சர்வகட்சி மாநாடும் சருகாகிவிடும் அரசியலும் ! அவதானி


இந்தப்பதிவை எழுதத் தொடங்கியபோது,  இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ  ஏற்பாடு செய்த சர்வகட்சி  மாநாடு பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தன.

இதுபோன்ற சர்வகட்சி மாநாடுகள் முன்னரும் நடந்துள்ளன. அல்லது அறிவிப்போடு மறக்கப்பட்டுமிருக்கின்றன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல், ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பமான காலம் முதல் சர்வகட்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை கொவிட் பெருந்தொற்று நெருக்கடியை அடுத்து, பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார். 

பஞ்ச பாண்டவர் பற்றி அறிந்தோம். இப்போது பஞ்சத்தை ஆண்டவர்களின் காலத்தில் மற்றும் ஒரு சர்வகட்சி  மாநாட்டை  நாம் சந்திக்கின்றோம்.

தற்போது பஞ்சத்தை ஆண்டவர்களின் அரசின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச முதலானோர் தங்கள் அமைச்சுப்பதவிகளிலிருந்து அதிபரினால் நீக்கப்பட்டுள்ள பின்னணியிலும் மற்றும் ஒரு பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, நவசமாஜக்கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார முதலானோர் அரசு மீது நம்பிக்கையற்று


விமர்சித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர், இந்த மாநாட்டுக்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்திருக்கிறார்.

1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 140 ஆசனங்களில் வெற்றிபெற்று ஆறில் ஐந்து பங்கு பலம்பெற்று பதவிக்கு வந்த  சட்டமேதை ( பாரிஸ்டர் ) ஜே.ஆர். ஜெயவர்தனா, விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்.

அதற்கு முன்னர் 1970  இல் நடந்த தேர்தலில் தோல்வி கண்டிருந்த அவரது  ஐக்கிய தேசியக்கட்சி  ஏழு ஆண்டுகளின் பின்னர் அபரிமிதமான வெற்றியை கண்டதும்,   அவர் செய்த முதல் வேலை,  அரசியல் சட்டத்தில் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதுதான்.

    ஏன் இவ்வாறு மாற்றம் செய்கிறீர்கள்..? எனக்கேட்டதற்கு அவர் சொன்ன பதில் :  1970 தேர்தலில் தமது கட்சி தோல்வி கண்டிருந்தாலும்,  முழு நாட்டிலும் தொகுதிவாரியாக தமது கட்சிக்குத்தான் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஆனால்,  மொத்த வாக்குகளில் தமது ஐக்கிய தேசியக்கட்சியை விட  குறைந்த வாக்குகளைப்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து 1970 இல் அரசை அமைத்துள்ளது.

எனினும்,  தேர்தல் வாக்கின் அடிப்படையில் தமது ஐ.தே. கட்சிக்குத்தான் ஆதரவு அதிகம்.  எனவே விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துகின்றேன்  என்றார், அன்று அதாவது 45 வருடங்களுக்கு  முன்னர் அவர் அவ்வாறு செய்தமையால்தான் இன்று நாடாளுமன்றில் பல உதிரிக்கட்சிகள் பெருகியிருக்கின்றன.

இக்கட்சிகள்தான் சமகால நாட்டின் அதிபர் அழைக்கின்ற சர்வகட்சி மாநாட்டுக்கு செல்வதா..? இல்லையா..? ஏன் புறக்கணிக்கவேண்டும் …? என்றெல்லாம் ஊடகங்களில் அறிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றன.

அன்று ஜே. ஆர். ஜெயவர்தனா, இக்கட்சிகளுக்கு செய்த பெரிய புண்ணியம் இதுதான் !

சுதந்திரத்திற்குப்பின்னர் பல ஆண்டு காலம் நடைமுறையிலிருந்த தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 196 ஆக உயர்த்தியவர் ஜே. ஆர்.

அதன் மூலம் மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படாமலேயே 29 பேர் ( தேர்தலில் தோல்வி கண்டிருந்தாலும் ) தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக நாடாளுமன்றத்தின் வாசல் படிக்கட்டுகளில் ஏறுவதற்கான வாய்ப்பினை ஜே.ஆர். வழங்கினார்.

அதனால், 168 ஆக இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது !

ஜே.ஆரை, சாணக்கியன் என்றும் தந்திரத்தில் நரிக்கு ஒப்பானவர் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கணித்துவைத்திருந்தமைக்கு இதுவும் ஒரு  காரணம்தான்.

தனது கட்சியை பலப்படுத்துவதற்காக அவர் அன்று செய்த கச்சிதமான வேலையின் மூலம் பல உதிரிக்கட்சிகள் உருவாவதற்கும், அவை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் வழிகோலினார்.

இதுபற்றி இன்னும் விளக்கமாக கூறலாம்.

அவரது யோசனையின் பிரகாரம் உருவான தேர்தல் நடைமுறைச் சட்டத்தில், கட்சி அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும் என்பதனால், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் மாவட்ட ரீதியாக தமது வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனுவாக சமர்ப்பித்துவிடவேண்டும்.

அத்துடன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரின் பெயர்களையும் பட்டியலில் மேலதிகமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறுதான் தேர்தலில் போட்டியிடாமலேயே,   நீதி அமைச்சராக  அலி சப்ரியும்  நிதியமைச்சராக பஸில் ராஜபக்‌ஷவும்  இன்று நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்ல, கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு  ஒரு ஆசனத்தையையும் பெற்றுக்கொள்ளாமல் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் பின்கதவினால், நாடாளுமன்ற அசனத்தில் வந்து அமர்ந்துள்ளார் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

முன்னைய  தொகுதிவாரி தேர்தல் நடைமுறை தற்பொழுதும் இருந்திருப்பின்,   தற்போது நாடாளுமன்றில் இத்தனை கட்சிகள் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருக்குமா…?

மாமனார் ஜே. ஆர். ஜெயவர்தனா அன்று போட்ட பிச்சையினால், மருமகன் ரணில் விக்கிரமசிங்கா இன்று தப்பிப் பிழைத்துள்ளார்.

இவர் அரசியலுக்குள் பிரவேசித்த காலப்பகுதியில் ஒன்பது வயதுச்சிறுவனாக இருந்த சஜித் பிரேமதாச , இன்று தனது தந்தையார் ரணசிங்க பிரேமதாசவினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட  ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தி என்ற முன்னணியை அமைத்து எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிறார்.

இந்த மக்கள் சக்திதான், அண்மையில் அதிபர் கோத்தபாயவின் செயலகத்தினை முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடத்தியது.

தொடர்ந்து  மக்கள் விடுதலை முன்னணியும் சோஷலிஸ இளைஞர் சங்கமும் முற்றுகை போராட்டம் நடத்தியது.

நெருக்கடிகள் வரும்போதெல்லாம்  இலங்கை அதிபர்கள் – அதாவது நிறைவேற்று அதிகாரம் பொருந்திய அதிபர்கள் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது வழக்கம்.

இதற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த வேளையில் ஜே. ஆர். ஜெயவர்தனாவும் தனது அதிபர் பதவிக்காலத்தில் இத்தகைய சர்வகட்சி மாநாட்டை கூட்டியவர்தான்.

நாடளுமன்றில் ஏதாவது முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் சபாநாயகரும் அனைத்துக்கட்சி எம். பி.க்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பார். நடத்துவார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏதாவது தீர்வினை கண்டுவிடுவதற்காகத்தான் இதுபோன்ற சர்வகட்சி மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை கூட்டுவதற்கு முன்வரும் அதிபரின் கட்சியினதும் அவரது தனிப்பட்ட நலனும் கூட இத்தகைய மாநாடுகளின் பின்னணியிலிருக்கும்.

இதனைத்தான் எமது முன்னோர்கள் “  சோலியான் குடுமி சும்மா ஆடது “  என்று சொன்னார்கள்.

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள்  சக்தி, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, ஜீவன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி,   கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்  , அநுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி முதலான கட்சிகள் இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளன.

எனினும்  எதிரணியிலிருக்கும் ரணிலின் ஐ.தே.க.,  தமிழரசுக்கட்சி,  புளட், மற்றும் அரசின் பங்காளிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா,  வியாழேந்திரன்,    பிள்ளையான்  - சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின்  கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

சர்வம் என்பதன் பொருள் அனைத்தும் என்பதாகவும்.  சருகு என்பதற்கு பொருள் பின்வருமாறும் உள்ளது.  

ஒர் இலையின் ஏழாவது கடைசிப் பருவம்தான் சருகு. ஏனைய முதல் கட்ட  ஆறு பருவங்கள் குருத்து, அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு என்பதாகும்.

பழுப்பின் பின்னர் இலை  சருகாகிவிடும்.

இலங்கை  நாடாளுமன்ற அரசியலும் சர்வகட்சிகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை மக்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

---0---

No comments: