பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் உக்ரைனுக்கு திடீர் பயணம்
இந்திய ரெயில்வேக்கு ஊக்கம் அளித்திருக்கும் 'வந்தே பாரத்'
இம்ரான் கானின் இடத்திற்கு பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்
ஒஸ்காரில் ஸ்மித்துக்கு பத்து ஆண்டுகள் தடை
பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் உக்ரைனுக்கு திடீர் பயணம்
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியை சந்தித்துள்ளார். உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் ஜி7 நாடுகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் உக்ரைன் பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார்” என்றார்.
உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர், கியேவ் வீதிகள் வழியாக இருவரும் நடந்து சென்றனர். அங்கு இருந்து மக்களுடன் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடினார்.
“உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரைனிய மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன்” என்று ஜோன்சன் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
இந்திய ரெயில்வேக்கு ஊக்கம் அளித்திருக்கும் 'வந்தே பாரத்'
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்திய ரெயில்வேக்கு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக சவூதி கசட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையான மக்கள் நீண்டதூர பயணங்களுக்கு இன்னும் ரயிலை பயன்படுத்துவதோடு இது சராசரியாக கிட்டத்தட்ட 95 வீதமான நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நகரங்களுக்கு இடையிலான இந்தியாவின் முதல் பகுதி அதிவேக ரயில் சேவை என்பதோடு இரு பாதைகளில் மாத்திரமே ஆரம்பத்தில் அது இயங்கியது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாத காலத்திற்குள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
இந்திய அரசு வரும் 2023 ஜூலை மாதத்தை கெடுவாகக் கொண்டு 75ஆவது சுதந்திர தினத்தில் இருந்து 75 வாரங்களுக்குள் உலகெங்கும் 75 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இம்ரான் கானின் இடத்திற்கு பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (70) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி விலக்கப்பட்ட, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கானின் இடத்திற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
69 வயதான கானின் கூட்டணி கட்சிகள் கைவிட்ட நிலையிலேயே அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததோடு, நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையிலேயே இம்ரான் கான் தனது பதவியை இழந்தார்.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 172 பேர் வாக்களித்தால் பிரேரணை நிறைவேறும் நிலையில், 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பி.எம்.எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்திருந்தார்.
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் இளைய சகோதரராவார். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்த நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக விடுதலை பெற்ற நிலையில் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
அரசியல் அனுபவம் பெற்ற ஷெபாஸ் ஷெரீப் இதற்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார் என்பதுடன், பஞ்சாப் மாகாணத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவராக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷரீபை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு அமைய, அந்நாட்டு பாராளுமன்றம் இன்று (11) திங்கட்கிழமை கூடி, புதிய பிரதமரை தெரிவு செய்துள்ளது.
முன்னதாக, இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு நாளில் பிரேரணையை நிராகரித்த அந்நாட்டு முன்னாள் பிரதி சபாநாயகர், அதனை வெளிநாட்டு சதி எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் ஆலோசனைக்கமைய அந்நாட்டு ஜனாதிபதியினால் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தது.
குறித்த விடத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், மீண்டும் குறித்த வாக்கெடுப்பை நடாத்தும் உத்தரவை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஒஸ்காரில் ஸ்மித்துக்கு பத்து ஆண்டுகள் தடை
ஒஸ்கார் விருது விழா மற்றும் ஏனைய அகடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
ஒஸ்கார் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ரொக்கின் கன்னத்தில் அறைந்ததற்காகவே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் அரங்கில் காண்பித்த ஏற்க முடியாத மற்றும் துன்புறுத்தும் நடத்தை 94 ஆவது ஒஸ்கார் நிகழ்வை மறைத்துவிட்டது என்று அகடமி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தனது செயலுக்காக மன்னிப்புக் கோட்ட ஸ்மித், அகடமி அமைப்பில் இருந்து விலகினார். தனது மனைவியை கேலி செய்ததை அடுத்தே அவர் தொகுப்பாளரை தாக்கினார்.
எனினும் அந்த ஒஸ்கார் விருதில் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அந்தத் திரைப்படத்தில் அவர் டென்னிஸ் நட்சத்திரங்களான வீனஸ் மற்றும் செரீனா வில்லிம்ஸின் தந்தையாக நடித்திருந்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment