உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியராக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளார்

 Sunday, March 27, 2022 - 6:00am

130ஆவது பிறந்ததினம் இன்று

முத்தமிழ் வித்தகரும், உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892_ -ஜூலை 19, 1947) கிழக்கின் காரைதீவில் பிறந்தார். சுவாமியின் தாயார் பெயர் கண்ணம்மை. தந்தையார் சாமித்தம்பி. அவருக்கு இயற்பெயராக தம்பிப்பிள்ளை என்ற நாமத்தை சூட்டினர். எனினும் பின்னர் மயில்வாகனன் என்று நாமம் இட்டனர்.

ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் சோதனையில் சித்தியடைந்த பின்னர் அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் தோன்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பீ.எல்.சி தேர்வில் தோற்றி சித்தியடைந்தார்.

அதன் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 1925 ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர், 1928 இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர் பாலபண்டிதர் பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.

ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார் மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன.

இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர்இ இராமகிருஷ்ண மிஷன் நடத்திய 'ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும் 'வேதாந்தகேசரி' என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள் 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது.அதுவரை பண்டிதர் மயில்வாகன் என்றழைக்கப்பட்ட அவர் சுவாமி விபுலாநந்தரானார். அதன் பின்னர் அவர் இலங்கை திரும்பி இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

26.11.1925 அன்று சுவாமி விபுலானந்தர் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது. 15.04.1929 அன்று சமய அனுட்டானப்படி சுவாமி விபுலானந்தர் பாடசாலையை ஆரம்பித்தார்.

1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். 1934 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது. 1943 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார்.

யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு (19.07.1947)சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார்..

அவரது உடல் அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்) - நன்றி தினகரன் 

No comments: