இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி.
அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார்.
அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய நாவலை பேராசிரியர் முகம்மது உவைஸ் தமிழுக்கு வரவாக்கியதையடுத்து, பின்னாளில் மடோல்தூவ நாவலை மடோல்த்தீவு என்ற பெயரில் சுந்தரம் சௌமியன் மொழிபெயர்த்தார். அத்துடன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் பற்றற்ற வாழ்க்கை நூலை சுந்தரம் சௌமியனும் சில சிறுகதைகளை பேராசிரியர் சபா. ஜெயராசாவும் தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே பல சிங்கள இலக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், பத்திரிகையாளரும், இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றவருமான இரா. சடகோபன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் அபே கம என்ற தன்வரலாறு சார்ந்த கிராமத்தைப்பற்றிய கதையை எங்கள் கிராமம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
இதனை இலங்கை இராஜகிரிய சரச பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்ப்புத்துறை என்பது இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒரு அரிய கலைவடிவமாக இருந்தபோதும், அதற்கு உரிய மதிப்பளித்து அங்கீகரிக்கும் மனப்பாங்கு இன்னமும் ஏற்படவில்லை. அப்படி இருந்தும் அத்துறையில் சளைக்காது ஈடுபடும் இலக்கிய நெஞ்சங்களுக்கே ஆதங்கத்துடன் இந்நூலை சடகோபன் சமர்ப்பணம் செய்துள்ளார்.
இச்சமர்ப்பணத்தில் பொதிந்துள்ள உண்மை உணரத்தக்கதே.
மொழிபெயர்ப்பு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் படைப்பாளுமையையும் வேண்டிநிற்பது.
“ மூலமொழியின் பண்பாட்டோடு ஒன்றிணைந்து தோய்ந்து மேலெழாது இலக்கு மொழிக்கு கலைப்படைப்பைக் கொண்டுவரும் செயற்பாடு மிகவும் சிரமமான பயிற்சியை வேண்டி நிற்கிறது “ என்று இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா பதிவுசெய்துள்ளார்.
சடகோபன், பத்திரிகையாளராகவும் இயங்கியவராகையால், இந்நூலின் மூலத்தின் ஆத்மாவை சிதைக்காமல், எளிய நடையில் வாசகரிடம் ஊடுறுவும் வகையில் மொழிபெயர்த்துள்ளார்.
கொக்கலை கிராமத்தின் நிலக்காட்சிபற்றிய சித்திரிப்பு அற்புதமான படிமங்களாகியுள்ளன.
அக்காலத்து மக்களின் வாழ்வுக்கோலம், பண்பாட்டு விழுமியங்கள், தொழில் சார்ந்த உறவுகள்> நம்பிக்கைகள், மரச்சிற்பக்கலை, மற்றும் கிராமத்தாரின் ஆடற்கலைகள் என்பனவும் இந்நூலில் இழையோடியிருப்பதனால், கிராமத்து வாழ்வின் ஆத்மா எம்மை ஆகர்ஷிக்கிறது.
கிராமங்கள், உலகமயமாதலால் மாறிக்கொண்டிருக்கிறது என்ற கருத்தியல் சமகாலத்தில் பேசுபொருள். இதுபற்றி திரைப்படங்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
மார்ட்டின் விக்கிரமசிங்கா பல தசாப்தங்களுக்கு முன்பே, கிராமங்களில் ஏற்பட்டுவந்த மாற்றங்களை சித்திரித்து கம்பெரலிய என்ற புதினத்தையும் எழுதியிருப்பவர். இது தமிழ், ஆங்கிலம் உட்பட வேறு சில மொழிகளிலும் வெளியானது. அதனால்தான் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அக்கதையை திரைப்படமாக்கி பல விருதுகளையும் பெற்றார்.
எங்கள் கிராமம் நூலை படிக்கும் வாசகர்கள், தங்களது இளமைக்கால வாழ்வை மனதில் நனவிடை தோய்தலாக அசைபோடுவார்கள் என்பதும் நிச்சயம்.
( நன்றி: இலங்கை - எங்கட புத்தகங்கள் இதழ் )
----0----
letchumananm@gmail.com
No comments:
Post a Comment