அஞ்சலிக்குறிப்பு : முன்மாதிரியாக இயங்கிய பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் விடைபெற்றார் முருகபூபதி


காவல்துறை உங்கள் நண்பன் – என்ற வாசகம்  எமது தமிழ் சமூகத்தில் பொதுவானதாக இருந்தபோதிலும்,  இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளிலும் குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகளிலும் நடைமுறையில் அவ்வாறில்லை என்பதை நாம் ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.

பொலிஸார் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தும்  சித்திரவதை குறித்து ஜெய்பீம் திரைப்படத்தில்  மட்டுமல்ல,  வேறும் பல செய்தி ஆவணப்படங்களிலும் தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய சினிமா அது எந்த மொழியில் வெளிவந்தாலும், பொலிஸாரை கோமாளிகளாகவும், வில்லன்களாகவும்,  கற்பனை செய்தும் பார்க்க முடியாத நேர்மையாளர்களாகவும் சித்திரித்து யதார்த்தத்திற்கு புறம்பான திரைக் கதைகளை வழங்கிவருகின்றது.

கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கிழக்கிலங்கை திருக்கோவில்


பொலிஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கி வேட்டுச்சம்பவத்தில்  ஒரு பொலிஸ் சார்ஜன்டினால் கொல்லப்பட்ட – படுகாயமுற்ற பொலிஸார் பற்றிய செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தப்பின்னணிகளுடன்தான் கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் மறைந்த பொலிஸ் அத்தியட்சர் கே. அரசரத்தினம் அவர்கள் பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.

அவர் குறித்த இந்த அஞ்சலிப்பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட  “ காவல்துறை உங்கள் நண்பன் “ என்ற வாசகத்திற்கு முற்றிலும் பொருத்தமானவராக விளங்கியவர்தான் அரசரத்தினம் அவர்கள்.

எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடன் நடமாடிய அவரது திடீர் மறைவுச்செய்தியை தொலைவிலிருந்து அறிந்தபோது  கலங்கிவிட்டேன்.

2011 ஜனவரியில் நாம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோதுதான் பொலிஸ் அத்தியட்சர்   அரசரட்ணம் அவர்கள்  எனக்கு அறிமுகமானார்.

அவர் அப்போது கடமையிலிருந்தமையால் பொலிஸ் சீருடையுடனேயே  வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் மாநாடு நடைபெற்ற நான்கு நாட்களும் அங்கே பொலிஸ் பாதுகாப்பினையும் அவர் வழங்கினார்.

தமிழ்ச்சங்க வளாகப் பகுதியில்  பொலிஸார் காலை முதல் இரவு வரையில் மாறி மாறி கடமையிலிருந்தனர். இத்தனைக்கும் அந்த மாநாட்டுக்கு எந்தவொரு அரசியல் தலைவர்களும் வரவில்லை.


மண்டபத்தில் நிறைந்திருந்தவர்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊடகவியலாளர்களும்தான்.

காலிவீதியிலிருந்து உருத்திரா மாவத்தையின் அந்தத்தில் அமைந்திருந்த தமிழ்ச்சங்க கட்டிடம் வரையில் நடந்த ஊர்வலத்திலும் அத்தியட்சர் சிரித்த முகத்துடன் நடந்து வந்தார். 

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் பெரும்பாலான  நிகழ்ச்சிகளில் இவரது பிரசன்னம் தவறாது.  இறுதியாக 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடந்த எனது இலங்கையில் பாரதி நூலின் வெளியீட்டு அரங்கில்தான் மீண்டும் சந்தித்து உரையாடினேன்.

அந்த நிகழ்வு இலக்கிய நண்பர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடந்தது.  யாழ். காலைக்கதிரில் 40 வாரங்கள் வெளியான இலங்கையில் பாரதி தொடர்,  நூலுருப்பெற்று வெளியான அத்தருணம், காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன், ஞானம் இதழ் ஆசிரியர்  தி. ஞானசேகரன்,  எழுத்தாளர் கௌரி அனந்தன், இலக்கிய ஆர்வலர்கள்  செல்விகள் பாமினி செல்லத்துரை வானதி ஆறுமுகம் ஆகியோர்  உரையாற்றினர். இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமரும்  கலந்து சிறப்பித்தார்.

பொலிஸ் அத்தியட்சர்  அரசரத்தினம்  அவர்களின் முகவரி


தெரியாதமையினால், என்னால் அவருக்கு அழைப்பு அனுப்ப முடியாதுபோய்விட்டது.  

எனினும் செய்தி அறிந்து அங்கே விரைந்து வந்தார். வரும்போது எனக்குப் போர்த்துவதற்கு பொன்னாடையும் எடுத்துவந்து ஆச்சரியப்படுத்தினார்.

 “ சேர்… மன்னிக்கவும். எனக்குப் போர்த்தவேண்டாம். இந்த அரங்கிலிருக்கும் மகாகவி பாரதியாரின் சிலைக்குப் போர்த்துங்கள்  “ என்றேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அவ்வாறே செய்தார். நூலின் பிரதியும் பெற்றுக்கொண்டார்.

அவர் வீதிப் போக்குவரத்து துறை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கும் வருகை தந்து, மாணவர்களுக்கு  வீதி ஒழுங்குகள் குறித்து விளக்கமளித்திருப்பதாக அறிந்திருக்கின்றேன்.

பொலிஸார் என்றால்  கடுமையான முகத்துடன்தான் இருக்கவேண்டும் என்ற பொதுவான விதி, எழுதாத சட்டமாக இருக்கும் எமது சமூகத்தில், எவருடனும் இன்முகத்துடன் பேசும் இயல்பினைக்கொண்டிருந்தவர் அத்தியட்சர் அரசரத்தினம்.

இலங்கையில் வடக்கு – கிழக்குப்பிரதேசங்களில்  தமிழ்ப்பேசும் மக்களுக்கும் சிங்களம் பேசும் பொலிஸாருக்குமிடையே சுமுகமான உறவை மேம்படுத்துவதற்காக மேலிடத்திலிருந்து  2016 ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  நியமிக்கப்பட்ட  பொலிஸ் அதிகாரிகளில் ஒருவராகவும் அரசரட்ணம் திகழ்ந்தார் என்றும்  அறிகின்றோம்.


இலங்கையில் வீதிப்போக்குவரத்திலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் பலவற்றிற்கு நவீன தொழில் நுட்பங்களின் மூலம் தீர்வு காண்பதற்கும் அவர் முயன்றவர்  முதலான செய்திகளையும் ஊடகங்களில் படித்திருக்கின்றோம்.

இன்முகத்துடன் பொலிஸ் சேவையாற்றிய அரசரட்ணம் அவர்களின் மறைவை ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கடந்து செல்ல முடியாது.  அவரது மறைவை ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பாகவே நாம் கருதவேண்டும்.

 அவரைப்போன்ற பொலிஸ் அதிகாரிகள் இலங்கையில் மூவினங்களிலுமிருந்து தோன்ற வேண்டும். 

தமிழ் உணர்வாளராகவும், கலை, இலக்கிய நேசராகவும்,  தலைநகரில்  நடமாடிவிட்டு திடீரென விடைபெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சர் அரசரட்ணம் அவர்களின்  ஆத்மா சாந்தியடையவேண்டும் என சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.

---0---

 

 

 

No comments: