
அவன் பிறப்பதற்கு முன்னர்
– நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.
பல முன்னோர்களையும் “ அவன்
“ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த
ஆண்டவனைக்கூட “ அவன் படைத்தான் “ எனத்தானே சொல்கிறார்கள்.
நான், அவன் அப்பன் பிறப்பதற்கு
முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால் என்னிடம்
வந்து செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் வந்து திரும்பிய அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள்
கல்லெறிந்து என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.

அவனுக்கு அந்தநாள் நினைவுகள்
வந்திருக்கவேண்டும். அவனை அன்று அழைத்துவந்தவர்கள்,
என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள்.
அவன் என்னிடமிருந்து
விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால், என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான்.

1902 ஆம் ஆண்டில்
பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன்.
அன்று என்னைப்பார்க்க
வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும்
எழுதியிருக்கின்றான்.
அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும்
அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

“ செத்துத் தொலைக்கலாம்
செத்தென்ன
ஆகப்போகிறது…?
இருந்து
தொலைக்கலாம் ! “
இதுதான் அந்தக்கவிதை.
எனது வாழ்க்கையும் இப்படித்தான் ஆகிப்போனது.
பல இலட்சம்பேரின் பாதங்கள்
எனது மடியில் பதிந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தலைவர்கள்
முதல் அரசியல் கேடிகள் வரையில் வந்து நின்று
நடமாடிய
அந்த மடியில் அவன் நின்று என்னை ரசித்தான்.

ஆனால், மக்களாலும் மக்களை
ஆண்டவர்களினாலும் நான் சூறையாடப்பட்டேன். எனக்கு
நேர்ந்த கதிபற்றி பல்லாயிரம்பேர் பேசியிருக்கலாம்.
கதைகதையாகச் சொல்லியிருக்கலாம். என்னைக்காயப்படுத்தி
சூறையாடியவர்களும் தங்கள் தரப்பில் அதற்கான நியாயங்களை சொல்லியிருக்கலாம்.

அதனால் நான் பாழடைந்த பாவியானேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த
அவன், அனைத்துகொடுமைகளையும் சகித்துக்கொண்டு நான் வாழ்ந்த நினைவுகளை எனது மடியிலிருந்து
மீட்டுக்கொண்டிருந்தான்.

அதன் பொருளை இவ்வாறும்
எடுத்துக்கொள்ளலாம்.
பெரியவரே
உங்களுக்கு என்ன வேண்டும்..?
அய்யாவுக்கு
என்ன வேண்டும்..?
சேர், உங்களுக்கு
என்ன வேண்டும்..?
துரை உங்களுக்கு
என்ன வேண்டும்..?
அந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த
தலைவர்களிடம் ஏதேதோ கேட்டு, இறுதியில் எல்லாவற்றையும்
கோட்டைவிட்டவர்களும் இப்போது என்னிடம் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வருபவர்களிடம்
அந்தச்சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஒரு குரல்
“ என்ன வேண்டும்..? “ என்று
பெரும்பான்மை இனத்தின் மொழியில் கேட்கிறது.
“ சீனியில்லாமல் தேநீர் வேண்டும். உண்பதற்கு ஏதும் இருக்கிறதா…? “ எனக்கேட்டான் அன்று என்னைப்பார்க்கவந்தவன். அவனுக்கு பெரும்பான்மையினத்தவரின் மொழி தெரியும். அந்த மொழியிலேயே கேட்டான்.
அந்த சிற்றுண்டிச்சாலையை
நடத்துபவனோ, அல்லது அங்கு பணியாற்றுபவனோ தெரியவில்லை. “ சோறு, பணிஸ்
, மற்றும் தின்பண்டங்கள் இருக்கின்றன “ என்றான்.
பசியோடிருந்த அவனுக்கு,
அந்தகாலைவேளையிலும் சோறு அங்கிருப்பது வியப்பான தகவல். பெரும்பான்மையினத்தவர்கள் பெரும்பாலும்
மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதாக அவன் முன்பே
அறிந்திருந்தான்.
“ சோறு வேண்டாம். இனிப்பில்லாத பணிஸ் இருக்கிறதா..?”
“ இல்லை மாத்தயா…? இனிப்பு எந்த உணவில்தான் இல்லை. “
அங்கிருந்த மற்றும்
ஒருபணியாள் “ மாத்தயா மென்ன சீனி நெத்திவ
ககட்ட
“ எனச்சொல்லியவாறு, ஒரு தேநீர்கப்பை நீட்டினான். அதனை அருந்தியவாறு
வெளியே வந்து என்னைபார்த்துக்கொண்டே இருந்தான். எனது அழகை ரசித்தான்.
நான் செத்து செத்து
பிழைத்து வாழும் அந்த நகரத்திலும் எனது குழந்தைகள் நகர்ந்துசெல்லும் பாதைகளின் அருகாமையிலும்
எத்தனைபேரின் வாழ்க்கையில் இனிமை இருக்கிறது..?
எனது கதையையும், என்னைத்தேடி வந்தவர்களின் கதையையும் அவனது நண்பர்
ஒருவர் ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார். அவரும்
பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்தான். அதன்பெயர் In Search Of
A Road - ஒரு
பாதையைத்தேடி - அந்தப்படத்தை அவன் வாழும் நாட்டில்தான் அவனால்
பார்க்கமுடிந்தது. அதில் அவனது பழைய நண்பர்களும் தோன்றியிருந்தனர். அதுபற்றி அவன்
முன்னர் எழுதியிருக்கின்றான்.
இப்படம் குறித்து சிறிய
பிரசுரமும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அந்தப்பிரசுரத்தில் இடம்பெற்ற வரிகளை
எனது மடியிலிருந்து அவன் நினைவுகூர்ந்தான்.
வடக்கே ஓடும் புகையிரத
வண்டியினதும் அதற்குச்சமாந்தரமாகச்செல்லும் ஏ 9 பாதையினதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கதை ஒரு பாதையைத்தேடி....
போருக்கும் சமாதானத்துக்கும் இடையில்
அகப்பட்ட நிலையில் உள்ள மக்களின்
கதை. பயணக்கதை மரபில்
உருவாகியுள்ள இத்தயாரிப்பு
தன்கதை சொல்லும் பாணியில்
ஒரு விவரணப்படமாகியது. இந்தப்புகையிரத வண்டியும் ஏ 9 பாதையும் யுத்தம் - சமாதானம் - பயணம்
- சமூக எழுச்சி
- இடம் - இடப்பெயர்வு என்பவற்றின் சின்னங்களாகும்.
யாழ்நகர் நோக்கிப்புறப்படும் புகையிரத
வண்டி இடம் - நிலம் பிராந்தியம் - யுத்தம்
- சமாதானம் -
இல்லம் - நாடு என்பவற்றுக்கூடாகப் பயணம்
செய்கிறது. ஒரு பூமியை
நாடி.... ஒரு கதையைத்தேடி.
அந்த ஆவணப்படத்தை எடுத்தவரின் பெயர் தர்மசேன பத்திராஜ.
அவனுக்கு மற்றும் ஒரு நண்பர் இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் –
நாடகாசிரியர். எனது இருப்பிடத்திலிருந்து
அக்காலத்தில் இரவுவேளையில் புறப்படும் எனது குழந்தை பற்றி கொழும்பு மெயில்
என்ற இசைச்சித்திர நிகழ்வை பல அரங்குகளில் நடத்தியிருக்கிறார்.
அதனை எழுதித்தயாரித்து இயக்கிய அவனது நண்பர்
மாவை நித்தியானந்தன் அதில் எழுதிய பாடல் வரிகள்:
“ என்றுதான் இந்த யுத்தம்
முடிந்திடும் வாழ்க்கை விடிந்திடுமோ...?
வானிலே ஹெலி சுற்றிப்பறக்குது – வீணிலே அது சுட்டுப்பொசுக்குது…
என்ன அநியாயம் …. “
பல்லாயிரம்பேர் வந்து சென்ற எனது இருப்பிடம் 1990 ஆண்டிற்குப்பிறகு ஒரு
காட்சிப்பொருளானது. பாழ்பட்டுப்போன எனது
உடலை படம் எடுத்துச்சென்றார்கள்.
அன்று என்னைப்பார்க்க வந்தவனும் அதற்கு முன்னர் தாயகம்
விட்டுச்சென்றுவிட்டான். அதற்கு முன்னர்
அவன் இங்கு படிக்கவந்தபோதும் அதன்பிறகும் வந்து சென்றிருக்கின்றான். அதனால் அவனது
வாழ்வின் நினைவுகளிலும் நான் தங்கியிருக்கின்றேன்.
இறுதியாக நான் வாழும் நகரிலிருந்த பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது
என்னிடம் ஒரு காலை வேளையில் வந்து இறங்கி, அந்தக்கோரமான
காட்சிகளைப்பார்த்துவிட்டு, அன்று இரவே மீண்டும் என்னிடம் வந்து விடைபெற்றுச்சென்றான்.
அவனுக்கு அந்தநாட்கள் யாவும் நினைவில் வந்து வருத்தியது.
எனது வாழ்வை நன்கறிந்தைமையால், எனக்கு
நேர்ந்த அவலங்கள் பற்றியும் மீண்டும்
புத்துயிர் பெற்றமை பற்றியும் எழுதியிருக்கின்றான்.
அவ்வாறு புத்துயிர் பெற்றவேளையில்,
என்னிடம் ஏற்கனவே வந்து சென்றிருக்கும் பல தமிழ்த்தேசிய உணர்வுத்தமிழர்கள்
என்னை வந்து பார்க்கவில்லை. அன்றைய நிகழ்வை அவர்கள் பகிஷ்கரித்தார்கள்.
எனது உடைமைகளை சூறையாடியவர்கள் ஒரு நியாயம் சொன்னார்கள்.
அதுபோன்று எனக்கு அண்டை நாட்டின் ஆதரவோடு புத்துயிர் தந்தவர்களும் அதற்கு ஒரு
நியாயம் சொன்னார்கள். அந்த புத்துயிர்ப்பை அன்று
பகிஷ்கரித்தவர்களும் வேறு ஒரு நியாயம் சொன்னார்கள். இவர்கள் மத்தியில் நீதி
நியாயம் பேசுபவர்கள்தான் அதிகம்.
எப்படியோ, நான் பேரழிவிலிருந்து
மீண்டிருக்கின்றேன். அந்த மீட்சியை புறக்கணித்தவர்கள், இன்று நான் வாழும்
இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் காலம் காலமாக வாழ்ந்த மக்களின் குடியிருப்புகளை
அகற்றிவிட்டு சர்வதேச விமான நிலையம் அமைத்ததும் அந்தக்கொண்டாட்டத்திற்கு
சென்றுவிட்டு, அதற்கும் ஒரு நியாயம்
சொல்லிவருகிறார்கள்.
நியாயங்கள் – அநியாயங்களை நாளாந்தம் கண்டுவரும் என்னை வந்து பார்த்துவிட்டுச்சென்றிருக்கும்,
அவனது கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. எனது மடியிலிருந்து ஒரு நூல்நிலையம் எவருடை பராமரிப்புமின்றி இயங்குகிறது.
மும்மொழியும் தெரிந்தவர்கள் என்னிடம்
வருவதனாலோ என்னவோ, அதில் மும்மொழிகளிலும்
புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வருபவர்கள்
எடுத்து வாசிக்கலாம். பயணத்தின்போது எடுத்துச்சென்றும் வாசிக்கலாம்.
அதனைப்பார்த்த அவனும், தன்னிடமிருந்த
புத்தகங்கள் சிலவற்றை அங்கு வைத்தான். அதில் பெரும்பான்மை மொழியில் எழுதப்பட்ட
அவனது புத்தகம் ஒன்றும் இருக்கிறது.
அவன் நன்கறிந்திருக்கும் தோழர் கார்த்திகேசன் பற்றி எழுதப்பட்ட புத்தகமும்
அதிலிருந்தது.
எனது குழந்தை எனது மடிக்கு வந்து சேரும் வரையில் அவன் அதனை
எடுத்துப்படித்துக்கொண்டிருந்தான்.
குழந்தை வந்ததும் அதனுடன் தொற்றிக்கொண்டு தெற்கு நேக்கி பயணித்தான்.
யன்னலூடாக என்னையே பார்த்துக்கொண்டு சென்றான். எனது வாழ்வையும் எழுதவேண்டும்
என்று தீர்மானித்தான்.
அவனது பெயர் தெரியும்தானே..?
---0---
No comments:
Post a Comment