என் மனதை கொள்ளை கொண்ட காதல் காவியம் Sufiyum Sujatayum திரைப்படம் செ .பாஸ்கரன்

.


 என் மனதை கொள்ளை கொண்ட காதல் காவியம் சுபியும் சுயாதையும். மலையாள திரைப்படமான இந்த திரைப்படம் ஒரு காதல் கதையை சொல்லுகிறது. எத்தனையோ திரைப்படங்கள் காதல் கதையை சொல்லி இருக்கின்றது, இங்கும் ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும் இந்து பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காதல்தான். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை எழுதி நெறியாள்கை செய்த ஷாநவாஸ் அவர்கள் ஒரு கவிதை போல நகர்த்திச் செல்கிறார் இந்த திரைப்படத்தை.

நடனமும் சங்கீதமும் இணைகின்றது. ஒரு பெண் எவ்வளவு ஆழமாக காதலிக்கின்றாள், அந்த காதலுக்காக எந்த எல்லைக் கெல்லாம் சென்றாள் என்பதை ஒரு தெளிந்த நீரோடை போல் ஓடி மனதை வருடிச் செல்கிறது. முஸ்லிம் இளைஞனாக வருகின்ற தேவ் மோகன் (சுபி ) இந்தப் படத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாடலும் அதன் இசையும் மனதை கொள்ளை கொள்ளுகின்றது. பள்ளிவாசலில் ஓதப்படும் அல்லாவு அஃபர் இவ்வளவு அழகாக ஒரு கவிதையைப் போல கொடுத்து இருக்கின்றார் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்.

காதலை சுமந்து கொண்டு, மனதினால் அவனை மறக்க முடியாமல் பிரிந்துசென்ற அந்த இளம்பெண் சுஜாதை (Aditi Rao ) மனதிலே அந்த காதல் அழியாமல் இருக்கின்றது. புதிய குடும்பம், புதிய உறவுகளில் அவளுடைய வாழ்வு, எந்தவிதமான தடையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவளது கணவன் அவளிடம் இருக்கும் காதலினால் மன அழுத்தத்தோடு குடும்பம் நடத்துகின்ற ஒரு கதாநாயகன் (Jayasuria ) திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகப்படுத்தும்போது அட்டகாசம் பண்ணி அறிமுகப்படுத்துவார்கள் இங்கே கதாநாயகன் ஜெயசூர்யாவை அறிமுகப்படுத்துகின்ற முறையே தனியாகத்தான் இருக்கின்றது. திருமணத்திற்காக வருபவரிடம் ஊர் மக்கள் வழமைபோல் அவர்கள் கொண்டிருக்கும் காதலை பேச்சோடு பேச்சாக போட்டுவிடுகிறார்கள் அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவன் மணம் முடிக்கின்றான் நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்.



அவள் கொண்ட காதலிலும் அவளின் புதிய வாழ்விலும் போராட்டம் நிறையவே இருக்கின்றது. மதம் மனிதருக்குள் எப்படியெல்லாம் பிரிவை தருகின்றது என்பதை திரைப்படம் சாடடை கொண்டு விளாசுகிறது . தன் மனதிலே வாழ்ந்தவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவள் துடிக்கின்ற துடிப்பு அந்த காதலுக்கு முன்னால் நிற்க முடியாது நிலைகுலைந்த கணவன், அவளை அழைத்துச் சென்று அவனுடைய மரணச் சடங்கில் பங்கு பற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சிகள், அது கைகூடாமல் போகின்ற போது அடக்கம் செய்யப்பட்ட அந்த பிணத்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என அவள் தவிக்கும் தவிப்பு , அதற்காக அவள் போகின்ற எல்லைகள், காதலின் ஆழத்தை இவ்வளவு ஆழமாகவும் அழகாகவும் காட்ட முடியுமா என்றால் அது இந்த ஷாநவாஸ் அவர்களால் மட்டும்தான் முடிந்திருக்கின்றது என்று கூற முடியும்.

எல்லாம் நிறைவடைந்த பின் காதலன் பரிசாக கொடுத்த செபமாலையை மரணக் குழியில் போடுகின்ற போது வருகின்ற தெளிவோடு கணவனோடு திரும்பிச் சென்றபோது அவளுடைய மனம் இலேசாக இருக்கின்றது என்பதை மிக அற்புதமாக காட்டுகின்றார். கணவன் அவள் கையை தொடுகின்ற போது அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டு அவனுடைய தோளில் சாயும் போது அவளுடைய காதல் காதலனோடு மட்டுமல்ல அந்தக் கணவனுடன் தான் என்பதை மிக அழகாக காட்டி விடுகின்றார். அதுமட்டுமல்ல கணவன் தன மனைவிக்காக , மனைவியுடைய இறந்துவிட்ட காதலுக்காக இவ்வளவு உதவி செய்வாரா என்று ஒரு ஆச்சரியக்குறி எழத்தான் செய்கிறது. அவன் மலையளவு உயர்ந்து சென்றுவிடுகின்றான் . ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி சுபியும் சுஜாதையும் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டது. பல அருமையான படங்களை எல்லாம் தருகின்ற மலையாளம் மீண்டும் ஒரு அற்புதமான காதல் காவியத்தை தந்திருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.

பார்க்காது இருக்கின்ற நேயர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம் வலியோடு கூடிய ஒரு காதல் உங்களையும் தட்டிச் செல்லும் உங்களுக்குள் இருக்கும் காதலையும் அது வருடிச் செல்லும். Amazon Prime Video வில் பார்க்கலாம் . 

2 comments:

Anonymous said...

இன்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். நீங்கள் எழுதியது உண்மை. இன்றே பார்த்து முடித்து விட்டேன். மனதில் வலிக்கிறது . அவளின் நடனமும் அவனது நடனமும் மனதில் இருந்து விட்டது. அந்த பாடலைப் பாடியவர் யாரென்று தெரியவில்லை. கூகிளில் துழாவுகின்றேன் நம்பிக்கையோடு .

பிரியா

tamilmurasu said...


ஆர்வமாக பார்த்ததற்கு நன்றி. நண்பர்களுக்கும் பகிருங்கள்

செ .பாஸ்கரன்