நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா

சித்திரையே நீயும்  சிறப்புடனே வரவேண்டும் 

இத்தரையில் யாவருமே இனியசுகம் பெறவேண்டும்

கொத்தாகப் பலியெடுத்த கோரமுடை கொடுநோயும்

திக்குத்திசை தெரியாமல் தெறித்தோடி மடியவேண்டும்  !

மனவுறுதி மக்களது மனமெல்லாம் எழவேண்டும்
வாழ்வழித்த பெருநோயும் மண்விட்  டகலவேண்டும் 
இழந்தமுதல் தொழியெல்லாம் ஏற்றமாய் வரவேண்டும்
இதற்கெல்லாம் தீர்வுகொண்டு எழுந்துவா சித்திரையே  !

பழையபடி கொண்டாட்டம் பட்சணங்கள் செய்யவேண்டும்
பலபேரும் பகிர்ந்துண்டு பட்டாசும் வெடிக்க வேண்டும் 
கலகலப்பும் கையணைப்பும் களிப்புடனே வரவேண்டும்
சித்திரையே இத்தனையும் எடுத்துநீ வரவேண்டும் ! 

புத்தாடை வாங்கிடப் புறப்பட்டுப் போகவேண்டும்
மத்தாப்புக் கடையெங்கும் வந்துமே குவியவேண்டும்
மொத்தமுள்ள உறவெல்லாம் முழுமையாய் கூடவேண்டும்
சித்தமெலாம் மகிழ்வெய்த சித்திரையே நீவருவாய் ! 

இனிப்புக் கடைக்கு எல்லோரும் போகவேண்டும்
தடுக்கின்ற  தடுப்பனைத்தும்  தலைதெறித்து ஓடவேண்டும்
குடும்பங் குடும்பமாய் குதூகலமாய் போகவேண்டும்
நலந்திகழ மனம்மகிழ  நீவருவாய் சித்திரையே  !

வான்வழியாய் தரைவழியாய் மனமகிழச் செல்லவேண்டும்
நாமணியும் முகக்கவசம் நாட்டைவிட்டுப் போகவேண்டும்
தேவையற்ற கட்டுப்பாடு தேசம்விட்டு அகலவேண்டும்
சென்சென்று சேர்ந்திருக்கச் செய்திடுவாய் சித்திரையே  ! 

இணையவழி நடக்கின்ற அத்தனையும் இல்லாமல்
 பழையபடி மண்டபத்தில் பக்குவமாய் நடக்கவேண்டும்
கருத்தரங்கம் பட்டிமன்றம் கலகலப்பாய் வரவேண்டும்
காத்திருக்கும் மக்களுக்குத் தீர்ப்புச்சொல்வாய் சித்திரையே  ! 

ஆலயத்தில் விழாக்கள் அத்தனையும் வரவேண்டும்
அடியார்கள் அமைதியாய் ஆண்டவனைத் தொழவேண்டும்
நீர்நிலைகள் சென்று தீர்த்தமாடி வரவேண்டும்
நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே  ! 


 

No comments: