இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் மூன்று முக்கிய விடயங்களில் சுற்றிச் சுழல்கின்றது. இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சிறுபான்மை இன மக்களின் தேவைகள், கோரிக்கைகள் புறக்கணிப்பு என்ற மூன்று விடயங்களுக்கான பரப்புரைகள் தீவிரமாக முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. நாட்டின் அதிஉயர் அரச தலைவர் ஜனாதிபதியை நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேரடி வாக்களிப்பு மூலம் தெரிவு செய்வது. இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் தேசிய அளவில் பொதுவானவராக அனைத்து மக்களினதும் நலன்களைப் பேணி பாதுகாப்பவராகச் செயற்பட வேண்டும்.
அந்த வகையில் நாட்டின் பொதுவான முன்னேற்றத்தையும் பொதுமக்களை சமமான முறையில் முதன்மைப்படுத்திய நிலையில் தேசிய நலன்களையும் கருத்திற் கொண்டவராக இருத்தல் வேண்டும். அவற்றில் அக்கறையும் மிகுந்த கவனம் செலுத்துபவராகவும் இருத்தல் அவசியம்.
ஆனால் இந்தத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்கள் பன் முகத்தன்மை கொண்ட தேசிய கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இன ரீதியான, பக்கம் சார்ந்த கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் கொண்டவர்களாகவே தோன்றுகிறார்கள். அந்த வகையிலேயே விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றார்கள்.
இதனால் நாட்டின் பொதுமக்களாகிய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் நியாயமான நிலையில் யாரை ஆதரிப்பது, எந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதில் குழப்பமடைய நேரிட்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் நிலைமை திரிசங்கு நிலைமையை ஒத்ததாக மோசமடைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. யுத்தத்தை இராணுவ வழிமுறையில், வன்முறை வடிவத்தில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தலைகீழாக நின்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு செயற்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ அணியினரே இந்தத் தேர்தலில் முதன்மை பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. யுத்த வெற்றி வாதத்தை உயிர் மூச்சாகக் கொண்டு அவர்கள் தங்களுடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
தமிழ்மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொண்ட நீண்ட போராட்டத்தில் வேறு வழியின்றி ஆயுதப் போராட்ட வழிமுறையில் கால் பதிக்க வேண்டியவர்களானார்கள். அவர்களின் அறவழிப் போராட்டத்தை அரச படைகளைக் கொண்டு அரசுகள் அடக்கி ஒடுக்க முயன்றதனால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையும் அவர்களை ஆயுதமேந்த நிர்ப்பந்தித்திருந்தது.
அறவழிப் போராட்டங்கள் தோல்வியுற்றதனால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, பயங்கரவாதிகளை இல்லாமல் செய்வதற்கான இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் யுத்தத்தைத் தீவிரமாக முன்னெடுத்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அதீத இராணுவ வலிமையைப் பயன்படுத்தி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றிவாகை சூடியது.
இந்த வெற்றிவாதத்தையே தமது வாழ்நாள் அரசியல் கொள்கையாகவும் அரசியலுக்கான முதலீடாகவும் கொண்டு ராஜபக் ஷ குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். இராணுவமயம் சார்ந்து, பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி மேலாண்மை நிலையில் வைத்துப் பேணி வளர்ப்பதுவுமே அவர்களது அரசியல் கொள்கைகளின் உயிர்நாடி. அரசியல் போக்கில் குடும்ப ஆட்சி அரசியலைப் பிணைத்து வளர்ந்தோங்கச் செய்வதிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
இத்தகைய அரசியல் கொள்கைப் படிப்பின் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக் ஷ வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கடும்போக்கிலான தாக்குதல் வழிமுறைகளைப் பின்பற்றி எப்படியாவது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மிகத் தீவிரமாக அவர் செயற்பட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வழியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே அரச அதிகாரி என்ற வகையில் அவர் கொண்டிருந்தார். ஆனாலும் நிறைவேற்று அதிகாரங்களை நியதிகளுக்கு அப்பால் வரையறையற்ற முறையில் கொண்டிருந்த ஜனாதிபதியான தமது சகோதரரின் அதிகார உரிமைகளையும் அவர் வலிந்து எடுத்துக் கொண்டு யுத்தச் செயற்பாட்டில் இராணுவத்தை வழி நடத்தியிருந்தார்.
அதீத அதிகாரப் பிரயோகத்தில் இராணுவத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே அவரை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கி உள்ளது. இராணுவ நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களின் அடிப்படையில் அவர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
மறுபுறத்தில் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சூட்டோடு சூடாக அவசர அவசரமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக, தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்து மீண்டும் இலங்கைக் குடியுரிமையைப்பெற சட்ட நடைமுறைகளுக்கு முரணான வழிமுறைகளே கையாளப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் பதிலளிக்க வேண்டியவரானார்.
இத்தகைய அரசியல் மற்றும் மனித உரிமை மீறல் பின்புலத்திலேயே அவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
வழமைக்கு மாறாக மும்முனைப் போட்டி
மறுபுறத்தில் கோத்தபாய ராஜபக் ஷ வுக்கு எதிரான முன்னணி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் என்ற அரசியல் அந்தஸ்தைக் கொண்டுள்ளார். இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளையும் தகிடுதத்தங்களையும் கொண்டுள்ள நாட்டு அரசியலில் முக்கிய விடயங்களில் அவர் முன்னணியில் முகம் காட்டாத ஒருவராகவே திகழ்கின்றார்.
தேசிய நலன்கள் சார்ந்த பல அரசியல் விடயங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அவை எவற்றிலும் அவரை முன்னணி நிலையில் கண்ட அனுபவம் நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை. உள்நாட்டு அரசியலிலும் வெளிவிவகார அரசியல் நடவடிக்கைகளிலும் ஆளுமை உள்ளவராகவோ பரிச்சயம் உள்ளவராகவோ அறியப்படாத ஒருவராகவே அவர் கணிக்கப்படுகின்றார். ஜனாதிபதி தேர்தல் களத்தில் அவர் ஒரு புதிய வரவு.
மற்றுமொரு வேட்பாளராகிய ஏ.கே.டி. என்ற பெயர் குறியீட்டைக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியின் பிரதிநிதியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இடதுசாரி கொள்கையைக் கொண்ட கட்சியின் தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டிருந்த போதிலும், அந்தக் கொள்கைக்கும் அவர்களுக்கும் காத தூரம் என்றே கூறப்படுகின்றது. அத்துடன் தேசிய அரசியல் விவகாரங்களில் பெரும்பான்மை இன மக்களின் மனங்களையே அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதற்குத் தொடர்ச்சியாகப் போராடுகின்ற வளரும் தலைவராகவே அவர் திகழ்கின்றார்.
முப்பத்தைந்து வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்தத் தேர்தலில் இந்த மூன்று வேட்பாளர்களுமே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றார்கள். அதனால்; வழமையாக நிலவுகின்ற இருமுனை போட்டி என்ற நிலையைக் கடந்து இம்முறை மும்முனை போட்டியாக இந்த ஜனாதிபதி தேர்தல் பரிணமித்துள்ளது.
ஆனாலும், ஊழல், மோசடி, அதிகாரப் போட்டி, இனவாத போக்கு, இராணுவ மய அணுகுமுறை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமைகள், அரசியல் உரிமைகளை மீறுதல், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து நழுவிச் செல்லுதல், மக்கள் நலன்களில் அக்கறையற்ற அரசியல் போக்கு, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில்கூட போதிய அக்கறையற்ற அதிகாரப் போக்கு என்பவற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் முகாமைத்துவத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த இருதரப்பு அரசியல் முகாம்களின் செயற்பாடுகள் குறித்து இந்தத் தேர்தல்கால சூழலில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கடுமையான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடித்துரைப்பு
ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிவதற்காக விசாரணை நடத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரிவினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி முக்கியமான சந்தர்ப்பங்கள் பலவற்றில் உரிய தலைமைத்துவத்தை வழங்கத் தவறிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்கள் பேசப்பட்ட கூட்டங்களில் இருந்த முக்கியஸ்தர்களை விலக்கி வைத்ததுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கூட்டங்களை உரிய தருணங்களில் நடத்தத் தவறியதுடன், முக்கியமான அரச நிர்வாக நடைமுறைகளைப் புறந்தள்ளிச் செயற்பட்டிருந்தார் என்று சாடியுள்ளது.
அரசுக்குள் 2018 ஆம் ஆண்டு நெருக்கடிகளை உருவாக்கி அதன் மூலம் ஆட்சி நடைமுறைகளில் பிரிவினையை ஏற் படுத்தி அரச நடைமுறைகளை மலினப் படுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிரதமர், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர், சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்புக்குப் பொறுப்பான பாதுகாப்புப் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர்கள் என உயர் மட்டத்தைச் சேர்ந்த பலர் மீதும் விரல் நீட்டி இந்த அறிக்கை குற்றம் சுமத்தியிருக்கின்றது.
பாதுகாப்புப் பொறிமுறை, நீதிப்பொறிமுறையில் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றின் மறுசீரமைப்பு, மதத்தீவிரவாதச் செயற்பாட்டில் கண்காணிப்பு, அதீத நிதிதொடர்பிலான மேற்பார்வைக்கான பொறிமுறை, போலிச்செய்தி வெளியிடல், பயங்கரவாதச் செயற்பாடு என்பவற்றை உரிய முறையில் கண்காணித்தல், பொறுப்புடையவர்களாக இருப்பதன் அவசியத்தை மக்கள் பிரதிநிதிகளாகிய அரசியல்வாதிகளை உணரச் செய்தல் உள்ளிட்ட 8 விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அரசாங்கத் தரப்பினருக்கு பதவி அந்தஸ்து பாராமல் முகத்தில் அடித்தாற்போல அறிவுறுத்தல்களுடன் கூடிய பரிந்துரைகளை சட்டவாக்கத்துறையாகிய பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு இடித்துரைக்கும் வகையில் அறிக்கை வடிவில் முன்வைத்துள்ளது.
நாட்டின் முக்கிய தேர்தலாகிய ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற ஓர் அரசியல் தருணத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நாட்டின் முக்கிய இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களை நோக்கி விரல் நீட்டி பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை நெற்றியடி பாணியில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் நிலைமைகளை அக்கு வேறு ஆணிவேறாக மக்கள் இந்தச் சந்தர்ப் பத்தில் உணர்ந்து கொள்வதற்கு இந்த அறிக்கை வாய்ப்பளித்துள்ளது.
இனவாத மதவாத பிரசாரத்திலேயே கவனம்
அதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலம் கடந்துவிட்ட போதிலும், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் ஏனோதானோ என்றும், மனித உரிமை நிலைமைகளைச் சீர் செய்வதில் அக்கறையற்றுச் செயற்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார ஆசிய பசுபிக் பிராந்திய துணைக்குழு இலங்கை மீதான அமெரிக்காவின் கண்காணிப்புடன் கூடிய அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் தீவிர அரசியல் சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் மூழ்கியுள்ள தருணத்தில் சர்வதேச மட்டத்தில்இருந்து இலங்கையின் நிலைமை குறித்து வந்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு முக்கிய கவனத்திற்கு உரியதாகிறது.
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை நிறுவி மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களுக்குப் பொறுப்பு கூறவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டி உரிய இழப்பீட்டுக்கான வழிமுறைகளைச் செயற்படுத்தவும், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்குத் தீர்வு காணுதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீரவு கண்டு நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு முற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவற்றில் அரசு தாமதமான அக்கறையற்ற போக்கிலேயே செயற்பட்டு வந்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளிவிவகார ஆசிய பசுபிக் பிராந்திய துணைக்குழுவில் ஆராயப்பட்டிருக்கின்றது. அங்கு இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமான கருத்துக்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையுடனான அமெரிக்காவின் செயற்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
முன்னாள் இராணுவ அதிகாரிகளையும், முன்னாள் வடமாகாண ஆளுநராகச் செயற்பட்ட ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட இரண்டு பேரையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்காக தமிழ்ப்பிரதேசமான வடமாகாணத்தில் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருப்பது இராணுவமய அரசியல் போக்கிற்கான கட்டியங்கூறுகின்ற செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
சிங்கள பௌத்த தேசியத்தை வெளிப்படையாகவே அரசியலில் கையில் எடுத்துள்ள ராஜபக்ஷ குழுவினர் சார்பிலான வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெற்றால் நாட்டின் ஆட்சி முறை எவ்வாறிருக்கும் என்பதையே இந்த அரசியல் பிரசார நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியகட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவும் மஹிந்த ராஜபக்ஷ குழுவினரைப் பின்பற்றி இனவாத, மதவாத பிரசாரங்களிலேயே கவனம் செலுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்தபோதிலும், வேட்பாளராகிய சஜித் பிரேமதாச பௌத்த மதத்தின் மேலாண்மை நிலைமையில் அதிக அக்கறை செலுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான மதவாத பிரசாரத்திலேயே கவனம் செலுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.
தேரவாத பௌத்த நாட்டுக்கான சிந்தனை
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பௌத்த சாசன மேம்பாட்டுக்கு நிதியொதுக்கிச் செயற்படப்போவதாக குருணாகலையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். அத்துடன் அரச திணைக்களங்கள் பலவற்றின் ஊடாக பௌத்த மத மேம்பாட்டுக்கான நிதியொதுக்கப்படும் என்பதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மறுபுறத்தில் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் மென்போக்கு அரசியல் நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பவராகக் காட்டிக்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தென்பகுதியில் கட்டுகம்பளை நகர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், உலகின் பொருளாதார வலிமைமிக்க தேரவாத பௌத்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே தங்களின் எதிர்பார்ப்பு என சூளுரைத்துள்ளார்.
சிறுபான்மை இன மக்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் பௌத்த மத மேலாண்மை போக்கைக் கடைப்பிடித்து, பௌத்த மதத்தைத் திணிக்கின்ற ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தேர்தல் கால கருத்தாக இலங்கையை வலிமையான தேரவாத நாடாக உருவாக்கவேண்டும் என்ற ஆவல் வெளிப்பட்டிருப்பது சிறுபான்மை இன மக்களை கவலையடையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இனவாதமும் மதவாதமுமே சிங்கள அரசியல்வாதிகளின் அரசியலுக்கான உயிர் மூச்சு. இதன் அடிப்படையிலேயே நாட்டின் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. தேர்தல்களில் வெற்றியை நிச்சயிப்பதும் இவையே. ஆனாலும் மோசமான நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றிச் செல்வதில் கவனத்தைக் குவிப்பதை விடுத்து, பௌத்த மதத்தின் மேம்பாட்டுக்காக அரசியல் நடத்துகின்ற போக்கு நல்லதல்ல.
தேர்தல் காலத்தில் மட்டுமல்ல. சாதாரண நிலைமையிலும் ராணுவ மயப்போக்கும் பௌத்த மத மேலாண்மை கொண்ட ஆட்சி நிர்வாகச் செயற்பாடும் நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க மாட்டா என்பதே நிதர்சனம்.
பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment