புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்போம்!

 Saturday, January 1, 2022 - 6:00am

இறைவன் படைப்புகளில் மிகவும் அழகானது இவ்வுலகம். இறைவனின் படைப்புகளில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள் மனிதர்கள். அழகான இந்த உலகத்தில் மேன்மை வாய்ந்தவர்களாய் வாழ்வதை விட சிறப்பானதொன்று இருக்க முடியாது.

இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டைப் பரிசாகத் தந்திருக்கிறார். இது இறைவனின் ஆசிர்வாதத்தின் வெளிப்பாடு. புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பதாக நாம் கடந்த ஆண்டுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஒருவேளை நம்முடைய இதயத்தில் ஒரு கேள்வி எழலாம். கடந்த ஆண்டு மனித குல வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு ஆண்டு. அந்த ஆண்டுக்காக நன்றி செலுத்த வேண்டுமா?

நிச்சயமாக நாம் கடந்த ஆண்டுக்காக நன்றி செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நமக்கு வாழ்க்கைப் போராட்டம் நடத்த சொல்லிக் கொடுத்திருக்கிறது; இறைவனை இன்னும் அதிகமாக தேட சொல்லித் தந்திருக்கிறது; இயற்கையை இன்னும் நேசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது; உறவுகளை தேட சொல்லித் தந்திருக்கிறது; உண்மையான உறவுகளை நமக்குக் காட்டியிருக்கிறது; எங்கள் மீதும் அக்கறையுடைய மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது; செல்வந்தர்களுக்கு சேர்க்க மட்டுமல்ல செலவு செய்யவும்தான் என்னுடைய பணம் என்பதை சொல்லித் தந்திருக்கிறது.

இன்னும் எத்தனையோ பாடங்களை ஒவ்வொரு மனிதருக்கும் கடந்த ஆண்டு சொல்லித் தந்திருக்கிறது. எனவே கடந்த ஆண்டுக்காக நன்றி செலுத்த வேண்டும். புதிய ஆண்டிலே நாம் நுழையும் போது, நம் ஒவ்வொருவரிடமும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், இந்த ஆண்டிலாவது என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதாகும்.

இந்த மாற்றம் என்பது எங்கிருந்து வர வேண்டும்? பல வேளைகளிலே இந்த மாற்றம் வேலையின் வடிவில் வர வேண்டும், பண வரவின் மூலம் வர வேண்டும், பிற மனிதர்களிடமிருந்து வர வேண்டும், பதவி உயர்வின் மூலம் வர வேண்டும், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பிலே பணம் கிடைப்பதன் மூலம் வர வேண்டும்.

இப்படி நாம் நினைக்கிறோம். உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கையிலே புதிய ஆண்டிலே மாற்றம் மலர வேண்டுமென்றால் அந்த மாற்றத்தை நம்மிலிருந்து உருவாக்க வேண்டும். நாம் எப்படிப்பட்ட மாற்றத்தை விரும்புகிறோமோ அப்படிப்பட்ட மாற்றத்தை நாம் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்.

வருவாயில் நான் மாற்றத்தைக் காண வேண்டும் என்றால், நான் அதற்காகத் திட்டமிட வேண்டும். வருவாயைப் பெருக்க நான் கடுமையாக உழைக்க வேண்டும், திட்டமிட வேண்டும். இப்படி தேவையானவற்றை நான் செய்ய வேண்டும். உலகமே மாற வேண்டும், ஒவ்வொரு மனிதனும் மாற வேண்டும் என்று பிறரை மாற்ற முயற்சிப்பதை விட நான் என்னை மாற்றி, என்னை ஒரு முன்னுதாரணமாக மனிதனாக மாற்றி நான் மாற்றத்தை தொடங்கலாம்.

இப்படி வருகிற ஆண்டிலே மாற்றத்தைத் தேடி அங்கும் இங்கும் அலையாமல் என்னிலிருந்து நான் மாற்றத்தை உருவாக்கி வாழ்ந்தால் நிச்சயமாக இந்த புதிய ஆண்டு ஆசிர்வதிக்கப் பட்ட ஒரு ஆண்டாக அமையும் என்று ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்வதே சரியானது.

அன்புக்குரியவர்களே! இந்த புதிய ஆண்டிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை நம்மிடம் இருக்கிறது. அந்த ஆசையை வெளியில் தேடுவதை விட நமக்குள் இருக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்!

-அருட்தந்தை
அருண் றெக்ஸ்
புனித அன்னை தெரேசா
ஆலயம், தல்கஸ்வல

நன்றி தினகரன் 

No comments: