வீட்டில் மயான அமைதி.
மழைவிட்டாலும் தூவானம்
விடாதபாடயில்லை. மின்னலும் அதனைத்தொடரும் இடியோசையும் குறைந்துவிட்டது.                          ”  மின்னலும் இடியும் ஒரேநேரத்தில் உயிர்த்தாலும்,
ஓசையை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதால், முதலில் மின்னல்தான் எமக்குத் தெரிகிறது
“ என்று அப்பா, அபிதாவுக்கு சிறிய வயதில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
அந்த விஞ்ஞானத்தை அப்பா
அவளிடம் சொன்ன நாள் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அவளுக்கு ஐந்துவயதிருக்கும். அப்பாவின்
அம்மாவான பாட்டியாரிடம்தான் அபிதா எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பாள்.
இரவில் அபிதாவை, பாட்டுப்பாடியும்
கதைகள் சொல்லியும் உறங்கவைப்பதும் பாட்டிதான். 
ஒரு மழைக்காலத்தில்   மின்னலையடுத்து
இடிமுழங்கியதும்,   அபிதா,    “   பாட்டீ  “ என உரத்து ஓலமிட்டவாறு,  பாட்டியை இறுக அணைத்துக்கொண்டாள்.  அவளது பயத்தைப்போக்குவதற்காக அன்று இரவு பாட்டியம்மா,
அவளுக்கு ஒரு கதை சொன்னாள். அபிதாவை இறுக அணைத்துக்கொண்டு     “   அர்ச்சுனா…
அர்ச்சுனா…  “  என்று உரத்து சத்தமிட்டா.   “ யார் பாட்டி அர்ச்சுனா..?  “ என்று அவள் கேட்டதனால் சொல்லப்பட்ட கதை.
மகாபாரதத்தில் வரும்
துரியோதனனும் வீமனும் சிறுவயதில் சண்டை பிடித்தார்களாம். அவர்களின் கதாயுதம் ஒன்றுடன்
ஒன்று மோதும்போது இடியோசைபோன்று இருக்குமாம். பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகளான அவர்கள்
இருவருக்கும் மத்தியில் சிறுவயதில் தோன்றிய மோதல்தான் பின்னாளில் பங்காளிச்சண்டையாக
வளர்ந்தது என்பது அபிதாவின் பாட்டி சொன்னகதை.
சிறுவயது விளையாட்டாக
தொடங்கிய மோதல் கடுமையானதால், அதனைப்பார்த்துக்கொண்டிருந்த வீமனின் தாயார்  குந்திதேவி, 
அவர்களை விலக்குப்பிடிப்பதற்காக தனது மற்றும் ஒரு மகன் அர்ச்சுனனை உரத்துக்கூவி
அழைத்தாளாம்.
வானத்தில் வதியும் பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பதாகவும், வீமனும் – துரியோதனனும் இடியோசை
எழுப்புமாப்போன்று சண்டையிடுவதாகவும், அவர்களை விலக்குப்பிடிப்பதற்காக குந்திதேவி அர்ச்சுனனை
அழைப்பதாகவும் அபிதாவின் பாட்டி கதை சொன்னா.
அந்தக்கதையை ஆர்வமுடன்
கேட்ட அபிதா,  “இடியோசைதான் கேட்கிறது, குந்திதேவியின்
குரல் கேட்கவில்லையே  “  எனச்சொன்னாள்.
அவர்களின் கதாயுத மோதலின்
சத்தத்தில் அது கேட்காது. அதனால்தான் நான்,   “ அர்ச்சுனா…. அர்ச்சுனா..  “  என்று
சத்தமிடுகிறேன் எனச்சொன்ன பாட்டி அபிதாவை மடியில் கிடத்தி, ஆராரோ பாடல் பாடத்தொடங்கினா.
மறுநாள் அபிதா, அப்பாவிடம்
இந்த இடியோசையின் பின்னணிக்கதையை சொன்னதும், அவர் உரத்துச்சிரித்துவிட்டு,  மின்னல் – இடி – மழை பற்றி விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை
மிகவும் எளிதாக அபிதாவுக்கு விளக்கினார்.
இன்று கதை சொன்ன பாட்டியும்
இல்லை.  அப்பா – அம்மா – கணவனும் – குழந்தையும்  இல்லை. 
இந்த நான்குபெண்களின் கதைகளுக்குள் வந்து சிக்கியிருக்கின்றேன். இதுதான் விதியா..?
அபிதா, இரவுச்சாப்பாடு
புட்டுக்கு மாவு குழைத்துக்கொண்டு யோசித்தாள். வெளியே மின்னல் வெட்டி இடியோசை அடங்கிப்போனாலும்
அந்த வீட்டுக்குள் எதிர்பாராதவகையில் ஜீவிகாவுக்கும் சுபாஷினிக்கும் இடையே மின்னலாக
வந்த மோதல் வந்தவேகத்தில் அடங்கியிருந்தாலும், பாட்டி சொன்ன கதைபோன்று இனி அடிக்கடி
இந்த வீட்டில் அந்த மோதல் தொடருமோ என்ற அங்கலாய்ப்பும் அபிதாவுக்கு வந்தது.
இதில் யார் துரியோதனன்
? யார் வீமன்…?  யார் குந்திதேவி..? இடையில்
புகுந்து மோதலை நிறுத்தப்போகும் அர்ச்சுனன் யார்…?
அலுமினிய புட்டுக்குழலில்,  குழைத்த மாவையும் தேங்காய்ப்பூவையும் அடுத்தடுத்து  இட்டு, அவிக்கத்தயரானபோது,   “ என்ன… இரண்டு மெடம்களுக்கும் இடையில் அப்படி
என்ன பிரச்சினை…  ? “  எனக்கேட்டுக்கொண்டு சமையலலறைப்பக்கம் வந்தாள் மஞ்சுளா.
இவளுக்கு வேறு வேலையில்லை.
மற்றவர்களின் பூராயம் பார்ப்பதும் தேடுவதும்தான் இவளது பொழுதுபோக்கு. அபிதாவுக்கு மனதில்
எரிச்சல் பற்றியது. 
“ இங்க பாருங்க… நான்
வந்து ஒருமாதமும் ஆகவில்லை. நீங்கள்தான் எனக்கு முன்பிருந்தே இங்கே இருக்கிறீங்க. எனக்கென்ன
தெரியும்.. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது. நான் வீட்டு வேலை செய்ய வந்தனான். அத்தோடு
நிற்பதுதான் நல்லது. அவரவர் பிரச்சினைகளை அவரவர் தீர்ப்பதுதான் நல்லது. “ என்றாள் அபிதா.
அபிதாவின் இந்தப்பதிலை
மஞ்சுளா எதிர்பார்க்கவில்லை. இவள் சொல்வதும் சரிதான். இவள் இந்தவீட்டு வேலைக்காரி.
இவளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இல்லையேல் தலைக்கு மேலே ஏறி அமர்ந்துவிடுவாள்
எனநினைத்த மஞ்சுளா, “ அது சரி… புட்டுக்கு என்ன கறி வைக்கப்போரீங்க..? “ எனக்கேட்டாள்.
  “ என்ன வேண்டும்..? சுபாஷினிக்குப் பிடித்தமான வெந்தயக்குழம்பும்
உங்களுக்குப்பிடித்தமான முட்டைப்பொரியலும், ஜீவிகாவுக்கு பிடித்தமான கிழங்குப்பிரட்டலும்
செய்யட்டுமா.. ? “ 
“ சரிதான்… இதில் உங்களுக்குப்பிடித்தமானது  என்ன அபிதா..?”
“ உங்கள் எல்லோருக்கும்
பிடித்தமானதை சமைப்பதுதான் என்னுடைய வேலை. அதனை சுவைத்துப்பார்த்து நல்லதொரு விமர்சனத்தை
சொன்னால், அதுவே எனக்குப்பிடித்தமானது. “ எனச்சொல்லியவாறு வெங்காயம் உரித்து நறுக்கத்தொடங்கினாள்
அபிதா.
அப்போது, ஜீவிகா  தனது மடிக்கணினியுடன் வந்து சமையலறையில் உணவருந்தும்
மேசையில் அதனை வைத்தவாறு,  “ இரண்டுபேரும் கேளுங்க…
ஒரு கட்டுரை எழுதியிருக்கிறன். வாசிக்கிறேன். இந்த காலப்பகுதியில் இது எங்கட பத்திரிகையில்
வந்தால் நல்லா இருக்கும் என நம்பித்தான் எழுதினேன். ஏதும் மாற்றம் திருத்தம் இருந்தால்
சொல்லுங்கள். “ என்றாள். 
அருகிலிருந்த ஆசனத்தை
இழுத்து அமர்ந்துகொண்ட மஞ்சுளா,   “ உம்முடைய
அளப்பறை எங்கள் இரண்டுபேருக்கு மாத்திரமா.. சுபாஷினியையும் அழைத்துவரட்டுமா… “ எனக்கேட்டாள்.
“ அவளுக்கு இப்போது
மூட் அவுட். அவளை குழப்பாதே “ - 
“ அவளுடைய மூடை குழப்பியது
நீர்தானே… “ பூராயத்தை ஆராயும் எண்ணத்தில் மஞ்சுளா தூண்டில்போட்டாள்.
“ ஏய்.. மஞ்சுளா…இப்போது
நீ என்னுடைய மூடை குழப்பிவிடாதே…சும்மா உட்கார். நான் எழுதியிருப்பதை வாசிக்கின்றேன்
கேள். அபிதா நீங்களும் கேளுங்க.”
ஜீவிகா வாசிக்கத் தொடங்கினாள்.
அடுப்பில் புட்டு வெந்து
ஆவியாகிக்கொண்டிருந்தது.   
" நன்மைக்கும்  தீமைக்குமான 
போராட்டத்தில்,  நல்லவரின் தயக்கமும்  தாமதமுமே 
தீமையாய்  முடிகிறது " 
என்று  தமது ஹெம்லெட்  நாடகத்தில் 
ஒரு  செய்தியாகச்  சொன்னவர் உலக நாடகமேதை  வில்லியம் 
சேக்ஷ்பியர்.
இன்று  இலங்கையில்   அரசியல் கைதிகள்  விவகாரமும் 
ஒரு நாடகத்திற்கு   ஒப்பானதாக  மாறியிருக்கிறது.                            " வெளியே 
இருப்பவர்கள்  அனைவரும்  நல்லவர்கள் 
அல்ல.   சிறையினுள்ளே
இருப்பவர்கள்   அனைவரும்  கெட்டவர்கள் 
அல்ல "  என்று சிறிதுகாலம்  சிறைவாசம் 
அனுபவித்த  நடிகவேள்  எம்.ஆர்.ராதாவும்,  அதிகார  
வர்க்கமும்  அரசியல்வாதிகளும்  துரத்தி 
துரத்தி  வேட்டையாட   முனைந்தபோதிலும்,  மனம்  தளராமல் 
துணிந்து நின்று  இந்தியா   திகார் 
சிறைக்கைதிகளை   இரட்சித்த  தேவதையாக திகழ்ந்த  கிரண்பேடியும் 
வேறு   வேறு சந்தர்ப்பங்களில்
சொல்லியிருக்கிறார்கள்.
இன்று  இலங்கைச் சிறைகளில்  ஏற்கனவே 
வாடிய  நிலையில்   உளரீதியாகவும்  உடல் ரீதியாகவும்  அடைபட்டுள்ள 
அரசியல் கைதிகளின்   வாழ்வும்,  நன்மைக்கும் 
தீமைக்கும்  இடையிலான
போராட்டத்தில்    இரண்டறக் கலந்துவிட்டது.   அவர்கள் அனைவருக்கும்   பொது 
மன்னிப்பு  வழங்கினால்  நன்மையா...? தீமையா...?  என்று  
நடந்து முடிந்த அதிபர் 
தேர்தல்காலத்தில்  அரசியல்வாதிகள்
பட்டிமன்றம் நடத்தினார்கள். 
சிலர் வாக்கு வேட்டைக்காகவும் தேர்தல் பரப்புரைக்காகவும் தமிழ்பிரதேசங்களுக்கு
சென்றபோது, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள்
உறவினர்களை நேரில் பார்த்து, தங்களது கட்சி வேட்பாளர் வென்றால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்
என்று உறுதிமொழி வழங்கினார்கள். 
இந்த   அரசியல் 
கைதிகளில்   எத்தனைபேர்  நேரடியாக பயங்கரவாதச்செயல்களில்   ஈடுபட்டவர்கள்,   எத்தனைபேர்
சந்தேகத்தின்பேரில்   கைதாகி  சித்திரவதைகளின்  மூலம் 
ஒப்புதல் வாக்குமூலம்  
பெறப்பட்டவர்கள்,   பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு    தெரியாத்தனமாக  உணவும் 
உறையுளும் வழங்கியவர்கள்,   
எத்தனைபேரிடம்  சந்தேகத்திற்கிடமான  தகவல்கள் 
இருந்தன  என்பது  பற்றியும் 
அவரவர் மனச்சாட்சிக்குத்தான்  
தெரியும்.
சட்டம்   ஒரு 
இருட்டறை.   அங்கு  நீதிதான் 
ஒரு  வெளிச்சவிளக்கு என்பார்கள்.
இந்தப்பின்னணியுடன்   முன்னர் 
சிறையிலிருந்த  சில முக்கிய
அரசியல்வாதிகள்  பற்றியும்  கொலைக் குற்றச்சம்பவங்களுக்கு  துணைசென்று 
சாதுரியமாக  தப்பியவர்களையும் -  வன்முறைகளில் ஈடுபட்டு   பின்னாளில்  
அமைச்சர்களாகி  போதி பூசைகளில்
கலந்துகொண்ட  புனிதர்களையும்  எண்ணிப் பார்க்கத்தோன்றியது.” 
ஜீவிகா, மடிக்கணினியை
பார்த்து,  தான் எழுதியதை
வேகமாகச்சொல்லிக்கொண்டிருந்தாள். 
அபிதா முட்டை பொரிப்பதற்கான
ஆயத்தங்களை ஆரம்பித்தாள். மஞ்சுளா, குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தோடம்பழச்சாறு
எடுத்து, தனது கப்பில் ஊற்றி அருந்தினாள். அதனைப்பார்த்த ஜீவிகா, தனக்கும்
வேண்டும் என்று சைகையால் சொன்னாள். 
மஞ்சுளா, ஜீவிகாவின் கப்பை
எடுத்து, அவளுக்கும் ஊற்றிக்கொடுத்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள்.  மூன்று முட்டைகள்,  நன்கு நறுக்கப்பட்ட வெங்காயம், பெருஞ்சீரகம், சின்னச்
சீரகம், மஞ்சள் – மிளகு – மிளகாய்த்தூள் – உப்பு   சகிதம் நல்லெண்ணையில்   நறுமணத்துடன் அடுப்பில்
பொரிந்துகொண்டிருந்தது. 
ஜீவிகா, தோடம்பழச்சாறை
அருந்திவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். 
 “ இது
இவ்விதமிருக்க,  ஆயுத  உற்பத்தி செய்பவர்களுக்கு  தண்டனை  இல்லை.   அது 
ஒரு சர்வதேச  வர்த்தகம்.
அமெரிக்காவின் 
ஜோர்ஜ்புஷ்  குடும்பமும்   அவருடைய 
நெருங்கிய நண்பர்கள்  சிலரும்  ஆயுத வியாபாரத்தில்  கைதேர்ந்தவர்கள். அவர்களின் கனரக  ஆயுத தொழிற்சாலைகளில்  உற்பத்திசெய்யப்பட்ட  ஆயுதங்களுக்கு 
உலக  சந்தை  தேவைப்படின் பல  வறிய 
வளர்முகநாடுகளிலும்   மூன்றாம்  உலக 
நாடுகளிலும் ஏதாவது   ஒரு  கிளர்ச்சி 
தேவை.  அது  மத ரீதியாகவோ  
மொழி அடிப்படையிலோ   இன
ரீதியாகவோ   இருந்தாலும்  சரி.
அரசுக்கும்  
அதனை  எதிர்க்கும்  இயக்கங்களுக்கும்  ஒரே 
நேரத்தில் ஆயுதங்களை 
விநியோகிக்கும்  வர்த்தகர்கள்தான்
உள்நாட்டுப்போர்களின்   சூத்திரதாரிகள்.   இலங்கை 
உட்பட  பல கீழைத்தேய    நாடுகள் 
பாதுகாப்புக்கென 
கோடிக்கணக்கான  டொலர் நிதியை   வருடம்தோறும் 
ஒதுக்கிக்கொண்டுதான்  இருக்கின்றன.
அவ்வாறு  நிதி ஒதுக்கினால்தான்  சர்வதேச 
ஆயுத  வர்த்தகர்களின் பிழைப்பு   நடக்கும்.
இலங்கையில்  
போர்க்காலத்தில்  இரண்டு  தரப்பிலும் பயன்படுத்தப்பட்ட   ஆயுதங்கள் 
உள்நாட்டு  தயாரிப்புகளா...?
உகண்டா,   சோமாலியா,   எதியோப்பியா  முதலான 
வளர்முக - வறிய ஆபிரிக்க 
நாடுகளில்  நடந்த  உள்நாட்டுப் போர்களிலும்  சிரியா மற்றும்  பல 
நாடுகளிலும்  இன்றும் தொடரும் 
போர்களிலும் பயன்படுத்தப்படும்  
ஆயுதங்களை  அங்கெல்லாம்
அனுப்பிக்கொண்டிருப்பவர்கள்  யார்...?
இவ்வாறு   ஒரு  சர்வதேசக் குற்றம்  பகிரங்கமாக 
உலகில் அரங்கேறிக்கொண்டிருக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின்பேரில்   இவர்களுக்கு 
எந்தத்  தண்டனையும் இல்லை.   சிறைவாசம் 
இல்லை.
நீதியே  நீதான்  கேட்கவேண்டும்.
நீதிமன்றங்களில்  
நீதி தேவதை  தனது  கண்களை 
கறுப்புத்துணியால் முடிக்கொண்டிருப்பது 
இதற்காகத்தானா...?
இலங்கை 
அரசியல்  அரங்கில்  நல்லவர்கள் 
இருப்பார்கள்  என  நாம் 
நம்பினால்,   " அவர்களின்
தயக்கமும்  தாமதமுமே  தீமையாய் 
முடிந்துவிடும்   ஆபத்தும்
இருக்கிறது  "  என்ற 
சேக்ஷ்பியரின்  கூற்றையே  
அவர்களுக்கும் பொருத்தமானதாக   
அழுத்திச் சொல்கின்றோம்.  “
முட்டைப்பொரியலை 
ஒரு தட்டத்தில் எடுத்து வைத்துவிட்டு,  ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,   தோல் 
நீக்காத உருளைக்கிழங்குளை அவிப்பதற்கு அபிதா தயாரானாள்.
ஜீவிகா தொடர்ந்து தான் எழுதியதை சொல்லிக்கொண்டிருக்கிறாள். 
அந்தகட்டுரையில் வந்த ஒரு வரிமாத்திரம் அபிதாவை ஆழமாக
சிந்திக்கவைக்கிறது.   “ தயக்கமும்
தாமதமுமே தீமையாய் முடிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது  “ என்ற சேக்ஷ்பியரின் கூற்றை – அன்று
ஜீவிகாவுக்கும் சுபாஷினிக்கும் இடையில் தோன்றிய முறுகலுடன் ஒப்பிடப்பார்த்த அபிதா,
சுபாஷினியை சமாதானப்படுத்தி அழைத்துவருவதற்காக, அவளது அறையை நோக்கிச்சென்றாள்.
( தொடரும்) 
No comments:
Post a Comment