செம்மொழியாய் உயர்ந்ததுவே ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


    கம்பனது காவியமும்  கருத்துநிறை திருக்குறளும்
          உம்பர்தமை உருகவைக்கும் உணர்வுநிறை திருமுறையும் 
    எம்பெருமை பேசிநிற்கும் ஏற்றமுடை இலக்கியமும் 
            இன்னமுதாம் தமிழ்மொழியின் இலக்கணமாய் இருக்குதன்றோ !

    தேமதுரத் தமிழாக திசையெங்கும் சென்றதமிழ் 
        பாவலர்கள் காவலர்கள் பாசமுடன் வளர்த்ததமிழ் 
    அன்னியரின் ஆட்சியிலும் அழகிழக்கா நின்றதமிழ் 
          அறிவுலகத் தமிழாகி அதியுயர்வு பெற்றுளது ! 

    கணனியிலும் தமிழ்வந்து கருத்துகளை பகர்கிறது
          கருவறையில் தமிழ்புகுந்து கடவுள்துதி செய்கிறது 
    உணர்வுநிறை மொழியென்று உலகத்தார் எண்ணுவதால்
          உவப்புடனே தமிழ்பயில உளம்விரும்பி வருகின்றார் !

    பொதிகைமலை தமிழோடு இணைந்ததெனச் சொல்லுகிறார்
            புத்துணர்வுத் தமிழிப்போ இமயமலை போலாச்சு 
    அனைவருமே தமிழ்பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்
            அனைத்துலகும் தமிழுக்கு அகவணக்கம் கொடுக்கிறதே !

    அன்னியரைக் கவர்ந்ததமிழ் ஆட்சியிலே அமர்ந்ததமிழ்
            சொன்னயமும் பொருணயமும் சுவையாகச் சொல்லுந்தமிழ் 
    நன்நயமாய் வாழுதற்கு நல்லொழுக்கம் நவிலும்தமிழ்
            நம்முணர்வில் கலந்திங்கு நமையியக்கி நிற்கிறதே !


    உயிரென்றும் மெய்யென்றும் எழுத்துக்குப் பெயரிட்டு
          உன்னதமாம் உண்மைதனை உணர்த்தியது எங்கள்தமிழ் 
    வழக்கொழிந்து போகாமல் வாழுகின்ற தெங்கள்தமிழ் 
          வையகமே வியந்துநிற்கச் செம்மொழியாய் உயர்ந்ததுவே  ! 


-->

No comments: