எழுத்தும் வாழ்க்கையும் 36 பொன்விழா ஆண்டில் தடம் பதிக்கும் வேளை… மறக்கமுடியாத ஏப்ரில் மாதமும் எழுத்துலக பிரவேச ஆண்டும் !! முருகபூபதிஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் !

                 இந்தப்பாடலை கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் சுபதினம் ( 1969 ) திரைப்படத்தில் எழுத்து ஓடும்போது கேட்டிருப்பீர்கள். அப்போதுதான்  கொழும்பிலிருந்து வெளியான சிரித்திரன் இதழ் மகுடி கேள்வி – பதில் பகுதிக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தேன்.

மேல் வகுப்பு படிக்கின்ற பருவத்தில் எனது பெயர் இதழில்


வெளிவந்தால், அதனை வீட்டில் பெரியவர்கள் படித்துவிட்டால் திட்டும் ஏச்சும் வாங்கவேண்டும் என்ற பயத்தில் எனது பெயரை முருகன் என்று எழுதியிருந்தேன்.

எங்கள் ஊருக்கு அப்போது மாதாந்தம் சிரித்திரன் இதழ் பிரதானவீதியில் அமைந்த ஒரு  தமிழ்நாட்டு அன்பர் நடத்திய சந்திரவிலாஸ் என்ற  சைவ ஹோட்டலுக்கு வரும். அங்குதான்  தமிழக சினிமாப்  படங்களின் சுருக்கமான கதையுடன் பாட்டுப்புத்தகங்களும் விற்பனைக்கு வரும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் , இரத்தக்கண்ணீர் கதை, வசன , பாடல் புத்தகங்களையும் அங்குதான் வாங்கிப்படித்தேன். அப்பா தரும் Pocket Money யை   இவ்வாறுதான் அந்த பாடசாலைப்பருவத்தில் செலவிட்டேன்.

சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம்,  நான் எழுத்தாளனாக அறிமுகமானதற்குப்பின்னர்தான் எனது நண்பரானவர்.  1969 காலப்பகுதியில் முருகன் என்ற பெயரில் அவ்வப்போது கேள்விகள் அனுப்புவேன்.

எனது முதல் கேள்வி இவ்வாறு அமைந்திருந்தது:  உலகத்தில் மிகவும் பயங்கரமான ஆயுதம் எது..?

சிரித்திரன் மகுடியின் பதில்:  தவறான மனிதனின் கையில் இருக்கும் பேனை !

தற்போதைய  முகநூல் கலாசார காலத்தில் சிரித்திரன்


சிவஞானசுந்தரம் இருந்திருந்தால்,  அவரது மகுடியின் பதில் வேறுவிதமாக அமைந்திருக்கும்.

எனது அந்த கேள்விக்கான எழுத்து, காகிதத்தில் பேனையால் எழுதப்பட்டது.  ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது கணினியில் இந்த நனவிடை தோய்தலை பதிவுசெய்துகொண்டிருக்கின்றேன்.

இற்றைக்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இதே ஏப்ரில் மாதத்தில்  என்போன்ற இளைஞர்கள் வீடுகளில் முடங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.

எங்கள் ஊர் பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் கடற்கரையோரத்திற்கு சமீபமாகவிருந்த சிறிய திடலில் சேகுவேரா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட பல சிங்கள  இளைஞர்கள்


டயர்களுடன் எரிக்கப்பட்டு தகனமாக்கப்பட்டனர் என்ற அதிர்ச்சிதரும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

கொழும்பில் களனிகங்கையில் பல சடலங்கள் மிதந்து சென்றதாக பத்திரிகைச்செய்திகள் கூறின.

அவ்வாறு வீடு அடங்கியிருந்த 1971 ஆம் ஆண்டு காலத்தில்தான் எங்கள் வீட்டில் வளர்மதி நூலகத்தையும் வளர்மதி கையெழுத்துப்பிரதியையும் ஆரம்பித்தோம்.  அந்த இதழுக்குரிய படங்களை நண்பர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் வரைந்தார்.

எனது மச்சாள் தேவசேனா, தேவி என்ற புனைபெயரிலும் எழுதினார். எங்கள் ஊர் நண்பர்கள் முத்துலிங்கம், செல்வரத்தினம், ரட்ணராஜ், தருமலிங்கம் ஆகியோரும் எழுதினர்.

புதுக்கவிதை வீச்சுடன் அறிமுகமான அந்த நாட்களில் நானும் மூன்று  புதுக்கவிதைகளை  அதில்  எழுதிப்பார்த்தேன்.

அவை: 

 


நெஞ்சில் ஒரு முள்

எத்தனையோ முட்கள் குத்தின…

ஆனால், நோகவில்லை…!

அந்த முள் குத்தினால் மாத்திரம் நோகிறதே…
ஏன்…?

அது நெஞ்சில் ஒரு முள் !

----0---

அம்மாவும் பசுவும்

 “ உடல் பெருக்க இறைச்சி சாப்பிடு –

மாட்டிறைச்சி “   – என்றான் அவன்.

“  பாவம்  “   என்றேன் நான்.

 “ பால் குடிக்கலாம், இறைச்சிக்கு என்ன…? “

எனக்கேட்டான்.

 “ அம்மாவிடமும் பால் குடித்தாய்  “ என்றேன் !

---0---

உயிர்கொடுப்போர்

தமிழுக்கு உயிர் கொடுப்பார்களாம் !

தமிழ் என்ன செத்தாவிட்டது ?

---0---

இக்காலப்பகுதியில்தான் எமக்கு மல்லிகை ஜீவா


இதழாசிரியராக அறிமுகமானர்.

1972 பெப்ரவரி மாதம் வெளியான மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழில் எமது வளர்மதி நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன்.  அன்றிலிருந்து தொடர்ச்சியாக எழுதிவருகின்றேன்.

இந்த தொடக்ககால எனது இலக்கியவரலாறு பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றமையால்,  எழுதவேண்டிய சில முக்கிய குறிப்புகளை இங்கே பதிவுசெய்கின்றேன்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சுபதினம் வரிகளை கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் வாழ்வியல் அர்த்தம் புலப்படும்.

அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள்முழுவதும் சுபதினம்தான்.  அவ்வாறு அடுத்தவர் நலத்திற்காகவும் உரிமைக்காகவும் சமதர்ம சமுதாயம்  காணவேண்டும் என்று களத்தில் இறங்கிய இளம்தலைமுறையினரும், குறிப்பாக மாணவர்களும் முதலாளித்துவ ஏகபோக சக்திகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும்  எதிராக ஆயுதம் ஏந்திப்போராடத்தொடங்கிய காலத்தில் எழுதத் தொடங்கிய  எனக்கும்  ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம்


சுபதினங்கள் வந்து சென்றுள்ளன.

அவ்வாறு எழுத்துலகப்பிரவேசத்தின் சுபதினம் வந்த அந்த 1971 ஆம் ஆண்டின் ஏப்ரில் மாதம்  பல ஆயிரம் குடும்பங்களின் வீடுகளில் சுபதினம் இருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் எங்காவது  வாகன டயர்களுடன் எரிக்கப்பட்டார்கள்.  களனி கங்கையில் உயிரற்ற சடலமாக மிதந்தனர்.

 

1971 ஏப்ரில் கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட  ரோஹண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, களு ஆராச்சி, பொடி அத்துல, லொக்கு அத்துல உட்பட நூற்றுக்கணக்கான  மக்கள் விடுதலை முன்னணி  உறுப்பினர்களும்  1972  இல் அறிமுகமான புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக இயங்கியவர்கள்  என்ற அடிப்படையில்  பல  தமிழ் இளைஞர்களும்  அரசியல் கைதிகளாக   சிறையிலிருந்தனர்.

இவர்களில்  சிலர்  பின்னாளில் 1977 இல்  விடுதலையானபோது  எனதும் தோழர்களானார்கள்.

எங்கள் ஊர் சிறையிலிருந்த மாவை சேனாதிராஜா, பின்னாளில்  நாடாளுமன்ற உறுப்பினரானார். ரோஹண


விஜேவீரா  1982 ஆம் ஆண்டு  நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு,  ஜே.ஆர். ஜெயவர்தனா, கொப்பேகடுவ ஆகியோருக்கு அடுத்து, இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்தார்.

தோழர் லயனல் போப்பகேயும் உபதிஸ்ஸ கமநாயக்காவும்  ஒரு சில இடைத்தேர்தல்களில் போட்டியிட்டனர்.  அப்போது, மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்து, கட்சிக்காக எழுதிக்கொண்டிருந்தேன்.

வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பணியிலிருந்தவேளையில் ஒருநாள் மாலை  ஒரு செய்தியை ஒப்புநோக்கிக்கொண்டிருந்தேன்.

அந்த ஆண்டு நடக்கவிருந்த மாவட்ட சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடவில்லை என்று  அக்கட்சியின் மத்தியகுழுவினாலும், அரசியல் குழுவினாலும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.

அதனை படித்துக்கொண்டிருந்தபோது மாலை நான்குமணியாகிவிட்டது.  நான் உஷாரடைந்தேன்.  எனது பணிநேரம் முடிந்ததும்  ஆமர்வீதிச்சந்தியிலிருந்த  மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித்தலைமையகத்திற்கு விரைந்தேன்.

தொலைதூரப்பயணம் சென்று திரும்பியிருந்த கட்சியின்


செயலாளர் லயனல் போப்பகே அங்கே தரையில் ஒரு நீண்ட செங்கொடியை விரித்து அதில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

அவரைத்  தட்டி எழுப்பி, நடக்கவிருக்கும் மாவட்ட சபைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இறுதி நேரத்தில் முடிவெடுத்திருக்கும் தகவலை சொன்னேன்.

அவர் சுதாரித்து எழுந்தார்.  சில நிமிடங்கள் ஆழ்ந்துயோசித்தார்.  அலுவலகத்தில் கடமையாற்றும் தோழர் கலுமல்லியிடம் தகவல் சொல்லி, சோமவன்ஸ அமரசிங்கவிடம் அனுப்பினார்.

நீர்கொழும்பு வீதியில்  மகபாகே என்ற இடத்தில் நடந்துகொண்டிருந்த கட்சியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொள்ளச்சென்றிருக்கும் தோழர் விஜேவீராவுக்கும் இந்தத்  தகவலை சொல்லுமாறு என்னை உடனடியாக அனுப்பினார்.

தற்போதிருக்கும் கைத்தொலைபேசி வசதிகள் இல்லாத அக்காலப்பகுதியில் நாம் எவ்வாறு துரிதமாக இயங்கினோம் என்பதை நினைத்துப்பார்த்தால் பேராச்சரியமாகவிருக்கும்.

நான் பஸ்ஸில் சென்று இறங்கியபோது,  கூட்டம் நடந்துகொண்டிருந்தது.  கமநாயக்கா பேசிக்கொண்டிருந்தார்.  அந்த மைதானத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.

மேடையின் கீழே, விஜேவீரா புற்தரையில்  அமர்ந்து அடுத்து பேசுவதற்கு காத்திருந்தார்.  அவரிடம் தகவலை சொன்னதும், அவரது முகம் பிரகாசமடைந்தது.

தோளில் தட்டி நன்றி சொன்னார். அடுத்து அவர் பேசுகையில் நடக்கவிருக்கும் மாவட்ட சபைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் அரசியல் குழு இன்று இரவு தீர்மானிக்கும் என்றார்.

அவ்வாறே தீர்மானித்தது,  தோழர் லயனல்போப்பகே காலிமாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1971 ஆம் ஆண்டு ஆயுதப்புரட்சியில் ஈடுபட்ட இயக்கம் பத்தாண்டுகளின் பின்னர் ஜனநாயக ரீதியில் தேர்தல்களை சந்தித்தது.

மற்றும் ஒருநாள், அதுவும் ஒரு ஏப்ரில் மாதம்தான்.  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கச்செயலாளர் அலவி மௌலானாவின் செய்தியொன்றை ஒப்புநோக்கவேண்டியிருந்தது.

மேதினத்திற்காக அவரது கட்சியின் கூட்டத்தினை நடத்துவதற்கு  கொழும்பு  புதிய நகர மண்டபத்திடலை கேட்கும்   அனுமதிக்கடிதம் மாநகர ஆணையாளருக்கு தபாலில் அனுப்பியிருப்பதாக அந்தச்  செய்தி கூறியது. அக்கடிதம் மறுநாள்தான் உரிய இடத்திற்கு சென்று சேரும்.

அப்போது மதியம் பன்னிரண்டு மணி.

மதிய உணவு வேளையில் மக்கள் விடுதலை முன்னணி பணிமனைக்கு  ஓட்டமும் நடையுமாகச்சென்றேன். நல்லவேளை விஜேவீரா இருந்தார். 

 “ தோழர்… உடனே கடிதம் எழுதி ஆணையாளருக்கு தபாலில் அனுப்பாமல்,  நேரடியாக கையில் கிடைக்க ஆவனசெய்யுங்கள்  “ என்றேன்.   தட்டச்சு இயந்திரத்தை அருகே இழுத்து அவரே அக்கடிதத்தை தட்டச்சுசெய்தார்.

அக்கடிதம் ஆணையாளரிடம் அன்றே சேர்ப்பிக்கப்பட்டு, மேதினத்திற்கான புதிய நகரமண்டப திடல் கட்சிக்கு கிடைத்தது.

அலவி மெளானாவின் கடிதமும் விஜேவீராவின் கடிதமும் மறுநாள் வீரகேசரி நகரப்பதிப்பில்  வெளியானது.  அத்துடன் ஆணையாளர் மக்கள் விடுதலைமுன்னணிக்கே திடலை வழங்கிவிட்டார் என்ற செய்தியும் வெளியானது.

அதனையடுத்து, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கண்டன அறிக்கையும் வெளியானது.

ஹவ்லக் டவுன் திடலிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மேதினம் ஊர்வலம் முற்பகல் ஆரம்பித்து, புதிய நகர மண்டபத்திடலுக்கு வந்து சேரும்போது இரவாகிவிட்டது.

அடுத்தடுத்து  அதே திடல்தான் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினத்திற்கு கிடைத்தது.  வெளியூர்களிலிருந்து ஏராளமான தோழர், தோழியர் வந்து குவிந்தனர்.

அந்தத்  திடலில் ஓரிடத்தில் அவர்களின்   பொதிகள் உடைமைகள் மலைபோன்று குவிந்திருந்த காட்சியைக்கண்டு பிரமித்தேன்.  இயக்கத்தின் வண்ண வண்ண சுவரொட்டிகள்  தலைநகரத்தில் மாத்திரமல்லாது  நாடெங்கும்  நீக்கமற நிறைந்திருந்தது.  மும்மொழியிலும் சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஶ்ரீமாவோ அம்மையாரினதும் ஜே.ஆரினதும் கட்சிகளின் ஆதரவாளர்கள் அதனைப்பார்த்துவிட்டு  “  தாப்ப விப்லவகாரயோ    “ என்று ஏளனம் செய்தனர்.  அதன் அர்த்தம் சுவர் புரட்சியாளர்கள் !  

ஆனால், ஜே.ஆரின் புலனாய்வுப்பிரிவினர் பார்வையில் அது கலக்கத்தை தந்தது.  அத்துடன்,  1983 ஆம் ஆண்டு மேதின ஊர்வலத்தில் வந்த இளைஞர்களும் யுவதிகளும் அணிந்திருந்த சீருடைகளும் திகிலைத்தந்தது.

இந்தச்  சீருடை விவகாரம் சமகாலத்தில் யாழ். மாநகர சபையிலும் எதிரொலிக்கிறது.  நகரத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காக நகர பிதா சட்டத்தரணி மணிவண்ணன் அமைத்த நகர காவல்படையினரின் சீருடைதான் இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவின் கண்களை உறுத்தியிருக்கிறது.

அதனால், நகரபிதா மணிவண்ணனை கைதுசெய்துபின்னர் விடுவித்துள்ளனர்.

இன்று வடக்கில் நடந்த சம்பவம்போன்று அன்று 1983 ஆம் ஆண்டும் வேறு வடிவத்தில் நடந்தது.

இராணுவ அணிவகுப்பினைப்போன்று அந்த மேதின ஊர்வலம் அமைந்திருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

மக்கள் விடுதலை முன்னணி, தோழர்கள் விஜேவீரா, கமநாயக்கா, லயனல் போப்பகே தலைமைத்துவத்தில்  நடந்த இறுதி மேதின விழாவாக அது அமையும் என்று நாம் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.

அந்த எழுச்சிப்பேரணியை கண்டு ஜனாதிபதி ஜே.ஆர். பயந்தார்.  மீண்டும் அந்த இயக்கம் ஒரு கிளர்ச்சிக்கு தயாராகிறதோ என்ற அச்சம் அவருக்கு வந்தது. அந்த அச்சத்தை ஊட்டியவர்கள்  அன்றும் புலனாய்வுப்பிரிவினர்தான்!

அதற்கு ஏற்றவாறு அந்த ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பரமேஸ்வரா சந்தியில் புலிகளின் தாக்குதலுக்கு 13 இராணுவத்தினர் பலியாகினர்.

அவர்களின் உடல்கள் பொரளை கனத்தைக்கு எடுத்துவரப்பட்டதையடுத்து கலவரம் வெடித்தது. வெலிக்கடை சிறை படுகொலைகள் நடந்தன. 

சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த ஜே.ஆர், அந்தக்கலவரங்களுக்கு காரணமானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே என்று அபாண்டமாக பழிசுமத்தி அந்தப்  பேரியக்கத்தை தடைசெய்தார்.

அதனை மாத்திரம் தடைசெய்யாமல் உலகத்தின் கண்ணை மூடுவதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் சமசமாஜக்கட்சியையும் நவசமசமாஜக்கட்சியையும் தடைசெய்தார்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ரோஹண விஜேவீராவுக்கும் லயனல் போப்பகேவுக்கும்   இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி,  இறுதியில் லயனல் இயக்கத்திலிருந்து வெளியேறினார்.  அரசு  அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தது. ரோஹண விஜேவீரா தனது குடும்பத்துடன் தலைமறைவானார். மேலும் பலர் தலைமறைவானார்கள்.

இது இவ்விதமிருக்க, 1971 ஏப்ரில் கிளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே  மார்ச் மாதமளவில் கைதாகியிருந்த 
ரோஹண விஜேவீராவும் தோழர்களும் விடுதலை செய்யப்பட்ட 1977 – 1978  காலப்பகுதியில் புலிகள் இயக்கம் ஒரு நூலை தமிழகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருந்தது.

அப்பொழுது அந்த இயக்கத்தில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் இணைந்திருந்தனர்.
அந்த நூல் எனக்குக்கிடைத்தது. குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் ரோஹன விஜேவீராவின் வாக்கு மூலம் சுருக்கமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.


ஜே. வி.பி.யின் தோற்றம், வளர்ச்சி தொடர்பாகவும் பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லாமல் அதன் ஆயுதப்புரட்சிக்கு நேர்ந்த தோல்வி பற்றியும் அந்நூலில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இறுதியில், மக்கள் ஆதரவு அற்ற எந்தவொரு போராட்டமும் தோல்வியையே தழுவும் என்றும் தங்களது தமிழ் மக்கள் தொடர்பான விடுதலைப்போராட்டத்திற்கு ஜே.வி.பி.யின் போராட்டமும் அதன் வீழ்ச்சியும் சிறந்த படிப்பினையாக அமையும் என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஒரு நாள் இந்த நூலை விஜேவீராவுக்கு படித்துக்காண்பித்து மொழிபெயர்த்தேன். சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவரது வாக்குமூலம் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தமை கண்டு திருப்திப்பட்டார்.

எனினும்,  தனது தரப்பு வாதங்களை என்னிடம் அவர் சொல்லவில்லை. தமிழ் சிங்கள. முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைத்தான் தனது கட்சி தொடர்ந்து பேசும் என்று மட்டும் சொன்னார்.


அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவருடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக விவாதித்தேன். ஏற்கனவே சண்முகதாஸன் போன்றவர்களினால் அவருக்குள் விதைக்கப்பட்டிருந்த ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என்ற கருத்தியலில் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருந்தார்.


ஆரம்பத்தில் பஸ் நிலையங்கள், பஸ் தரிப்பிடங்களில் கால்கடுக்க நின்று பஸ்ஸிலேயே பயணம் செய்து கூட்டங்களுக்குப்பேசச்செல்வார். கடையில் பார்சல் சோறு வாங்கி பகிர்ந்துண்பார். கட்சிப்பணிகளுக்கு சிக்கனமாகவே செலவிடுவார். தரையிலே செங்கொடிகளை அல்லது பேப்பர்களை விரித்து படுத்துறங்குவார். சிறையிலிருந்து வெளியானதும் எளிமையாகவே வாழ்ந்தார்.

 

என்னை அவர் முதல் முதலில் எங்கே சந்தித்தாரோ அந்தச்சங்கத்தின் (இலங்கை ஆசிரியர் சங்கம்) தலைவர் எச். என். பெர்னாண்டோவின் சகோதரியையே காதலித்து மணந்துகொண்டார். அவரதும் லயனல் போப்பகேயினதும் திருமணங்கள் மிகவும் எளிமையாக வேறு வேறு சந்தர்ப்பங்களில் நடந்தன.


பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து கட்சிப்பணிகளை மேற்கொண்டவர், பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் தோழர்களின் வற்புறுத்தலினால் பின்னர் ஒரு பேஜோ வாகனத்தை பயன்படுத்தினார்.


விஜேவீராவின் மிகப்பெரிய பலவீனம் அவசரப்பட்டு தோழர்களை பகைத்துக்கொள்வது. தனது காதல் மனைவியின் அண்ணன் எச். என். பெர்ணான்டோவுடனும் கருத்துமுரண்பட்டு பகைத்துக்கொண்டார். அவருக்காகவும் அவரது இயக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இடதுசாரி தொழிற்சங்கவாதி பாலாதம்புவையும் பிற்காலத்தில் பகைத்துக்கொண்டார்.


கட்சியின் பிரசாரக்கூட்டங்களில் தரக்குறைவாகவும் சில சந்தர்ப்பங்களில் பேசி மூன்றாம்தர அரசியல்வாதியானார். அச்சமயங்களில் அவரை தனியே சந்தித்து அப்படிப்பேசவேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றேன்.
அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்த ஸ்ரீமா மீது அவருக்கு கடும்கோபம் இருந்தது. அந்தக்கோபத்தை அவரது மருமகன் விஜேகுமாரணதுங்கவிடமும் காண்பித்தார்.
ஸ்ரீமாவின் மூத்த மகள் சுநேத்திரா, குமார் ரூபசிங்கவை விவாகரத்து செய்தார். நடிகர் விஜயகுமாரணதுங்கா இரண்டாவது மகள் சந்திரிகாவை மணம் முடித்தார்.
இந்தப்பின்னணிகளுடன் அந்தக்குடும்பத்தை எள்ளிநகையாடினார்.


மாதம் ஒரு முறை மாப்பிள்ளை மற்றும் குடும்பம் என்றும். நழுவாவை (நடிகரை) மாப்பிள்ளையாக்கிய குடும்பம் என்றும் வசைபொழிந்தார்.


அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதுபோன்று ஜே.ஆரும். ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்றும் அவர் தனது மாளிகையிலிருந்து தனது உள்ளாடையையும் எடுத்துக்கொண்டு வெளியேறவேண்டும் என்றெல்லாம் மட்டரகமான பேச்சுக்கள் பேசினார்.


“ தோழர்… உங்கள் வாதம் தவறு. சோவியத்தின் பிரஷ்நேவ், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, சீனாவின் மா ஓ சேதுங் முதலானவர்களுக்கு வயது என்ன?” தயவு செய்து நிதானமாகப்பேசுங்கள்” என்பேன்.


தாடியை வருடிக்கொண்டு சிரிப்பார்.
“தமிழ் விடுதலை இயக்கத்தலைவர்களுடனும் விஜேகுமாரணதுங்க, விக்கிரமபாகு கருணாரத்தின, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடனும் முதலாளித்துவக்கட்சிகளிலும் வலதுசாரிகளிடத்திலும் இருக்கும் முற்போக்கு சக்திகளுடனும் குறைந்தபட்ச தீர்மானங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தொடருங்கள்.

வடக்கிலும் தெற்கிலும் புரிந்துணர்வை ஏற்படுத்தினால் நீங்கள் எதிர்பார்க்கும் தொழிலாள விவசாய பாட்டாளி மக்கள் புரட்சியை உருவாக்க முடியும்,  உள்நுழையும் ஏகாதிபத்தியத்தையும் இனவாதத்தையும் முறியடிக்கமுடியும்” என்று அவருடன் வாதிடுவேன்.


“முதலில் உங்கள் தமிழ் இயக்கங்களை ஒன்றிணையுங்கள். அதன்பிறகு பார்ப்போம்” என்பார்.


வேற்றுமையில் ஒற்றுமைகண்டு இயக்கத்தை வளர்க்கத்தவறியவர்கள் வரிசையில் விஜேவீராவும் இணைந்துகொண்டதும் வரலாற்றின் சோகம்.
இறுதியாக 1982 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் அவரது ரூபவாஹினி தொலைக்காட்சி பிரசார உரையை தமிழில் மொழிபெயர்க்க அவருக்கு உதவும்போது சந்தித்தேன்.


தமிழில் அவரது உரையை அவரே தொலைக்காட்சியில் நிகழ்த்தினார்.


புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் ஜே. வி. பி. யின்.(1971 ஏப்ரில் கிளர்ச்சியில்) தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது. மீண்டும் 1987 இல் பாடம் கற்றது.
தற்போது எம்மவர்கள், 2009 மே மாதத்தின் பின்னர் புலிகள் இயக்கத்திடமிருந்து பாடம் கற்றுக்கொள்கின்றனர்.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பாடம்கற்றுத்தந்த இந்த இரண்டு தலைவர்களும் இப்போது எங்களிடம் நினைவுகளாக இருக்கிறார்கள்.


பாடங்களினால் பயன் கிடைத்ததோ இல்லையோ பாடங்கள் வரலாறாகியதுதான் மிச்சம்.

இரண்டு தலைவர்களினதும்  இறுதிக்கணங்கள் இன்றும் பேசுபொருளாகியிருக்கின்றன.

அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்  என்று  கவிஞர்  சொன்னாலும், அவ்வாறு நிகழ்ந்ததா…?

யோசிப்போம்….!

( தொடரும் )

 

  

No comments: