சிவந்தமண்
1969ம் ஆண்டு பொருட்செலவுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று சித்ராலயாவின் சிவந்தமண். பிரபல கதாசிரியரும் டைரக்டருமான ஸ்ரீதர் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 69ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளிவந்தது.


இது நடந்து நான்காண்டுகள் கழித்து இதே கதையை மீண்டும் வண்ணப்படமாக ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்யத் தொடங்கினார். கதாநாயகனாக சிவாஜி ஒப்பந்தமானார். கதாநாயகியாக காதலிக்க நேரமில்லை புகழ் காஞ்சனா தெரிவானார். இவர்களுடன் நம்பியார், நாகேஷ் சாந்தகுமாரி, ரங்கராவ், ஜாவர் சீதா ராமன், சச்சு, முத்துராமன், என்று பலர் நடித்தார்கள்.
படத்திற்கு சிவந்தமண் என்று பெயரிடப்பட்டது. நிறைய பொருட்செலவில் எடுப்பதினால் படத்தை வெளிநாடுகளிலும் படமாக்குவதற்கு ஸ்ரீதர் தீர்மானித்தார்.
அந்த வகையில் பாரிஸ், ரோம், லண்டன், ஆரிச் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் படமெடுப்பது என தீர்மானமானது. அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக குறைந்த கலைஞர்களுடனேயே இந்த நாடுகளுக்கு ஸ்ரீதர் பயணமானார்.
சிவாஜி மிகக்குறைந்த மேக்அப்புடனேயே வெளிநாட்டில் படமான காட்சிகளில் தோன்றினார். சிவாஜி காஞ்சனா இருவரையும் தவிர ஏனைய நடிகர்கள் அனைவரும் இந்தியாவிலேயே ஸ்டுடியோவில் நடித்தார்கள்.

சர்வாதியாக வில்லன் நம்பியார் நடித்திருந்தார் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தார்.

ஓளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கைவண்ணம் படம் முழுதும் வியாப்பித்திருந்தது. பம்பாயில் இருந்து வந்த சாந்திதாஸ் படத்திற்கான பிரம்மாண்டமாக அரங்குகளை அமைத்திருந்தார். அன்றும் இன்றும் மறக்கமுடியாத இசையை படத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவாஜியின் சாட்டையடிக்கு ஏற்ப காஞ்சனா ஆடும் பட்டத்துராணி பாடல் அதற்கான காட்சி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலினிமை எல்லாம் ரசிகர்களை பரவசமாக்கின. இந்தப் பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி. 120 வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தார். கர்நாடக மேற்கத்திய, அரபிய இசை என பலவித இசையை விஸ்வநாதன் இப்படத்திற்கு வழங்கியிருந்தார்.
படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் எம்.ஜி.ஆரின் ஸ்டன்ட் மாஸ்டர் சியாம்சுந்தர். புரட்சித் தலைவராக படத்தில் நடித்த சிவாஜி வசனங்களில் மட்டுமன்றி முகபாவங்களினாலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார். ஸ்ரீதரைப் பொறுத்த வரை சிவந்தமண் அவருடைய திரையுலக பயணத்தில ஒரு தடமாகும்!
50 ஆண்டுகளுக்கு முன் இப்படம் திரையிடப்பட்ட போது இலங்கை தமிழ் ரசிகர்கள் ஐரோப்பிய நாடுகளை படத்தில் பிரமிப்புடன் பார்த்து பார்த்து ரசித்தார்கள். சில ஆண்டுகளில் யுத்தம் தீவிரவாதம் காரணமாக இலங்கை சிவந்தமண் ஆனது. அதனைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான தமிழர்கள் லண்டன் சூரிச் பாரிஸ் என்று புலம் பெயர்ந்தார்கள். சிவந்தமண் படத்தில் பார்த்த இடங்களை நேரில் பார்த்து அங்கு வாழ்கிறார்கள். ஆனாலும் ஒரு காலத்தில் ஊரில் பார்த்த படமும் அனுபவமும் மறக்குமா!
No comments:
Post a Comment