படையினருக்காக தனியார் காணி அளவீடு; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்
இலங்கை வர வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை
சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021
ரஞ்சனின் பதவி அறிவிப்பால் சபையில் அமளி துமளி
படையினருக்காக தனியார் காணி அளவீடு; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்
யாழ். தென்மராட்சி ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியார் காணியை அளவீடு செய்யும் நில அளவைத் திணைக்களத்தின் முயற்சி பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் வடக்கு ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 50ஏக்கர் காணியை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்வதற்கு நேற்று சென்றிருந்தனர்.
எழுதுமட்டுவாழ் வடக்கு 52ஆவது படைத் தலைமையகம் அமைந்துள்ள தனியார் காணியே கையகப்படுத்தி இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்து எழுதுமட்டுவாழ் வடக்கு 52வது படைத்தலைமையகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணியை அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினரை போராட்டக்காரர்கள் காணியை அளக்க விடாது தடுத்தனர். இந்நிலையில் அங்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து தான் உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இருப்பினும் பிரதேச செயலரின் உறுதிமொழியையும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இருவர் படை முகாமிற்குள் சென்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏ-9வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படைமுகாம் உள்ளே சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வெளியேற வேண்டும், மீண்டும் இவ்விடத்தை நாடக் கூடாது என்ற கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 30நிமிடங்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சாவகச்சேரி விசேட, யாழ்.விசேட நிருபர்கள் நன்றி தினகரன்
இலங்கை வர வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை
- உடன் அமுலுக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்பு
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிமேல் நாட்டிற்குள் நுழைய வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, கடந்த வருடம் (2020) வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமான இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். அதன் பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில், தங்களது சொந்த செலவில் நாடு திரும்ப தயாராக உள்ளவர்கள், வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு குறித்த அனுமதி அவசியமில்லையென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021
- முதலிடத்திற்கு தெரிவானவர் விவாகரத்து பெற்றவர் என கிரீடம் நீக்கம்
- கிரீடம் நீக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி
- மீண்டும் அவருக்கே கிரீடத்தை வழங்க முடிவு
- கிரீடத்தை நீக்கிய முன்னாள் திருமதி மீது சமூகவலைத்தளத்தில் விமர்சனம்
நேற்று (04) இரவு இடம்பெற்ற திருமதி இலங்கை 2021 (Mrs. Sri Lanka 2021) போட்டி சர்ச்சையில் நிறைவடைந்துள்ளது.
போட்டியில் 20ஆம் இலக்க போட்டியாளரான திருமதி புஷ்பிகா டி சில்வா, நடுவர்களால் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன், கடந்த ஆண்டு உலக திருமதியாக தெரிவு செய்யப்பட்ட கரோலின் ஜூரியினால் கிரீடம் அணிவிக்கப்பட்டு, வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இந்த சர்ச்சை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
தற்போது திருமதியாக வெற்றி பெற்றிருப்பவர் விவாகரத்து பெற்றவர் எனவும், திருமதி போட்டியில் கலந்துகொள்பவர் விவாகரத்து பெற்றிருப்பதானது, போட்டியில் பங்குபற்றுவற்கான தகுதி இழப்புக்கு ஒரு காரணம் எனவும், மேடையில் ஏறிய முன்னாள் திருமதி கரோலின் ஜூரி அறிவித்தார்.
அதற்கமைய, தற்போது இரண்டாமிடத்திற்கு தெரிவானவரே வெற்றி பெற்றுள்ளார் எனவும், அக்கிரீடம் அவருக்கே உரியது எனவும் அறிவித்தார்.
இதன்போது, நிகழ்வில் கூச்சல் ஒலிகள் ஒரு புறமும், மறு புறத்தில் கரகோச ஒலியும் எழும்பியதோடு, வெற்றியாளர்களை நோக்கிச் சென்ற, நடப்பு உலக திருமதி கரோலின் ஜூரி முதலிடத்திற்கு தெரிவான, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்து கிரீடத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அத்துடன், திடீரென அங்கு வந்த ச்சூலா பத்மேந்திர எனும் பெண், கிரீடத்தை வேகமாக கழற்ற முயற்சியில் ஈடுபட்ட நிலையில், கரோலின் ஜூரி அவரை அவ்வாறு செய்ய வேண்டாமென தடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சிரமத்திற்கு மத்தியில் கிரீடத்தை கழற்றிய கரோலின் ஜூரி, இரண்டாமிடத்திற்கு தெரிவான பெண்ணுக்கு அதனை அணிவித்தார். பின்னர் மூன்றவாது இடத்திற்கு தெரிவான பெண் உள்ளிட்ட மேடையில் இருந்த நால்வரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து புஷ்பிகா டி சில்வா மேடையிலிருந்து ஆவேசமாக வெளியேறிச் சென்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு ஆதரவாக பெரும்பாலானோர் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றர்.
அத்துடன், பெண்களின் முன்னேற்றம், ஊக்குவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்து வரும் கரோலின் ஜூரி, மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதனை விட சிறப்பாக அதனை கையாண்டு அவ்விடயத்தை சுமுகமாக நிறைவுக்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன், கரோலின் ஜூரி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இவ்விடயம் தொடர்பில் சரியான தகவல்களை ஆரம்பத்தில் பெற்றிருந்தால், அல்லது அவர்கள் தொடர்பில் சரியான பின்புலத்தை ஆராய்ந்திருந்தால் அல்லது உரிய விதிமுறைகள் தொடர்பில் சரியான விளக்கத்தை போட்டியாளர்களுக்கு வழங்கியிருந்தால் இந்த சர்ச்சை போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே நிறைவுக்கு வந்திருக்கும் என கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த கிரீடத்தை கழற்ற மேற்கொண்ட முயற்சியில், குறித்த பெண்ணின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கரோலின் ஜூரியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், புஷ்பிகா டி சில்வா இன்னும் தனது கணவரிடமிருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மேடையில் தன்னை காயப்படுத்தும் வகையில், கரோரின் ஜூரி மற்றும் ச்சூலா பத்மேந்திர நடந்து கொண்டதாக, புஷ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கிரீடத்தை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீண்டும் புஷ்பிகா டி சில்வாவிற்கே வழங்க முடிவு செய்துள்ளனர்.
திருமதி ஶ்ரீ லங்கா நிகழ்ச்சியின் தேசிய பணிப்பாளர், சந்திமால் ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், புஷ்பிக டி சில்வா சட்ட ரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும், அதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றார்.
நடுவர் குழாமில் ஒருவரான கரோலின் ஜூரி, இறுதி நிகழ்வு வரை புஷ்பிகா டி சில்வா தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயினும் பின்னர் அவர் விவாகரத்து பெற்றாலும் அது அவரது தனிப்பட்ட முடிவே தவிர, தற்போது இடம்பெற்றுள்ள நிகழ்வு வரை சட்டத்தின் அடிப்படையில் அவர் விவாகரத்து ஆகாதவர் என்பதால் அவர் வெற்றியாளரே எனவும், சந்தியமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனக்கு பொது வெளியில் ஏற்பட்ட அவமானம் தொடர்பான இழப்பீடு தொடர்பில் சட்ட ரீதியில் ஆலோசனை பெற்று வருவதாக, புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரஞ்சனின் பதவி அறிவிப்பால் சபையில் அமளி துமளி
ஆளும், எதிர்க்கட்சிகளுக்கிடையே கடும் வாக்குவாதம்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் வெளியிட்ட அறிவிப்பால் எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆளும், எதிர் கட்சிகளுக்கு இடையில் வாத பிரதிவாதங்களும் ஏற்பட்டன.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டபோது, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்ஜன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையகத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளதாகவும், இதற்கமைய அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனத்துக்கான ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறினார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் அறிவிப்பை கேள்விக்கு உட்படுத்தினார். இதன்போது அவர் கூறியதானது, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி ரஞ்ஜன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதாக கூறியுள்ளீர்கள். மூன்று மாதங்கள் அவர் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்ற காரணத்தினை அடிப்படையாக வைத்தே இந்த தீர்ப்பை அறிவித்துள்ளீர்கள். ஆனாலும் ரஞ்ஜன் ராமநாயக்கவை சபைக்கு வரவழைக்கும் பிரேரணையை நாம் மூன்று வாரத்திற்கு முன்னரும் முன்வைத்தோம். எனினும் நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயமொன்றை கையாள முடியாது என அன்று நீங்கள் கூறினீர்கள். இப்போது தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு உட்படுத்த முடியும். எனவே இந்த செயற்பாடுகள் முடிவுறும் வரையில் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற பதவி தக்கவைக்கப்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர்,- இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் பிரதி ஒன்றும் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானமே இப்போது சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது வெறுமனே பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. முதலில் நீதிமன்ற அறிவிப்பை நீங்களும் முழுமையாக வாசியுங்கள் என்றார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர்,- சபாநாகர் அவர்களே, நீங்கள் அறிவித்த தீர்ப்பு எவரதும் பரிந்துரைக்கு அமைய வாசிக்கவில்லை. அரசியல் அமைப்புக்கு அமைய நீங்களே முன்வைத்துள்ள அறிவிப்பே இது. அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி அவர் சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளீர்கள். அவரை பாராளுமன்றத்திற்கு அனுமதியுங்கள் என நாம் வலியுறுத்திய வேளையில் இதே அரசியலமைப்பின் பிரிவு 66 (e) அடிப்படையில் அதனை நிராகரித்தீர்கள். இப்போதும் அதே 66 (d) பிரிவை வைத்துக்கொண்டு அவரது பாராளுமன்ற பதவியை பறித்துள்ளீர்கள் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் நாமல் ராஜபக் ஷ,- சபாநாயகர் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளீர்கள். இதனை இத்தோடு முடித்துக்கொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு அல்லாது ஒவ்வொரு நாளும் ரஞ்ஜன் ராமநாயக்கவை பற்றி பேசிக்கொன்டிருந்தோமென்றால் எப்போது இதனை முடிப்பது. ரஞ்ஜன் ராமநாயக்க வெளியில் நீதிமன்றத்தை விமர்சிக்கின்றார், இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்திற்குள் இருந்துகொண்டு நீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர் என்றார்.
தான் தீர்ப்பு ஒன்றினை வழங்கி விட்டேன், இனிமேல் மாற்றிக்கொள்ள முடியாது என சாபாநாயகர் அறிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். சபாநாயகர் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாக விமர்சித்து மேசைகளில் தட்டி சபையில் பெரும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் சபை அமர்வுகளை முன்னெடுத்து செல்ல சபை முதல்வர் அறிவித்த போதிலும் சபையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு செயற்பாடுகள் அமைந்தன. இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அளவுக்கு அதிகமான ஜனநாயகமாக செயற்படுகின்றார் என ஆளும் கட்சியினர் கூறிய போது அதற்கு எதிர்ப்பை தெரிவித்து எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தீர்ப்பை கடுமையான விமர்சித்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் அளவில் சபை செயற்பாடுகள் குழம்பியது.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
நன்றி தினகரன்
No comments:
Post a Comment