வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் மக்களும், அரசுகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவதானி


“ உனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு  “ என்ற ஒரு பாடல் வரியை எமது மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய காலம்தான் கடந்த இரண்டு வருடகாலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

2020 ஆண்டு தொடக்கத்திலேயே  கொரோனோ பெருந்தொற்று முழு உலகையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கியவுடன், அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியான கிருமியை சீனாதான் பரப்பிவிட்டது என்று மேலைத்தேய அரசுகள், அதிலும் சீனாவை சகிக்க முடியாத நாட்டின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் உட்பட சிலர் கருத்து தெரிவித்தனர்.

உலக நாடுகள், அந்தக்கிருமிக்கு  கொவிட் – கொரோனோ என்று


பெயர் சூட்டிக்கொண்டிருந்தபோது, ட்ரம்ப், அதனை சீன வைரஸ் என்றே பகிரங்கமாகச் சொன்னார்.

சில மாதங்களில் அவரும் தேர்தலில் தோல்வியுற்று வீட்டுக்குச் சென்றார்.

இந்தப் பெருந்தொற்றிலிருந்த மக்கள் முற்றாக  விடுபட வேண்டுமானால், வீடுகளில் முடங்கியிருக்கவேண்டும் என்று பல உலகநாடுகள் அறிவுறுத்தின.

 மாநில எல்லைகள் மூடப்பட்டன.  வெளிநாட்டுப்  பயணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஏற்றுமதி – இறக்குமதி பொருளாதாரமும் வீழ்ச்சிகண்டது.

தடுப்பூசிகள் பல்வேறு பெயர்களில் அறிமுகமாகின.  ஒன்று – இரண்டு – மூன்று – என அதன் எண்ணிக்கையும் கூடியது. நான்காவது வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இறந்தவர் எண்ணிக்கை – தொற்றாளர் எண்ணிக்கை பற்றி  ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டன.

இத்தனை அமளிகளுக்கும் மத்தியில்  இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியான கிருமி திரிபடைந்து… திரிபடைந்து புதுப்புதுப்பெயர்களுடன் உலாவிக்கொண்டிருக்கிறது.

சாதாரண இருமல், காய்ச்சல், தடிமனையும் புறம் ஒதுக்காமல் உடனடி பரிசோதனைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. மருத்துவமனைகள் தொற்றாளர்களினால் நிரம்பின.


எனினும் 24 மாதங்கள் கடந்த பின்னரும் எந்தவொரு நாடாவது இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக விடுபட்டிருக்கிறதா..? என்ற கேள்விக்குத்தான் இன்னமும் தெளிவான – சரியான பதில் இல்லை.

எங்கள் இலங்கை தாயகத்தில்  இந்த பெருந்தொற்று அபாயத்துடன் மற்றும் ஒரு நேரடி ஆபத்தும் சமகாலத்தில் வைரஸாக தொற்றியிருக்கிறது.

ஆனால், இது கண்ணுக்குத் தெரிந்த எதிரி. இவ்வளவு காலமும் வீட்டுக்கு வீடு சமையலறைகளில்  அமைதியாக அமர்ந்திருந்த எதிரி.

எரிவாயு சிலிண்டர்களை கண்டாலே காத தூரம் ஓடவேண்டிய நிலைக்கு மக்கள் வந்திருப்பதுடன்,  பழைய நடைமுறையில் மூன்று செங்கல் வைத்து விறகடுப்பெரித்து சமைக்கவேண்டிய காலம் மீண்டும் கனிந்திருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கையில் நேர்ந்திருக்கும் சிக்கல்களினால், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் படிப்படியாக  எகிறிக்கொண்டிருக்கின்றன.

பொது மக்கள்  நிலமுள்ள வீடுகளில் காய்கறித்தோட்டம் தொடங்கவேண்டும் என்று ஒரு சிரேஷ்ட அமைச்சர் பந்துல குணவர்தன சொல்கிறார்.

தலைநகரத்தில் அவ்வாறு நிலமற்று தொடர் மாடிக்குடியிருப்புகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் என்ன செய்யவேண்டும்..?  என்று அவர் அறிவுறுத்தவில்லை.  அந்த மாடிக்குடியிருப்புகளில் இருக்கும் பூந்தொட்டிகள், பூச்சாடிகளிலிருக்கும் பூ மரங்களை அகற்றிவிட்டு,  கத்தரி, தக்காளி , வெங்காயம், மிளகாய் பயிரிட வேண்டி வருமோ…?

 “ காய்கறி பயிரிட வசதியற்றவர்கள் வீடுகளிலேயே எவ்வாறு மரணிக்கலாம் என்பதையும் சொல்லிக்கொடுங்கள் “  என்கிறார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன.

இத்தகைய அவலமான காலப்பகுதியில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.

அரசின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்களினதும், மதபீடங்களினதும் புத்தாண்டு நற்செய்திகள் ஆக்கிரமித்துவிட்டன.

இது வழக்கமான நடைமுறைதான். 

கடந்த ஆண்டு மலரும்வேளையில் சொன்னது போன்று ஒரு சில வார்த்தைகளை மாத்திரம் மாற்றி,  வாழ்த்து தெரிவிக்கலாம்.   சொல்பவர்களுக்கும் கேட்டு எழுதுபவர்களுக்கும் எந்தச் சிரமமும் இல்லை.

ஆனால், சிரமங்களை எதிர்கொள்ளவிருப்பவர்கள் மக்கள்தான் !

மலர்ந்திருக்கும் புத்தாண்டிலாவது இந்த பெருந்தொற்று முற்றாக மறைந்துவிடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பிரஜையின் வேண்டுதலாகவிருக்கும்.

2020 – 2021 ஆண்டுகளில்  அனுபவித்த இன்னல்கள் மீண்டும்  தொடரக்கூடாது என்பதாகத்தான் பிரார்த்தனைகளாக அமையும்.

இது இவ்விதமிருக்க, நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு தாமதமின்றி சரவதேச நாணய நிதியத்தை நாடுமாறு அரசுக்கு அறிவுறுத்தல் விடுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியார்.

நாடு மோசமான சூழ்நிலைக்குள்  தள்ளப்பட்டுள்ளது. அதனால் இவ்வரும் ஏப்ரில்மாதம் ஆட்சி மாற்றம் வரக்கூடும் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷவே  ஆரூடம் கூறுகிறார்.

சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கடனுதவி கிடைக்கவிருக்கிறது என்று சொல்கிறார் திறைசேரி செயலாளர் ஆட்டிகல.

 “ தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கிறது   என்று ஆளும் பொஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் யாவும் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்டம் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட பின்னரே வெளியாகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசியல் தலைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போது,  உள்நாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது வெறும் அறிவுறுத்தல் மட்டுமல்ல. அச்சுறுத்தலும்தான்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று,  காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதற்கு பண மோசடிக்கும்பல்கள் புறப்படலாம்.

  விலைவாசி உயர்வினால் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நேர்வதற்கு பதுக்கல் முக்கிய காரணமாக விளங்கும்.

 “ ஒரு புறம் வேடன் -  ஒரு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்  “ என்பது போன்று மக்கள்தான் இரண்டு தரப்புக்கும்  மத்தியில் மட்டுமல்ல, நான்கு தரப்புகளுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மலர்ந்துள்ள புத்தாண்டு காலத்தில் ஆட்சியாளர்கள்  ஊடகங்களில் விடுக்கும் வாழ்த்துச்செய்திகளுடன் மேற் குறிப்பிட்ட செய்திகளையும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ்வளவு சிக்கல்களை நாடு எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரர்,  முழு நாட்டையும் இராணுவ மயமாக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அன்பு மார்க்கத்தால் மக்களை வழிநடத்தவேண்டும் எனச்சொல்லவேண்டிய பௌத்த தர்மபோதனையை உபதேசிக்க வேண்டிய ஒரு துறவி,  ஆயுத மார்க்கத்தால்  வழிநடத்தவேண்டும் என்று சொல்லியிருப்பதின்  உள்நோக்கம் என்ன..?

நாடு பொருளாதாரத்தில் அதளபாதாளத்தை நோக்கிச்செல்லும்போது,  இராணுவத்தை கொண்டாவது அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்று  சமிக்ஞை விடுக்கின்றாரா..?

இந்தப்பதிவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் முதல், எங்கள் தேசத்து பௌத்த துறவி வரையில் சொன்ன கருத்துக்களை சுருக்கமாக இங்கே சொன்னோம்.

எமது மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள் ..? என்பதை பிறந்துள்ள 2022 புதிய ஆண்டில் பொறுத்திருந்து பார்ப்போம்.

---0---

No comments: