மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 20 - முருகபூபதி

.



அபிதா, திட்டமிட்டவாறு புதன்கிழமை மதியம் சுபாஷினியுடன் வங்கிக்குச்சென்று தனக்கென ஒரு கணக்கை திறந்து, ஜீவிகா தந்த சம்பளப்பணத்தில் இருபதினாயிரம் ரூபாவை வைப்பிலிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவள் பார்த்த ரொக்கப்பணம். கணவன் பார்த்திபன் இருந்தவரையில் அனைத்து வரவுசெலவுகளையும் அவனே பார்த்துக்கொண்டான். சேமிப்புசெலவு பற்றி எதுவுமே தெரியாமல் பத்து ஆண்டுகளாக சில பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தவள். நல்லவேளை அம்மா, அப்பா, பார்த்திபன் உடனிருந்த காலத்தில் வெளியுலகம் தெரியாமல், குறைந்த பட்சம் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டாள்.

அந்த அனுபவம் இப்போது உதவியிருக்கிறது. ஒரு தைப்பொங்கல் நாளில்  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்குச்சென்றபோது,  அங்கு கடமையிலிருந்து தன்னைக்காணும் சந்தர்ப்பங்களில்,  நங்கி அப்பிட்ட பைத்தொங்கல் இல்லையா..?  எனக்கேட்ட  அந்த தென்னிலங்கை சீருடைக்காரனுடைய உச்சரிப்பிலிருந்த தவறை திருத்தியபோது,     நோ. பைத்தொங்கல். தைப்பொங்கல்  ஈஸ் கரக்ட் வோர்ட்  எனச்சொன்னாள்.
அதன்பின்னர் அபிதா அந்தப்பக்கமே செல்லவில்லை.  ஒருநாள் கனவில் அவன் வந்து தைப்பொங்கல் கேட்டான். அந்த உருவம் திடீரென கணவன் பார்த்திபன் உருவமாக மாறியதையடுத்து, திடுக்கிட்டு எழுந்தாள். அதன்பிறகு அத்தகைய கனவுகள் அவளுக்கு வரவில்லை.
இருந்தாலும் வருடாந்தம் தைப்பொங்கல் தினம்  வரும்போதெல்லாம் அபிதாவுக்கு அந்தக்கனவு நினைவுக்கு வரும். பக்கத்தில் குடியிருந்த பாக்கியம் ஆச்சியிடம் அந்தக்கனவு பற்றி அவள் சொன்னபோது,  உன்ர புருஷன்ட ஆத்மா எங்கோ அலைந்துகொண்டிருக்கிறது.  அவன்ர படத்தை வைத்து ஒருநாளைக்கு சமைத்து படையல்போட்டு, இரண்டொரு பிச்சைக்காரர்களுக்கு கொடு. பிறகு அந்தமாதிரியான கனவுகள் வராதுஎன்றா.

பின்னர் அவ்வாறு அபிதா ஒருநாள் செய்தாள். பார்த்திபனுக்கு மிகவும் பிடித்தமான கருணைக்கிழங்கு கறியும் செய்து படைத்திருந்தாள்.
அப்போதும்,   நங்கி நங்கி  என அழைக்கும் அந்த சீருடைக்காரனின் முகம் நினைவுக்கு வந்தது. அவன்  அன்று பொங்கலை ஆசையோடு கேட்டானா..? , அல்லது வேறு நோக்கத்துடன் கேட்டானா..? என்ற  மனக்குழப்பமும் அவளுக்கு வந்தது.
பாக்கியம் ஆச்சியிடம் அவன் பற்றி அபிதா எதுவுமே சொல்லவில்லை. சொன்னால்,  கண்காது வைத்து கதை வேறுவிதமாகத்திரும்பிவிடும்.
தன்னார்வத்தொண்டு என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து வரும் சில ஆண்களிடம் சிக்கிய விதவைப்பெண்கள் பற்றியும் அதே பாக்கியம் ஆச்சிதான் கதைகள் சொல்லியிருக்கிறாள். அதெல்லாம்  உண்மையா.. ? பொய்யா…?  என்பதும் அபிதாவுக்குத் தெரியாது.






ஒருநாள்  வாசிகசாலையில் கண்ணில் தென்பட்ட தென்னிலங்கை தமிழ்ப்பத்திரிகை விளம்பரம் பார்த்துவிட்டு, தொடர்புகொண்டு நிகும்பலையில் கிடைத்த இந்த சமையல்காரி வேலையில் 
பெறப்பட்ட  முதல் சம்பளம் அவளை கடந்த காலத்திற்கு  அழைத்துச்சென்றது.
சுபாஷினி, அவளை கடைத்தெருப்பக்கம் அழைத்துச்சென்று தனது சார்பில் சில உடைகளை வாங்கிக்கொடுத்தாள்.
  என்னிடம் போதியளவு உடுப்பு இருக்கிறது. வேண்டாம். வேண்டாம்  என்று அபிதா சொல்லியும் கேளாமல் வற்புறுத்தி வாங்கிக்கொடுத்தாள்.
ஒரு ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்குச்சென்று விருப்பமான ஐஸ்கிறீம் வாங்கி சுவைத்தனர். இந்த இனிமையான தருணத்தில், சுபாஷினியின் எதிர்காலம் பற்றி அபிதா பேசத்தொடங்கினாள்.

 சுபா…. இப்படியே காலம்பூராகவும் இருக்கப்போறீங்களா...? உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையை தேடக்கூடாதா…? அல்லது, உங்களை ஏமாற்றிவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு படகு ஏறிப்போன அவன்,  மனந்திருந்தி திரும்பிவந்து உங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வான் என்ற எதிர்பார்ப்பிலிருக்கிறீங்களா…? 
 ஐஸ்கிறீம் நல்ல சுவையாக இருக்கிறதல்லவா…? இன்னும்  ஆளுக்கொன்று  ஓடர் பண்ணுவோமா…?   சுபாஷினி முதலில் வாங்கியதை முடிக்காமலேயே கேட்பது, பேச்சை வேறு திசைக்கு திருப்புவதற்குத்தான் என்பது அபிதாவுக்கு புரிந்தது.
 நான் ஏதோ சொல்றன். நீங்க வேறு ஏதோ பேசுறீங்க….!  கதையை மாற்றாமல் சொல்லுங்க… “

 அந்தக்கதையை தொடக்கியது நீங்கதான் அபிதா. என்ர வாழ்க்கையும் இந்த ஐஸ்கிறீம் போலத்தான். கரைந்துபோய்விட்டது. 
 போனால் போகட்டும், இன்னும் ஒரு ஐஸ்கிறீம் சுவைக்கமுடியாதா…? 
சுபாஷினிக்கு சிரிப்பு வந்தது.  நீங்கதானா இப்படியெல்லாம்  பேசுறீங்க அபிதா..? சரிநான் உங்களைக்கேட்கிறன். நீங்கள் ஏன் இப்படியே இருக்கிறீங்க..? நீங்களும் ஒரு புதிய துணையைத் தேடியிருக்கலாம்தானே…?  

இவ்வாறு சுபாஷினி தன்னிடம் கேட்கக்கூடும் என்றே அபிதா எதிர்பார்த்தாள். அதனால், ரிசுவினால் வாயை துடைத்துக்கொண்டு  நல்ல கேள்விதான். நான் வாழ்ந்து கெட்டவள். ஒரு குழந்தைக்கும் தாயாகி, அதனையும் போரில் பறிகொடுத்தவள்.  இன்னமும் அவரும் என்ரை செல்லமும்தான் என்னில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்கும்போது, நான் எவ்வாறு புதிய துணை, புதிய உறவு தேடமுடியும்…? சொல்லுங்க சுபா…? உங்கட கதை முற்றிலும் வேறானது.  அவன் உங்களை திட்டமிட்டு ஏமாற்றிப்போட்டு, உங்களிடம் சேமிப்பிலிருந்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு நாடு கடந்து ஓடிவிட்டான். எத்தனை வருடம் இருக்கும்…?  எனக்கேட்டாள்.
சுபாஷினி வலதுகை விரல்களினால் நான்கு எனக்காண்பித்தாள்.
அப்போது அபிதா, அந்த பொங்கல் கேட்ட சீருடைக்காரன் பற்றிய கதையை அவளிடம் அவிழ்த்துவிட்டாள்.

 அடடா.. நல்ல சுவாரசியமாக இருக்கிறதே.  நங்கியை டார்லிங் ஆக்கிக்கொள்ளப்பார்த்திருப்பான். தவறவிட்டுவிட்டீங்க.  அபிதாவின் இடையில் இடித்து சிரித்தாள் சுபாஷினி.
இருவரும் அந்த ஐஸ்கிறீம் பாலரை விட்டு வெளியே வந்தனர்.  கடைத்தெருவில் வீட்டுக்குத் தேவையான ஜவிகா எழுதிக்கொடுத்திருந்த பட்டியல் பிரகாரம் வாங்கிக்கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தனர்.
சுபாஷினி, தனது கேள்விக்கு சரியான பதிலை தரவில்லை என்பது அபிதாவுக்கு ஏமாற்றமாகவிருந்தாலும், தொடர்ந்து அதுபற்றிப்பேசி, அவளை குழப்பிவிடலாகாது என்ற தீர்மானத்திற்கு அபிதா வந்தாள்.
எனினும், சுபாஷினி ஐஸ்கிறீம் பாலரில் இடைநடுவில் விட்ட கதையைத் தொடர்ந்தாள்.
 அபிதாஒரு விடயத்தை கவனிச்சீங்களா..? இந்த வீட்டில் உங்களையும் சேர்த்து நாங்கள் நான்குபேரும் எந்தவொரு துணையும் இல்லாமல்தான் சீவிக்கின்றோம். கற்பகம் ரீச்சர் ஜெர்மன் வரையும் சென்று ஏமாற்றத்தில் திரும்பினா. மஞ்சுளாவிற்கு தாயும் தகப்பனும் தத்தமக்கு வேறு வேறு துணை தேடிக்கொண்டதனால்  வந்த  ஏமாற்றத்தினால் தனிமரமாகிவிட்டாள்.  எனது கதை உங்களுக்கு தெரிந்ததுதானே…?  ஆனால், ஜீவிகாவுக்கு அப்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லையே…! வயதும் நாற்பதுக்கு மேலாகிவிட்டது, ஏன் இன்னமும் திருமணம் முடிக்காமல் இருக்கிறாள்.?  ஒரு நாள் கேட்டேன். தனக்கு  சாதகத்தில் செவ்வாய்க்குற்றம் இருக்கிறதாம்.  என்ன முட்டாள்தனம்.  அவளுக்கும் ஏதோ ஒரு ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எங்களிடம் மறைக்கிறாள். எதற்கும் நீங்கள் அபிதா, ஒரு நாளைக்கு ஜீவிகாவிடம் கேட்டுத்தான் பாருங்களேன்.”  என்றாள் சுபாஷினி.
 நன்றாகத்தான் இருக்கும். வாயைக்கொடுத்து  வாங்கிக்கட்டிக்கொள்ளச் சொல்றீங்களா…?     அபிதா அந்த உரையாடலுக்கு முற்று
ப்புள்ளிவைப்பதற்காக வீட்டுப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
சுபாஷினி, தனது அறையிலிருந்து  உடைகளை  அயர்ன் செய்து மடித்துவைத்தாள்.  ஒரு வார விடுமுறையில் அபிதாவையும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வசிக்கும் நுவரேலியாவுக்கு சென்று வரவிரும்பினாள்.

அதற்கு ஜீவிகாவிடம் அனுமதி கிடைக்குமா…? என்ற யோசனையும் சுபாஷினிக்கு வந்தது.
இனி எப்போது நீண்ட வார விடுமுறை வரும் என்பதை கலண்டரில் ஆராய்ந்தாள். அபிதாவின் யோசனைப்பிரகாரம் நுவரேலியாவில் தேயிலைத் தொழிற்சாலையில் முகாமையாளராக இருக்கும் மச்சான் முறை உறவினரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டால்தான் என்ன…?!
விடுமுறையில் ஊருக்குச்சென்றால், வீட்டில் அந்த திருமணப்பேச்சை எடுப்பார்கள் என்பதனாலேயே அவள் அங்கு செல்வதை தவிர்த்துவருகிறாள்.
இங்கிருக்கும் எல்லோரையும் அங்கே அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினால், இவர்களிடமும் எனது திருமணப்பேச்சை எடுத்துச்சொல்லி இவர்கள் மூலமும் கட்டாயப்படுத்தலாம்.  சுபாஷினிக்கு குழப்பமாக இருந்தது.
கைத்தொலைபேசியில் நுவரேலியா கந்தப்பளையிலிருக்கும் வீட்டுக்கு தொடர்புகொண்டாள்.  மறுமுனையில் அம்மாதான் இருமிக்கொண்டு பேசினா.
 என்னம்மாஇன்னுமா இருமல் விடவில்லை. டொக்டரிடம் போனீங்களாஎன்ன சொன்னார்…?

                சுபாவாஎப்படி இருக்கிற..? என்னம்மா செய்யிறது. நெஞ்சில சளி. இது எனக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதரித்தானே…? இனி எப்போது இந்தப்பக்கம் வரப்போறநான் கண்ணை மூடுவதற்கு முன்பாவது வாம்மா.   அம்மாவின் குரலில் சோர்வு. பேசும்போது களைக்கிறது.
இந்தப்பேச்சுக்காகவே சுபாஷினி தாயுடன் பேசுவதை தவிர்ப்பாள். அம்மா இப்படி எத்தனை தடவை சொல்லியிருப்பா..?  ஆனால், உறங்கும்போதுமாத்திரம்தான் கண்ணை மூடுவாள் என்பது தெரிந்தவள் சுபாஷினி.
 சரிசரிவாரன். என்னோடு இன்னும் நாலுபேர் வருவாங்கவரட்டுமா…? 
 யாரம்மாஅந்த நாலுபேர்…? “

சுபாஷினி அந்த வீட்டிலிருப்பவர்களைச்சொன்னாள்.
 அதற்கென்ன கூட்டிக்கிட்டு வா தாயே…? உன்னைப்பார்க்கத்தான் ஆசை. 
 வருவேன். ஆனால், நான் வந்ததும் என்ர  கலியாணப்பேச்சை எடுக்கக்கூடாது….  நாங்க நுவரேலியாவை சுற்றிப்பார்க்க வர்ரோம். 
 வாம்மா. வந்துதான் எத்தனை நாளாய்ச்சிது… “  மறுமுனையில்   அம்மா நாதழுதழுக்க பேசினா.

 சரிசரிஅழவேண்டாம். வருவேன். அப்பாவிடம் சொல்லுங்க.  தம்பியிடம் சொல்லி ஒரு வேனை ஒழுங்கு செய்யவேணும். பிறகு தம்பியோடு பேசுவேன். 
 எப்ப தாயீ வருவ…? 
 சொல்லுவன் அம்மா. ஒழுங்கா மருந்தை குடியுங்க.  அம்மாவின் குரல் கேட்டு சுபாஷினி நெகிழ்ந்தாள். தாயுள்ளங்கள் இப்படி இருக்கையில் மஞ்சுளாவின் தாய் ஏன் அப்படி மகளையும் மறந்து சீவிக்கிறாள்…? பாவம் மஞ்சுளா.
சுபாஷினி கைத்தொலைபேசியை அணைத்தாள். நீண்ட காலமாக ஆஸ்த்துமா உபாதையால் அவதிப்படும் தாயை நினைத்து கவலைப்பட்டாள். அம்மாவுக்குத்தான் என்னைப்பற்றி எத்தனை கவலைகள். என்னால் தம்பியும் அல்லவா திருமணம் முடிக்காமல் இருக்கிறான்.  மஞ்சுளாவுக்கு தம்பியை செய்து வைப்போமா..?   மஞ்சுளா சம்மதிப்பாளா..? மஞ்சுளாவைப்பெற்றவர்களின் கதை தெரியவந்தால், தனது வீட்டில் என்ன சொல்வார்கள்..? 

சுபாஷினிக்கு திடீரென வந்த இந்த யோசனைகளுக்கு ஏதோ ஒரு வகையில் அபிதாதான் பிரதான காரணம்.  அன்றைய தினம் வெளியே அபிதாவுடன் சென்று வங்கி அலுவலை முடித்துவிட்டு ஐஸ்கிறீம் பாலரில் தொடங்கிய உரையாடல், இந்த யோசனைகளுக்கு வித்திட்டுவிட்டது.

அபிதா,  தண்ணீருக்கு அடியில் நெருப்புக்கொள்ளி எடுத்துச்செல்லும் சாமார்த்தியசாலியாக இருக்கலாம்.  வீட்டு வேலைக்கென்று வந்தவள். எத்தனையோ சோகங்களை, இழப்புகளை சுமந்துகொண்டிருப்பவள். தன்னைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல், மற்றவர்களின் எதிர்காலம் குறித்தே  பேசுகிறாளே…? சிடுமூஞ்சி கற்பகம் ரீச்சரையே  தன் கைப்பக்குவத்தில் மீன் கறி தந்து கவிழ்த்துப்போட்டாளே…?  என்னையும் திருமண பந்தத்தில் தள்ளி கவிழ்த்துவிடுவாளா..?

 கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்  வாய் முணுத்தல் கண்டறியேன் வீடு சுத்த மாக்குகிறான்நண்பனாய்,
மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான் 


சுபாஷினிக்கு பாரதியாரின் பாடல்வரிகள்தான் அப்போது நினைவுக்கு வந்தது.
இவள் அபிதாஎங்கிருந்து வந்தாள்..? எத்தனை சலனங்களை இந்த வீட்டில் ஏற்படுத்திவிட்டாள்.

யார்  யார்  எமது வாழ்வில்   எப்போது வருவார்கள்…? எப்போது பிரிவார்கள்..? என்று மறக்கப்படுவார்கள்…?  எதுவுமே தெரியாது. அபிதாவின் வருகை தனது வாழ்விலும் ஏதும் மாற்றங்களை விதைத்துவிடுமோ…? அந்த விதை மேலும் பல துளிர்களை வளர்த்துவிடுமோஇன்று நான் எதற்காக எனது தம்பிக்கு மஞ்சுளாவைப்பேசும்  எண்ணத்திற்கு வந்தேன்.
எல்லாம் இந்த அபிதாவால்தான்.

அயர்ன் செய்து முடித்த உடைகளை மடித்து அடுக்கிவைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சுபாஷினி வந்தபோது, அபிதா, ஒரு கண்ணாடித்தம்ளரில் கரட்டில் செய்த ஜூஸுடன் எதிர்ப்பட்டாள்.
 இன்னும் ஐஸ்கிறீமே செமிக்கவில்லை. அதற்குள் கரட் ஜூஸா..? 
   கண்ணுக்கு நல்லதுகுடியுங்க சுபா..? 
சுபாஷினி அதனைவாங்கியவாறு அபிதாவை வியப்புடன் பார்த்தாள்.

(தொடரும்)


No comments: