ஸ்வீட் சிக்ஸ்டி 7 -மனிதன் மாறவில்லை - - - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் சம காலத்தில் பல வெற்றி படங்களை தயாரித்தவர்கள் விஜயா புரொடக்ஷன்ஸ் அதிபர்களாக நாகிரெட்டி - சக்கரபாணி.ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோவான வாஹினி ஸ்டுடியோவின் அதிபர்களாக இவர்கள் அம்புலிமாமா மாத இதழை 16 மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டார்கள்!அது மட்டுமன்றி பொம்மை,மங்கை ஆகிய மாத இதழ்களையும் பிரசுரம் செய்து அவை வாசகர்களின் வரவேற்பை பெற்றன. இவர்கள் சென்னையில் அமைத்த விஜயா மருத்துவமனை பிரபலமாக விளங்கியது.


இவ்வாறு பல துறைகளில் சாதனை புரிந்த இவர்கள் இருவரும் ஜெமினி கணேசன் சாவித்ரி நடிப்பில் மிஸ்ஸியம்மா,மாயாபசார்,கடன் வாங்கி கல்யாணம்,குணசுந்தரி ஆகிய படங்களை தயாரித்து அவை ரசிகர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டன.இந்த வரிசையில் 1962ல் அவர்கள் தயாரித்த படம்தான் மனிதன் மாறவில்லை.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை குதூகலப் படுத்தும் விதத்தில் படங்களை தயாரிக்கும் இவர்கள் மனிதன் மாறவில்லை படத்தையும் அவ்வாறே உருவாக்கினார்கள்.

ஜெமினி கணேசன்,நாகேஸ்வரராவ்,சாவித்ரி,கே சாரங்கபாணி,ஜமுனா,சுந்தரிபாய்,எஸ் வீ ரங்காராவ்,சி டீ ராஜகாந்தம்,டீ கே ராமசந்திரன்,எல் விஜயலஷ்மி,ஸ்ரீநாத் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் ,செருக்களத்தூர் சாமா என்று பலரும் நடித்த இப் படம் தெலுங்கிலும் சம காலத்தில் தயாரானது. ஜெமினிக்கு பதில் என் டீ ராமா ராவ் நடித்தார்.

சித்தியின்கொடுமைக்கு ஆளாகும் லட்சுமி பொறுமையின் சிகரமாக விளங்குகிறாள்.ஆனால் சித்தியோ தன் மகள் சரோஜாவை செல்லமாக வளர்க்கிறாள்.அவளை எப்படியாவது தன் மகனுக்கு கட்டிக்க கொடுக்க வேண்டும் என்று அவளின் தாய் மாமன் குப்புசாமி முயற்சி செய்து வரும் திருமண வரங்களை எல்லாம் குழப்புகிறான்.தனவந்தரான சிதம்பரனார் தன் இரு புதல்வர்களான பஞ்சு,ராஜா இருவரையும் லக்ஷ்மிக்கும்,சரோஜாவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.ஆனால் அதற்கு முன் சரோஜாவையும் அவள் தாயான சுப்பம்மாவையும் திருத்த விரும்புகிறார். அதற்கமைய பஞ்சு, இருவரும் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சுப்பம்மா வீட்டிற்கு சென்று தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்.

இப்படி அமைந்த கதை முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டிருந்தது.

படத்தின் கதை வசனத்தை தஞ்சை ராமாயாதாஸ் எழுதியிருந்தார்.காட்சிக்கு காட்சி அவர் எழுதிய நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தன.அவற்றை மேலும் மெருகு படுத்துவது போல் ஜெமினி நடித்திருந்தார்!சீரியசானப் படங்களில் நடிக்கும் ஜெமினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக அமைந்தது.


சாவித்ரி அமைதியான முறையில் தன் பாத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தார்.ஜமுனாவுக்கு துடுக்கான வேடம்.அவருக்கு ஜோடி நாகேஸ்வரராவ்.சாரங்கபாணியின் வசனம் பேசும் பாணியே அலாதியானது.இதிலும் அது வெளிப்பட்டது.சுந்தரிபாய்க்கு வழக்கமான அடங்காபிடாரி பாத்திரம்.அவரை சுப்பக்கா சுப்பக்கா என்று ஜெமினி கூப்பிடுவது தனி ஸ்டைல்.இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் நாகேஷ் கவனத்தைக் கவர தவறவில்லை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு நாகேஷுக்கு 500 ருபாய் பேசப்பட்டிருந்தது.அவரின் நடிப்பை ரசித்த விஜயா அதிபர் சக்கரபாணி தெலுங்கு பதிப்பிலும் அவரை நடிக்க வைத்து ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கினார்.இந்த ஆயிரம் ரூபாயை கொண்டு தான் ,

ஒரு பட்டுப் புடவை,ஒரு தாலி,பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கி தான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார் நாகேஷ்.

படத்திற்கு இசையமைத்தவர் பிரபல பின்னணிப் பாடகர் கண்டசாலா.அவரின் இசையில் உருவான இன்பமான இரவிதுவே ,கண்மணியே உன் இதய வீணையின்,காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்,தென்றல் பாடவும் தேன் மலராடவும்,போடு போடு டேக்கா போடு ஆகிய பாடல்கள் ரசிகர்களை வசீகரித்தது.ஏ எல் ராகவன்,சீர்காழி கோவிந்தராஜன்,உதயபானு,பி சுசிலா, பி லீலாவின் குரலில் ஒலித்த பாடல்களை தஞ்சை ராமாயாதாஸ் இயற்றியிருந்தார்.குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும் பாடலை கண்ணதாசன் புனைந்தார்.

மார்கஸ் பாட்லே ஒளிப்பதிவு செய்த மனிதன் மாறவில்லை படத்தை நேர்த்தியாக இயக்கியிருந்தார் தயாரிப்பாளர்களில் ஒருவரான சக்ரபாணி .இதே படம் குண்டம்மா கதா என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது

ஜெமினி,சாவித்ரி இருவரது ஆரம்ப கால திரை உலக வெற்றிக்கு அடித்தளம் அமைத்த நிறுவனங்களில் விஜயா ப்ரொடக்ஷன்ஸ்சும் ஒன்று என்றால் மிகையில்லை.அந்த வகையில் இந்த நிறுவனத்துக்காக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம் மனிதன் மாறவில்லை!




No comments: