பங்கர் எங்கட கதைகள்.......


கானா பிரபா


 

மரண வேதனை அது அனுபவிப்பவனுக்கு மட்டுமல்ல, உய்த்துணர்வோனுக்கும் கடத்தப்படக்


கூடியது, அப்பேர்ப்பட்டது ஈழத்தின் போரியல் வாழ்வு.


“புத்திர சோகம் பெருஞ் சோகம்” என்பார் எங்கட அப்பா.

போர் கனத்துப் போன முள்ளிவாய்க்கால் முனையில் ஒரு தாயும், மகனுமாக.

மத்தியானம் மீன் வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கிறான் மகன்.

முள்ளிவாய்க்கால் உச்சி வெயிலில், பன்னிரண்டு மணிக்கு வரிசையில் நின்றால் நாலு மணிக்குத் தான் மீன் கிடைக்கும். அந்த வரிசைக்கு மேல் ஷெல் விழுந்தும், சன்னம் பட்டும் செத்தவர்களும் உண்டு. பின்னேரம் நாலுமணிக்கு மீன் வாங்கப் போன தாய் அதை அவிச்சுக் கொடுத்துச் (மீன் ஆக்க ஏதும் இல்லை) சாப்பிட வைத்த தாய்க்குத் தெரியுமா தன் பிள்ளை இன்னும் 4 மணி நேரத்தில் பங்கருக்குள் செத்துப் போவான் என்று?

அந்தத் தாயின் கதையைக் ( நானும் மகனும் – தபோதினி) காலையில் படித்தவன் மாலை வேலையால் வீடு திரும்பும் வரை அந்த தாயையும், பிள்ளையையும் நினைத்து “ஐயோ ஐயோ” என்று அனாத்தியது உள் காயமாய். இப்போது என்னால் எழுதக் கூட முடியாத அளவுக்கு மன உளைச்சலோடு தான் இந்தப் பகிர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

இவ்விதம் 30 போரியல் வாழ்வனுபவங்கள் 26 ஈழத்துச் சகோதர, சகோதரிகளால் பகிரப்பட்டவை

“பங்கர் -எங்கட கதைகள்” என்ற நூல் வெற்றிச் செல்வி தொகுப்பில்  எங்கட புத்தகங்கள் என்ற பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அமைந்திருக்கின்றது.

“எங்கட கதை” என்றால் அது துளியும் புனைவு சேராத நேரான வாழ்வியல் அனுபவங்கள். அது “கதை” என்று கொச்சையாக அர்த்தப்படுவதல்ல. ஈழத்தவர் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு பெரிய நாவல் அளவு ரணங்களையும், வடுக்களையும் கொண்ட பெரிய திரட்டாக இருக்கும். அதில் ஒரு சிறு துளி தான் இது. ஆனால் இந்த அனுபவங்களையே தாங்கவொண்ணாத மனச் சுமையைக் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் இன்னமும் தம்முள் சுமந்து கொண்டு வாழும் அந்தச் சகோதரங்களை நினைக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற துரும்பு நிலைக்குப் போய் விடுகிறது மனது.

இன்று 11 ஆண்டுகள் கடந்து முடிவு கட்டப்பட்டதாகக் கொள்ளப்படும் ஈழப்போரின் இறுதிக் காலங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளும் களத்தில் இருக்காவிட்டாலும் 1986 ஆம் ஆண்டு ஈழத்தில் முதல் விமானக் குண்டு வீச்சு நடந்த அனுபவத்தை நேரடியாகச் சந்தித்ததை முன்பு பதிவாக்கியிருக்கிறேன், இங்கே

இரை தேடும் இயந்திரக் கழுகுகள்


இதன் பின்னான அடுத்த 23 ஆண்டுகள் வித விதமான போர் விமானங்கள், வித விதமான விமானக் குண்டு வீச்சுகள் என்று எல்லாவற்றையும் அனுபவித்து, கை, கால்களை இழந்து, தன் சொந்தத்தை, உற்றத்தை இழந்தோர் இல்லாதோர் இல்லை எனுமளவுக்கு ஈழத்தவர் வாழ்வில் சன்னமாகத் தைத்த நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்.

1986 ஆம் ஆண்டு முதல் விமானக் குண்டு வீச்சின் பின் ஈழமெங்கும் பங்கர் என்னும் பதுங்கு குழிகளை அமைத்து வாழ்வது நடைமுறை வாழ்வியலில் ஒன்றாகிப் போனது.

அதையும் கூட இங்கே பதிவாக்கியிருக்கிறேன், இங்கே

ஒளிச்சுப் பிடிச்சு...!


இந்த மாதிரியான பங்கர் வாழ்வியலில் தாம் சந்தித்த போரியல் அனுபவங்களின் திரட்டாக “பங்கர் – எங்கட கதைகள்” அமைந்திருக்கின்றது.

அவற்றைப் படிக்கும் போதே முகமறியாச் சகோதரங்கள் நம் முன்னே வந்து சாட்சியம் பறைவது போன்றதொரு மெய் எழுத்து.

ஒவ்வொரு அனுபவப் பகிர்வுகளையும் படித்த பெருமூச்சுடன் ஒரு வலி எழுப்ப அடுத்த அனுபவம் போனால் சம்மட்டியால் அடித்து வீழ்த்தியது போல இன்னொன்று. பல்வேறு வயதுக்காரர், பல்வேறு சூழல்கள் என்று இந்த ஒவ்வொருவரின் அனுபவங்களும் ஒன்றுக்கொன்று வெவ்வேறாய்.

போர்க்காலத்தில் ஈழத்தில் புதிது புதிதாக அனுபவித்த யுத்த வலிகளை ஏற்படுத்திய ஆயுதங்களும், விமானங்களும், பங்கர்களுமாக போர்க்கால அகராதி போலவும் இந்த நூல் இருக்கின்றது.

பதுங்கு குழி காலத்தில் அச்சம் நிறைந்த அந்தத் தருணத்திலும் புகைப்படங்களாய்ப் பதியப்பட்டவையும் திரட்டப்பட்டதோடு, இந்த “பங்கர்” வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளையும் சித்திர வெளிப்பாடாகப் பல்வேறு ஓவியர்கள், வித்தியாசமான சித்திர வெளிப்பாடுகள் என்றும் திரட்டியிருப்பது புதுமையானதொரு முயற்சி.

“கோழிக் கூட்டுக்குள் பாம்பு நுழைகையில் அவை வெருண்டடித்துப் படபடத்து சிறகடிப்பது போல என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோவொரு சத்தம்” என்னும் வேல்விழியின் அனுபவ உவமை,

த.கோணேஸ்வரனின் “பங்கர் வெட்டப் போன அனுபவம்”,

இந்திய இராணுவ காலத்தில் சந்தேகத்தால் கைது செய்ப்படும் அப்பாவி இளைஞரின் தேவைக்கும் பயன்பட்ட பதுங்கு குழி (புதியவன்), “பங்கரை முன்னமே வெட்டியிருந்தால் ஜோர்ஜ் மாஸ்டர் செத்திருக்க மாட்டாரோ?” என்ற குலசிங்கம் வசீகரனின் ஆதங்கம்,

தன் அம்மம்மாவின் கதையாகச் சொல்லிக் கொண்டு போய் புக்காரா குண்டு வீச்சில் நிறுத்தும் சிவச்சந்திரன்,

“பொம்மராப் பார்த்து எனக்கு இரங்கி, வேறை எங்காவது குண்டு போட்டுட்டுப் போக என்ற அங்கத நடையில் கமலா வாசுகி,

(பொம்மர் என்பது ஒரு வகை போர் விமானம்),

“தலைகள் சிதறியும், அறுபட்டும் கிடந்த மாடுகளின் எச்சங்களின் மீது....” என்று தம் செல்வம் (மாடுகள்) இழந்த கதை சொல்லும் வெற்றிச் செல்வி, பசிக்களைப்போடு, கொட்டும் மழையில் இடுப்பு வரை நிறைந்த பங்கர் வாசலில் நின்று களமுனையில் காவல் காத்த எம் பெண் தெய்வப் போராளிகளில் ஒரு நாள் அனுபவம் சொல்லும் ஆதி.வி. இன்னொன்றில் பங்கர் படிகளில் மடிந்த சபேசனப்பா பற்றியும், பன்னிரண்டு வயசு சித்திரா தன் தாய்க்கும், தனக்குமாகத் தன் பிஞ்சுக் கைகளால் வெட்டிய பங்கரில் ஒரு சமயமேனும் தங்க முடியாத அவலக் கதை,

“பங்கருக்குள்ளேயே புதைந்து போன எனகு குடும்ப அங்கத்தவர்கள் நான்கு பேருடன்....” இவ்விதமே ஆரம்பித்து பதுங்கு குழிக்குள் விமானக் குண்டுகளால் நசிந்து போன மன நலக் காப்பகத்துப் பெண்கள் பற்றிப் பேசும் அருவி,

“இது சாதாரண பங்கரே இல்லை டொக்டர், எங்கட நினைவுகளைச் சுரக்கும் ஊற்று” மிதயா கானவியின் பதிவில் தன் மனைவியின் நினைவுகளோடு அவள் தங்கியிருந்த பங்கரைக் கோயிலாகப் பூசிக்கும் கணவன், அந்தக் காலத்துப் போரியல் அவலங்களைத் தங்கள் மூப்பு மொழிகளிலேயே வசவு வைத்தும், அல்லலுற்றுக் கதறிக் கொள்ளும் மூத்தோர் நினைவுகளைக் கிளப்பிய ஈழத்தாயாச்சி (ஈழ நல்லூர் கண்ணதாசன்), இப்படியாக ஒவ்வொருவர் நினைவுகளினூடே சம காலத்தில் இத்துன்பியலை அனுபவித்த ஈழத்தவர் ஒவ்வொருவரும் பொருத்திப் பார்க்க முடியும்.

“ஒரு ஐயா செத்துக் கிடக்கிறார்”

“எங்க”

“நான் அவருக்கு மேல தடக்குப்பட்டு விழத்தான் நீங்களும் விழுந்தீங்கள், சரி வாங்கோ ஆமி பாக்கிறான் ஓடுவம்”

2009 ஆம் ஆண்டின் மே நடுப்பகுதி வரை ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மடிந்தவர்களைக் கடந்தவர்கள் இது போன்ற (அடங்கா தவனம் – அருணா) அனுபவங்களைத் தினமும் சந்தித்துக் கடந்தவர்கள். அதில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இல்லாத பாரபட்சமற்ற துன்பியல் காலம்.

“பங்கர் என்ற ஒரு விடையத்தை மையமாகக் கொண்டு புனைவுகள் இல்லாமல், தாங்கள் சந்தித்த சோகங்களையும், இழப்புகளையும், அவர்களது கடின உழைப்பையும், பயணத்தையும் பேசி நிற்கின்றன” என்று பதிப்புரை வழங்கும் குலசிங்கம் வசீகரன், 2020 இல் நிகழ்த்திய “எங்கட புத்தகங்கள்” புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையே இந்தப் பதிப்பாக்க முயற்சிக்கு உந்துதலாக அமைந்தது என்கிறார்.

“ஈழத்தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த வாழ்க்கையாகியிருந்த பதுங்குகுழிக் காலங்களை மீட்க முடிந்ததில் நிறைவே” என்கிறார் தொகுப்பாசிரியர் சக படைப்பாளர் வெற்றிச்செல்வி.

அதைப் பரிபூரணமாக உணர முடிகிறது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அணுக்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்ட போது.

பங்கர் வாழ்வு நம்மில் பலருக்கு விமானக் குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது, அதனால் தான் இந்த நிமிடம் வரை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்

பங்கர் பொறிந்து அங்கேயே உள்ளிருந்த ஆட்கள் சமாதியான கதைகள்,

பங்கருக்கு மேலேயே குண்டு விழுந்து இரத்தக் குளமாய்ப் போன கதைகள்,

பங்கருக்குள் விளையாடப் போன பிள்ளைகளை பாம்பு, பூரான் கடிச்சுச் செத்துப் போன கதைகள் இவற்றோடு

முள்ளிவாய்க்கால் காலத்தில் குண்டடி பட்டு

சற்று முன் வரை பேசிக் கொண்டிருந்த உறவுகளைக் காவெடுத்த சூழலில் அழக்கூட நேரமின்றி அந்த பங்கருக்குள்ளேயே போட்டு மூடிவிட்டு ஓடிப் போன வரலாறு என்று எல்லாமுமாய் இந்த “பங்கர்” நிறைந்திருக்கின்றது.

இவற்றோடு கடைசிக் குண்டு பதம் பார்ப்பதற்குள்

குழந்தையை பங்கருக்குள் தனியாக விட்டு விட்டு எங்கே விட்டு விட்டு வந்தோம் என்று கூடத் தெரியாமல் விக்கித்து ஆமிக்காறனின் காலடியில் விழ்ந்து கதறிய அந்த இளம் தாயின் ஓலம் மரண ரணமாக

“பங்கர் – எங்கட கதைகள்”


No comments: