முகில்கள் வீசிய பனிக் குண்டுகள் - கன்பரா யோகன்

.                                           



தெருவோரமெங்கும் வரிசையாக நின்ற ஓக் மரங்களின் இலைகளால் தெரு மூடப்பட்டிருந்தது. அதன் கீழே இலைகளை  விழுத்திய பனிக்குறுணிகள் படையாக தெருவை மறைத்திருந்தன. அவை உண்மையில் குறுணிகள் அல்ல குண்டுகள் என்றுதான்   சொல்லவேண்டும். இவை ஒரு கோல்ஃப் பந்தின் அளவிலும் கூட விழுந்தன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மெல்பேனிலும்,  திங்களன்று கன்பராவிலும் சிட்னியின் சில பகுதிகளிலும் ,  மழை  பெய்ததிலும் பார்க்க பெருந் தொகையாய்  வீழ்ந்தவை பனிக் கற்கள்.
இவை வீழ்ந்த வேகத்தினால்  ஓடும் காருக்கு ஏற்படும் சேதாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரிலும் மிக அதிகம். கண்ணாடி விண்ட்  ஸ்கிரீனை துளைத்து தலையில் பட்டால் பெரிய காயத்தையும் ஏற்படுத்தலாம்.  துப்பாக்கிக்கு குண்டினாலேற்பட்ட துளைகள் போல பல கார்களில்  துவாரங்களைப் போட்டன இந்தப் பனிக் குண்டுகள்.
பல கார் சாரதிகள்  திடீரென ஏற்பட்ட இந்த பனிக்குண்டுகளின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக மேம்பாலங்களின் கீழும் மற்றும் பாதையோரங்களிலும் கார்களை நிறுத்த முற்பட்டனர். தெருவில் சென்ற வாகனங்கள், கூரையில்லாத கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்கள், மற்றும் கார் விற்பனை, திருத்துமிடங்களில் தரித்து நின்ற வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த பனிக்குண்டுகள்.  
மரங்களே இல்லாத புல் வெளியில்  இந்த  இந்தப் உறை பனியின்   வெண்  கோளங்கள்  சடுதியாக ஒரு தற்காலிக பனிச் சறுக்கு மைதானத்தை உண்டாக்கின.   தலையில் பட்டால் மண்டை  பிளந்து விடும் என்ற பயமேதுமில்லாத இளங்கன்றுகள் சில மேற் சட்டைகளைக் கழற்றிப் போட்டு அதில் சறுக்கி விளையாடின.   
கன்பராவில் மட்டும் 11,000 வாகனங்களுக்கு மேல் சேதம் என்றும், இதைவிட
கட்டடங்கள், வீடுகள்,  குறிப்பாக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) தாவரவியல் ஆராய்ச்சிக் கூடத்தின் கண்ணாடிக் கூரை அறைகள் பல சேதமாகியதில் பல மாதக்கணக்காக ஆய்வு மாதிரிகளையும் இந்த  பனிக்குண்டுகள் சேதமாக்கி அளித்துப் போட்டன.




கடந்த வெள்ளிக்கிழமையன்று மொனாரோ நெடுஞ் சாலையின் ஊடாக  வேலைக்கு சென்று கொண்டிருக்கையில் வலப்பக்கமாக முன்னெப்போதுமில்லாதவாறு  பெருந்தொகையான  கார்கள்  நிறுத்தப் பட்டிருந்ததைக்  கண்டு   ஏதோ பெரிய  தொழிற்சாலையின் கார் பார்க் என்றுதான் நினைத்திருந்தேன்.
பிறகுதான் அவை திருத்தப் படுவதற்கு முன்னர் பரிசோதனைக்கு காத்திருப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று ஒரு நண்பர் மூலம் அறிந்தேன். காப்புறுதி நிறுவனங்களின் மூலம்  வாகனங்களின் திருத்தங்களுக்காக பல மாதங்கள்  காத்திருக்க வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். பலருடைய வாகனங்கள் திருத்த முடியா அளவுக்கு சேதமாகியுள்ளன.
 ஹேயில் ஸ்ட்ரோம் என்பதற்கு ஆலங்கட்டி மழை என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. உறைந்த பனி மழை  பெரும்பாலும் கோடை காலத்தில் ஆவியாகி மேற் செல்லும் நீர்த்துளிகள் முகிலாகியதும்  காற்று இன்னும் இவற்றை மேலே மேலே அடித்து செல்ல அங்கு குளிரடைந்து கட்டியாகி பின் பாரத்தினால் நிலத்தை நோக்கி விழுவதையே குறிக்கிறது. விழுகையில் பல துளிகளின் சேர்க்கையாகி திரண்டு பெரிய உருண்டையாகிறது.  சில நாடுகளில் இவை காற் பந்து ஒன்றின் அளவுக்கு கூட திரண்டு பெரிதாகி வீழ்ந்து பெருஞ் சேதம் ஏற்படுத்தியிருக்கின்றன.
இதை நினைக்கும்போது ஆலம்பழம் தலையில் வீழ்ந்த வழிப்போக்கனின் கதைதான் நினைவுக்கு வருகிறது. பெரிய ஆல  மரத்தில்  சிறிய பழத்தை வைத்ததும் , மெல்லிய  பூசினிக் கோடியில் பெரிய பூசினிக் காயை வைத்ததும் ஏன் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த போதிலேயே  ஆலம்பழம் தலையில் விழ அவனுக்கு விடை கிடைத்து விட்டது.  கன்பராவில் காற்பந்து சைசில் எதுவும் விழவில்லை. 
பைபிளில்  இஸ்ரவேலர் யாத்திரையாய்  நாற்பது வருடங்கள் வனாந்தரங்களில் அலைந்த போது அவர்களின் பசியின் கூக்குரலைக்கேட்ட தேவன் மன்னா என்றழைக்கப்பட்ட சிறிய வெள்ளை உருண்டை வடிவிலான   ருசியான உணவுப் பண்டமொன்றை  வானத்திலிருந்து விழப்   பண்ணினார் என்று சொல்லப் பட்டிருக்கிறது. 
நாங்கள்  வானத்திலிருந்து  விழக்  கேட்டது மழைத்துளிகளைத்தானே?   பதிலாக  நீர் பனிக்குண்டுகளை  வீழ்த்தி விட்டீரே என்று தேவனிடம் இப்போது  முறையிடவேண்டியிருக்கிறது.
அவ்ரோவும், புக்காராவும் போட்ட குண்டுகளை பார்த்து  அனுபவப்பட்ட நாங்கள்  இப்போது  முகில்கள் வீசும் இந்த பனிக்குண்டுகளுக்கு பழக்கப்பட வேண்டியிருக்கிறது.
மனித உயிர்களையும் , ஏனைய பல ஜீவராசிகளையும்  காவு கொண்டது காட்டுத் தீ. ஏராளமான சொத்து அழிவுகள் மற்றும் தொழில் ரீதியான நஷ்டங்களை அனுபவித்து வரும் ஏராளம் மக்கள் உள்ளனர். இதன் வடுக்கள் ஆறுமுன்னே இப்போது பனிக்குண்டுகள் வீழ்ந்துள்ளன. இனி அடுத்தது என்ன?


No comments: