திரையிசையை தனது காந்தர்வக் குரலால் வசீகரித்து வைத்துள்ள மாபெரும் பாடகர்

 Thursday, March 24, 2022 - 4:22pm



மாபெரும் பாடகர் அமரர் ரி.எம்.சௌந்தரராஜனின் பெயரைத் தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை எவரும் எழுதி விட முடியாது. தமிழ்த்திரையிசையை 60வருட காலமாக தனது இசை ஆளுமையினால் கட்டி வைத்திருந்தவர் அவர்.அந்த மகா இசைக்கலைஞனின் 99வது பிறந்த தினம் இன்றாகும் (24.03.1923).  பதினோராம் நூற்றாண்டில் சௌராஷ்டிர மக்கள் தென்னகத்தில் தஞ்சம் புகுந்தனர். தமிழ்நாட்டில் அவர்கள் 

தங்கிய 45ஊர்களில் மதுரை மிக முக்கியமான இடம். அவ்வாறு மதுரையில் தஞ்சம் கொண்ட பரம்பரையில் வந்தவர்தான் ரி.எம்.சௌந்தரராஜன். இவர்களில் பெரும்பாலானோர்கள் நெசவுத் தொழில் செய்து வந்தனர். மதுரை தெற்கு பெருமாள் கோயிலில் புரோகிதம் செய்த வைதீகர்தான் சௌந்தரராஜனின் தந்தை மீனாட்சி அய்யங்கார். ரி.எம்.எஸ்ஸின் தாயார் பெயர் வேங்கடம்மாள்.இவர்களின் பரம்பரை பெயர் 'தொஹுலுவா'. தொஹுலுவா மீனாட்சி அய்யங்கார் சௌந்தரராஜன். இதன் சுருக்கமே ரி.எம்.எஸ்.  


மீனாட்சி அய்யங்காருக்கு குலதெய்வம் மதுரைக்கருகே உள்ள அழகர் கோயிலின் மூலவர் கள்ளழகர். அழகர் கோயில் உற்சவமூர்த்தியின் பெயர் சௌந்தரராஜப் பெருமாள். எனவே தன் இரண்டாவது மகனுக்கு சௌந்தரராஜா எனப்பெயரிட்டார். 1943ஆம் ஆண்டு சௌந்தரராஜன் தனது 20வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். சௌந்தரராஜனுக்கு 08வயதிருக்கும் போது தமிழகத்தின் முதற்பேசும் படமான(1931 )  


'காளிதாஸ்' வெளியாகியது. மக்கள் அனைவரும் அதிசயத்துடன் சினிமாவை வரவேற்கத் தொடங்கிய காலம். நாளடைவில் தமிழ் சினிமா முன்னேறி மேடையில் நாடகமாக நடித்து வந்த புராணங்களை திரைப்படமாக உருவாக்கி மக்களை மகிழ்வித்தனர். அந்நேரத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற கலைஞர்கள் தமது ஆளுமையை திரையில் செலுத்திய காலம்.


இவர்களின் பாடல்களை சிறுவயதிலிருந்தே ரசித்த ரி.எம்.எஸ். தானும் ஓர் பாடகராக மிளிர வேண்டும் என உறுதி எடுத்தார்.குறிப்பாக எம்.கே.தியாகராஜ பாகவதரை தனது மானசீககுருவாக மனிதில் இருத்திக் கொண்டார். இவர்களின் பாடல்களை மனனம் செய்து வீட்டுத்திண்ணை, நண்பர்களின் இல்லத் திருமணவிழா, ஆலயங்கள், பொதுஇடங்களில் பாடினார். இவரது அருமையான குரல் வளத்தை அனைவரும் பாராட்டினார்கள். தன் மகனுக்கு நல்ல சங்கீத ஞானம் இருப்பதை நன்கு உள்வாங்கிய மீனாட்சி அய்யங்கார், அப்போது மதுரையில் பிரபல சங்கீத வித்துவானாக இருந்த சாரங்கபாணி பாகவதரிடம் சங்கீதம் கற்க ரி.எம்.எஸ்ஸை அனுப்பினார். சில கீர்த்தனைகளுடன் முடிந்த வரை இசை நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண்டார் அவர். ஒரு சமயம் கச்சேரிக்காக மதுரை வந்த தியாகராஜா பாகவதரிடமே அவர் பாடிய சில பாடல்களைப் பாடிக் காட்டி பாகவதரின் பாராட்டையும் பெற்றார்.


"உனக்கு நல்ல எதிர்காலம் பிரகாசமாக இருக்கு" என அப்போது வாழ்த்திய பாகவதரின் வாக்கு பின்னாளில் பலித்தது. ரி.எம்.எஸ்ஸின் இசை வாழ்க்கை பிரகாசமாகவே ஜொலித்தது. பின்னர் சங்கீத சாம்ராட் காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் 12வர்ணங்கள், 48கீர்த்தனைகள் மட்டுமே கற்றார் ரி.எம்.எஸ். அப்போது சில நாடகங்களிலும்,திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் நரசிம்ம பாரதி சௌந்தரராஜனுக்கு நண்பரானார்.இருவருக்கும் ஓர் அபூர்வ ஒற்றுமையுண்டு.இருவரின் பிறந்த தினமும், வருடமும், மாதமும், நகரமும் ஒன்றே (24.03.1923).


"ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற கவிஞர் பூமிபாலகதாஸின் வரிகளுக்கு இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் முதன்முறையாக சினிமாவில் சௌந்தரராஜன் பாடி அறிமுகமானார். இப்படம் 1950இல் வெளிவந்தது. இதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர் நடித்த 'மந்திரி குமாரி' படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. "அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட" என்ற பாடலே அது. இலங்கை வானொலி மூலம் முதல் முறையாக தன் குரலை தானே கேட்டார் ரி.எம்.எஸ். இப்பாடலை ரசித்து பாராட்டி மட்டக்களப்பு நகரிலிருந்து ஓர் ரசிகரிடமிருந்து வந்த முதற் பாராட்டு கடிதம் சௌந்தரராஜனை நெகிழ்ச்சியுறச் செய்தது.


'வளையாபதி'படத்தில் நடிகர் முத்துக்கிருஷ்ணனுக்காக "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்ற பாடலை பாடினார். பாடல் பிரமாதமாக பேசப்பட்டது.1954இல் மக்கள் திலகம், நடிகர் திலகம் முதலும் கடைசியுமாக நடித்த 'கூண்டுக்கிளியில்' சிவாஜிக்காக "கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாய்" என்ற பாடலைப் பாடி தமிழ்த்திரையை அதிர வைத்தார் ரி.எம்.எஸ்.


அதன் பின் இதே ஆண்டில் வெளியான சிவாஜி கணேசனின் 'தூக்குத்தூக்கியில்' சிவாஜிக்காக அனைத்து பாடல்களையும் இவரே பாடி சிவாஜியின் ஆஸ்தான பின்னணிப் பாடகராக பல ஆண்டுகள் இசையுலகில் வலம் வந்தார். ரி.எம்.எஸ்ஸின் குரலில் வசப்பட்ட மக்கள் திலகம் தான் நடித்த 'மலைக்கள்ளன்' (1954)படத்தின் வாயிலாக "எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை இவருக்கு வழங்கினார். தமிழ்த்திரையை நீண்ட வருடங்களாக தம்வசப்படுத்தியிருந்த இரு திலகங்களுக்கும் இவரின் குரல் பொருந்தியிருந்தது.


சௌந்தரராஜனின் இனிமை நிறைந்த சாரீரத்தில் அமைந்த பாடல்களுக்காகவே நிறைய படங்கள் வெற்றியைச் சந்தித்தன. ஜெய்சங்கர், சிவகுமார், -ரஜினிகாந்த் போன்றோர்களுக்கு திரையில் பின்னணிப் பாடல் முதலில் வழங்கியவர் இவரே. சிவாஜி, எம்.ஜி.ஆர் , எஸ்.எஸ்.ஆர்,ஜெமினிகணேசன், எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், சிவகுமார் ,ஏ.வி.எம் ராஜன், ரவிச்சந்திரன், எஸ்.ஏ.அசோகன், ரஜினிகாந்த், கமலஹாசன், நாகேஷ், சத்யராஜ், விஜயகாந்த், ஸ்ரீநாத், சங்கர் போன்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார் சௌந்தரராஜன். திரைக்கதையின் தன்மையையும், நாயகனின் சூழ்நிலையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டு உணர்ச்சியுடன் பாடும் திறமை சௌந்தரராஜனுக்கே உரிய தனிமகிமை. 


திரையிலே கதாநாயகயகர்கள் நடிக்கும் முன்னே பாடல் பதிவின் போது சௌந்தரராஜன் நடித்து பாடி விடுவார். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம்.  



'உயர்ந்த மனிதன்' படத்தில் வரும் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் ஓடிக்களைத்து பாடுவதாக காட்சி. திரையில் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக இவரும் பாடல் ஒலிப்பதிவு கூடத்தில் ஓடிக்களைத்து இப்பாடலை பாடினார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் நடித்த அனைத்துப் படங்களிலும் இவர் பாடிய தத்துவப் பாடல்கள் அனைத்தும் சிறப்பம்சம் கொண்டவை. அத்தனை வாத்தியக் கருவிகளின் ஒலிகளையும் தாண்டி சௌந்தரராஜனின் ஆண்மை நிறைந்த குரல் பளிச்சிட்டது. முருகப் பெருமானின் தீவிர பக்தர் சௌந்தரராஜன். மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், உள்ளம் உருகுதையா முருகா, கற்பனை என்றாலும், உனைப்பாடும் தொழிலின்றி, கற்பக வள்ளி நின் பொற்பதம் பிடித்தேன்,(இப்பாடல் சென்னை மயிலாப்பூர் கபாலீஷ்வரர் ஆலயத்தில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை இயற்றியவர் யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி அவர்கள். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, அழகென்ற சொல்லுக்கு முருகா என இன்னும் எல்லையின்றி கூறிச் செல்லலாம். 'பலப்பரீட்சை' என்ற ஓர் படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் சௌந்தரராஜன்.  


தமிழகத்தின் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றிய பெருமை கொண்டவர் சௌந்தரராஜன். எஸ்.எம் சுப்பையா நாயுடு, டி.ஆர்.பாப்பா, ஜி.ராமநாதன், ஆர்.சுதர்ஸனம்,கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, சங்கர்_கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர், ஜெயா_ விஜயா, குன்னக்குடி வைத்தியநாதன், இளையராஜா, சந்திரபோஸ், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற அனைத்து முன்னணிக் கலைஞர்களுடனும் இணைந்து இசைப் பங்களிப்பை நல்கியவர் சௌந்தரராஜன்.


எல்லா இசையமைப்பாளர்களும் சௌந்தரராஜனுடன் இணைந்து ஒத்துப்போன தருணத்தில் இசைஞானி இளையராஜா மட்டுமே இவருடன் கருத்து வேறுபட்டார். 1976இல் பஞ்சு அருணாச்சலத்தின் 'அன்னக்கிளி' படத்தில் இளையராஜா அறிமுகமான போது முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் சௌந்தரராஜன். இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர்களில் சௌந்தரராஜனும் ஒருவரே.


1950இல் தொடங்கிய சௌந்தரராஜனின் இசைப்பணி 1976இல் இளையராஜா வருகைக்குப் பின்னர் சரியத் தொடங்கியது. காரணம் இளையராஜாவின் ஜனரஞ்சக இசை தமிழ்த்திரையை ஒட்டுமொத்தமாக ஆர்ப்பரித்துக் கொண்டதே இதன் உண்மையான விளக்கம். இளையராஜா இசையமைத்தால் நல்ல வசூல் காணலாம் என்ற நிலை படத்தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், வியாபார ரீதியில் இருந்தது. இருப்பினும் இளையராஜாவின் இசையில் தீபம், நல்லதொரு குடும்பம், ரிஷிமூலம், நான் வாழ வைப்பேன், தியாகம், போன்ற சிவாஜி கணேசன் படங்களில் சௌந்தரராஜன் பாடினார். இருப்பினும் சிவாஜி கணேசனுக்கு இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்களில் மலேஷியா வாசுதேவனுக்கே முன்னுரிமை வழங்கினார்.


சௌந்தரராஜனுக்கு மாலையுடன் இறுதி அஞ்சலி செலுத்த வந்த இளையராஜா "ஒரு நல்ல கலைஞனை ஓரம் கட்ட நான் காரணமாக இருந்து விட்டேனே என கலங்கியிருக்கக் கூடும்" என கண்டிப்பாக மனதில் நினைத்திருப்பார். சௌந்தரராஜன் இதுவரையில் 3162படங்களில் பாடியுள்ளார். சினிமா, பக்திப்பாடல்களுடன் 10138பாடல்கள் பாடியுள்ளார். 1970ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் இவருக்கு  


'ஏழிசை மன்னர்' விருது வழங்கப்பட்டது. 2003இல் இந்திய அரசின் உயர் விருதான 'பத்மஸ்ரீ' கிடைக்கப் பெற்றது. 2016ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. கலாரத்னம், மதியகத்தின் காந்தர்வன், ஞானரத்னம், அருளிசைச் சித்தர், ஞானக்குரலோன் என 60இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் சௌந்தரராஜன்.  


தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என 11இந்திய மொழிகளில் பாடிய சௌந்தரராஜன் பல நாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரி வழங்கியுள்ளார். இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டு இசைக்கச்சேரி வழங்கியுள்ளார். 2013ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திததி சென்னை மந்தவெளி இல்லத்தில் தனது 90ஆம் அகவையில் இசையரசன் சௌந்தரராஜன் காலமானார். அவரது இழப்பு அவரது ரசிகர்களுக்கு மாறாத துயரம்!


ஜெசாஹித்ய ரத்னா


எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்...


கம்பளை

No comments: