எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 74 விம்மல் பெருமூச்சுடன் நகர்ந்த ஆறு நாட்கள் ! விடை கொடு எங்கள் நாடே…!! முருகபூபதி


அன்று 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  31 ஆம் திகதி. நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு ஆறு நாட்கள்தான் இருந்தன.

அம்மா அழுதுகொண்டிருந்தார்கள்.  அவர்களை தேற்றுவதா..?  எஞ்சியிருக்கும் அந்த சொற்ப நாட்களுக்குள் நான் செய்து முடிக்கவேண்டிய வேலைகளை கவனிப்பதா..?  வயிற்றில்  எமது மூன்றாவது குழந்தையை – ( அது ஆணா, பெண்ணா என்பதும் தெரியாது. -   முதல் இரண்டும் பெண்குழந்தைகள். )  சுமந்துகொண்டிருக்கும் மனைவியை இந்த வேளையில் விட்டுச்செல்கின்றேனே..? ! என்ற யோசனை பற்றி சிந்திப்பதா..? கண்முன்னால் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும்  எனதும் மற்றும் அக்கா, தங்கை, தம்பியின் பிள்ளைகளை விட்டு விட்டு தொலைதூரம் செல்வதா..?  அந்த ஆறுநாட்களும் மிகுந்த மனக்குழப்பத்திலிருந்தேன்.

அத்துடன் விமான டிக்கட்டுக்கான பணத்தையும்  04 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்திவிடவேண்டும். அந்தப்பணத்தையும் தேடிப்புரட்ட  வேண்டும்.

முதலில் அம்மாவின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

 “ உனது தம்பிமார் இருவரும் மத்திய கிழக்கிற்கு தொழில் நிமித்தம் சென்றார்கள். விடுமுறையில் வந்து திரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் தெரியும்.  உனக்கோ, பேப்பரையும் பேனையையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது.  உலக மெப்பை பார்த்தால், அவுஸ்திரேலியா கண்டம் எங்கோ தொலைவில் இருக்கிறது. அதுவும் தனித்திருக்கிறது.  அங்கே போய் நீ என்ன செய்யப்போகிறாய்..? உனக்கு என்ன தெரியும்…?  ஏற்கனவே இரண்டும் பெண் குழந்தைகள். தற்போது அவளும் வாயும் வயிறுமாக இருக்கிறாள். எனக்கு ஓரே யோசனையாக இருக்கிறது. இந்தப்பயணம் வேண்டாம். நீ….. வீட்டுக்கு மூத்த ஆண்பிள்ளை.  தம்பிமார் வெளியே போய் வரட்டும்.  அப்பாவும் போய்விட்டார்.  மீண்டும் வீரகேசரிக்கு வேலைக்குப்போ…. “ அம்மாவின்  ஏக்கம் நிரம்பிய குரலின் சுருக்கம் இதுதான்.  அடிக்கடி சேலை முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தார்.

அம்மா நன்கு படித்த பெண்.  அம்மாவின் அப்பா பிரிட்டிஷாரின்
காலத்தில் பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவர். அம்மா ஆங்கில மொழி மூலம் எங்கள் ஊர் நியுஸ்டர்ட் மகளிர் கல்லூரியில் படித்தவர்.  தாத்தா பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்றதும், அந்தக் கல்லூரியில் சிறிது காலம் பாதுகாப்பு ஊழியராகவும் பணியாற்றியவர்.


அம்மா,  கல்கி, அகிலன், சாண்டில்யன் நாவல்களை மட்டுமன்றி ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள், தொடர்கதைகளையும் படிப்பவர். நான் கொண்டுவரும் வீரகேசரியை தவறவிடமாட்டார். எனது அனைத்து கதைகளையும்  அக்காலப் பகுதியில் அம்மா படித்திருக்கிறார்.

எனது சுமையின் பங்காளிகள் கதைத் தொகுப்பிற்கு நான் சாகித்திய விருது பெற்றபோது, அதனை வாங்கச்செல்கையில்  வெள்ளை வேட்டி , சேர்ட் அணிந்து செல்லுமாறு பணித்ததும் அம்மாதான். எமது வீட்டுக்கு வரும் எழுத்தாளர்கள், கலைஞர்களை அம்மா உபசரித்தமையால்தான்,  2003 ஆம் ஆண்டு நான் அங்கே இல்லாத காலத்தில்,  அம்மாவின் இறுதி நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் பலர் சென்றிருந்தார்கள். அதில் முக்கியமானவர் மல்லிகை ஜீவா.

இந்தத் தகவலை கடந்த 19 ஆம் திகதி மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் நான் குறிப்பிட்டபோது எனக்கு  தொண்டை அடைத்தது. நா தழுதழுத்தது.

அம்மாவின் தலையை தடவி,    எதற்கும் கவலைப்படவேண்டாம்


அம்மா.  அவுஸ்திரேலியாவில் அப்பிள் பழம் பிடுங்கும் தொழில் செய்தாவது உங்களையும் குடும்பத்தையும் நான் காப்பாற்றுவேன்.  எனக்கும் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை.  மூன்று வாரங்கள் நிற்கவேண்டிய ரஷ்யாவிலேயே பிள்ளைகளை விட்டு நிற்கமுடியாமல், இரண்டு வாரத்தில் ஓடி வந்துவிட்டேன்.  தற்போதைய இலங்கை சூழ்நிலைகள் சரியாக இல்லையம்மா..? அடுத்து என்ன நடக்குமோ தெரியாது. ஜே.வி. பி.யினர் தலைமறைவாகியிருக்கின்றனர்.  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எச். என். பெர்னாண்டோ  யாழ்ப்பாணத்தில் தலைமறைவு  வாழ்க்கை. எனது சில நண்பர்கள் விசாரணைக்குட்பட்டுள்ளனர். நானும் விசாரணைக்கு போய் வந்திருக்கின்றேன். பொலிஸ் தாத்தாவின் பெயரைச்சொல்லியும் இவர்களிடமிருந்து தப்ப முடியாது. அநாவசியமாக குடைந்துகொண்டிருப்பார்கள்.  வருட இறுதியில் பருத்தித்துறை பக்கம் செய்தி சேகரிக்கப்போன இடத்தில் ஸ்கூலுக்கு செல்லும் பருவத்து தம்பிமார் கையில் துவக்குகளுடன் அலைவதை பார்த்தேன். இதெல்லாம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.  நீங்கள் தைரியமான பெண்.  நாம் ஏழ்மையில் கஷ்டப்பட்டபோது நீங்களும்  பாட்டியும்,  எவ்வளவு தைரியத்துடன் அனைத்தையும் முகம் கொடுத்தீர்கள். நீங்கள் பொலிஸ்காரன் மகள்.     அம்மாவுக்கு நான் வழங்கிய ஆறுதல் வார்த்தைகளின் சுருக்கம் இது.

அக்காவும் தங்கையும் மனைவியும் தத்தம் தாலிக்கொடிகளை தந்தார்கள். அவற்றை ஈடு வைத்து பணம் பெற்று எதிர்நோக்கப்பட்ட  பயணச்செலவுகளை சமாளித்தேன்.  500 அமெரிக்கன் வெள்ளிகளுக்கு ட்ரவலர்ஸ் காசோலையும் எடுக்கவேண்டியிருந்தது.

கொழும்புக்கு மனைவியையும் குழந்தைகளையும்


அழைத்துச்சென்று ஷொப்பிங்கும் செய்துவிட்டு,  கிங்ஸ்லி திரையரங்கில் பாலச்சந்தரின் சிந்து பைரவி திரைப்படம் பார்தேன். அதுவே இலங்கையில் எனது குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்த கடைசித்  திரைப்படம்.

கொழும்பு – 07 சேர் ஏர்ணஸ்ட்  டீ சில்வா மாவத்தையில் அமைந்திருந்த சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள்  பிரேம்ஜி,  லத்தீஃப், முத்தையா,  ராஜஶ்ரீகாந்தன், பெரி. சண்முகநாதன்,  இராஜகுலேந்திரன் ஆகியோரையும் சம்பிரதாயத்திற்காக சந்தித்தேன்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சில இலக்கிய நண்பர்களுடன் எமது வீட்டுக்கு  தாம் வரப்போவதாக ராஜஶ்ரீகாந்தன் சொன்னார்.

அவ்வாறு  அவருடன் வந்தவர்கள்:  மல்லிகை ஜீவா, மேமன்கவி, புலோலியூர் இரத்தினவேலோன்,  அந்தனிஜீவா.  அவர்களுக்கு மதிய விருந்தளித்து, அருகிலிருந்த கடற்கரையில் நீண்ட நேரம் உரையாடினேன்.

நான் வீரகேசரியிலிருந்து வெளியேறியதை முற்றிலும் விரும்பாத ஜீவா,  தனது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.

அவர் அன்று விடைபெறும்போது,  தனியே அழைத்து எனது பயணம் பற்றி இரகசியமாகச் சொன்னேன்.  அவர் தனது நெஞ்சைப்பிடித்துக்கொண்டார்.

என்னையே உற்றுப்பார்த்தார். 

 “ தயவுசெய்து வெளியே சொல்லவேண்டாம்.  சென்று சேர்ந்தவுடன் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதுவேன்.  “ என்றேன்.

அவரது கண்கள் சிவந்தன.  எனது முடிவை அப்போதுதான் அவரிடம்


சொல்கிறேன்.

அந்தக்கணங்களில்  அவர் எனது முடிவை எவ்வாறு உள்வாங்கிக்கொண்டார் என்பதை சுமார் பத்தாண்டுகளின் பின்னர்,  1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மல்லிகை பந்தல் வெளியீடாக வெளிவந்த எனது பாட்டி சொன்ன கதைகள் நூலில் அவர் எழுதியிருந்த பதிப்புரையில் காணமுடியும்.

அந்தப் பதிப்புரையிலிருந்து சில பகுதிகள்:

மல்லிகையால் வளர்ந்தவர்கள் பலர். மல்லிகையால் வளர்க்கப்பட்டவர்கள் சிலர். அப்படிக் கண்டுபிடித்து வளர்க்கப்பட்டவர்களில் முதலிடம் வகிப்பவர்தான் நண்பர் முருகபூபதி அவர்கள். மற்றவர்கள் மேமன்கவி, திக்குவல்லை கமால், ராஜஶ்ரீகாந்தன், கெக்கிராவா ஸகானா போன்றவர்கள்.

இன்றுபோல இருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பு – நான் நினைக்கிறேன். அது 1972 ஆம் ஆண்டென. அந்தக்காலத்தில் முருகபூபதி கதையொன்று அனுப்பி இருந்தார். படித்துப்பார்த்தேன். பிடித்திருந்தது. அக்கதை பல தகவல்களை எனக்குத் தந்து நம்பிக்கையூட்டியது. நீர்கொழும்பு பிரதேசக் கரையோர மீனவ மக்களைப்பற்றிய உள்ளடக்கம் கொண்ட கதையது. அவர்களின் வாழ்வின் அடி ஆதாரமான மன உணர்வுகள், அபிலாஷைகள், பேச்சுவழக்குகள், அக்கதையில் பரவிக்கிடந்ததை நான் முதல் வாசிப்பிலேயே மட்டிட்டுக்கொண்டேன். அந்த மாசத்து மல்லிகையிலேயே சிறு சிறு திருத்தங்களுடன் அக்கதையைப் பிரசுரித்துவிட்டேன்.


அபிப்பிராயங்கள், கருத்துக்கள், விமரிசனங்கள் அக்கதை பற்றிப் பின்னர் காரசாரமாக வெளிவரத்தொடங்கின. நானறிந்தவரையில் ஓர் எழுத்தாளனுடைய கன்னிப்படைப்புக்கு இத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுத்து சுவைஞர்கள் தத்தமது அபிப்பிராயங்களைச் சொன்னது மல்லிகை வரலாற்றில் இதுதான் முதல் தடவை என நம்புகிறேன்.

இன்றும்கூட தனியாக நானிருந்து சிந்திக்கும் வேளைகளில், முருகபூபதியைப்பற்றி நினைக்கும் சமயங்களில் நான் வியப்பினால் மலைத்துப்போவதுமுண்டு.  அத்தனை மென்மையானவர். ஆழமான நட்புக்கு நெருக்கமானவர். சக தோழர்களுக்கு உதவுவதில் தனிப்பெருமை கொள்பவர்.  அதே சமயம் இறுக்கமான மனத்திண்மைய இயல்பாகவே பெற்றுக்கொண்ட மனவலிமை கொண்டவர்.

இந்தப்பண்புகள்தான் என்னை அவரிடம் நெருங்கி உறவாட வைத்தன என்று இன்று உறுதியாக நம்புகிறேன்.

 “ தரமான எலிப்பொறி செய்பவன், ஓர் அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் வாழ்ந்திருந்தாலும் கூட, அவன் குடிசையை நோக்கி ஓர் ஒற்றையடிப்பாதை தானே வளரும்  “ என்பது ஓர் ஆங்கிலப்பழமொழி.

மல்லிகைக் காலத்திலும், அதற்கு முன்பும்கூட கொழும்பு – யாழ்ப்பாணம் என்றிருந்த எனது இலக்கியப்பாதையை – வழிப்பயணத்தைத் தனது பிரதேசமான நீர்கொழும்பை நோக்கித்


திசை திருப்பிவிட்டவர் இவர். அந்தப்பிரதேசத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய பல இலக்கிய நெஞ்சங்களை எனக்கு நெருக்கமாக்கியவர் இந்தப்பூபதிதான். அத்துடன்              ‘ நீர்கொழும்புச் சிறப்பு மலர்  ‘ என்ற பெயரில் ஒரு விசேஷ மல்லிகை மலரையும் வெளிக்கொணர்வதற்கு ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பை நல்கி வெற்றியடையச் செய்தவரும் இதே பூபதிதான்.

அன்னாரது பாட்டி சொன்ன கதைகள்  என்ற இந்த நூலை மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிடுவதில் மெய்யாகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

பூபதி, கடல் கடந்து அவுஸ்திரேலியா போனது அடியோடு விருப்பமில்லை எனக்கு.  அவர் போவதெனத் தீர்மானிதுவிட்ட பின்னர், தனக்கு அந்தரங்கமான, ஆத்மார்த்திகமான நண்பர்கள் எனத் தான் நம்பிய சிலரை அழைத்துத் தனது வீட்டிலேயே மதிய போஜன விருந்தொன்றை தந்து களித்தார்.

இது ஒரு பிரிவுபசார விருந்து என்ற தகவலே கடைசிவரை எனக்குத் தெரியாது. விருந்து முடிய, மகிழ்ச்சியுடன் நாங்கள் கொழும்பு திரும்ப ஆயத்தமானோம். அந்தச்சமயம், பூபதி என்னைத் தனியே அழைத்துச்சென்று தான் அவுஸ்திரேலியா போகப்போகும் சங்கதியை மெதுவாகச்சொன்னார்.

எனக்கு இது நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தது.  அவர் செய்யவேண்டிய வேலைகள் இங்கு நிறைய காத்திருந்தன. அவரது எதிர்காலம் ரொம்பவும் பிரகாசமாகப் பிரகாசிக்கக் கூடிய சூழ்நிலை இங்கு நிலவியது.  என்னால் அவரது இந்த முடிவைச் சீரணிக்க இயலவில்லை.

அன்று இரவு கூடச் சரியான தூக்கமில்லை.  ஒரே மனப்பாரம்.  அத்தனை நெஞ்சு நோவு.

போனவர், இந்த மண்ணை மறக்கவில்லை.  மக்களை மறக்கவில்லை.  ஈழத்து இலக்கியத்தை மறக்கவில்லை.


அப்படி மறக்கவில்லை என்பதன் அறிகுறிதான் இந்த பாட்டி சொன்ன கதைகள். இந்த நூலை வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். 

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவா என்னைப்பற்றி கொண்டிருந்த கணிப்பை இதுவரையில் படித்திருப்பீர்கள்.

மொத்தத்தில் நான் புலம்பெயர்ந்து செல்வதை என்னைப்பெற்ற தாயும், என்னை ஆழமாக நேசித்த மல்லிகை ஜீவா உட்பட இதர நண்பர்களும் விரும்பவேயில்லை. ஏன் , எனக்கும் கூட துளியளவும் விருப்பம் இல்லை.

விதியில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன் என்பதனால், எனது வாழ்வில் நேர்ந்த திருப்பங்கள் – மாற்றங்கள் அனைத்துக்கும் விதியின் மீதே பாரத்தை போட்டுவிடுகின்றேன்.

மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1997 ஆம் ஆண்டு வெளியான பாட்டி சொன்ன கதைகள் நூலின் அறிமுகவிழா எங்கள் நீர்கொழும்பூரில் அதே ஆண்டு நடந்தபோது,  எனது அம்மா, அதன் முதல் பிரதியை மல்லிகை ஜீவாவின் கையிலிருந்து பெற்றுக்கொண்டார்.

அந்த நூலின் மற்றும் ஒரு பதிப்பு , 24  வருடங்கள் கழித்து கடந்த 19 ஆம் திகதி மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் வெளியிடப்பட்டது.  இவையெல்லாம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.  விதி எங்கோவிருந்து என்னை இயக்கிக்கொண்டே இருக்கிறது என நம்புகின்றேன்.

1987  பெப்ரவரி மாதம்  குறிப்பிட்ட ஆறுநாட்களுக்குள் நான் செய்து முடிக்கவேண்டிய மேலும் சில பணிகள் இருந்தன.

மித்திரன் நாளிதழுக்கு எழுதிக்கொடுக்கவேண்டிய கதநாயகிகள் தொடர்கதையின் இறுதி அத்தியாயங்களை அதிகாலையே எழுந்து எழுதினேன்.  குழந்தைகள் துயில் எழுவதற்கு முன்னர் எழுதவேண்டும்.

அவ்வாறு எழுதியும் கதாநாயகிகளின் கதை முடிந்தபாடாயில்லை.

அக்காலப்பகுதியில் வவுனியாவில் அண்ணன் உறவு முறையில் ஒருவர் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்கள் கடந்துதான் அவரது சடலம் மீட்கப்பட்டது.  அவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அந்த அண்ணி தவித்துப்போனார்.  அந்த உடன்பிறவா அண்ணனின் பெயர் சுப்பையா. லொறிச்  சாரதி.  வேப்பங்குளத்திலிருக்கும் ஒரு அரிசி ஆலையில் பணியாற்றினார்.   பூவரசங்குளத்திலிருந்து காலையில் அண்ணி தயாரித்துக்கொடுத்த மதிய உணவுப்பார்சலுடன் சென்றவர்.  சடலமாகத்திரும்பினார்.

அவரது சேமலாப நிதியை கொழும்பு தொழில் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொடுக்கவேண்டியிருந்தது.  இலங்கை சட்ட நடைமுறைகள் தெரிந்ததுதானே.   தேவைப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதும்,  தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது.

எனது தங்கையின் கணவரையும் உடன் அழைத்துக்கொண்டு  கொழும்பு நாரகேன்பிட்டியில் இயங்கிய தொழில் திணைக்களம் சென்று,  அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்த வீரகேசரி துணை ஆசிரியர் – சகோதரி அன்னலட்சுமியின் கணவர் இராஜதுரையை அறிமுகப்படுத்தினேன்.

அவர் சில மேலதிகாரிகளை எமக்கு அறிமுகப்படுத்தினார்.

மற்றும் ஒருநாள் எனது சக பத்திரிகையாளர் நண்பர்                                 ( சட்டத்தரணி ) தம்பையாவை அழைத்துக்கொண்டு மித்திரன் ஆசிரிய பீட நண்பர் அஸ்கர் நானாவை அவரது மாளிகாவத்தை தொடர்மாடிக்குடியிருப்பு வீட்டில் சந்தித்து, கதநாயகிகள் தொடர்கதையின் சில அத்தியாயங்களை கொடுத்தேன். இறுதி அத்தியாயங்களை பின்னர் தபாலில் அனுப்புவதாக அவருக்கு உறுதியளித்தேன்.

இத்தனையும் செய்து முடித்த பின்னர், மற்றும் ஒரு பிரச்சினை பூதாகரமாக கண்முன்னே நின்றது.

அரியாலை குஞ்சியம்மாவின் மகன் விவகாரம்.  ஒரு விடுதலை இயக்கத்தை நம்பிச்சென்ற அந்த மைந்தனை மற்றும் ஒரு பெரிய இயக்கம் பிடித்துவைத்து விசாரித்து விட்டிருந்த நிலையில்,  குஞ்சியம்மாவின் ஏற்பாட்டில் நோர்வேக்கு செல்லவிருந்தவரை, ஆனையிரவு இராணுவ முகாம் பிடித்துக்கொண்டது.

இதுபற்றி கடந்த ஒரு அங்கத்தில் விரிவாக எழுதியிருந்தேன்.

கொழும்பில் குஞ்சியம்மாவுடன் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்துவிட்டு, திடீரென அவர்களை கைவிட்டுச்செல்ல நேர்ந்திருக்கும் கவலையும்  மனதில் அழுத்தியது.

   தம்பி… நடப்பது நடக்கும்.  நீர் புறப்படும்.  நீரும் எனக்கு ஒரு மகன்தான்.  எனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு ஊரிலிருந்து வந்தேன்.  இப்போது  அவனை இராணுவத்திடம் கொடுத்துவிட்டு, மீட்டெடுக்க போராடுகின்றேன்.  நீராவது  பத்திரமாகப்போய்ச்சேரும்.  விதி எப்படியெல்லாமோ விளையாடும் தம்பி   “ என்று ஆறுதல் கூறினார்கள்.

எனது எழுத்துலக வாழ்வில்  இப்படி எத்தனையோ மனிதர்கள் தொடர்ந்து பயணிக்கின்றார்கள்.

பின்னாளில்  குஞ்சியம்மாவின் அந்த புதல்வன் கனடா வாசியானார்.  நான் அவுஸ்திரேலியா வாசியாகி இங்கே நிரந்தர குடியுரிமையும் பெற்றேன்.

என்னை அன்று வழியனுப்பிய அம்மா 2003 இல் மேல் உலகம் சென்றார்கள். மல்லிகை ஜீவா 2021 தொடக்கத்தில் விடைபெற்றார்.

குஞ்சியம்மா , இன்றும் யாழ்ப்பாணம் அரியாலையில் வசிக்கிறார்.

இவர்கள் அனைவரும் எனது மனதில் நீடித்து நிலைத்திருக்கின்றனர்.

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: