உலகச் செய்திகள்

அமைதிக்கான நோபல் விருது வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரேலுக்கு அரிதான விஜயம்

 ரஷ்யா மீதான தடைகள் பற்றி பைடனை எச்சரித்தார் புடின்

நிர்க்கதியான அகதிகளுக்கு இந்தோனேசியா அடைக்கலம்

கோலனில் புதிய குடியேற்றம்: இஸ்ரேலிய அரசு அங்கீகாரம்


அமைதிக்கான நோபல் விருது வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்காவில் நிறவெறிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உதவியவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 ஆவது வயதில் நேற்று காலமானார்.

“மிகச்சிறந்த தென்னாபிரிக்கர்களின் தலைமுறை ஒன்றுக்கு எமது நாடு பிரியாவிடை கொடுக்கும் துயரத்தின் மற்றொரு அத்தியாயம்” என்று அவரது மறைவு பற்றி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவை பெற உதவியவராக பேராயர் டுட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1948 தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்காவில் இருந்த பெரும்பான்மை கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு மற்றும் கொள்கைகளை செயற்படுத்திய சிறுபான்மை வெள்ளையின ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர செயற்பட்டவர்களில் ஒருவராக டுட்டு உள்ளார். அவர் பாகுப்பாட்டுக்கு எதிராக போராடிய தலைவரான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவராவார்.

பாகுபாட்டு ஆட்சி முறையை ஓழித்த போராட்டத்தில் வகித்த பங்களிப்புக்காக அவருக்கு 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவின் பாகுபாட்டு யுகத்தின் கடைசி ஜனாதிபதி எப்.டபிள்யு. டி கிளர்ன் தனது 85 வயதில் மரணித்து சில வாரங்களிலேயே டுட்டுவின் மரணம் இடம்பெற்றுள்ளது.

டுட்டு “ஆன்மீகத் தலைவர் என்ற அடையாளமாகவும், இனவெறி பாகுபாட்டு எதிர்ப்பு செயற்பாட்டாளர் மற்றும் சர்வதேச மனித உரிமை பிரசாரகராகவும் இருந்தார்” என்றும் ஜனாதிபதி ரமபோசா தெரிவித்துள்ளார்.

கேப்டவுனின் முதலாவது கறுப்பின பேராயராக நியமிக்கப்பட்ட டுட்டு, தனது உயர் அந்தஸ்தை பயன்படுத்தி, கறுப்பின மக்கள் தனது சொந்தநாட்டில் ஒடுக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இனரீதியாகப் பிளவுற்றுப்போன நாட்டில் சமரசம் ஏற்படுத்த அவர் பாடுபட்டார்.   நன்றி தினகரன் 

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

ஐந்து வருட காலத்தில் பெய்த பெருமழை!

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய கனமழை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. ஐந்து மணி நேரத்தில் 20 செ.மீ (200 மி.மீ) மழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சுரங்கப் பாதைகளும், வீதிகளும் மூடப்பட்டன. வீதிகளில் ஓடிய மழை நீரால் போக்குவரத்து முடங்கியது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எதிர்பாராத நிலையில் திடீரெனப் பெய்த கடும் மழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை இல்லை என்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர். இந்நிலையில், தமிழக கடற்கரையோரம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் இரவு வரை கனமழை பெய்தது. இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.

கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான வீதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லுார், தரமணி, வேளச்சேரி என, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் ஓடியது.

கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, நேற்றுமுன்தினம் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு அலுவலகம், செய்தியாளர்கள் அறை, சட்டசபை நிருபர்கள் அறைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீதியில் தண்ணீர் தேங்கியதால், வாகன சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடி சென்றனர். பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவற்றை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மணி நேர மழையில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது.   நன்றி தினகரன் 

பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரேலுக்கு அரிதான விஜயம்

இஸ்ரேலுக்கு அரிதான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸை சந்தித்து பேசியுள்ளார்.

“இருவரும் இந்த சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் சிவில் விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய இஸ்ரேலில் உள்ள கான்ட்ஸின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சந்திப்பின்போது இணக்கம் எட்டப்பட்ட பொருளாதார மற்றும் சிவில் விவகாரங்களில் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புவதாக அப்பாஸிடம் கான்ட்ஸ் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் பிற்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரில் உள்ள பலஸ்தீன அதிகாரசபையின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கான்ட்ஸ், அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். பல ஆண்டுகளில் இடம்பெறும் உயர்மட்ட சந்திப்பாக அது இருந்தது.   நன்றி தினகரன் 

ரஷ்யா மீதான தடைகள் பற்றி பைடனை எச்சரித்தார் புடின்

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.

இருநாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த தொலைபேசி அழைப்பில், புடின், பைடனை மேற்கூறியபடி எச்சரித்தார்.

இதில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பாதுகாப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையில் மொஸ்கோ உறுதியான முடிவுகளை எதிர்பார்ப்பதாக புடின் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறினார்.

அதே அழைப்பில் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார் ஜோ பைடன்.

உக்ரைனின் கிழக்கு எல்லையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய தரப்போ தன் நாட்டு எல்லைக்குள் தன் துருப்புகளை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ள தங்களுக்கு சுதந்திரமுள்ளது என்கிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுக்க எந்தவித திட்டமும் இல்லை என்றும் மறுத்துவருகிறது.

உலகின் இரு முக்கிய நாட்டு ஜனாதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதற்றம் புதியதல்ல. 2014 உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ஆரம்பிக்கப்பட்ட பிரிவினைவாத போராட்டத்தில் சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டதோடு அங்கு அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன.   நன்றி தினகரன் 

உக்ரைனுக்குள் ரஷ்யா மீண்டும் துருப்புகளை அனுப்பினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் எச்சரித்துள்ளன.

நிர்க்கதியான அகதிகளுக்கு இந்தோனேசியா அடைக்கலம்

ரொஹிங்கிய அகதிகளுடன் நிர்க்கதியான படகு ஒன்றுக்கு கரைக்கு வர அனுமதிப்பதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. இந்த படகுக்கு அனுமதி அளிக்கும்படி உரிமைக் குழுக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்பகுதியில் இருக்கும் இந்த படகில் உள்ள அகதிகளுக்கு அச்சேவின் உள்ளூர் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உணவு மற்றும் மருந்துகளை வழங்கியபோதும் அவர்களது தஞ்சக்கோரிக்கையை நிராகரித்திருந்தனர்.

“அச்சே, பிரியுன் மாவட்டத்திற்கு அருகில் தற்போது மிதந்து வரும் படகில் இருக்கும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு மனிதாபிமானத்தின் பெயரால் இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது” என்று இந்தோனேசிய தலைமை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கடந்த புதனன்று தெரிவித்தார்.

“படகில் இருக்கும் அகதிகளின் அவசர நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த படகில் சுமார் 120 அகதிகள் இருப்பதோடு பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

நிர்க்கதியான இந்தப் படகு சிலநாட்களுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக இரு மீனவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.   நன்றி தினகரன் 
கோலனில் புதிய குடியேற்றம்: இஸ்ரேலிய அரசு அங்கீகாரம்

சிரியாவிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் யூத குடியேறிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் வகையில் 317 மில்லியன் டொலர் திட்டத்திற்கு இஸ்ரேலிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி ஐந்து ஆண்டு காலத்திற்குள் 7,300 குடியேற்ற வீடுகளை கட்டும் திட்டத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை ஆதரவு வழங்கியுள்ளது.

1967 ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட இந்தப் பகுதியில் சுமார் 23,000 புதிய யூத குடியேற்றவாசிகளை கவரும் வகையில் வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களுக்கு 1 பில்லியன் இஸ்ரேலிய ஷெகல்ஸ் செலவிடப்படவுள்ளது.

“கோலன் குன்றின் மக்கள் தொகையை இரட்டிப்பாக்குவதே எமது இலக்கு” என்று பிரதமர் நப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இந்த நிலப்பகுதியை கைப்பற்றும்போது அங்கு வாழ்ந்த சுமார் 23,000 த்ரூஸ் மக்களுடன் சுமார் 25,000 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் கோலன் குன்றில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேல் இந்தப் பகுதியை 1981 டிசம்பர் 14 ஆம் திகதி தனது ஆட்புலத்திற்குள் இணைத்தபோதும் அதனை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.   நன்றி தினகரன் 


No comments: