26/10/2019 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட ஏனைய சில வேட்பாளர்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன. மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவிற்கும் பூரண ஆதரவினை தெரிவித்துள்ளன என்பதும் தெரிந்த விடயமாகும். இக்கட்சிகள் மலையக மக்களின் நலன்கருதி வேட்பாளர் களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. இது ஒருபுறமிருக்க பிரதான கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி தன்னகத்தே எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் நாம் ஆழமாகக் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. மேலும் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறும் வேட்பாளர்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் எவ்வாறு நடந்துகொள்ளப்போகின்றார்கள்? வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுமா? அல்லது காற்றில் பறக்கவிடப்படுமா? என்ற நியாயமான சந்தேகத்தினையும் பலர் எழுப்பி இருக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் திணைக்களம் இத்தேர்தலை சிறப்பாக நடத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இத்தேர்தலுக்கான மொத்த செலவு நான்கு தொடக்கம் 4.5 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளைச் செய்திருந்தது. எனினும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு 07 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. இதேவேளை பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் குறித்தும் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது. பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளுக்குச் செல்ல முடிவு செய்ததால் தேர்தல் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. காகிதச் செலவின் அதிகரிப்பு, அச்சிடும் நேரத்தின் அதிகரிப்பு, வேட்பாளர் தொகை என்பவற்றின் காரணமாகவும் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் வன்முறைகளும் வேகமாக அதிகரித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 13 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் குறித்து ஆயிரத்து 134 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (21) வரை பெப்ரல் அமைப்பிற்கு 140 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பாகக் கிடைத்திருப்பதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை மீறிச்செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுயாதீன முறையில் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ரோஹண மேலும் வலியுறுத்தி இருந்தார். ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பு குழுக்கள் இடம்பெற உள்ளன. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு, தென்னாசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களுடன் நெருக்கமாக இயங்கும் ‘பெம்போசா’ என்ற கண்காணிப்புக்குழு, சிவில் அமைப்புக்களின் சார்பில் செயற்படும் ஆசிய தேர்தல்கள் கண்காணிப்பு வலையமைப்பு எனப்படும் ‘அன்ப்பல்’ என்ற குழு உள்ளிட்ட நான்கு சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளன.
ஆதிக்கம்
இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால தேர்தல்களில் சிறுபான்மையினர் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் என்று எதுவானபோதும் சிறுபான்மையினர் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை. எனினும் இம்முறை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் ஒத்துழைப்பின்றி தேர்தலில் வெற்றி கொள்ளும் முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றமை நீங்கள் அறிந்த விடயமாகும். இந்நிலை சிறுபான்மையினரின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றது. சிறுபான்மையினரின் ஆதிக்கம் வலுப்பெறாதவிடத்து அது பாரிய பின்விளைவு களுக்கும் இட்டுச் செல்வதாக அமையும் என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் சகல இனங்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேற்றுமைக்குள் ஒற்றுமை காணப்படுதல் வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு வலுசேர்ப்பதாகவே வேட்பாளர்களின் செயற்பாடுகள் அமைதல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைவிடுத்து தேர்தல் வெற்றிக்காக சிறுபான்மையினரின் மனங்களில் கீறல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமையுமானால் இது பாதக விளைவுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
சிறுபான்மையினரை அரவணைக்கின்ற மனப்பாங்கு பெரும்பான்மை கட்சிகளிடம் காணப்படுதல் வேண்டும். ‘இலங்கையர்’ என்ற பொதுநோக்கு நாட்டின் அபிவிருத்திக்கும் ஐக்கியத்திற்கும் தோள் கொடுக்கும் என்பதோடு இலங்கை மீதான சர்வதேசத்தின் சந்தேகப் பார்வையையும் இல்லாது செய்யும். எனவே நல்லிணக்கச் செயற்பாடுகளின் ஊடாக ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்கு வித்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வேட்பாளர்கள் இனவாத அடிப்படையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதனை கண்டித்தும் மக்களிடையே விரிசல்களை வளர்க்க வேட்பாளர்கள் துணைபோகக் கூடாது என்றும் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இத்தகைய அமைப்புகளின் நியாயமான கண்டனத்தை வேட்பாளர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
தமிழ் கட்சிகள்
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு பொது உடன்பாட்டு ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, பிளட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டிருந்தன. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். வடக்கு–கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்ற பல விடயங்கள் பொது உடன்பாட்டு ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறாக 13 கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ள இந்த ஆவணம் குறித்து இப்போது வேட்பாளர்களும், பெரும்பான்மை மக்களும் அதிகமாகவே பேசத் தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே நல்லாட்சி அரசியல் யாப்பு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது புதிய அரசியல் யாப்பில் சமஷ்டிக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்தரப்புகள் வலியுறுத்தி இருந்தன. எனினும் சமஷ்டி என்ற சொல்லே பெரும்பான்மையினரில் சிலருக்கு வேப்பங்காயாக இருந்தது. சமஷ்டியின் ஊடாக நாடு பிளவுபடும் அபாயம் காணப்படுவதாக இவர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். சமஷ்டி குறித்த அறிவற்றவர்கள்கூட இனவாதத்தை மையப்படுத்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பொது உடன்பாட்டு ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பொது உடன்பாட்டு ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தை பெரும்பான்மைக் கட்சிகள் அல்லது பிரதான வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை இருந்து வருகின்றது. இதேவேளை பொது உடன்பாட்டு ஆவணத்தில் உள்ள விடயங்கள் சில இனவாதத்திற்கு வித்திடுவதாக உள்ளதாகவும், நாடு துண்டாடப்படுவதற்கு இந்த ஆவணம் உந்துசக்தியாக அமையுமென்றும் கருத்துகள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் தமிழீழத்திற்கு வலுசேர்ப்பவர் என்று சிலரால் முத்திரை குத்தப்படுவதனையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனிடையே கூட்டமைப்பின் நிபந்தனைக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார். இக்கருத்தானது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ மீதான பெரும்பான்மையினரின் கரிசனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் பெரும்பான்மையினரின் வாக்குகளை இவர் இன்னும் அதிகமாக பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இதனிடையே கோரிக்கைகளை நிராகரித்துள்ள கோத்தபாய ராஜபக் ஷவுடன் எவ்விதமான பேச்சும் இல்லை என்றும் ஐந்து தமிழ்க் கட்சிகளும் இந்த வாரம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். ஒருவேளை கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாக இருந்தால் அம்முடிவு பொதுஜன பெரமுனவுக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைத்ததாக இருக்கும். தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பிரதான துரும்பாக அக்கட்சி இதனை பயன்படுத்தும் என்பதும் ஐயமில்லை.
உள்ளடக்கம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிடமும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடமும் மலையகக் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கின்றன. குறிப்பாக சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றது. மலையகத்துக்கென்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் நீண்டகாலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் அது இன்னும் சாத்தியமாகாத ஒரு நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் மலையக பல்கலைக்கழகம் தொடர்பான கோரிக்கையினை தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்திடம் முன்வைத்திருக்கின்றது. இதைப்போன்றே மலையக மக்களின் அபிவிருத்தி கருதிய மேலும் பல விடயங்களும் முன்வைக்கப்பட்டிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவிக்கின்றார். இதனடிப்படையில், மலையக மக்களின் வீடமைப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களுக்கும் வீடும் காணியும் வழங்கப்படுதல் வேண்டும். பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் என்பன புதிதாக மலையகப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். கிராம அலுவலர் பிரிவுகள் அதிகரிக்கப்படுதல் வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளராக்கும் நடவடிக்கை குறித்த கவனம் செலுத்த வேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமிடத்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தொழிற் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மலையக இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் கல்விக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மேலும் பல கோரிக்கைகளையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, சஜித் பிரேமதாசவிடம் முன்வைத்திருப்பதாக லோரன்ஸ் மேலும் தெரிவித்தார். இக் கோரிக்கைகளுக்கு வேட்பாளர் சஜித்திடம் இருந்து சாதகமான பதில்
கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே மலையக தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர் களாக மாற்ற உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச வாக்குறுதியும் வழங்கி இருக்கின்றார். அண்மையில் தமிழ முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் பிரசாரக் கூட்டம் இரத்தினபுரியில் இடம்பெற்றபோதே சஜித் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எனது தந்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக்கொடுத்தார். நான் சுபிட்சமான வாழ்க்கையினைப் பெற்றுத்தருவேன் என்றும் இக்கூட்டத்தில் அவர் உறுதியளித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து இப்போது அதிகமாகவே பேச்சுகள் அடிபடுகின்றன. வேட்பாளர்கள் பலர் சம்பள உயர்வின் அவசியம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக் ஷ, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க எனப் பலரும் இதில் உள்ளடங்குகின்றனர். இந்த வகையில் கோத்தபாய ராஜபக் ஷ தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசடைந்துள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க தான் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். இதனிடையே தோட்டத் தொழிலாளர்களுக்கு தான் ஜனாதிபதியானதும் 1500 ரூபாவினை நாட் சம்பளமாக வழங்கப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதாந்த செலவாக 50 தொடக்கம் 55 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் 700 ரூபாய் நாட் சம்பளத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை கொண்டு நடத்துவதென்பது சிரமமான காரியமாகும்.
எனவே நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்குவேன் என்று சஜித் தெரிவித்திக்கின்றார். இந்த வாக்குறுதி எந்தளவுக்கு நம்பகத்தன்மை மிக்கது? என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலாளிமார் சம்மேளனம் இந்தத் தொகையை வழங்குவதற்கு பச்சைக் கொடி காட்டுமா? 1500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் சஜித்தின் உறுதிப்பாடு தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் நிலைத்திருக்குமா? கடந்த பொதுத் தேர்தல் காலகட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். எனினும் இன்றுவரை இது சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் பச்சைக் கட்சியைச் சேர்ந்த சஜித்தின் வாக்குறுதி சாதக விளைவுகளை ஏற்படுத்துமா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதையும் காதில் கேட்கக் கூடியதாக உள்ளது.
ஒப்பந்தம் இல்லை
தமிழ் முற்போக்குக் கூட்டணி, சஜித்துடன் ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடாத நிலையில் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றது. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லாத கோரிக்கைகள் எந்தளவுக்கு செயல்வடிவத்திற்கு இட்டுச்செல்லும்? என்ற பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜிடம் வினவினேன். அதற்கு திலகராஜ் பதிலளிக்கையில்;
ஒப்பந்தம் என்பது மக்களை ஏமாற்றுகின்ற செயலாகும். இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வலு இல்லாதவையாகக் காணப்படுகின்றன. ஜனாதிபதியானவர் ஒப்பந்தத்திற்கமைய மலையக மக்களின் நலன்கருதிய செயற்பாடுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஒப்பந்தம் என்பது போலியான ஒரு விடயமாகும். ஜனாதிபதி ஒப்பந்தத்திற்கு அமைய நன்மைகளைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் எம்மால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வருகின்றபோதும் அதனால் உரிய நன்மை தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா? இல்லையே. புரிந்துணர்வுடனான செயற்பாடுகளே மக்களின் நலன்களுக்கு தோள் கொடுப்பதாக அமையும்.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பவற்றில் என்னென்ன
கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப உரிய கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கொள்கை சார்ந்த விடயங்கள் பலவற்றை முன்வைத்திருக்கின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படும் என்று திலகராஜ் மேலும் தெரிவித்தார்.
32 அம்ச கோரிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு ஆதரவு வழங்குவது தெரிந்த விடயமாகும். இ.தொ.கா. 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இக் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவினை வழங்கப்போவதாகவும் இ.தொ.கா. ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதால் தாம் அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாக இ.தொ.கா. தெரிவிக்கின்றது. மேலும் இக் கோரிக்கைகளை பொதுஜன பெரமுன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இ.தொ.கா. தெரிவிக்கின்றது. முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றினை நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கவேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையை ஹட்டனில் நிறுவுதல், பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழுகின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையான அளவு உருவாக்குதல், தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தல், கிளங்கன் ஆதார வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துதல், ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல், பிரதேச செயலக அதிகரிப்பு, கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை அமைத்தல், நுவரெலியா மாவட்டத்தில் புதிய நகர சபைகளையும், மாநகர சபைகளையும் உருவாக்குதல், புதிதாக உதவி தொழில் ஆணையாளர் காரியாலயங்களை அமைத்தல், தரிசு நிலப்பயன்பாடு, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினை வலுப்படுத்தல், காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இ.தொ.கா. வின் 32 அம்ச கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த கோரிக்கைகளை பூரணமாக நிறைவேற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய வெற்றி பெற்றால் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இ.தொ.கா. மற்றும் பொதுஜன பெரமுன என்பவற்றுக்கு இடையில் அண்மையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையும் நீங்கள் அறிந்த விடயமாகும். மலையக கட்சிகள் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. எனினும் பிரதான கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி தன்னகத்தே என்ன கொள்கைகளையும் கேட்பாடுகளையும் வைத்திருக்கின்றன என்று நோக்க வேண்டியுள்ளது. மலையக மக்களை ஏற்கனவே இக்கட்சிகள் கிள்ளுக் கீரையாக நினைத்து செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இக்கட்சிகள் மலையக மக்கள் கருதிய தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மலையக மக்களின் மேம்பாடுகருதி பிரதான கட்சிகளினால் பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. இவையெல்லாம் ஏட்டளவில் முற்றுப்பெற்றும், காற்றோடு கலந்தும் விட்டன. இனியும் இந்நிலைமை தொடர இடமளிக்கலாகாது. வரலாற்றில் மலையக மக்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். இது இனியும் தொடரக்கூடாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமே மலையக மக்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கையை கட்சிகள் கைவிட வேண்டும். செயற்பாடுகளே அவசியம்.
துரைசாமி நடராஜா - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment