உலகச் செய்திகள்

 போரை முடிக்க ரஷ்யாவுக்கு பொதுச் சபையில் அழுத்தம்

வட கொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றி

ரஷ்யாவை தடுப்பதில் தாமதித்ததாக ஐரோப்பா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

 132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து




போரை முடிக்க ரஷ்யாவுக்கு பொதுச் சபையில் அழுத்தம்

உக்ரைனில் ரஷ்யா மோசமான நிலையை ஏற்படுத்தியதற்காக ரஷ்யாவை கண்டிப்பது, உக்ரைனிய பொதுக்களை பாதுகாப்பது மற்றும் உதவிகள் செல்வதற்கு அழுத்தம் கொடுக்கும் ஐ.நா பொதுச்சபை தீர்மானத்திற்கு கிட்டத்தட்ட முக்கால் பங்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில் 193 அங்கத்துவ நாடுகள் கொண்ட பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும். உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பை அழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா குறிப்பிடும் இந்தப் படை நடவடிக்கையை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் சாடியுள்ளார்.

உக்ரைன் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்த இந்தத் தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. ரஷ்யா, சிரியா, வட கொரியா, எரிட்ரியா மற்றும் பெலாரஸ் இதற்கு எதிராக வாக்களித்ததோடு சீனா உட்பட 38 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.

இதில் கடந்த மார்ச் 2 இடம்பெற்ற ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை விட பொதுச் சபையில் அதிக ஆதரவை பெற உக்ரைன் மற்றும் அதன் கூட்டணி முயற்சி மேற்கொண்டது. எனினும் ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவும் அதனை வாபஸ் பெறவும் வலியுறுத்தும் முந்தைய தீர்மானத்திற்கு 141 ஆதரவு வாக்குகள் கிடைத்ததோடு எதிராக ஐந்து வாக்குகளும் சீனா உட்பட 35 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தும் இருந்தன. இந்தத் தீர்மானம் பெரு வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிட்ட ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் லின்டா தோமஸ் கிரீன்பீல்ட், ‘141 மற்றும் 140 க்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை’ என்றார்.    நன்றி தினகரன் 



வட கொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றி

வட கொரியா, அதிகச் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றைப் பாய்ச்சியுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர். அந்த சோதனை வெற்றி அளித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அந்த ஏவுகணைச் சோதனையை வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டின் அதிகாரபூர்வச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதுவரை பாய்ச்சப்பட்ட மிகச் சக்திவாய்ந்த ஏவுகணை அது என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் மோதுவதற்கும் அணுவாயுதப் போர் ஏற்படக்கூடிய சூழலுக்கும் தயாராகும் வகையில் அந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாகத் கிம் கூறினார். வட கொரியாவின் தூண்டுதல்களுக்கு உறுதியான பதிலடிகளைக் கொடுக்க அமெரிக்காவும் தென் கொரியாவும் இணங்கியுள்ளன.

பிரசல்ஸில் ஜி7 உச்சநிலைச் சந்திப்புக்கு இடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் கலந்துபேசினார்.

ஏவுகணைச் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்த இரு தலைவர்களும் அதற்கு வட கொரியாவைப் பொறுப்பேற்கச் செய்யவும் ஒப்புக்கொண்டனர்.   நன்றி தினகரன் 




ரஷ்யாவை தடுப்பதில் தாமதித்ததாக ஐரோப்பா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா மீது புதிய தடைகள் பற்றி அறிவிப்பு

ரஷ்யாவை தடுப்பதற்கு தாமதித்ததாக மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய கௌன்சில் மாநாட்டில் உரையாற்றிய அவர் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டில் ரஷ்யா செய்திருக்கும் அழிவுகள் மற்றும் சேதங்கள் பற்றி விளக்கிய அவர், ஐரோப்பா ஒன்றுபட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது பாணியில் உரையாற்றிய அவர், ரஷ்யாவை தடுப்பதில் அதிகம் தாமதித்து செயற்பட்டதாக ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்தார்.

‘நீங்கள் தடைகளை கொண்டுவந்தீர்கள். அதற்காக நாம் கடைமைப்பட்டுள்ளோம். அது கடுமையான நடவடிக்கை. ஆனால், அது சற்று தாமதமாக இருந்தது. இதனால் வாய்ப்பு ஒன்று இருந்தது’ என்று கூறிய அவர், தடுக்கும் வகையிலான தடைகளாக இருந்தால், ரஷ்யா போருக்குச் சென்றிருக்காது என்று சுட்டிக்காட்டினார்.

இதில் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயை சுட்டிக்காட்டிய அவர், அதனை ஆரம்பத்திலேயே முடக்கி இருந்தால், ‘ரஷ்யா எரிவாயு நெருக்கடியை உருவாக்கி இருக்காது’ என்றார்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி அண்டை நாடுகளிடம் அவர் கோரினார். ‘நான் இதனை உங்களிடம் கேட்கிறேன். தாமதிக்க வேண்டாம்’ என்றார். அண்மைய வாரங்களில் செலென்ஸ்கி பல உலக நாடுகளின் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இதில் தமக்கு போதுமாக உதவத் தவறிய மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதற்கு அவர் தயங்கவில்லை.

பிரசல்சில் நடந்த மாநாடுகளில் ரஷ்யாவின் படையெடுப்பை காட்டுமிராண்டித் தனமானது என்று கண்டனம் வெளியிட்ட மேற்கத்திய தலைவர்கள், உக்ரைனுக்கு புதிய இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க உறுதி அளித்தனர். இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளன.

எனினும் ஜப்பான் நேற்று ரஷ்யா மீதான தடையை மேலும் இறுக்கியதோடு அந்த நாட்டின் சாதகமான வர்த்தக அந்தஸ்த்தை அகற்றியது. மறுபுறம் ரஷ்யாவின் கூட்டாளியான பிரசல்ஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதேபோன்று 22 ரஷ்ய தனி நபர்கள் மீது அவுஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் 3.6 மில்லியன் உக்ரைனியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு பாதிக்கும் அதிகமான உக்ரைனிய சிறுவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்தப் போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை தாண்டியபோதும் ரஷ்யாவால் உக்ரைனின் எந்த பிரதான நகரங்களையும் கைப்பற்ற முடியாமல்போயுள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா அதன் இராணுவத் திறனை அழிப்பதே இலக்கு என்று தெரிவித்தது.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்கள் இடைவிடாது இடம்பெற்று வருகின்றபோதும் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள அதன் கவச வாகனங்கள் கடந்த ஒரு வாரமாக நகராது உள்ளது.

ரஷ்ய படைகளால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 



132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து

132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து-Chinese Flight Carrying 133 People has Crashed

132 பேருடன் பயணித்த சீன Eastern Airlines போயிங் 737 விமானம், குவாங்சி மாகாணத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீன ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

விமானத்தில் 123 பயணிகள் மற்றும் ஒன்பது விமானப் பணியாளர்கள் இருந்ததாக சீனாவின் சிவில் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள Wuzhou எனும் கிராமப்புற பகுதியிலுள்ள மலைப்பகுதியில் குறித்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான உயிரிழப்புகள் உள்ளிட்ட சேத விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அங்கு மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உள்ளுர் நேரப்படி நேற்று 13.11க்கு புறப்பட்டிருக்கும் இந்த விமானம் மாலை 15.05க்கும் குவாங்சுவில் தரையிறங்க திட்டமிட்டிருந்தது. விமானம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் பறந்து தனது பயண இலக்கை நெருங்கி இருந்ததாக விமானக் கண்காணிப்புத் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால், அது விமான நிலையத்துடனான தொடர்பை இழந்ததால், அவசர செய்தி அனுப்பப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளான தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளாகி, சீன விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயிங் 737–800 ஜெட் நகர விமானம் வுசுவில் உள்ள மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி அங்கிருக்கும் காட்டுப் பகுதியில் வெடிப்புடன் தீ பற்றி இருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.    நன்றி தினகரன் 





No comments: