காட்டுத் தீயில் கருகி நொந்திடும் கங்காரு வாழ் கடல்சூழ் கண்டம் - பரமபுத்திரன்

.


காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய  ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக  உண்டுதான்  வந்திருக்கின்றது.  அது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான் உள்ளது. பூமியின்  காடுசூழ் பகுதிகள்   மட்டுமல்ல புவியின் எந்த ஒரு பகுதியிலும்  தீ உருவாகும் வாய்ப்பு நிலை பொதுவானது. இவ்வாறு உருவாகும் தீ வேகமாக பரவுவது மட்டுமல்ல தன்னை  சூழவுள்ள அனைத்தையும் எரித்து அழிப்பது என்பதும் வழமையான ஒன்று. இதேவேளை தீ பரவுமானால் அந்த இடத்தில் எதுவும் மீதியின்றி முற்றாக அழிக்கப்படும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.   ஆனால் காடுகளில் தீ உருவாகும் போது கட்டுப்படுத்துவது கடினம். அது மட்டுமல்ல, இது ஈரவலயக்காடுகள்,  உலர்வலயக்காடுகள்  ஆகிய இரண்டு பிரதேசங்களிலும்  தீ உருவாதல், பரவுதல் இரண்டுமே  நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் இன்று இது ஒரு மாபெரும் உருவெடுக்க என்ன காரணம்  என்பதனை கொஞ்சம் ஆராய்வோம்.

.நிலம் நீர் தீ வளி விசும்பு ஐந்தும்
கலந்த மயக்கம் இந்த உலகம்.

நாம் வாழும் கோள் புவி. இது ஐம்பூதங்களின் கலவை அதாவது இந்த உலகமானது நிலம், நீர், வளி,  நெருப்பு, ஆகாயம் இந்த ஐந்தும் கலந்து உருவாகி உள்ள ஒன்று என்று தொல்காப்பியம் கூறுகின்றது. அதுவும் ஒரே அளவில்  அல்ல,  வேறுபட்ட அளவில் கலந்துள்ளது. அந்த அளவு மாறினால் புவியின் சமநிலை  குழம்பும் என்பது தமிழன் விதி. நாட்டிலே காட்டுத்தீ இவன் பேசுவதோ வேதாந்தம் என்ற எண்ணம் இப்போது உங்களுக்கு எழும். காரணம் தமிழரை பொறுத்தவரை உலகில் இருவகையினரை வேறுபடுத்தலாம், அவர்கள் சிந்தாந்திகளும் வேதாந்திகளும் எனக்கூறலாம். சித்தாந்தி உடன் நடப்பதை மட்டும் சிந்திப்பான். வேதாந்தி ஏறத்தாழ உலக இயக்கத்தை முற்றாக புரிந்துகொள்பவன். அதனால் தான் வேதாந்தமென்பது எமக்கு புரியாதது என்ற கருத்தினை தருகின்றது. ஆனால் அது உண்மை அல்ல. நீண்ட கால நடவடிக்கையை விளங்கிக்கொண்டு நடப்பவன் வேதாந்தி.  ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை சொல்லமுடியும். 


வீதியில் ஒரு விபத்து நடந்துவிட்டது எனின் விபத்தில் சிக்கியவனை காப்பாற்றவேண்டும் என்று நினைப்பவன் சித்தாந்தி ஆனால் இனி விபத்து நடக்காது தடுக்கவேண்டும்  என்று சொல்பவன் வேதாந்தி. அதாவது மனிதகுலம்  துன்பமின்றி வாழ வழிசொல்பவன் வேதாந்தி.  இருந்தாலும் நான் வேதாந்தி அல்ல. ஆனால் விஞ்ஞானம்  வேதாந்தம் என்றுதானே சொல்லவேண்டும். ஏனென்றால் உலகம் ஆரோக்கியமாக வாழ உழைப்பது விஞ்ஞானம் என்றுதானே நாம் முழுமையாக நம்புகின்றோம். அப்படியென்றால் முந்தைய காலத்தில் அதாவது  அந்த விஞ்ஞானம் தெரியாத மக்களால் கட்டுப்படுத்திய காட்டுத்தீயை ஏன் இந்த விஞ்ஞானம் கட்டுப்படுத்த முடியாது தவிக்கின்றது. இது சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான தரிப்பு இல்லையா?. ஆனால் யாரும் சிந்திப்பதில்லை ஏன்? 


புவி தோன்றியகாலம் முதல் புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தே வந்ததாக வரலாறுகள் காட்டுகின்றன. அந்த வகையில் இன்றைய காலம்   தொடர்பாடல் ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தும் காலம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமல்ல, வகைதொகையின்றி தொடர்பாடல் ஊடகங்கள்  பெருகிவிட்டன. கட்டுப்பாடற்று அவை பரம்பலுற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தொடர்பாடல் உபகரணங்கள் உருவாக்கப்படுகின்றன. அநேகமான மனிதர்கள் தங்களை இனங்காட்ட இந்த ஊடகங்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தொலைக்காட்சிகள், இணையதளங்கள், மட்டுமல்ல ஒவ்வொருவரதும் கைபேசிகள் கூட தொடர்பாடல் ஊடகங்களாக  தொழிற்படுகின்றன. சரி எது? பிழை எது? உண்மை எது, பொய் எது, நன்மை என்ன, தீமை என்ன  என்ற பேச்சுக்கே இடமில்லை.   எல்லோருமே  செய்தியாளர்கள் ஆகிவிட்டனர். முதலில் செய்தி போடவேண்டும். எனவே செய்தி மட்டுமே தேவைப்படுகின்றது. இப்படி ஒருவர்  செய்திகளை போடுவதும், அடுத்தவர் எதிராக செய்தி தெரிவிப்பதும், ஒருவருக்கொருவர் மறுப்புகள் பரிமாறுவதும்  தேவையற்ற செய்திகளை பரப்புவதும், மிகைப்படுத்திய செய்திகளை அறிவிப்பதும் மொத்தமாக  மக்களை குழப்பத்தில் தள்ளிவிடுகின்றன. இதன் விளைவு எந்த ஒரு செய்தியையும் மக்கள் பெரிதாக எடுப்பதில்லை. இவை யோசிக்க அல்ல வெறுமனே வாசிக்க மட்டுமே என்று நினைக்கின்றனர்.

மேலும்  உண்மையான சமுதாய அக்கறையுள்ள செய்தியாளர்கள் இன்று எம்மத்தியில் உள்ளார்களா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய செய்தி. பிறரை குறை சொல்லுவது நல்லதல்ல என்பதிலும், பேட்டிகள் கூட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு அமைவாகவும், நடுநிலையற்ற ஒரு திணிப்பு நிலையிலும்  அமைகின்றன. பொதுவாக மக்களைப் பொறுத்த வரையில் செய்தியாளர்கள் சொல்வதனை சரி என்று ஏற்கும் நிலையில் இருப்பார்கள். எனவே ஒரு செய்தியாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லவிரும்புகின்றேன்.  

எனது நண்பர் ஒருவர் செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில்  பணியாற்றினார்.  அவர் ஒரு செய்தி சேகரிப்பாளன். செய்திகளின்  எண்ணிக்கை அடிப்படையில் அந்த நிறுவனம் அவருக்கு பணமும் வழங்கும். ஆனால் அவர் பணத்தை முதன்மையாக எண்ணமாட்டார். தனது செய்தி சரியாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டும் என நினைப்பார்.  எந்த ஒரு சம்பவத்தையும் நேரில் சென்று பார்த்து, உறுதிப்படுத்தி, உண்மை என்றால் மட்டுமே அந்த செய்தியை எழுதும் பழக்கம்தான் அவரிடம் இருந்தது. மற்றபடி எந்த ஒருவரின் செவிவழி செய்தியையும், அதாவது மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவரின் கூற்றாக  இருந்தாலும்கூட  அதனை  ஏற்றுக்கொள்வதோ அல்லது செய்தியாக போடுவதோ அவரது பழக்கம் இல்லை. அந்தளவுக்கு செய்திகளில் உண்மைத்தனமையை பேணுவார். இன்று அந்தநிலை எத்தனைபேரிடம் உண்டு, என்று சிந்திக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. எல்லோரும் ஏதோ ஒரு ஊடகத்தின் வாயிலாக தங்களுக்கு கிடைத்த செய்திகளை தங்கள் நண்பர்களுக்கு பரப்புகிறார்கள். அது தொடர்கிறது. எனவே மக்களுக்கு அது செய்தியாக அல்ல  பொழுதுபோக்காக அமைகிறது. ஒரு செய்தி கிடைத்து அது வாசிக்கப்பட முன்பு அடுத்த செய்தி வருகின்றது. எனவே வாசித்தது பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் எல்லோரும் செய்தி போட நினைக்கிறார்களே தவிர, பெரும்பாலானவர்கள்  தன்பங்கு என்ன என்று நினைப்பதில்லை. பலருக்கு  பிறரின்  துன்பம் புரியவில்லை. செய்திபோட்டால் போதும் என்ற எண்ணமே மேலோங்குகின்றது. இந்த நிலையின் வளர்ச்சிதான்  இன்று காட்டுத்தீ மட்டுமல்ல, ஒருவரின் அல்லது ஒரு சாராரின் துன்பநிலை பிறமக்களால் கணக்கெடுக்கப்படுவதில்லை.  இனி  காட்டுத்தீயை பார்க்கலாம்.  

காட்டுத்தீ என்பது தனித்து அவுத்திரேலியாவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. காடுள்ள நாடெங்கும் நடக்கின்றது. செய்தி பரப்புபவர்கள் ஒரு புறம் செய்தி பரப்ப, மறுபுறம் வியாபாரிகள் ஊக்கமடைகின்றனர். பணம் தேடலுக்கு இதனை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல, உதவி செய்யும் அமைப்புகள்  உருவாகின்றன. இந்த  நேரத்தை பயன்படுத்தி   தங்களை விளம்பரப்படுத்திக்  கொள்கின்றன. ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களும் நிலைமையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. முழுவதுமாக பார்த்தால் வெந்து கருகி நொந்தவர்கள் போக அதிக பயன் அடைபவர்கள் யார் என்று சிந்திக்கும் கட்டாயம் உண்டு. எனவே காட்டுத்தீ பரவுகின்றது என கதறுவோர் உண்மையில் நாட்டுக்கு நன்மை தரும் விதத்தில் சிந்தித்தாலே பலன் உண்டு. இல்லையேல் அது சுயவிளம்பரேமே தவிர வேறில்லை என்று சொல்லமுடியும்.

தீ என்பது மனிதர்களை மட்டும் தாக்கும் ஒன்றல்ல. தீக்குள் அகப்படும் எல்லாமே எரிந்து சாம்பலாகுவது திண்ணம். தீயால் கருகக்கூடியவை உயிருள்ள பொருள் அல்லது உயிரற்ற பொருள் என்று பிரிக்க முடியாதது. காட்டுக்குள் தீ பரவும் போது அங்குள்ள சகல உயிரிகளும், அதாவது தாவரங்கள் விலங்குகள் எல்லாமே எரிந்து இறக்கும். இது புவிக்கு ஒரு பாதிப்பு என்பது முக்கியமல்ல, ஒவ்வொரு உயிரும் அதாவது விலங்குகள் வெந்து நொந்து சாவது வேதனைக்குரியது. அது மட்டுமல்ல, காடுகள் என்றால் அவை மழைவர உதவும் என்பது மட்டுமல்ல, உயிர்களுக்கு தேவையான சுவாசவாயுவான ஒட்சிசன் உற்பத்தியாக்கிகள், சுவாசக்கழிவு வாயுவான காபனீரொட்சைடு அகற்றிகள், வளியின் தூசு துணிக்கைகள் அகற்றும் வடிகட்டிகள், காற்றுத்தடை ஏற்படுத்தும் வேலிகள், உயிர்கள் வாழ உறைவிடம் வழங்கும் வாழ்விடங்கள்  இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். காடு அழியும் போது இவை எல்லாம் பாதிக்கப்படும். இது மட்டுமல்ல புவிச்சமநிலை குழம்பும். மனித வாழ்வு  அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அப்படியாயின்  ஏன் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் முழுமையான கவனம் செலுத்தப்படவில்லை. இதுவும் சிந்திக்கவேண்டிய நிலைதான். சிறிய உதாரணம் ஒன்று சொல்லவிரும்புகின்றேன்.

இந்த ஆண்டு காட்டுத்தீயால் சிட்னி முழுவதும் புகை பரவிய முதல் நாள். மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், சுவாசப் பாதிப்புகள் வரும் என்று சொன்ன நாள். சுவாச வளியில் கலந்திருக்கும் சுவாசப்பைக்கு தீங்கு தரும்  தூசு, துணிக்கைகள் அகற்றும் மூக்கு முகமூடிகள் முழுவதும் தங்கள் எல்லாக்கடைகளிலும் ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்டன என்று ஒரு பணியாளர் கூறினார். அதுமட்டுமல்ல அதன்பின்பு வந்த மூக்கு மூடிகளுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு தங்களால் மூக்கு மூடிகள் வழங்க முடியவில்லை என்றும் சொன்னார். அத்துடன் இவை நீண்டகாலமாக தங்கள் கடைகளில் விற்பனை இன்றி இருந்தவை என்றும் சொன்னார். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதன் மூலம் விளங்கிக்கொள்ளக்கூடிய ஒன்று வருகின்ற துயர் எல்லாம் புத்திசாலிகளால் காசாக மாற்றப்படுகின்றது என்பதுதான். 

இன்றைய காலச்சூழல் காசு என்பதை மையமாக வைத்து சுழல்கின்றது.   துன்பங்கள் எல்லாம் வருமானம் தரும் நிகழ்வுகளாக மாறுகின்றன.  எனவே இயற்கை இடர்களும் பணம் உழைக்கும் நிலையை தருவதால் அவற்றை தடுப்பதைக் காட்டிலும் பரவிடுதல் பலருக்கு நன்மையே. இது வெறும் மூக்கு மூடிகள் மட்டுமல்ல, இன்னும் பலவழிகளில் வருமானம் தரக்கூடியவை. ஆகவே இங்கு சிந்திக்க வேண்டியவர்கள் நாட்டில் வாழும் மக்கள் மட்டுமே.




No comments: