பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 20


இரு கோடுகள்


இரு தாரத்துடன் வாழ்க்கை நடத்தும் கதாநாயகனை அடிப்படையாக வைத்து ஏராளமான தமிழ்ப் படங்கள் வந்துள்ளன.  ஆனால் இரு தாரத்தில் ஒரு தாரம் அவனது மேலதிகாரியாகவும், அவளுக்கு கீழ் பணியாற்ற வேண்டிய ஊழியனாகவும் கதாநாயகனை சித்தரித்து உருவான முதல் படம்தான் இருகோடுகள்.


இயக்குனர் சிகரம் என்று பிற்காலத்தில் புகழ்பெற்ற கே. பாலசந்தர் 1969ல் கதை வசனம் எழுதிய இயக்கிய இரு கோடுகள் ரசிகர்களின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெரிதும் பெற்றது.

ஒரு கோட்டை அழிக்காமல் அதை எவ்வாறு சிறிய கோடாக்குவது என்ற விடுகதைக்கு விடைதான் இரு கோடுகள்.  இந்தப் படத்திற்கான மூலக் கதையை ஜோசப் ஆனந்தன் எழுதியிருந்தார்.மேடை நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததை கலாகேந்திரா திரை நிறுவனம் திரைப் படமாக தயாரித்தது.  படத்தை உருவாக்கும் பொறுப்பை பாலசந்தரிடம் விட்டது.  

காசிக்குப் போகும் கதாநாயகன் அங்குள்ள தமிழாசிரியரின் மகளை காதலித்து திருமணமும் செய்கிறான்.  திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவனின் தாய் தன் மகன் கலக்டராகப் போவதாக கூறி அவளை நிர்க்கதியாக்கி விடுகிறாள்.  இதை சவாலாக எடுக்கும் கதாநாயகியின் தமிழாசிரியரான தந்தை தன் மகளை படிக்க வைத்து கலக்டராக்குகிறார்.  கதாநாயகனோ கலக்டராக முடியாமல் கிளார்க் உத்தியோகத்தில் இணைந்து பணியாற்றுகிறான்.  மறுமணம் புரிந்த அவனுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.  அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கே அவனின் முதல் மனைவி கலக்டராக அவனின் உயரதிகாரியாக வருகிறாள்.  கதாநாயகன் என்ற கோடு அழியாமல் சிறிதாக அவன் மனைவி என்று கோடு பெரிதாக நிற்கிறது.  


இரண்டு மனைவிகளுடன் போராடும் பாத்திரத்திற்கு ஜெமினியை விட பொருத்தமானவர் யார் கிடைக்கப் போகிறார்கள்!  ஜெமினி கணேசன் இந்தக் கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தார்.  முதல் மனைவியாகவும் கலக்டராகவும் வரும் சௌகார் ஜானகி பதவிக்குரிய மிடுக்குடனும் கணவனின் அன்புக்கு ஏங்கும் பரிதாபத்திற்குரியவராகவும் அருமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார்.

பாலசந்தர் படம் என்றால் ஜெயந்தி இல்லாமலா! இதில் ஜெமினியின் இரண்டாம் தாரமாக வரும் ஜெயந்தி நடிப்பில் மிளிர்கின்றார்.  அவருடைய வேடத்தையும் நடிப்பையும் வெளிப்படுத்துவதில் பாலசந்தர் வெற்றி கண்டுள்ளார்.படத்தின் முக்கிய பாத்திரம் நாகேஷ்.  மனைவியை இழந்து குழந்தையுடன் தவிக்கும் அவர் பரிதாபத்துக்குரியவரா, சிண்டு முடித்து விடும் அவர் சகுனியா என்று விளங்காமலேயே படத்திற்கு நகைச்சுவையை வழங்குகிறர் நாகேஷ்.

படத்தில் சைலண்ட் வில்லனாக வருபவர் வி. எஸ். ராகவன். அலட்டலில்லாத நடிப்பு.  ஜெயந்தியின் தந்தையாக வரும் எஸ். வி. சகஸ்ரநாமம் மிகைப்படாமல் நடித்துள்ளார்.

வாழ்க்கை என்பது கரும்பலகை அல்ல அழித்து அழித்து மீண்டும் எழுதுவதற்கு நான் file ஐ பற்றி பேசுகிறேன்.  நீங்கள் life ஐ பற்றி பேசுகிறீர்கள்.  வார்த்தையிலேயே நயம் இல்லாத உங்கள் அம்மாவுக்கு இலக்கிய நயம் எங்கே தெரியப் போகிறது போன்ற பல கூர்மையான வசனங்களை பாலசந்தர் எழுதியிருந்தார்.

பாலசந்தர் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த வி.குமார் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார்.  அவரின் இசையால் வாலி இயற்றிய புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடல் பிரபலமடைந்தது.  நீண்ட காலத்திற்கு பின் ஜமுனா ராணி சுசிலாவுடன் இப்பாடலைப் பாடியிருந்தார்.  

69ம் ஆண்டு திரையுலக மேதை எஸ். எஸ். வாசன் மறைந்தார்.  படத்தின் ஆரம்பத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதேபோல் இதே ஆண்டு மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை நினைவு படுத்துவது போல் கலக்டர் சௌhகார் முதல்வர் அண்ணாவை சந்;திப்பது போல் காட்சி உருவகப்பட்டது.  அண்ணாவை காட்டாமல் அவர் குரல் மட்டும் ஒலித்தது. குரலுக்கு உரியவர் பலகுரல் மன்னன் சிவகங்கை சேது ராசன்!
No comments: