14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!
இங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி
அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பம்
கடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை !
மன்னாரில் வாக்களித்துவிட்டு புத்தளம் நோக்கி பயணித்தவர்கள் மீது மதவாச்சியில் மீண்டும் தாக்குதல்
வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்
13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ
இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!
14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!
12/11/2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி மூன்று இந்தியர்கள், மூன்று இந்தோனேஷியர்கள், இரண்டு தென்னாபிரிக்கர்கள், இரண்டு பூட்டானியர்கள், இரண்டு பங்களாதேஷியர்கள் மற்றும் இரண்டு மாலைத்தீவினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஒரு குழுவினர் நாளை இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி
(செ.தேன்மொழி)
11/11/2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது இவர்கள் கோத்தாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்குமாறும், இந்விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதாகவும் என்று எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்திருந்தனர். இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நபர்களுள் ஒருவரான நாமல் விஜயமுனி சொய்ஸா என்பவர் கருத்து தெரிவித்தார்.
இன்று(நேற்று) நாங்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்தற்காகவும் , கோத்தாபயவிடம் எமக்கிருக்கும் தனிபட்ட முரண்பாட்டின் காரணமாகவும் இங்கு வரவில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான முதல் தமைதான் அவர் இந்நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும் என்பது. இதனை அவர் உறுதிபடுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதானது ஏனைய வேட்பாளர்கள் 34 பேரை மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கும் செயலாகும். நன்றி வீரகேசரி
அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு
(நா.தனுஜா)
11/11/2019 கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது.
அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்திருக்கும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, பர்ஹான் காசீம், திஸத் விஜயகுணரத்ன, எம்.சி.ஜயலால் ஆகியோரால் இன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டது.
அங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது:
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்ஷ்வின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் நேற்று சட்டத்தரணிகள் குழுவொன்றினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சில கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சார்பில் வெளியிடப்பட்ட அக்கருத்துக்களை சட்டத்தரணிகள் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு எதிராக பிரதிவாதிகளால் ஏதேனும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றதா என்று ஆராய்ந்த பின்னரே அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் குறித்த வழக்கிற்கு எதிராக சில காரணிகள் முன்வைக்கப்பட்டன.
இத்தகைய வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு மனுதாரர்கள் சட்டரீதியான உரித்துடையவர்களா, மனுதாரர்கள் காலந்தாழ்த்தி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவசியமான தரப்பினர் தொடர்புபடுத்தப்படவில்லை, இன்னமும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் விவகாரமொன்று தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா ஆகிய எதிர்ப்புக்களே கோத்தாபயவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்க கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலாப்பயண வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, இரட்டைப் பிரஜாவுரிமையை முறையாகப் பெற்றுக்கொள்ளாமை, வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை முறையாக நீக்கிக்கொள்ளாமல் இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டமை ஆகிய காரணிகளை உள்ளடக்கி நீதவான் நீதிமன்றத்தில் 2019 செப்டெம்பர் மாதம் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடையாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கமுடியாது என்றே நீதிபதிகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை அவ்வறிக்கையில் 34 ஆம் பக்கத்தில் முக்கியமான விடயமொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பானது, ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் விசாரணை செய்வதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வகையில் இடையூறாக அமையாது என்று அதில் கூறப்பட்டள்ளது.
இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வேளையில், மக்களின் வாக்குரிமையின் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்வதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
அதாவது தமது வேட்புமனுவுடன் 'நான் வேறு எந்த வெளிநாட்டினதும் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை' என்ற உறுதிப்பத்திரத்தையும் அனைத்து வேட்பாளர்களும் கையளிக்க வேண்டுமென்பதே அதுவாகும்.
வேறு ஏதேனும் நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருந்தவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அதனை நீக்கிக்கொண்டமைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாகவுமே அத்தகையதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம், கோத்தாபய ராஜபக்ஷ அவரது வேட்புமனுவுடன், வேறு நாட்டின் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்ற உறுதிப்பத்திரத்தை சமர்ப்பித்திருக்கிறார்.
ஆனால் நேற்று அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் நீக்கிக் கொண்டிருப்பதாக ஊடகங்களிடம் காண்பித்த ஆவணங்கள் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருக்கவில்லை. இந்த ஆவணங்களை வேட்புமனுத்தாக்கலின் போதே கையளிப்பதற்கான சந்தர்ப்பம் கோத்தாபயவிற்கு இருந்தது. எனினும் இருவாரங்களுக்கு முன்னர் குறித்த ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் காண்பித்ததாக கோத்தாபய தரப்பு சட்டத்தரணிகள் நேற்று கூறினார்கள்.
எனின் அதனைச் செய்வதற்கு வேட்புமனுத்தாக்கலின் பின்னர் இவ்வாறு நாட்கள் காலந்தாழ்த்தியது ஏன்? அவற்றின் பிரதிகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன என ஜனாதிபதி சட்டதரணிகள் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது. நன்றி வீரகேசரி
(எம்.மனோசித்ரா)
11/11/2019 பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பமானது. அதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் இன்று இந்தியாவின் சென்னை நகரத்திற்கு பயணமானது.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான வாராந்த விமான சேவை ஆரம்பமானது தொடர்பில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சஞ்சீவ விஜயரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
எயார் இந்தியாவின் உப நிறுவனமான அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது இலங்கை விமான சேவைகள் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். அத்துடன் உள்ளுர் தனியார் விமான சேவையான பிட்ஸ் எயார் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமான சேவையை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து பல பிரயாணிகள் யாத்திரைக்காக இந்தியா சென்று வருகின்றனர். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான இந்திய உல்லாச பயணிகள் இலங்கை வருகின்றனர். இது இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவு ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. பலாலிக்கும் தென்னிந்திய விமான நிலையங்களான சென்னை மற்றும் திருச்சிக்கான விமான கட்டணங்கள் 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் வழிநடத்தலின் பேரில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் பலாலியில் அமைந்துள்ள யாழப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலாவது விமான சேவையில் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டார். இதன் போது ' இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ' ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
கடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை !
17/11/2019
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.
இதுவரை வெளியாகி வந்த முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலைவகித்து வந்த நிலையில் தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தற்போது முன்னிலை வகிக்கின்றார்.
சஜித் பிரேமதாஸ தற்போது தற்போது 49 வீத வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஷ 43 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகி வருகின்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இரு வேட்பாளருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மன்னாரில் வாக்களித்துவிட்டு புத்தளம் நோக்கி பயணித்தவர்கள் மீது மதவாச்சியில் மீண்டும் தாக்குதல்
17/11/2019 மன்னாரில் வாக்களித்து விட்டு புத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது மதவாச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி சென்ற அரச பஸ்கள் மீது ஓயா மடு பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மற்றும் கல்வீச்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அரசு பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் அந்த மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் அரச பஸ்களில் மதவாச்சி ஊடாக புத்தளம் சென்று கொண்டிருந்த போது இன்று மாலை சுமார் 6 மணியளவில் மதவாச்சி பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கல் வீச்சுத் தாக்குதலின் போது குறித்த பஸ்ஸில் பயணித்த சில பயணிகள் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும்,சம்பவம் இடம் பெற்ற இடத்தையும் அமைச்சர் றிஸாட் பதியூதீன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்
17/11/2019 காலி - நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம - காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.
'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும் வருபவன் நானே, நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ
17/11/2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்றுள்ளார்.
இந் நிலையில் 52.25 சதவீத வாக்குகளை பெற்று, இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!
17/11/2019 தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment