முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஈழத்து இலக்கியச்சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் எத்தகையது…?


 ( கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் சமர்ப்பித்த மதிப்பீட்டுரை)
(  கடந்த வாரத் தொடர்ச்சி )

இலங்கை வடபுலத்திலிருந்து  2007 ஓகஸ்ட் மாதம் முதல் ஜீவநதி கலை இலக்கிய இதழ்,  அல்வாயில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியர் கலாமணி  பரணிதரன்.    ஜீவநதியும் பாரதி தொடர்பான ஆய்வு களுக்குக் களம் வழங்கியிருக்கிறது.    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்     பாரதியை   இதில்  விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.   1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை|   என்னும் ஆய்வு   குறிப்பிடத்தக்கது. பாரதி தன்னால்      இயற்றப்பட்ட     கவிதைகளால்     தமிழுக்கு    புதிய வளம்  சேர்ந்ததென   அவர்  கூறியுள்ளர்.   இவ்வாறு பாரதியைப் போன்று    ஈழத்திலும்     கவிஞர்கள்    தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும்      என்பதே     அம்மன்கிளி முருகதாஸின்     எண்ணம்     என்பதையும்     ஜீவநதியில்    வெளியான    ஆக்கம்  கூறி நிற்கின்றது.
பாரதியின்    கவிதை    வரிகளை    தாரக மந்திரமாகக் கொண்டும் சில    இதழ்கள்    இலங்கையில்     வெளிவந்துள்ளன.
  ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய   கலைகளில்   உள்ளம்
ஈடுபட்டென்றும்   நடப்பவர் பிறர்
ஈன   நிலைகண்டு   துள்ளுவார். 
என்ற வரிகளைத் தாங்கிவந்த மல்லிகை இதழின் ஆசிரியர்  டொமினிக் ஜீவா,   1966 ஆண்டிலிருந்து  நீண்டகாலம்   அதனை வெளியிட்டு,  சாதனை படைத்தவர்.   1966  முதல் மல்லிகையில் பாரதியியல்    ஆக்கங்கள்    ஏராளமாக    வெளிவந்துள்ளன. இலங்கைப்  படைப்பாளிகள் மட்டுமல்ல,    தமிழகத்தவர்களும் அடிக்கடி பாரதிபற்றி  மல்லிகையில்  எழுதியுள்ளார்கள்.  சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு|   என்ற கட்டுரையை மல்லிகையில் பேராசிரியர் கைலாசபதி, பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதியிருந்தார்.     பேராசிரியர் கைலாசபதி,   மல்லிகையில் எழுதிய இலங்கை கண்ட பாரதி    என்ற கட்டுரையை தமிழ் நாட்டின் தாமரை    இதழ்    மறுபிரசுரம்   செய்தது.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,    ப. ஜீவானந்தத்தின் கொள்கைகளால்    ஆகர்ஷிக்கப்பட்டு     டொமினிக்  என்ற    தனது பெயருடன்   ஜீவா என்ற பெயரையும்    இணைத்துக் கொண்டவர் இந்த ப.ஜீவானந்தம்   பாரதியில்    தோய்ந்தவர்.    பாரதியைப் பரப்பியவர்.     அவரது உரை மற்றும் கட்டுரைகள்     ‘பாரதி வழி’ என்ற    நூலாக    வெளிவந்தது. 1958    ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டி   ‘ஜனசக்தி’ யில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
 ‘பாரதியின் தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.    1950 களில்    இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது,    ப. ஜீவானந்தம்     இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தார்.     இலங்கையில்   கண்டியில் கே. கணேஷ்   அவர்களது     இல்லத்தில்    தங்கியிருந்தவர் . அக்காலகட்டத்தில்     மலையகத்திலும்     பலகூட்டங்களில்    கலந்து கொண்டவர்.      அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்திலும்    பல கூட்டங்களில்   கலந்து    கொண்டவர்.    பாரதியின் கருத்துக்களைப்   பரப்பியவர். 
   வெள்ளத்தின்   பெருக்கைப்போல்
கலைப் பெருக்கும்   கவிப்பெருக்கும்   மேவுமாயின்
பள்ளத்தில்    வீழ்ந்திருக்கும்    குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்  "

என்ற பாரதியின் தாரக மந்திரத்துடன் 2000 ஆண்டு வெளிவரத் தொடங்கியது  ஞானம் கலை  இலக்கிய   இதழ்.   ஞானம்  இதழ் பாரதி ஆய்வுகளுக்குச் சிறந்த களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.  பாலகிருஷ்ணன் சிவாகரன், பாரதியின் கவிதைகளில்  பல்கோணப்பார்வை என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார்.   பாரதியார் எழுதிய முதற் கவிதை , பாரதியார் எழுதிய   முதற் சிறுகதை   என்பவற்றை   ஞானத்தில் பதிவுசெய்தவர் செங்கதிரோன்  த. கோபால கிருஷ்ணன்.   பாரதியார்   1905 இல் சக்கரவர்த்தனி இதழில்     எழுதிய  துளசிபாய் என்ற சிறுகதையே தமிழின் முதற் சிறுகதை.   வ.வே.சு.   ஐயர் எழுதிய  குளத்தங்கரை அரசமரம் அல்ல  என அவர்  நிறுவுகிறார்.
தனிமையிரக்கம்   என்ற கவிதையே பாரதியார் எழுதிய முதற்கவிதை. இது 1904  ஆம் ஆண்டில் விவேகபானு இதழில் வெளியானது.   அச்சுவாகனம் ஏறிய முதற்கவிதை  அதுதான்  என்ற போதிலும்,   எட்டயபுர சமஸ்தான மன்னருக்கு பாரதி தனது படிப்புக்கு உதவிகேட்டு கவிதை வடிவில் எழுதிய கடிதமே அவர் எழுதிய முதற்கவிதை.    அதனைப் பாரதியின் இளைய சகோதரன் பாதுகாத்து    வைத்திருந்தார். அந்தக்கவிதை ஞானம் இதழில் முழுமையாகப்    பிரசுரமாகியுள்ளது.    இக்கவிதை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில்    வெளியிடப்பட்ட ஆய்வுப் பதிப்பில் சேர்க்கப்பட்ட    தகவலையும்    கோபால கிருஷ்ணன்    தந்துள்ளார். ஞானம்    வெளியிட்ட ஈழத்துப் புலம் பெயர் தொகுப்பில் பாரதியின் தலைப்புக்    கவிதை அமைந்துள்ளது.      பற்பல தீவினும் பரவி இவ்வெளிய தமிழ்ச் சாதி     என்று     தொடங்கி   இறுதியில்                                   பெருமையும் இன்பமும் பெறுவார்  " என அக்கவிதை முடிகிறது.
தமிழினம் குறித்து பாரதிக்கு இருந்த தீர்க்க தரிசனம் எத்தகையது என்பதை சமகால வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக ஈழத்துப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் செல்நெறியையும் அதன் உள்ளடக்கத்தையும் ஆவணமாக்கும் பொருட்டு வெளியான குறிப்பிட்ட சிறப்பு மலரில்,   அக்கவிதை வரிகள் இடம்பெற்றமை மிகவும் பொருத்தமானதே எனக்குறிப்பிட்டுள்ளார்   நூலாசிரியர்.     பாரதி ஒரு   ஜுவாலை   என்ற    தலைப்பில்    ஜீவகாருண்யன்    எழுதிய    கட்டுரை அமைந்துள்ளது.    சுப்பிமணிய பாரதியின்  பங்களிப்பு    பல பக்கங்களைக்   கொண்டது.    செய்யுள்  வடிவை    நாட்டார் பாடல்களுடன்    இணைத்து எளிமைப் படுத்தியமை,   யமகம்,    திரிபு,     மடக்கு    போன்ற    யாப்பிலக்கணங்களிலிருந்து    விடுபட்ட இலகு    கவிதைக்கு    வழி  சமைத்தமை   -   நவீன உரை நடையின் சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக் கட்டுரை, வசன கவிதை போன்றவற்றின் முன்னோடி பாரதி   என    இக்கட்டுரை நிறுவுகிறது.
இவை    தவிர பாரதியின்    ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி  யார்? என்ற சர்ச்சையும்    வெளியாகியுள்ளது. அந்தச் சுவாமியார் தனது பரம்பரையில் வந்தவர் என்றும் அவர் தனது பேரனார் என்றும் நிரூபிக்கும் வகையில் செங்கை ஆழியான் வெளியிட்ட நூல் தொடர்பாகவும் ,   ஞானம் ஆசிரியர் எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்த எதிர்வினை விரிவாக     இந்நூலில் பதிவாகியுள்ளது.
 இனி    பாரதி    சிறப்புமலர்கள்    வெளியிட்ட    இதழ்கள்  எவையெனப் பார்ப்போம்
 சுதந்திரன் அலுவலகத்திலிருந்து சுடர் என்ற சிற்றிதழ்   எட்டு வருடகாலம் வெளிவந்தது.    இது, 1982ஆம் ஆண்டு சித்திரை மாதம் பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழை வெளியிட்டது.  கோவை   மகேசன் இதற்கு ஆசிரியராக இருந்தார்.     1977 இற்குப்பின் காசி ஆனந்தன் சுடரின்     ஆசிரியர்   பொறுப்பை    ஏற்றார். அவரும் 1980ஆம் ஆண்டில் சுடர் பொறுப்பிலிருந்து    விலகினார்.    அதன்பின் 1981இல் கரிகாலன் ஆசிரியரானார்.    இச்சிறப்பிதழில் பாரதி தொடர்பான கட்டுரைகள்,    கவிதைகள்,     சிறுகதைகள்    வெளியாகியிருந்தன. இச்சிறப்பிதழின் சிறப்பான அம்சம் என்று குறிப்பிடத்தக்க  மூவர் முன் மொழிந்த கருத்துக்கள்   என்ற பத்தி இடம் பெற்றிருந்தது. குறமகள் வழங்கிய நேர்காணல்  பாரதியின் கருத்துக்களை அடியொற்றிய பெண்விடுதலை தொடர்பான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தது.
சுடர் இதழ் பாரதி சிறப்புமலர் வெளியிட்டது  போன்று கலைச் செல்வி இதழும் பாரதி சிறப்பிதழை வெளிக்கொணர்ந்தது.    அது பற்றிய தகவல் இந்த நூலில் இடம்பெறவில்லை.    இருப்பினும் முழுமை  கருதி கலைச் செல்வி   பாரதி   பற்றி எடுத்த முன்னெடுப்புகள்     பற்றி இங்கு    குறிப்பிடுகிறேன். கலைச் செல்வி தனது     மூன்றாவது    இதழை பாரதி சிற்பிதழாக வெளிக் கொணர்ந்தது.    இந்த    இதழ் பாரதி மலராக 1958 புரட்டாதி மாதத்தில் வெளிவந்தது.    அட்டைப்படம் பாரதியின் உருவம் தாங்கி வெளியிடப்பட்டது.    அந்த இதழில் வ. அ. இராசரத்தினம், அ.செ. முருகானந்தன்,     நீர்வை பொன்னையன்,    டொமினிக் ஜீவா ஆகியோர்     எழுதியிருந்தனர். அழ. சிதம்பரம்    அண்ணாமலைப் பல்கலைக்கழக     ஆராய்ச்சி மாணவர்,   பாரதி தொடர்பான கவிதையை எழுதியிருந்தார்.    வங்க எழுத்தாளர் கே. எஸ் . குப்தா  எழுதிய  சுதந்திரக் கொடி என்ற சிறுகதையை தமிழில் நீர்வைபொன்னையன் தந்திருந்தார். அ. செ. முருகானந்தன் ஒரு தடவை எட்டய புரத்துக்குச் சென்று, பாரதியின் மாமனார் முறையான சாம்பசிவ ஐயர் என்பவரைச் சந்தித்திருக்கிறார்.                             “ பாரதியின்   உள்ளத்தில்    கனவுக்கும்    உணர்ச்சிக்கும்தான் இடமிருந்தது.    பசி,    தாகம்    போன்ற    உடல்   தேவைகளுக்கு இடமிருக்கவில்லை.    அவனைச் சாப்பிடக் கூப்பிட்டால்    இலகுவில் எழுந்திருக்கமாட்டான்.    அவன் சாப்பாட்டுக்கு     வழியில்லாமல் கிடந்தவன்    என்பதெல்லாம்    வீண்பேச்சு  "    என்று சாம்பசிவ ஐயரும்   அவருடைய   மனைவியும் சொன்னதையும் பாரதியாரின் புதுமைக் கருத்துகளின்படி    வாழ்க்கையை   நடத்துவதில் அவருடைய    சந்ததியினரிடையே    சில தயக்கங்கள் இருந்ததை தான் அவதானித்ததாயும்   பாரதிக்குப்பின்   என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்
கலைச்செல்வி    ஏழாவது இதழில் பாரதி வகுத்த பாதையைக் காட்டுவதாக கவிஞர் முருகையன் கவிதை எழுதியிருந்தார்.
தமிழ் மாணவர்களின் பேச்சாற்றலை ஊக்குவிக்கும் முகமாக கலைச்செல்வி பாரதி தினப்பேச்சுப் போட்டி ஒன்றையும்  நடத்தியது. வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
யாழ்ப்பாணத்து தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதிவிழா ஒன்றிலே பாரதி வகுத்த பாதை  என்ற தலைப்பிலும், சாவகச்சேரி சிவன் கோயிலில் தேமதுரத் தமிழோசை  என்ற தலைப்பிலும் கவிஞர் முருகையன் பாடிய கவியரங்கக் கவிதைகளை கலைச்செல்வி எட்டுப்பக்கங்களில் முழுமையாக வெளியிட்டது
1966   கலைச் செல்வி இதழ் பாரதி கவிதைச் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் அன்றைய 25 முன்னணிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்திருந்தன. இப்படியாக அதிக அளவில் பாரதி தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதில் கலைச் செல்வியின் பங்கும் விதந்து   குறிப்பிடும்படியாக    இருந்தது.
 அக்கினிக்குஞ்சு   என்பது பாரதியின் பாடல்வரி. இந்தப் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியாவிலும் இரண்டு இலக்கிய இதழ்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில் இலங்கையில் பாரதி என்ற இந்த ஆய்வு நூல், நல்ல பல தகவல்களைத் தந்துள்ளது.    முன்னர் வெளிவந்த பாரதி பற்றிய நூல்களிலிருந்தும்    வேறுபட்டு ஒரு புதிய கோணத்தில் பாரதி பற்றிய    ஆய்வுகளைத்   தந்துள்ளது. பத்திரிகைகள்,  நிறுவனங்கள் புத்திஜீவிகள் எப்படி அணுகியிருக்கிறார்கள்?   என்பதை  வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளமை   பாராட்டுக்குரியது.
----0---  
-->
No comments: