வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு
முன்னாள் DIG அரசரட்ணம் நேற்று காலமானார்
இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
IMF உதவியை நாடாதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கேள்வி
ஜோசப் பரராஜசிங்கத்தின்16ஆவது ஆண்டு நினைவுதினம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
மேலும், எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாக தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பெறுமதிமிக்க எமது உயிர்களை தொலைத்துவிட்டு நாம் வீதியாக வீதியாக போராடிக்கொண்டு துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம். வருடங்கள் கடந்துசெல்கின்றதே தவிர எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'எங்கே எங்கே உறவுகள் எங்கே', 'ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம்', 'பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும், தமிழர்களையும் ஏமாற்றாதே', 'இனப்படு கொலையாளியை காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழின துரோகிகள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஓமந்தை விஷேட நிருபர் - நன்றி தினகரன்
முன்னாள் DIG அரசரட்ணம் நேற்று காலமானார்
பொலிஸ் போக்குவரத்துத்துறை பணிப்பாளராகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும் கடமையாற்றிய கே.அரசரட்ணம் நேற்று தன் 65ஆவது வயதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
சமீபகாலமாக கடுமையாக சுகவீனமுற்றிருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போதே காலமானார்.
இரண்டு மகன்மாருக்கும் ஒரு மகளுக்கும் தந்தையான அன்னார் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மருதானை சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த மனிதநேய பொலிஸ் அதிகாரியாக அறியப்பட்டிருந்தார். பொலிஸ் துறையில் மட்டுமன்றி தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் புகழ்பெற்ற பொலிஸ் அதிகாரியாக இவர் திகழ்ந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகைச்சுவை மன்றத்திற்கு தலைமை தாங்கிய இவர் நகைச்சுவையாகப் பேச வல்லவர். நன்றி தினகரன்
இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள்
இலங்கையில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான நிலைமைகளை கருத்திற்கொண்டு சாதகமான பங்களிப்பை வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ள, சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நன்றி தினகரன்
IMF உதவியை நாடாதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கேள்வி
அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடாதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். அரச நிர்வாகத்தின் போக்கை அவதானித்தே சர்வதேச அமைப்புகள் உதவ முன்வருவதாகவும் அவை எமது நாட்டுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிட்டகோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், வரலாற்றில் துன்பகரமான காலகட்டத்தில் இருக்கிறோம். பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் அனைத்தையும் அரசாங்கம் குழப்பிக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம் என அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் 5 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த போது சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றினேன். எமக்கு பாரதூரமான நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. அவ்வாறான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அவர்களை அழைத்து பேசி அதனை மாற்றியிருக்கிறேன். அரச நிர்வாகத்தை பார்த்தே வெளிநாட்டு உதவி கிடைக்கிறது. உலக வங்கி மற்றும் ஐ.நாவிற்கு ஊடாகத்தான் உதவிகள் கிடைக்கும். நாட்டில் ஜனநாயகம் மனித உரிமை.நீதிமன்றம்,பொலிஸ் சுதந்திரம் என்பவற்றை பார்த்து உதவி வழங்கப்படுகிறது. தகவல் அறியும் சட்டம் போன்றவை எமக்கு ஆதரவு கிடைக்கக் கூடிய சில விடயங்களாக இருந்தன. சர்வதேச நிறுவனங்கள் இப்பொழுதும் எமது நாட்டுக்கு உதவ தயாராக உள்ளன என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.(பா) நன்றி தினகரன்
ஜோசப் பரராஜசிங்கத்தின்16ஆவது ஆண்டு நினைவுதினம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (25) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படப் பதாதையைத் தாங்கிய ஊர்வலம் மெழுகுதிரி ஏந்தி காந்திப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி புனித மரியாள் பேராலயம் வரை அமைதியாகச் சென்றடைந்து பிரார்த்தனையின் பின்பு சாள்ஸ் மண்டபத்தை சென்றடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணின் தலைவர் ஆர்.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலையை மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன் மற்றும் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோண் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து கலந்து கொண்டோரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு விசேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment