட்டவோ, குரலை உயர்த்தவோ பயந்திருக்கக்கூடும்.

அவரது உற்ற சீடனான பேதுரு கூட விசாரணைகள்  நடந்த நாள் தானும் பிடிபட்டு விடுவேன் என்ற அச்சத்தில் இருந்தான் அதிகாலை  வேளை மூன்று முறை தேசாதிபதியின் வேலைக்காரிகளிடமும், வேறு சிலரிடமும் இயேசுவை அறியேன் என்று பொய் சொல்லி தப்ப வேண்டியிருந்தது

இயேசு இறைவனின் மைந்தனாகஉலகுக்கு அனுப்பப்பட்டவர் என்ற போதிலும்  மனித மனங்களுக்கேயுரித்தான சஞ்சலங்களையும், உடல் ரீதியான வேதனைகளையும், பாடுகளைம்  அனுபவித்த நாட்களை நினைவு கூறுவதுதான்  தபசு காலம் அல்லது  

லத்தீன் மொழியில் லெந்து என்றும் அழைக்கப்படும் காலம். இது சாம்பற்  புதன்  (Ash Wednesday ) என்ற நாளிலிருந்து தொடங்குகிறது.

இந்தக் காலமே இயேசு வனாந்தரத்தில் உபவாசமிருந்த நாட்களை குறிக்கிறது. இதை தொடர்ந்து வரும் பரிசுத்த வாரம் (Holy Week) தான் முன்னர் குறிப்பிட்ட இயேசு கழுதையில் எருசலேம் வந்த குருத்தோலை ஞாயிறு (Palm Sunday)  நாளில் தொடங்கி எட்டாம் நாளான உயிர்த்த ஞாயிறு (Easter ) தினத்துடன் நிறைவுறுகிறது.

கொலை அச்சுறுத்தல் ஒன்றும் இயேசுவுக்குப் புதியதல்ல. பிறந்த  அன்றே அவரைக்  கொலை செய்ய யூதேயாவை ஆண்ட ஏரோது என்ற ரோம அரசன் வலை விரித்தான். பழைய ஏற்பாட்டில் பல  தீர்க்கதரிசன  குறிப்புகள் எழுதியிருந்ததை வைத்து  ஒரு யூத அரசன் தோன்றுவதையிட்ட அச்சம் ரோம ஆட்சியாளர்களுக்கு எப்போதும் இருந்தது.  

அவர் பிறந்த போது பெற்றோர் வைத்த பெயர் இயேசு என்பதுதான். பிறகு வந்த

மேசியா - மீட்பர் என்ற எபிரேய அடை மொழியுடன் கூடிய பெயரே இயேசு கிறீஸ்து என்ற பெயராக நிலைத்தது. கிறிஸ்து என்ற பெயர் மக்களை  அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுப்பவர் என்ற அர்த்தத்தில் ஒரு இன்னொரு இராசாவாக அவர்

கிளர்ந்தெழுந்து ரோம ஆட்சியாளர்களிடமிருந்து  யூதர்களை விடுவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.

நவீன காலங்களிலென்றால் மேசியா என்ற சொல் ஒரு புரட்சித் தலைவர் என்ற பொருளை கொண்டிருக்ககூடும். கிறிஸ்தவம் என்ற மதத்தின் பெயரே கிறிஸ்து என்ற இந்த சொல்லில்   இருந்து ஆரம்பமாகியிருக்கிறது.  கிறீஸ்து மூன்றாம் நாளில் உயித்தெழாவிட்டிருந்தால் கிறிஸ்தவம் இன்றுள்ளது போல உலகமெங்கும்  பரவியிருக்குமா என்பது சந்தேகம்தான். இன்றும் இயேசுவின் உயித்தெழுதலை ஏற்றுக்கொள்ளாத, இயேசுவை மேசியா என்றும்  ஏற்றுக் கொள்ளாத யூதர்களில் ஒரு பகுதியினரின் மதமாக யூதாயிசம் உள்ளது. 

தனது 33 வது வயதில் உலக வாழ்வை சிலுவையில் மரித்ததுடன்

முடித்துக்கொண்ட இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து மக்களுக்கும், சீஷர்களுக்கும் காட்சியளித்தார். உலகின்  மூலை முடுக்குகளுக்கும் கிறீஸ்தவ மதத்தைக் கொண்டு செல்ல அவரது சீஷர்களுக்கு அது மிக உதவியது.

அதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் வரலாற்றில் அழியா இடம் பெற்ற இந்த பரிசுத்த வார நாட்கள் தொடர்ந்து நினைவு கூரப்படும். 

(நன்றி: காவோலை ஏப்ரல் 2021)

No comments: