அந்த வீட்டுக்கு வந்து
ஒருவாரத்தில், அங்கிருப்பவர்களின் இயல்புகளை அபிதா ஓரளவு புரிந்துகொண்டாள். அவர்களின்
உணவு மீதான ருசிபேதம்தான் முதலில் அவளால் புரிந்துகொள்ளப்பட்டது.

அனைவரும் வீட்டிலிருக்கும்
நாட்கள் வார இறுதியில்தான் வரும். அந்நாட்களில் அவர்கள் துயில் எழுவதற்கும் தாமதமாகும்.
கற்பகம் ரீச்சர் மாத்திரம் சனிக்கிழமைகளில் அபிதா எழுந்துவிடும் நேரத்தில் துயிலை களைத்துவிடுவாள்.

குடும்பத்தில் ஒரே மகள்.
சொந்த மச்சானையே திருமணம் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தலினால், ஜெர்மனியிலிருந்த ஒருவனுக்கு
வாழ்க்கைப்பட்டு சென்றவள். அங்கு சென்றபின்னர்தான் அவளுக்கு அவன் பற்றி பல தகவல்கள்
கிடைத்தன.
ஏற்கனவே ஒரு ஜெர்மன்காரியுடன்
Living together ஆக வாழ்ந்துகொண்டிருப்பவன். அது தெரியாமல் கழுத்தை நீட்டியிருக்கும் கற்பகம்
ரீச்சர், ஜெர்மன் டோட்மன்டிற்குச் சென்று ஒரு மாதத்திற்குள் அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு, நாடு
திரும்பியவள்.
அவளுக்கு தரப்பட்ட சீதன
வீட்டில் இப்போது இருப்பது அவனது தங்கைக்காரி. மூன்று மாத சம்பளமற்ற லீவில் சென்று மீண்டமையால்
வாழ்வாதாரத்திற்கு ஆசிரியப்பணியாவது எஞ்சியிருக்கிறது.
“ ஏன் வந்துவிட்டீர்கள்…? “ என்று கேட்டவர்களுக்கு ஜெர்மனியின் குளிரையும்
அங்கு கொட்டும் பனியையும் காரணமாகச்சொன்னவள் கற்பகம் ரீச்சர்.
இப்போது, தனது எதிர்காலத்தை
தொலைக்காட்சியில் தினமும் வரும் ராசிபலனுக்கு ஒப்படைத்துவிட்டு, தனக்கிருக்கும் தோஷத்திற்கு
விரதமிருந்து வருபவள்.
“ ரீச்சருக்கு செவ்வாய்க்குற்றம் இருந்திருக்கும்
“ என்று சொன்ன மஞ்சுளாவிடம், “ இவங்களை நம்பவைத்து ஏமாற்றிய அவனுக்கு என்ன கிரகத்தில்
குற்றம் இருக்கும்..? “ என்று திருப்பிக்கேட்டாள்
அபிதா.
இந்த உரையாடலின்போது
கற்பகம் ரீச்சர் வீட்டிலிருக்கவில்லை. அது ஒரு சனிக்கிழமை.
“ நீங்களும் குறைந்த வயதில் வாழ்க்கையை இழந்திருக்கிறீங்க..!
உங்களுக்கும் செவ்வாய்க்குற்றம் இருக்கிறதா..? “ என்று மஞ்சுளா அபிதாவிடம் கேட்டாள்.
“ எங்கள்
மீது நடந்த அநீதியில்தான் குற்றம் இருக்கிறது. அதுதான் போர்க்குற்றம். அதற்கு இன்னமும்
நீதி கிடைக்கவில்லையே. அவரையும் குழந்தையையும் இழந்துவிட்டு தனிமரமாக நிற்கின்றேன்.
நீங்கள் எனக்கும் செவ்வாய்க்குற்றமா..? எனக்
கேட்கிறீர்கள். “ என்றாள் அபிதா.
“ வெறி சொரி. இப்படி நான் கேட்டதாக ஜீவிகாவிடம் சொல்லவேண்டாம் “ என்றாள் மஞ்சுளா.
வாய்க்கு ருசியாக மூன்று வேளையும் ஆக்கிப்போட்டதனாலும், வெளியே உலரப்போடும் அவர்களின் ஆடைகளை ஒழுங்காக எடுத்து
தனித்தனியாக மடித்து வைப்பதனாலும், வீட்டில் சுத்தம் பேணுவதனாலும், சுறுசுறுப்பாக இயங்கி
சொன்னவேலைகளை தட்டாமல் செய்து முடிப்பதனாலும்
அங்கு அனைவரும் அவளை நன்கு பராமரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தான் அவர்கள் நால்வரையும்
பராமரிக்கின்றேனா…?, அல்லது அவர்கள் தன்னை பராமரிக்கின்றார்களா..? என்ற ஐயப்பாடும் அபிதாவுக்கு அடிக்கடி வருகிறது.
ஜீவிகாவுக்கு இப்போது
அந்தவீட்டில் மற்றவர்களுடன் பேசுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. அவள் வேலையால் திரும்பிவருவதற்கும்
தாமதமாகிறது.
அவள் வரும்வரையில் அபிதாவும்
காத்திருக்கிறாள். ஏன் இந்தத் தாமதம்..? என்று
அபிதா கேட்டதற்கு, “ திருவிழா தொடங்கிவிட்டது.
அதுதான். “ என்றாள் ஜீவிகா.
“ எந்தக்கோயிலில்…? “என்று அப்பாவியாகக்கேட்டாள் அபிதா.
“ தொலைக்காட்சி பார்ப்பதில்லையா..? அதுதான் தேர்தல்
திருவிழா. பத்திரிகையில் பக்கம் நிரப்பவேண்டும்.
ஒவ்வொரு வேட்பாளர் தரப்பும் தரும் செய்திகளை எழுதி பதிவுசெய்யவேண்டும். கட்சிகளின்
பட்டிமன்றத்திற்கும் மாறி மாறி களம் தரவேண்டும். இல்லையேல் மேலிடத்தில் புகார் செய்துவிடுவார்கள்.
பக்கம் சாராமல் எழுதவும் வேண்டும். “
“ இந்த வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு எனக்கு
எங்கேயம்மா நேரம் கிடைக்கிறது. பெரும்பாலும் ரி.வி ரிமோர்ட் கற்பகம் ரீச்சரின் கையில்தான்
இருக்கிறது. ஸ்கூல்விட்டு வந்ததும், கொஞ்சநேரம் தூங்குவாங்க, எழுந்ததும் தேநீர் கேட்பாங்க.
ஏதும் சோர்ட் ஈட்ஸ் செய்யவில்லையா… ? என்பாங்க. அதுக்குப்பிறகு மாறி மாறி தமிழ்நாட்டு
தொலைக்காட்சி நாடகங்கள்தான் பார்ப்பாங்க.
“ என்றாள் அபிதா.
“ ஏன், நீங்களும் பார்க்கவேண்டியதுதானே…? “ எனக்கேட்டாள்
ஜீவிகா.
“ அவளுகளுடைய வண்ண வண்ண சேலைகளை காண்பிப்பதுதானே
இக்காலத்து தொலைக்காட்சி நாடகங்கள். சமையல்கட்டிலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைதான்
கட்டுவாளுகள். அனைத்து திட்டமிட்ட சதிகளும்,
சமையல்கட்டிலதான் தொடங்கும். நடக்கும். மருமகளுக்கு
நஞ்சுவைப்பது தொடக்கம், மருமகள் நகைகளை அரிசிப்பானைக்குள்ள வைக்கிறது வரையில் எல்லா
சதிவேலையும் சமையல் கட்டிலதான். இந்த கற்பகம் ரீச்சர் எப்படித்தான் இந்தக்கண்றாவிகளை
பார்க்கிறாங்களோ தெரியவில்லை. தமிழ் நாட்டில்
எவ்வளவு பிரச்சினைகள் இருக்குது. அவற்றை விட்டுவிட்டு, சனங்களை சைக்கோவாக்கும் தொலைக்காட்சி நாடகங்கள்தான்
தயாரிக்கிறாங்க. “ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்
அபிதா.
அபிதாவிடத்தில் பேசுவதற்கு
நிறைய இருப்பதாகவே ஜீவிகா உணர்ந்தாள். தூண்டிலைப்போட்டால் சின்னமீன்கள் மட்டுமல்ல பெரிய
சுறாக்களும் சிக்கும்போல் தெரிந்தது.
“ உங்களுக்குத்தான் இந்த வீட்டில் ரீவி பார்க்கநேரம்
இல்லை என்றீங்க. அதெப்படி தொலைக்காட்சி நாடகங்களில் வரும் காட்சிகள் மாத்திரம் நினைவிலிருக்கிறது..?
“ எனக்கேட்டாள் ஜீவிகா.
“ இந்த வீட்டுக்குள்ள அலைந்து திரியிறதிலேயே எனது
பொழுது போய்விடுகிறது. வீட்டு வேலைகளுக்காக
இங்கே நடமாடும்போதே கற்பகம் ரீச்சர் பார்க்கும் சீரியல்களையும் நோட்டம் விடுவேன். எல்லாக்கதைகளையும் ரீச்சர் எப்படித்தான் புரிந்துகொள்கிறாங்களோ
தெரியவில்லை. பாவம் ரீச்சர். அவுங்களுக்கும்
பொழுது போகத்தானே வேண்டும். “
“ ஏன் அவுங்க பாவம்…? என்று சொல்றீங்க. “
“ நம்பிச்சென்று
ஏமாந்து திரும்பியிருக்கிறாங்க. எல்லாம் தலைவிதிதான்.
தலை எழுத்து. “ என்றாள் அபிதா.
“ உங்களுக்கும் அவவின்ட கதை தெரியுமா..? தலைஎழுத்தில் - தலைவிதியில் நம்பிக்கை இருக்கிறதா..? “
“ உங்களுக்கு
முதலில் சூடா ஒரு கோப்பி போட்டுக்கொண்டுவந்து தரட்டுமா..? அதற்குப்பிறகு அதுபற்றி பேசுவோம். “
இவர்களுக்குள் இந்த
உரையாடல் நடக்கும்வேளையில் வீட்டில் வேறு எவரும் இல்லை. கதைகொடுத்து கதையெடுப்பதில் கைதேர்ந்தவள் ஜீவிகா.
தனது கைவரிசையை அன்று அவள் அபிதாவிடம் காண்பிக்கத் தொடங்கிவிட்டாள்.
அதற்கு கற்பகம் ரீச்சர்தான்
ஊன்றுகோல் பாத்திரமானாள்.
அபிதா நீட்டிய கோப்பி
கப்பை வாங்கியவாறு, “ அபிதா, நீங்கள் சமையல்
செய்ய எப்படி கற்றுக்கொண்டீங்க..? “ எனக்கேட்டாள்.
“ நளவெண்பா
படிச்சிருக்கிறீங்களா…? அதில் வரும் நளன் தமயந்தியை தேடும் படலத்தில் கற்றுக்கொண்டதுதான்
சமையல். அதுதான் நளபாகம் என்பதற்கு ரிஷிமூலம்.
என்ர அவரும் நல்லா சமைப்பார். கடைசியாக
அவர் அந்த மரநிழலில் அடுப்பெரித்து காய்ச்சித் தந்த அரிசிக்கஞ்சியைத்தான் குடித்தேன்.
அதுதான் அவருடைய இறுதி நளபாகம். “ அபிதா சொல்லும்போது
விம்மத்தொடங்கினாள்.
ஜீவிகா, கோப்பி கப்பை
அருகிலிருந்த டீப்போவில் வைத்துவிட்டு, எழுந்து வந்து அபிதாவை அணைத்துக்கொண்டு தேற்றினாள்.
அந்த எதிர்பாராத அணைப்பினால்
அபிதா கதறி அழத்தொடங்கிவிட்டாள்.
இவளிடம் எதையோ கேட்கப்போய்
இப்படி அழுகுகுரலைக்கேட்கவேண்டியதாயிற்றே என்று ஜீவிகா கலங்கினாள். அவளுக்கும் கண்கள்
கலங்கின.
“ சரி… சரி… அழவேண்டாம். முதலில் கண்ணை துடைச்சுக்கொள்ளுங்க..
“
“ போரை முடித்துவைத்தது யார்..? என்று பட்டிமன்றம் நடத்துறவுங்களுக்கிட்ட, சரணடைந்தவர்கள்
பற்றி நீங்கள் ஏதும் கேள்வி கேட்பதில்லையா..? “ அபிதாவின் இந்தத் திடீர் கேள்வியினால்,
ஜீவிகா சற்று அதிர்ந்தாள்.
“ யாரும் சரணடையவில்லை. சரணடைந்தவர்கள் அனைவருக்கும்
புனர்வாழ்வளிக்கப்பட்டு விட்டது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களும் அரசியல்
கைதிகள் இல்லை. அவர்களும் சிறைக்கைதிகள்தான் என்று சொல்கிறார் போரை முடித்தவர் எனச்சொல்லப்படும் வேட்பாளர்.
“ என்றாள் ஜீவிகா. சொல்லிவிட்டு, தனது அறைக்குச்சென்று அங்கிருந்த ஒரு தமிழ்த்தினசரி
பத்திரிகையை அபிதாவிடம் காண்பித்தாள்.
அந்தத் தினசரியில்தான்
ஜீவிகா வேலைசெய்கிறாள்.
“ இவர் போரை முடித்துவைக்கவில்லை. நான்தான் என்று
சொல்கிறாரே ஃபீல்ட் மார்ஷல். “
அபிதா சாதாரணமான ஒரு
வேலைக்காரியோ – சமையல்காரியோ இல்லை. இவளுக்கு நாட்டு நடப்பும் தெரிகிறது. அரசியலும்
புரிகிறது. அவளை ஜீவிகா ஏறெடுத்துப்பார்த்தாள்.
டீப்போவில் ஆறிக்கொண்டிருந்த
கோப்பியை எடுத்து அருந்தியவாறு, “ அபிதா, உங்களுக்கு
ரீ.வி. பார்க்கநேரம் இல்லை. இந்த வீட்டுவேலையே நிரம்பவிருக்கிறது. எப்படி நாட்டு நடப்புகள்
உடனுக்குடன் தெரியுது..? “எனக்கேட்டாள் ஜீவிகா.
அவள் அருந்திய கோப்பி
கப்பை வாங்கிக்கொண்ட அபிதா, “
என்னம்மா… கேள்வி இது…? எல்லாம் உங்கட அறையிலிருக்கும்
பழைய பேப்பர்களை எடுத்து படித்து தெரிந்துகொண்டதுதான். தினமும் நீங்கள் எல்லோரும் வேலைக்குப்போனதன்பிறகு
உங்கள் ஒவ்வொருவருடைய அறையையும் கூட்டித் துப்பரவு
செய்வேன்தானே. உங்கட அறையில்தான் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் தினமும் இரவு
எடுத்துவரும் உங்கள் பத்திரிகைதான் எனது நாளைய
பொழுதின் அன்றைய தினசரி. “
ஜீவிகா, அதனைக்கேட்டதும் “ அப்படியென்றால் நீங்களும் எங்கட பத்திரிகையின்
அபிமான வாசகி எனச்சொல்லுங்க..
“ என்றாள்.
“ இல்லையம்மா. உங்கட அறையில் உங்கட பத்திரிகை கிடக்குது.
அதனால் படிக்கின்றேன். வேறு பத்திரிகைகள் இருந்தாலும் படிப்பேன். “ எனச்சொல்லிவிட்டு சமையல் அறைக்கு அபிதா திரும்பினாள்.
அங்கே அவளுக்கு நிறைய
வேலைகள் இருந்தன. கழுவிவைத்திருந்த பாத்திரங்களில்
நீர்தன்மையை துணியெடுத்து துடைத்துவைத்துவிட்டு, கேஸ் அடுப்பின் முனைகளை மற்றும் ஒரு
துணியினால் அழுத்தித் துடைத்தாள். அதில் சற்று
அழுக்கேறியிருந்தது.
அன்று ஜீவிகா சற்று
ஓய்வாக இருந்தமையால், பேச்சுத்துணைக்கு அபிதா கிடைத்திருந்தாள். கற்பகம் ரீச்சர், பாடசாலைகளுக்கு மத்தியில் நடந்த
தமிழ்த்தினப்போட்டிக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் குழுவில் இணைந்து தலைநகரத்திற்கு
சென்றுவிட்டாள்.
மஞ்சுளாவும் சுபாஷினியும்
யாரோ ஒரு சிநேகிதியின் திருமணத்திற்காக ஏதோ
வாங்கப்போய்விட்டனர்.
கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில்
ஜீவிகா தூண்டில் போட்டுக்கொண்டிருந்தாள். அந்தத் தூண்டில் அவ்வீட்டின் கூடத்திலிருந்து
சமையல்கட்டு வரையில் நீண்டு வந்து கொண்டிருக்கிறது.
உணவருந்தும் மேசையில்
கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில பாத்திரங்களை எடுத்து துடைத்து அடுக்கினாள்
ஜீவிகா.
“ அபிதா…. சமூகமும் அரசியலும் என்ற தலைப்பில்
ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கிறது. இன்றைக்குத்தான்
உங்களது நாட்டு நடப்பு – அரசியல் பற்றிய தெளிவு இருக்கிறதை தெரிந்துகொண்டேன். ஒரு கேள்விக்கு
பதில் சொல்ல முடியுமா..?
அபிதாவுக்கு சிரிப்பு
வந்தது. அடக்கமுடியாமல் சிரித்தாள்.
“ நான் என்ன ஜோக்கா சொன்னேன்…? இப்படி சிரிக்கிறீங்க..? “ – ஜீவிகா, அபிதாவை கூர்ந்து பார்த்தாள்.
“ இடியப்பம், புட்டு எப்படி அவிக்கிறது…? மீன்கறியை எவ்வாறு சுவையோடு சமைப்பது..? என்று நீங்கள் என்னிடம் கேட்டிருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் சமூகத்தைப்பத்தி
கேட்கும் ஒரு பத்திரிகையாளரை இன்றுதான் முதல் முதலில் பார்க்கின்றேன். “ எனச்சொல்லிவிட்டு தொடர்ந்தும் சிரித்தாள் அபிதா.
“ இல்லை… இல்லை…. உங்களுக்கு சமூகமும் தெரியும் அரசியலும்
தெரியும். உங்கட பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன். சொல்லுங்க….”
“ ஜீவிகா அம்மா, சமூகம் என்பது நாலுபேர் - ஜெயகாந்தன் எழுதிய குறுநாவல் படித்திருக்கிறீங்களா..?
ஒருவர் இல்லாத இடத்தில் அவர் பற்றி பேசுவதுதான் சமூகம் “
அபிதாவின் இரத்தினச்சுருக்கமான
பதில்கேட்டு மனதிற்குள் அதிர்ந்துபோனாள் ஜீவிகா.
( தொடரும்
)
No comments:
Post a Comment