உயர்விற்கு வழி - வித்யாசாகர் - குவைத்

.


இந்த வாழ்க்கை பெரிய வரம்க. இரண்டு கை இரண்டு கால் கண் காது மூக்கு உடம்பு முழுசா இருக்கிறது பெரிய சந்தோசத்தையும் முழு நிறைவையும் பல வளங்களையும் தரக்கூடியது. உண்மையில் நலமா வாழ்வதைவிட ஒரு பெரிய வளமில்லை. 

உடலில் ஊனமுற்றோர் கூட மனதால் முடங்கிவிடாமல் வென்று நிமிர்ந்து மகிழ்ந்து நிற்கும் வாழ்கைக்குமுன் முழுதாக வாழ்வது நடப்பது பார்ப்பது சத்தங்களை கேட்க முடிவது அனைத்தையும் அததுவாக உணரமுடிவது எத்தனைப் பெரிய வரமில்லையா?

ஆனா இந்த வரமான வாழ்க்கைக்குள்ள நாம எண்ணற்ற ஆசைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் கவலைன்னு பலவற்றை உள்ளே திணித்து திணித்து நம் உடல்நலன் குறித்த வாழ்க்கை குறித்த நிறைவின் மகிழ்ச்சிகள் பலவற்றை வீணே இழந்து விடுகிறோம்.

முதல்ல நாம இந்த எதிர்மறை எணரணங்களை எல்லாத்தையும் தூக்கி மொத்தமா ஒரு மூட்டைப்போல கட்டி கவலைகள் வருத்தம் சோகம் என அத்தனைகளோடும் சேர்த்து வெளியே எறிந்துவிடுவோம்.

இந்த உடம்பா இருக்குறது பெரும் பாக்கியம். அந்த உடம்புக்கு நன்றி சொல்லுங்க. அந்த உடம்பா இயங்குற பிறரை நன்றியோடு பாருங்க. பாராட்டுங்க. அன்பு செய்யுங்க. அன்பை பெருக்க முடிவதாலதான் மனிதன் தெய்வநிலையையும் அடையமுடியும். அதனால் தான் மனிதரைவிட மிக்க தெய்முமில்லை என்றனர்.

உண்மையில் அன்பென்பது ஒரு வாழ்க்கைக்காக கிடைத்த பொதி. நிறைவான பொக்கிசம். மனதிலிருந்து குறையவே குறைந்திடாத மாயமற்ற’ அறிவின் வழி உணரத்தக்க’ உணர்வால் அறிய இயன்ற’ மனிதர்களை இணைக்கும்’ மனதால் இயிர்ப்புடன் நமைச் சேர்த்துவைத்து சந்தோசத்தை நல்கும் அதீத சக்தி அன்பு.

உள்ளே அன்பிருப்பதால் தான் மனது மேலும் மேலும் அதுவாக அவ்வப்பொழுதின் தேவைக்கேற்ப அளவிற்கேற்ப அதுவா விரிந்து நம்மை நாமே நினைக்கையில் மாமனிதரா உயர்த்திக்கொள்ள முடியுது.

அன்புள்ள மனிதரைத்தான் தெய்வீகம் தானே மொத்தமுமாய் தழுவிகொள்கிறது. அன்பைவிட பெரிய நிறைவை இந்த பிறப்பு வேண்டுவதில்லை. அன்பால் நிறையாத ஆன்மா பெரிதாக நிறைவதில்லை. அன்பு தான் முழுமையின் பிரதாணம். அன்பு தான் நிறைவின் முதன்மை.

அன்பு நிறைந்த மனிதரின் ஆண்மிகம் யாருக்கும் எதையும் போதிக்க விரும்புவதேயில்லை அதை மனிதர் உண்ர்ந்து தானே கொள்கின்றனர் என்பதை நம்மால் கவனித்தால் உணரமுடியும்.

அத்தகையப் பெரும் பேறுள்ள அன்புள்ள மதிப்புள்ள தெய்வீக நிலையை உயர்ததுமொரு பெரும் பாக்கியம் நிறைந்த ஒரு வாழ்க்கையை நமக்கு தரவல்ல உடம்பு நம் எல்லோர் கிட்டையும் இருக்கு என்பதே எவ்வளோ பெரிய சிலாகிப்பு ஆச்சர்யம் ஆனால் உண்மையில்லையா?

என்ன ஒண்ணு சிலர் நல்ல சுமார்ட் போனைப் போல உடலை நல்லாக்கி வாழ்க்கையை செழிப்பா வைத்திருக்கிறோம், ஆனா மனசுன்ற எண்ணத்தை வடிவா வைத்துக்கொள்கிற சிம் கார்டு டூ ஜி அல்லது த்ரி ஜீயா இருக்கு. அதனால சுமார்ட் போல நல்ல உடம்பிருந்தும் எண்ணியதை எண்ணியாங்கு வாழத்தக்க முழு பலனில்லை.

சிலர் கிட்ட பைவ் ஜி சிம் கார்டு இருக்கு. எண்ணத்தை விரித்து எதையும் ஆட்டுவிக்கும் நம்பிக்கை பலம் பெருஞ் சிந்தனை இருக்கு. ஆனா அதன் பயனை முழுதா அடையத்தக்க சுமார்ட் போன் எனும் வலுவான திறனான எண்ணியதை எண்ணியாங்கு அடைய ஏதுவான உடம்பு இல்லை. 

ஆனா கொஞ்சம் முயற்சித்து உடம்பை நல்ல சுமார்ட் போனாக்கி மனதையும் எண்ணத்தையும் பைவ் ஜீ ரேஞ்சுக்கு மாத்திவிட்டோமென்றால் மனிதனாலும் தான் நினைத்ததை எதுவாயினும் அவற்றை சாதித்திட இயலும் இல்லையா?

அதனால் தான் மனிதன் தெய்வீகம் மிக்கவன் என்கிறோம். மனிதரை தாண்டிய இறைநிலையை இல்லையென்று மறுக்கிறோம். முழுமையாய் இருத்தலைவிட மறைபொருள் வேறிங்கு இல்லை. 

நிறைந்துபோதல் முழுமை எனில், முடிந்துபோதல் தெய்வத்தனம் எனில் வளர்ந்து செழித்தலே ஆன்மிகத்தின் எதிர்நோக்கு இல்லையா? அதை அறிவோடு உணர இந்த காற்றும் வானும் மண்ணும் நீரும் நெருப்பும் உள்ளே உணர்வாக கரைதலை அறிவாக அறியமுடிகிற அமைதியே ஞானமில்லையா?

அந்த அமைதியை, அத்தகைய அமைதிக்கான வாய்ப்பினை, எந்த மனிதரும் யாரும் நினைத்தால் அடையமுடிகிற அந்த மாசக்தியை யுடைய உடல் நமக்கு எத்தனைப் பெரிய கொடுப்பினையில்லையா? அத்தகைய சாதிக்கத்தக்க உடல், அன்பைப் பெருக்கும் உடல், ஆசைகளை வக்கிரமங்களை கோபத்தை ஏக்கத்தை கவலைகள குறைத்து நம்மை மகிழ்வாக்கும் உடல் நமக்கு வரமில்லையா? 

ஆக, இந்த இயற்கையால் ஆன இந்த ஒற்றை உடலே எத்தகு வரமெனில்; ஏகமாய் எங்கும் நிறைந்துள்ள பிற எண்ணற்ற மரங்கள் காடுகள் பூக்கள், பழங்கள் நதிகள் பறவைகள், மலைகள் மழை வான் மண் கடல் உயிர்கள், மனிதர் ஊர் பிற ஊர் தேசம் பிற தேசம்; இப் பிரபஞ்சம்; என வாழ நமக்கு இயற்கையின் கொடையென எவ்வளவு இருக்குல்ல? பிறகு நம்மில் யாருங்க ஏழை? யாருங்க குறைச்சல்?

யாருமே இல்லை. மனிதராய் இம் மண்ணில் பிறந்த நாம் அத்தனைப் பேருமே பெருஞ் சக்திகள். நாம் அனைவருமே சாதிக்க மகிழ பிறரை பாகுபாடற்று மகிழ்விக்கப் பிறந்தவர்கள்.

நம்மில் ஏற்றத் தாழ்வில்லை. நமக்கு மதமோ சாதியோ இனமோ ஒரு பிரிவேயில்லை. நமக்கு இரத்தம் ஒன்றே சித்தமும் ஒன்றே. நம்மில் பிரிவில்லை, ஏற்ற யிறக்கமில்லை, கொஞ்சம் சிம் கார்ட் எனும் சிந்தனையை எண்ண வலிமையை சரிசெய்து கொண்டால் போதும். கொஞ்சம் சுமார்ட் போன் எனும் உடம்பை நன்னிலை ஆக்கிக் கொண்டால் போதும். உடம்பும் மனமும் சேர்ந்திருப்பது உயர்ந்திருப்பது ஒன்றே ஞானமன்றி வேறில்லை எனில் இம்மண்ணில் மனிதராய் பிறந்த நாம் அத்தனைப்பேருமே ஞானவான்கள் தான்.

அத்தகைய ஞானம் பெறத்தக்க நம் உயர் வாழ்க்கையொரு வரம்க. இந்த பிறப்பு ஒரு வாய்ப்பு. இந்த உடல் மனம் எண்ணம் எல்லாமே அறிவின் விரிவில் ஆகாயம் தொடுபவை. வசந்தத்தின் உச்சம் நிறைந்தவை. அந்த உச்சம் வரை எட்டித்தொட வாழ்ந்துபாருங்கள். உச்சம் தொடுங்கள். உயர்ந்திருங்கள். அனைவரும் அனைவராலும் மகிழ்ந்திருங்கள். எல்லோருக்கும் எனது அன்பு. எல்லோருக்கும் எனது வாழ்த்து. 

No comments: