13/11/2019 ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடைபெற்று ஓரிரு நாட்களில் புதிய ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டுவிடுவார். யார் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற ஏக்கத்திலும் ஊகத்திலும் மக்கள் உள்ளனர். அதற்கு காரணம் 35 அபேட்சகர்கள் போட்டியிடுவதல்ல வேறு காரணங்களாகும். எனினும் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் டம்மி அபேட்சகர்களும் அரசியலையே பொழுதுபோக்காக கொண்ட ஜோக்கர்களும் போட்டியிடுவதால் அவர்களில் யார் வெற்றி பெறுவர் என்பதை தீர்மானிப்பதில் சங்கடப்படாமல் நிச்சயமாக சஜித், கோத்தபாய, அநுர குமார திசாநாயக்க ஆகிய இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாக வருவார் என்பதை உணர்ந்தும் உள்ளனர் என்பதையும் நாம் அவர்களின் செயலிலும் பேச்சுக்களிலும் இருந்து காணக்கூடியதாய் இருக்கிறது.
அவர்களின் கணிப்பின்படி மேலே நான் கூறிய அபேட்சகர்களில் ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் ஆயினும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர் அநுர குமார திசாநாயக்க பலத்த போட்டியை கொடுப்பார் என்பது உண்மையாயினும் ஏனைய இருவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச அல்லது கோத்தபாய ராஜபக் ஷ அவர்களில் ஒருவரே வெற்றி பெறுவர் என்றும் பொது மக்களில் பெரும்பாலானோர் கணித்துள்ளனர். மேலும் இம்முறை நடைபெறும் போட்டி நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாக இல்லாமல் நாட்டின் பாதுகாப்பு பற்றியதாகவும் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் போட்டியாகவும் காணப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வேறு சிலவற்றை அடிப்படையாக வைத்தும் பெரும்பாலும் நடைபெறுவதாலும் மேலும் இன ஐக்கியத்தை வைத்தும் நடைபெறும் போட்டியாகவும் காணப்படுகிறது. இதனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்று முன்கூட்டியே தீர்மானிப்பது கஷ்டமாயினும் ஓரளவு ஊகிக்க கூடியதான சூழல் தற்போது காணப்படுகிறது என்று கூறலாம்.
தென்னிலங்கை சிங்கள மக்களின் முடிவு
ஏற்கனவே ஊறிப்போயிருந்த வகுப்புவாதம் சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற கலவரத்தின் பின்னர் இன மத ரீதியான கொள்கையையே சிங்கள மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை காணக்கூடியதாயுள்ளது. அதனையும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அமைதியையும் சாக்காக வைத்து தென்னிலங்கையில் முக்கியமான அரசியல் கட்சிகள் இன மத வாதத்தை முன்வைத்து சிறுபான்மை இனங்களாக தமிழர், முஸ்லிம் இனத்தவர் மீது வெறுப்பூட்டும் கொள்கையையே கடைப்பிடிப்பதையும் நாம் காணக்கூடியதாய் இருக்கிறது. சிங்கள மக்கள் இதனை அங்கீகரிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனால் இக்கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிங்கள மக்கள் மத்தியில் முன்னிலையில் நிற்கிறது. விசேடமாக தனிச்சிங்கள மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர் எனலாம்.
இதனால் தென்னிலங்கையில் உள்ள தனிச்சிங்கள மக்களை கொண்டுள்ள தேர்தல் தொகுதிகளின் வாக்குகள் மேற்படி கட்சிக்கே செல்ல இடமிருக்கிறது என்று கூறலாம்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை நம்பி அரசியல் நடத்தும் இடதுசாரிக் கட்சியினர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் சரணடைந்துள்ளனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியும் அக்கட்சியை நம்பி அரசியல் நடத்தும் இடதுசாரிகளும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வருவதை தென்னிலங்கையில் காணக்கூடியதாய் இருக்கிறது. இதனால் இடதுசாரி வாக்குகளும் பொதுஜன முன்னணிக்கே செல்லும் என எதிர்பார்க்கலாம். இன ஐக்கியத்துக்கு எதிரான வாக்காகவே அவை இருக்கும்.
கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற மாவட்டங்களின் முடிவு எப்படியிருக்கும்?
சகல இன மக்களும் இணைந்து வாழும் கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் (தமிழ் – முஸ்லிம்) தாம் சிங்கள மக்களுடன் சகவாழ்வு வாழலாம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்வதால் அவர்களது வாக்குகள் கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சியின் அபேட்சகர் சஜித் பிரேமதாசவுக்கே செல்லும் என எதிர்பாக்கலாம். ஏனெனில் இன ஐக்கியம் அக்கட்சியின் கருப்பொருளாக இருக்கிறது.
மேலும் ஆர். பிரேமதாசவின் புதல்வரான சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர் மட்டுமல்ல இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு அரசியல் ரீதியில் வாக்குரிமையை பெற்றுக் கொடுத்து பாராளுமன்றத் தேர்தலில் வெட்டுப்புள்ளியை 5% ஆக குறைத்தும் அம்மக்களை ஏனையவர்களுக்கு சமமானவர்களாக மாற்றியவரின் மகனுக்கு (சஜித்துக்கு) நன்றிக் கடனாக மேற்படி இனத்தவர்களின் முழுவாக்கும் செல்லக்கூடிய ஒரு நிலையும் மேற்படி மாவட்டங்களில் காணக்கூடியதாயிருக்கிறது.
மேலும் தோட்டப் பகுதிகளில் விசேடமாக நல்ல குடியிருப்பு வசதிகளையும் தொழிலையும் பிற மாவட்டங்களில் சென்று கௌரவமான தொழில்களை புரியவும் ஆர்.பிரேதமாச அவர்களும் தற்போதைய அரசும் பெரும்பங்கு ஆற்றியதற்காக அவ் இனத்தவரின் வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கக் கூடிய சூழ்நிலை மேற்படி மாவட்டங்களில் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முடிவு எப்படியிருக்கும்?
தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால கொள்கையை தமிழ் மக்கள் இன்றும் ஏற்றுள்ளார்கள் என்று கூறலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அத்துடன் ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழ் இன நலன் சார்ந்த பொதுவான கொள்கையை கடைப்பிடிப்பதையும் காணலாம். மேலும் சமூகத்தின் முதுகெலும்புகள் எனக் கருதப்படும் பல்கலைக்கழக மாணவர்களும் மூத்த கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும் காணமுடிகிறது. தீவிரமாக வெல்ல வேண்டும் புரட்சிகர முறையில் இயங்க வேண்டும் என்ற கொள்கையை தற்போது சமூகத்தில் காணமுடியாமல் இருக்கிறது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்துள்ளதுடன் தமிழர் பிரச்சினையை மெதுவாக ஆனால் உறுதியாக அடைய வேண்டும் என்ற கொள்கையை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளது போல் தெரிவதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. ஆகவே தமிழர்களது வாக்குகள் ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பாலும் செல்லும் எனக் கருதலாம்.
வடமாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டில் ஒரு அரசியற் கட்சி இருப்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஆனாலும் அக்கட்சியின் கொள்கையை ஏற்று மக்கள் வாக்களிக்காமல் இருப்பார்கள் என்பதை காண முடியாமல் இருக்கிறது. ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆகவே வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களது வாக்களிப்பு உச்சமாகக் காணப்படும். அவ் வாக்குகள் ஐக்கிய தேசிய முன்னணிக்கே அளிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் திடமாக கூறுகின்றனர். ஆயின் ஈ.பி.டி.பியின் ஆதரவுக்கும் சில வாக்குகள் கிடைக்கலாம்.
கிழக்கு மாகாண நிலை வட மாகாணத்தை போன்றதல்ல. அங்கு முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழ்வதால் தமிழ் சமூகத்தின் கட்டுப்பாட்டை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை. அதேபோல் முஸ்லிம்களின் தீர்மானத்தை தமிழர்கள் ஏற்க வேண்டும் என யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. முன்னைய காலங்களில் தேர்தல்களில் இவ்விரு சமூகத்தவரும் தனித்தனியே பிரிந்து தமது சமூக நலன்களை கருத்தில் கொண்டு வாக்குகளை அளித்து வந்ததை நாம் காணலாம்.
இம்முறை இந்நிலை கிழக்கு மாகாணத்தில் இல்லை. சகல இன மக்களும் தமிழ் முஸ்லிம்களும் சேர்ந்து ஒரு கட்சிக்கே வாக்களிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிலர் மாறுபட்டு இருப்பினும் அம்மாறுதல் பெரிதான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே வட மாகாணத்தை போலவே கிழக்கு மாகாண மக்களும் ஒரு கட்சிக்கே வாக்களிக்க இருப்பதாக தெரிவதால் அவ்விரு மாவட்டத்தின் வாக்குகளில் மிகப் பெரும்பான்மை வாக்குகள் ஐக்கிய தேசிய முன்னணிக்கே கிடைக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே புதிதாக ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினையை தீர்க்க முற்படும் நடவடிக்கைகளை எடுக்கும் போது ஈ.பி.டி.பி மற்றும் சில கட்சிகள் பிரச்சினையை தீர்க்க ஒத்துழைப்பை வழங்கும் என திட்டவட்டமாக கூறலாம்.
இளைஞர்கள – மிதக்கும் வாக்குகள் எப்படி இருக்கும்?
தற்கால உலகில் இளைஞர்களின் மனோநிலை முதியவர்களின் மனநிலையில் இருந்து மாறுபட்டு காணப்படுவதை நாம் காணலாம். இது இலங்கைக்கும் பொருந்தும் பல்லின மத கலாசாரங்களை அடங்கிய நாடாக இலங்கை இருந்த போதும் இளைஞர்கள் மனநிலை புதிய உலக படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் வேறுபட்டு காணப்படுவதில்லை. ஆகவே இளைஞர்கள் மற்றும் மிதக்கும் வாக்காளர்களின் மனநிலை நாம் மேலே கூறியவாறு இன மத நோக்கம் கொண்டதாக மட்டும் இருக்கப்போவதில்லை. அவர்களது அறிவு ஞானம், தொழில்நுட்ப சாதனங்கள், கருத்துக்கள் மற்றும் படிப்பறிவு, பேஸ்புக் போன்ற சாதனங்களின் கருத்துக்கள் நிச்சயமாக அவர்களது மனதை பாதித்திருக்கும் என்பதை மறக்கக்கூடாது. அத்தகைய நிலையில் உள்ள இளைஞர்கள் ஏனைய இன மதத்தை சார்ந்த இளைஞர்களின் உள்ளத்தை பாதிக்கும் முறையில் நடக்கப் போவதில்லை. தற்போது இலங்கையில் 640,000 இளைஞர்கள் யுவதிகள் வாக்காளர்களாக வாழ்வதாக தெரியவருகிறது. அவர்களது மனநிலையை பற்றிய கணிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளது என்னவெனில் இலங்கையில் அவர்களது வாக்குகள் தேசத்தில் இன மத ஐக்கியத்தை ஏற்படுத்தப் பாவிக்க இருப்பதாகவே உள்ளதாகவும் இன ஐக்கியம் முக்கியமானதாக அவர்கள் மனதில் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆகவே நடைப் பெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை சிங்கள மக்களின் முடிவு ஒரு விதமான நோக்கத்தை கொண்டும் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் முடிவு சிங்கள மக்களின் நோக்கத்தில் இருந்து வேறு ஒருவிதமான நோக்கத்தை கொண்டும் இளைஞர்கள் மிதக்கும் வாக்காளர்களின் வாக்குகள் வேறு ஒரு நோக்கத்தை கொண்டும் இருக்கப் போவதாலும் அதனை ஊக்குவிக்க ஜனாதிபதி அபேட்சகர்கள் மூவர் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்பதையும் பார்க்கும் போது யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை வாக்காளர்களே தீர்மானித்து கொள்ளலாம்.
தென்னிலங்கை சிங்கள மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க ஜனாதிபதி அபேட்சகர் ஒருவரும் இலங்கையர் என்ற இன ஐக்கியத்தை வேரூன்றச் செய்ய இன்னுமொருவரும் இளைஞர் யுவதிகளின் “நாம் இலங்கையர்” என்ற எண்ணத்தை வளர்க்க இன்னுமொருவருமாக மூன்று அபேட்சகர்கள் தமது பிரசாரங்களை மேற் கொண்டு வருவதை நாம் காணலாம். இதில் யார் வெற்றி பெற இடமிருக்கிறது. என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
உங்களது தீர்மானம் எதுவோ அதுவே எனது தீர்மானமுமாக இருக்கும். ஆனால் எனது தீர்மானத்திற்கு அடிப்படை இனவாதம் வேண்டாம் என்றும் இன ஐக்கியமே வேண்டும் என்பதும் இளைஞர் யுவதிகளின் எதிர்கால வாழ்வு நலவாக இருக்கவேண்டும் என்று நான் கருதுவதேயாகும்.
ஜனாதிபதித் தேர்தலும் கருத்துக் கணிப்புகளும்
ஜனநாயக நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு முக்கிய விடயமாக காணப்படுகிறது இதற்கு காரணம் கருத்துக் கணிப்பு ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வாகும். ஆகவே மேலை நாடுகளில் இன ரீதியாக மக்கள் பிரிந்து வாக்களிப்பதில்லை. நாட்டின் நலன் கருதியே அவர்கள் வாக்களிப்பது உண்டு. கருத்துக் கணிப்புக்கள் மூலம் வாக்காளர்களின் மனநிலையை அறிய முடிகிறது. வெற்றி பெறுகின்ற கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்ற மனபான்மை மக்களிடம் காணப்படுவது வழக்கம்.
கருத்துக் கணிப்பை நடத்துபவர்கள் சாதாரண பேர் வழிகள் அல்ல. பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவாளிகள் இதனை நடத்துகின்றனர். இதற்கு முதற்படியாக ஒரு வினாக்கொத்தை தயாரித்து அதனை தெரிவு செய்யப்பட்ட சில வாக்காளரிடம் கொடுத்து விடையைப் பெற்று இதன் பின்னர் விடையில் இருந்து அவர்கள் கண்ட முடிவை மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.
கருத்துக் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. மேற்குலக நாடுகள் இதில் முன்னிலையில் நிற்கின்றன அவை வெளியிடும் கருத்துக் கணிப்பு தவறுவதில்லை.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த லோக் சபா தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா வெற்றி பெற போகிறது என்பதை கருத்துக் கணிப்புக்கள் எடுத்துக் காட்டின. தேர்தல் முடிவும் அப்படியே இருந்தன. ஆகவே இலங்கையிலும் இந்நிலை வரவேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் இக்கருத்துக் கணிப்பு நாள்தோறும் நடைபெறுவதும் உண்டு.
கருத்துக் கணிப்பை வெளியிடுபவர்களில் பத்திரிகைகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. “இந்தியன் இன்ஸ்டியூட் ஒப் பப்ளிக் ஒப்டீனியன்” என்ற அமைப்புதான் முதன்முதலாக தேர்தலுக்கு முன்னர் கருத்துக் கணிப்பை வெளியிட்டது. பின்னர் தொடர்ந்தும் திறமையான கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. கருத்துக் கணிப்பு பிழைபட்டாலும் பத்திரிகைகளை தாக்கும் செயல்கள், ஆசிரியர்களை கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை. ஆகவே இலங்கைப் பத்திரிகைகள் தேர்தல் கணிப்புகளை வெளியிட தயங்குவதில் ஆச்சரியமில்லை.
கருத்துக் கணிப்பில் முக்கியமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று நாட்டில் எழும் அபிப்பிராயங்கள் எல்லாப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறுபட்டு காணப்படும். உதாரணமாக இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக எல்லாப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணமாக இலங்கையில் இம்முறை வடக்கு – கிழக்கு மற்றும் சிறுபான்மை இன மக்கள் வசிக்கின்ற மாகாணங்களில் வாழுகின்ற எண்ணமும் வேறு தனி இன மக்கள் வாழுகின்ற எண்ணமும் வேறு பட்டு காணப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் இந்நிலையே காணப்படுகிறது என்று ஒருவராலும் கூற முடியாது. உண்மை நிலைமை என்ன என்பதை கூற முடியாத ஒரு நழுவல் நிலையே காணப்படுகிறது. இதனால் வாக்காளர் நன்கு சிந்தித்து தமக்கு பிடிக்கும் ஒருவருக்கு வாக்களிப்பதே நல்லது. அதற்கு வேறு ஒருவரின் அறிவுரை தேவை என நான் நினைக்கவில்லை.
தொகுப்புரை
வாக்காளர் என்னிடம் கேட்கும் வினாக்களில் பிரதானமான வினா என்ன வெனில் கட்டாயம் 1, 2, 3 என்ற வாக்குகள் கட்டாயம் எழுத வேண்டுமா என்பது.
விடை இல்லை என்பதாகும்.
நீங்கள் உங்களது வாக்கை மட்டும் [1] பாவித்தால் அது செல்லுபடியாகும். 2, 3 எழுத தேவையில்லை.
இவ்விளக்கம் தேர்தல் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் சிறு பிள்ளைகளும் விளங்கக்கூடிய விதத்தில் பிரசுரமாகியுள்ளது. பார்க்கவும்.
நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கும் Vote உம் இரண்டு சலுகை வாக்குகளும் (Preferential Vote) உம் உண்டு. கட்டாயம் வாக்கை பாவிக்க வேண்டும். சலுகை வாக்குகளை பாவிக்க தேவையில்லை. விரும்பினால் மட்டுமே அவற்றை பாவிக்க வேண்டும்.
கே.ஜீ.ஜோன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment